என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ் தாக்கரே"

    • இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
    • எங்களுக்குள் நிலவும் பிரச்னைகளைவிட மகாராஷ்டிராவின் நலனே பெரியது.

    இந்தி திணிப்பு

    மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கை அமலில் உள்ளது. இந்நிலையில் மும்மொழிக் கொள்கையின் கீழ் 3வது மொழியாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் என அம்மாநில பாஜக கூட்டணி அரசு உத்தரவிட்டது.

    மேலும் 2025 - 26 கல்வியாண்டு முதல் படிப்படியாக அமல்படுத்தப்படும், 2028 - 29ஆம் கல்வியாண்டிற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

    ராஜ் தாக்கரே

    நேற்று கலந்துரையாடல் ஒன்றில் பேசிய ராஜ் தாக்கரே, 'சிவசேனாவின் நான் இருந்தபோது உத்தவ் தாக்கரேவுடன் பணியாற்றுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. தற்போது என்னுடன் இணைந்து பணியாற்ற உத்தவ் தாக்கரே தயாராக இருக்கிறாரா?

    எங்களுக்குள் நிலவும் பிரச்னைகளைவிட மகாராஷ்டிராவின் நலனே பெரியது. மராத்தியா்களுக்காக போராடுவதை ஒப்பிடுகையில் எங்களின் பிரச்னைகள் மிகவும் சிறியது. மீண்டும் நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவது கடினமான காரியமல்ல' என்று தெரிவித்தார்.

    உத்தவ் தாக்கரே

    அதே சமயம் நேற்று தனது கட்சி உறுப்பினா்கள் மத்தியில் சனிக்கிழமை பேசிய உத்தவ் தாக்கரே, சிறிய பிரச்னைகளை புறந்தள்ளிவிட்டு மராத்தியா் நலனுக்கு முன்னுரிமை அளிப்பவா்களுடன் ஓரணியில் திரள நானும் தயாா்.

    மக்களவைத் தேர்தலின் போது, மகாராஷ்டிராவின் தொழிற்சாலைகள் குஜராத்துக்கு இடம்பெயர்கின்றன என்று நாங்கள் சொன்னபோது, அவர்கள் (ராஜ் தாக்கரே) அப்போது எதிர்த்திருந்தால், இன்று மத்திய அரசு ஆட்சியில் இருந்திருக்காது.

    மகாராஷ்டிராவின் நலனைப் பற்றி சிந்திக்கும் மத்திய மற்றும் மாநில அளவில் ஒரு அரசாங்கத்தை நாங்கள் அமைத்திருப்போம். மக்களவைத் தோ்தலின்போது பாஜகவுக்கு ஆதரவளித்துவிட்டு, பேரவைத் தோ்தலின்போது அவா்களை எதிா்த்துவிட்டு மீண்டும் அவா்களுடன் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டால் எதுவும் மாறாது.

    முதலில் மகராஷ்டிரத்துக்கு எதிராக செயல்படுபவா்களை இங்கு வரவேற்காதீா்கள். அதன் பிறகு மாநில நலன் குறித்துப் பேசலாம். எனக்கு யாருடனும் மோதல் இல்லை. பாஜகவுடனான கூட்டணி வேண்டுமா? அல்லது எங்கள் கட்சியுடன் கூட்டணி வேண்டுமா என்பதில் மராத்திய மக்கள் தெளிவான முடிவெடுக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.

    சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் இணைவது குறித்து பேசியிருப்பது மகாராஷ்டிர அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர்கள் இணைவதில் மகிழ்ச்சியே என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.    

    • மராத்தி, ஆங்கிலம் மீடியம் பள்ளிகளில் 3ஆவதாக இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது
    • மராத்தி மற்றும் மராத்தி அல்லாதவர்களிடையே போராட்டத்தை உருவாக்கி, அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியா இது?

    மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் மராத்தி, ஆங்கிலம் மீடியம் பள்ளிகளில் 3ஆவதாக இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது என அம்மாநில பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ளது.

