search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்றி காய்ச்சல்"

    • கொடைக்கானல் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவு விலங்குகள் உள்ளன.
    • கர்நாடகா, கேரள மாநிலங்களிலும் இவ்வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவு விலங்குகள் உள்ளன. குறிப்பாக யானை, காட்டு பன்றி, மான் போன்றவை மக்கள் வசிப்பிடத்துக்கு அருகே அடிக்கடி வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

    அதிலும் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களை சேதப்படுத்தி செல்வதும், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களை மிரட்டி வருவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பல்வேறு இடங்களில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் ஏராளமான காட்டு பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இவ்வாறு உயிரிழந்த பன்றிகளை வனத்துறையினர் தீ வைத்து எரித்து வருகின்றனர். மேலும் மற்ற விலங்குகளுக்கும் இந்த நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக எல்லைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வெளி மாவட்டங்களில் இருந்து பன்றிகளை வாகனங்களில் கொண்டு வர தடை விதித்துள்ளனர். இந்த நோய் மனிதர்களுக்கு பரவாது என்று கால்நடைத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தபோதிலும் பொதுமக்கள் அச்சத்துடனே உள்ளனர்.

    இந்நிலையில் கர்நாடகா, கேரள மாநிலங்களிலும் இவ்வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே கொடைக்கானலில் உள்ள காட்டுப்பன்றிகளுக்கு நோய் பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கொடைக்கானலில் காட்டுப்பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் வகை காய்ச்சல் இல்லை. அவ்வாறு இருந்தால் வனப்பகுதியில் பன்றிகள் உயிரிழந்த நிலையில் இருக்கும். அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது வரை திண்டுக்கல் மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் இல்லை. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றனர்.

    • 2 மாதங்களாக நுரையீரல் பாதிப்பால் அவதியடைந்த சரோஜா கடந்த 19-ந் தேதி சிகிச்சைக்காக கோவை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில் சரோஜாவிற்கு பன்றி காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் வெங்கடேச புரியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவருடைய மனைவி சரோஜா (வயது 53). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக நுரையீரல் பாதிப்பால் அவதியடைந்த சரோஜா கடந்த 19-ந் தேதி சிகிச்சைக்காக கோவை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில் சரோஜாவிற்கு பன்றி காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சரோஜா நேற்று பரிதாபமாக இறந்தார். பன்றி காய்ச்சலுக்கு பெண் பலியான தகவல் மல்லசமுத்திரம் பகுதியில் வேகமாக பரவியது.

    இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வெங்கடேசபுரி, ஏரிக்காடு பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் மருந்து தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் அச்சம் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் மல்லசமுத்திரம் பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • புதுவையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • சில குழந்தைகளுக்கு டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக காய்ச்சலால் அவதிப்பட்ட குழந்தைகளின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதில் 2 குழந்தைகளுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில குழந்தைகளுக்கு டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

    இதனால் சுகாதாரத்துறை அதிர்ச்சியடைந்துள்ளது. காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    • பருவநிலை மாற்றத்தின் காரணமாக வைரஸ் காய்ச்சல் குழந்தைகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
    • பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் ஊர்களிலும் காய்ச்சல் முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் சமீபகாலமாக பருவநிலை மாற்றத்தின் காரணமாக வைரஸ் காய்ச்சல் குழந்தைகளுக்கு வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரடாச்சேரி ஒன்றியத்தை சேர்ந்த ஒரு மாணவனுக்கும், மன்னார்குடி ஒன்றியத்தை சேர்ந்த ஒருவருக்கும் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இருவரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் ஊர்களிலும் காய்ச்சல் முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    • பன்றி காய்ச்சல் வந்தால் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகி விடும்,
    • பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் எழவில்லை.

    தமிழகம் வந்துள்ள மேகாலயா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜேம்ஸ் ஜே.கே.சங்கமா சென்னையில் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்தார். அப்போது இரு மாநிலங்கள் இடையே ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அவசர சிகிச்சை பயிற்சி, உயிர்காக்கும் மயக்கவியல் திறன் பயிற்சி மற்றும் மீயொலி கருவி பயிற்சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 


    பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: பன்றி காய்ச்சால் தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 1044 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மட்டும் 368 நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 வயதிற்கு குறைவாக 42 குழுந்தைகளும், 5 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் 65 பேரும், 15 முதல் 65 வயதிற்குட்பட்டோர்கள் 192 பேரும், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 69 பேரும் அடங்குவர்.

    மேலும், 89 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் 264 பேர், அரசு மருத்துவமனைகளில் 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகிவிடும், எனவே பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை.

    மேலும் பெற்றோர்கள் காய்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, காய்ச்சல் சரியாகும் வரை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் எழவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×