search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை தேர்தல்"

    • குருஷேத்ரா பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடந்தது.
    • அதில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சிப் பணிகளை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது என்றார்.

    சண்டிகர்:

    அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்படுகிறது.

    இந்நிலையில், அரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:

    மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து 100 நாட்கள் நிறைவடைவதற்குள் சுமார் 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சமத்துவமான முறையில் வளர்ச்சிப் பணிகளை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.

    காங்கிரஸ் கட்சியின் அரசியல் நாட்டில் பொய்யையும், அராஜகத்தையும் பரப்பும் அளவுக்கு தரம் குறைந்துவிட்டது. பொய்களைப் பேசுவதில் அவர்களுக்கு அவமானம் இல்லை.

    காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாசல பிரதேசத்தில் யாரும் இன்று மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில், அங்கு மாநில அரசு பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தை நிர்வகிக்க தவறிவிட்டது.

    அரியானாவின் முதல் மந்திரி நயாப் சிங் சயினி மாநிலத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். முதலீடுகள் மற்றும் வருவாய் அடிப்படையில் அரியானா முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

    மத்தியில் 3-வது முறை ஆட்சி செய்வதற்கு மக்கள் வாய்ப்பு வழங்கினார்கள். அதேபோல் அரியானாவிலும் பா.ஜ.க. ஹாட்ரிக் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    • அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • அங்கு சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார் சாவித்ரி ஜிண்டால்.

    சண்டிகர்:

    இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் ரூ.3.31 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருந்து வருபவர் சாவித்ரி ஜிண்டால்.

    ஜிண்டால் குழும தலைவரான இவரது மகன் நவீன் ஜிண்டால் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது மகனுக்கு ஆதரவாக சாவித்ரி பிரசாரம் செய்தார்.

    இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரியானாவின் ஹிசார் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட சாவித்ரி ஜிண்டால் விருப்பம் தெரிவித்தார்.

    நேற்று பா.ஜ.க. வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் லை பாஜக கடந்த புதன்கிழமை வெளியிட்டது. ஆனால் அதில் சாவித்ரியின் பெயர் இடம்பெறவில்லை. ஹிசார் தொகுதியில் எம்.எல்.ஏவாக உள்ளவரும், சுகாதார அமைச்சருமான கமல் குப்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அரியானாவின் ஹிசார் தொகுதியில் சாவித்ரி ஜிண்டால் சுயேட்சையாக மனுதாக்கல் செய்தார்.

    பா.ஜ.க.வில் சீட் மறுக்கப்பட்டதால் கோடீஸ்வர பெண்மணி சுயேட்சையாக போட்டியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

    • ஜம்மு காஷ்மீரில் காங்கிரசும், தேசிய மாநாட்டு கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன.
    • அங்கு ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மூன்று கட்டமாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டு கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன. ஜம்மு காஷ்மீரில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலையொட்டி அனந்தநாக் மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஜம்மு காஷ்மீரில் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3000 வழங்கப்படும்.

    அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சத்தில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

    ஒரு லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்புதல், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 11 கிலோ அரிசி வழங்கப்படும்.

    சுய உதவிக் குழுப் பெண்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் குடியேறிய காஷ்மீர் பண்டிட்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும்.

    பொது விநியோக திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு 11 கிலோ தானியம் வழங்கப்படும்.

    ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகளை பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் பறித்துவிட்டனர். அவ்வாறு பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுப்போம் என்பதே எங்களின் வாக்குறுதி என தெரிவித்தார்.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் கவனம் பெற்று வருகிறது.

    • ராம்பன் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து ராஜ்நாத் சிங் பேசினார்.
    • ஸ்ரீநகரில் மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்த யாரும் துணிவதில்லை என்றார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் 3 கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது.