    தற்போது மராத்தி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இனிமேல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி 3ஆவது கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் இருந்து நடைமுறை படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் 1ஆம் வகுப்பில் 2025-2026-ல் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    2, 3, 4 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு தேசிய கல்விக் கொள்கை 2026-27-ல் அமல்படுத்தப்படும். 5, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு 2027-28 முதல் அமல்படுத்தப்படும். 8, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 2028-29ஆம் ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நடவடிக்கை இந்தி திணிப்பு என மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, மும்மொழிக் கொள்கையை அரசு விவகாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். அதனை கல்விக்கு கொண்டுவர வேண்டாம். மாநிலத்தில் அனைத்தையும் இந்திமயமாக்கும் மத்திய அரசின் முயற்சிகளை நவநிர்மாண் சேனா ஒருபோதும் ஏற்காது. நாங்கள் இந்துக்கள், ஆனால், இந்தி அல்ல. மாநிலத்தை இந்தி என்று சித்திரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டால், இங்கு நிச்சயம் ஒரு போராட்டம் வெடிக்கும்.

    இவற்றையெல்லாம் பார்த்தால், வேண்டுமென்றே போராட்டத்தை அரசாங்கம் உருவாக்குகிறது என்று தோன்றுகிறது. வரவிருக்கும் தேர்தல்களில் மராத்தி மற்றும் மராத்தி அல்லாதவர்களிடையே போராட்டத்தை உருவாக்கி, அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியா இது? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மும்மொழி கொள்கையை இந்தி திணிப்பு என தமிழ்நாடு முன்னரே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • உங்களை அரசியல் ரீதியாகப் பிரிக்கவும், மராத்தியர்களாக ஒன்று சேர்வதைத் தடுக்கவும் செய்யப்படுகிறது.
    • வரலாற்றை வாட்ஸ்அப் மூலம் கற்றுக்கொள்ள முடியாது. அதற்கு நீங்கள் புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

    மகாராஷ்டிராவில் மராத்தி மொழி பேச மறுப்பவர்களை கன்னத்தில் அறைய வேண்டும் என நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    நேற்று மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடந்த பேரணியில் உரையாற்றிய ராஜ் தாக்கரே, "எங்கள் மும்பையில், அவர்கள் மராத்தி பேச முடியாது என்று சொல்கிறார்கள்.

    அவர்கள் முகத்தில் அறையப்படுவார்கள். நாட்டைப் பற்றியும் மற்ற அனைத்தையும் பற்றியும் என்னிடம் சொல்லாதீர்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த மொழி உண்டு, அது மதிக்கப்பட வேண்டும். மும்பையில், மராத்தி மதிக்கப்பட வேண்டும்.

    மராத்தி பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த இன்று முதல் ஒவ்வொரு வங்கி மற்றும் நிறுவனத்தையும் கண்காணிக்க கட்சித் தொண்டர்களை அறிவுறுத்துகிறேன்.

    நீங்கள் அனைவரும் மராத்திக்காக உறுதியாக நிற்க வேண்டும். தமிழ்நாட்டைப் பாருங்கள். தமிழர்கள், இந்தி வேண்டாம் என்று தைரியமாக சொல்கிறார்கள், கேரளாவிலும் கூட" என்று தெரிவித்தார்.

    மேலும் மகாராஷ்டிராவில் நிலவும் சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினையை குறித்து பேசிய அவர், "நீங்கள் மராத்தியர்களாக ஒன்று சேர்வதைத் தடுக்க சில அரசியல் தலைவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.

    முதலில் வாட்ஸ்அப்பில் வரலாற்றைப் படிப்பதையும், சாதியக் கண்ணோட்டத்தில் படிப்பதையும் நிறுத்துமாறு மகாராஷ்டிர இளைஞர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

    இது உங்களை அரசியல் ரீதியாகப் பிரிக்கவும், மராத்தியர்களாக ஒன்று சேர்வதைத் தடுக்கவும் செய்யப்படுகிறது. இது எங்கள் கவனத்தைத் திசைதிருப்புகிறது, மேலும் அதானிக்கு நிலங்களை வழங்குவது போன்ற பணிகள் அமைதியாக செய்யப்படுகின்றன" என்று எச்சரித்தார்.

    அவுரங்கசீப் கல்லறை சர்ச்சை, அதைத்தொடர்ந்து நாக்பூர் கலவரம் ஆகியவை குறித்து பேசிய அவர், "மராட்டியர்களால் தோற்கடிக்கப்பட்டவர்களின் (அவுரங்கசீப்) கட்டமைப்புகளை நாம் அழிக்கக்கூடாது.

    நாம் அவர்களை நல்லடக்கம் செய்தோம் என்பதை உலகம் அறிய வேண்டும். ஒரு படம் (சாவா) பார்த்துவிட்டு விழித்துக்கொள்ளும் இந்துவால் எந்தப் பயனும் இல்லை. வரலாற்றை வாட்ஸ்அப் மூலம் கற்றுக்கொள்ள முடியாது. அதற்கு நீங்கள் புத்தகங்களைப் படிக்க வேண்டும்" என்று இடித்துக் கூறினார்.

     

    மகாராஷ்டிராவில் சமீபத்தில் சத்திரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி கதையை தழுவி எடுக்கப்பட்ட சாவா படம் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து கான்பூரில் கலவரம் வெடித்தது. இதன் பின்னணியில் ராஜ் தாக்கரே இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

    மேலும் தேசிய கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பு என தமிழ்நாடு அரசு ஏற்க மறுக்கிறது. அதனால் தமிழ்நாட்டுக்கான 2000 கோடி ரூபாய் வரையிலான கல்வி நிதியை கடந்த ஒரு மாத காலமாக மத்திய பாஜக அரசு நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒரே கட்சி ஆட்சியிலும் உள்ளது. எதிர்க்கட்சியாகவும் செயல்படுகிறது
    • உலகத்தில் இதுபோன்று நான் பார்த்தது இல்லை

    மகாராஷ்டிர மாநிலத்தின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே ஒரு நிகழ்ச்சில் கலந்து கொண்டபோது பேசியதாவது:-

    மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரை, கட்சிகள் ஆட்சி அதிகாரத்திலும் உள்ளன. எதிர்க்கட்சியாகவும் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலை, நம்முடைய மாநிலத்தில் மட்டுமே உள்ளன. உலகில் வேறு எங்கேயும் இல்லை.

    இந்த அபத்தமான, அசிங்கமான அரசியல் நிலையை நான் ஒருபோதும் பார்த்தது இல்லை. சிவசேனா கட்சியின் ஒரு கோஷ்டி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு கோஷ்டி ஆட்சி அதிகாரத்தில் உள்ளன. அந்த கட்சிகளின் மீதமுள்ளவர்கள் எதிர்க்கட்சிகளாக உள்ளனர்.

    இவ்வாறு ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    கடந்த வருடம் சிவசேனா காட்சியில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, அதிகமான எம்.எல்.ஏ.-க்களுடன் கட்சியை தன்வசமாக்கினார். கடந்த ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை உண்டாக்கி தனி கோஷ்டியாக செயல்பட்டு வரும் அஜித் பவார், 8 எம்.எல்.ஏ.-க்களுடன் ஆட்சியில் இணைந்துள்ளார்.

    • மத்திய மந்திரி அமித்ஷாவை மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேரில் சந்தித்தார்.
    • இதனால் மக்களவை தேர்தலில் பாஜக-மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா இடையே கூட்டணி உறுதியாக வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, டெல்லியில் இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே உடனிருந்தார்.

    இந்தச் சந்திப்பின் மூலம் மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா இடையே கூட்டணி உறுதியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த கூட்டணி உறுதியானால் மகராஷ்டிர தலைநகர் மும்பையில் போட்டியிட நவநிர்மாண் சேனாவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேசமயம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு மும்பை தொகுதியில் குறிப்பிடத்தக்க ஆதரவு உள்ளது. சிவசேனாவில் இருந்து பிரிந்த பிறகு நவநிர்மாண் சேனாவால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

    • நவநிர்மாண் சேனாவினர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக கோஷம்.
    • தாக்குதலுக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை.

    மராட்டியத்தில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கும், அவரது உறவினரும் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவருமான ராஜ் தாக்கரேக்கும் இடையே சமீபகாலமாக வார்த்தை மோதல் அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் பீட் மாவட்டத்தில் கடந்த 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவின் பாதுகாப்பு வாகனம் மீது உத்தவ் தாக்கரே கட்சியினர் பாக்குகளை (குட்கா) வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் 8 பேரை கைது செய்தனர்.

    மராத்தா இடஒதுக்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய ராஜ் தாக்கரேயை கண்டிக்கும் வகையில் அவரது பாதுகாப்பு வாகனம் மீது பாக்குகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் தானேயில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் இரவு வருகை தந்தார். தானே கட்காரி ரங்கயாதன் பகுதியில் அவரது கார் வந்தபோது, அங்கு கூடியிருந்த நவநிர்மாண் சேனாவினர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    மேலும் உத்தவ் தாக்கரே சென்ற கார் மீது தேங்காய், வளையல், தக்காளி, மாட்டு சாணம் ஆகியவற்றை வீசி தாக்குதல் நடத்தினர். ஆனால் அவரது கார் அதற்குள் சென்றுவிட்டது. பின்னால் வந்த அவரது பாதுகாப்பு வாகனம் ஒன்றின் மீது அவை விழுந்து சேதமடைந்தது.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் நவநிர்மாண் சேனாவினரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

    ராஜ் தாக்கரே பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உத்தவ் தாக்கரேவின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட நவநிர்மாண் சேனா கட்சியினர் தெரிவித்தனர்.

    முன்னதாக ராஜ் தாக்கரே பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை என உத்தவ் தாக்கரே கட்சி விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அந்தேரி இடைத்தேர்தலில் வேட்பாளரை பா.ஜ.க. திரும்ப பெற்றது.
    • இந்த விவகாரத்தில் ராஜ் தாக்கரே துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

    மும்பை:

    அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவேண்டாம் என பா.ஜ.க. துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கேட்டு கொண்டு இருந்தார்.

    இதற்கிடையே, அந்தேரி கிழக்கு தொகுதியில் நிறுத்தி இருந்த வேட்பாளரை பா.ஜ.க. திரும்ப பெற்றது. இதையடுத்து பா.ஜ.க. சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்த முர்ஜி பட்டேல் அதை திரும்ப பெற்றார்.

    இந்நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை பா.ஜ.க. திரும்ப பெற்ற விவகாரத்தில் ராஜ் தாக்கரே துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், நேர்மறையான அரசியல் கலாச்சாரத்தை கொண்டு இருப்பது அவசியமாகும். இதுபோன்ற நல்ல கலாச்சாரம் பரவ நவநிர்மாண் சேனா எப்போதும் ஆதரவாக இருக்கும். எனது கோரிக்கைக்கு செவி கொடுத்தற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

    • அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
    • இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பா.ஜ.க.வுக்கு ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

    மும்பை:

    ராஜ் தாக்கரே ஆதரவு அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிடுகிறார். இதேபோல ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவுடன் பா.ஜ.க. வேட்பாளராக முர்ஜி பட்டேல் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளர் ருதுஜா லட்கேவுக்கு ராஜ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அவர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பா.ஜ.க.வுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

    இது தொடர்பாக ராஜ் தாக்கரே வெளியிட்டுள்ள கடிதத்தில், மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேர்தலில் நவநிர்மாண் சேனா போட்டியிடாது. எனவே நீங்களும் இடைத்தேர்தலில் ருதுஜா லட்கேவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மறைந்த ரமேஷ் லட்கேவின் அரசியல் பயணம், வளர்ச்சியை நான் பார்த்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • ராஜ்தாக்கரே சிவசேனாவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியவர்.
    • சிவசேனாவில் இருந்து வெளியேறிய 2 தலைவர்கள் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    மும்பை :

    ராஜ் தாக்கரேயை அவரது வீட்டுக்கு சென்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்தித்தார். இதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    சிவசேனா கடந்த ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என 2 ஆக உடைந்தது. இதில் ஷிண்டே அணி, பா.ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்து உள்ளது. இந்த கூட்டணியில் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவையும் கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, முன்னாள் மந்திரி வினோத் தாவ்டே உள்ளிட்டவர்கள் ராஜ் தாக்கரேயை சந்தித்து இருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று முதல்-மந்திாி ஏக்நாத் ஷிண்டே தாதரில் உள்ள ராஜ் தாக்கரேவின் வீட்டுக்கு சென்றார். விநாயகர் சதுர்த்தியையொட்டி முதல்-மந்திரி, ராஜ்தாக்கரே வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    எனினும் மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஏக்நாத் ஷிண்டே, ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ராஜ்தாக்கரேயும் சிவசேனாவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியவர் ஆவார். சிவசேனாவில் இருந்து வெளியேறிய 2 தலைவர்கள் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே தாதரில் உள்ள சிவசேனா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மனோகர் ஜோஷி வீட்டுக்கும் ஏக்நாத் ஷிண்டே சென்று அவரை சந்தித்தார்.

    ×