    அங்குள்ள ராம்பன் தொகுதியில் தேசிய மாநாடு கட்சியின் அர்ஜுன் சிங் ராஜுவுக்கு எதிராக பா.ஜ.க.வின் ராகேஷ் சிங் தாகூர் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வின் ராகேஷ் சிங் தாகூரை ஆதரித்து மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    2019 -ம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பாதுகாப்பு சூழ்நிலைகளால், இளைஞர்கள் கைத்துப்பாக்கிகள், ரிவால்வர்களுக்கு பதிலாக மடிக்கணினிகள் மற்றும் கணினிகளை தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள்.

    தற்போது ஸ்ரீநகரில் மக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்த யாரும் துணிவதில்லை. இது தொடர்வதற்கும், ஜம்மு காஷ்மீரில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் பா.ஜ.க.வை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

    2014-ல் நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசின் செயல்திறன் குறித்து சொல்ல விரும்புகிறேன்.

    பொருளாதாரத்தில் 11-வது இடத்திலிருந்த இந்தியா வேகமாக முன்னேறியது.

    ஓர் அரசு சுமூகமாக இயங்குவதற்கு பிரதமர், முதல் மந்திரிகள் பதவிகளில் திறமையான, வலுவான துடிப்பு கொண்ட நபர்கள்தான் தேவை.

    2019-ம் ஆண்டுக்கு முன், காஷ்மீரில் பயங்கரவாத சூழல் நிலவியது. ஆனால், இன்று யாரும் கைத்துப்பாக்கியை எடுக்கவோ, துப்பாக்கிச்சூடு நடத்தவோ துணிவதில்லை. இது ஒரு வலுவான தலைவர் ஆட்சியில் இருப்பதன் விளைவாகும்.

    தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஜம்மு காஷ்மீர் நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாகவும், நவீன மாநிலமாகவும் உருவெடுக்கும் என தெரிவித்தார்.

    • ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் அறிக்கையை உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டார்.
    • மாணவர்களுக்கு ஆண்டுதோறும் போக்குவரத்து அலவன்சாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.

    ஸ்ரீநகர்:

    மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு என்பது வரலாறு. அது மீண்டும் வரவே வராது.

    ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தில் உள்ள முதிய பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

    உஜ்வாலா திட்டத்தின் கீழ் 2 சிலிண்டர் வழங்கப்படும்.

    3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.

    மாணவர்களுக்கு ஆண்டுதோறும் போக்குவரத்து அலவன்சாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

    காஷ்மீரில் பயங்கரவாதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

    மத்திய அரசு திட்டங்களின் பலன்கள் மாநில மக்களுக்கு கிடைக்க செய்வோம். சுற்றுலாவை வளர்க்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

    • ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18-ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • அனந்தநாக் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது.

    யூனியன் பிரதேசத்தை மாநிலமாக மாற்றும்போது அல்லது மாநிலத்தைப் பிரிக்கும்போது ஜனநாயகத்தை ஆழமாக்குகிறோம்.

    உரிமைகளை இன்னும் ஆழமாக முன்னோக்கி எடுத்துச் செல்கிறோம்.

    ஆனால், ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றும்போது உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஜம்மு காஷ்மீர் மூலம் உங்களுக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மீட்டெடுப்பது காங்கிரஸ் கட்சி அல்லது தேசிய மாநாட்டு அல்லது இந்தியா கூட்டணிக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்.

    பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் உங்களிடம் எதையும் சொல்லலாம்.

    நாங்கள் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்கப் போகிறோம் என்பதைச் சொல்லவே நான் இங்கு வந்துள்ளேன்.

    தேர்தலுக்கு முன் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம், ஆனால் பா.ஜ.க. இதை விரும்பவில்லை.

    அவர்கள் முதலில் தேர்தலை விரும்பினர். நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும் உங்களுக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என தெரிவித்தார்.

    • ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் 3 கட்டமாக நடைபெற இருக்கிறது.
    • செப்டம்பர் 18-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    ஸ்ரீநகர்:

    மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் 3 கட்டமாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25-ம் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ம் தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

    தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்.

    இந்நிலையில், கண்டர்பால் தொகுதியில் தேசிய மாநாடு கட்சி சார்பில் உமர் அப்துல்லா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • தி.மு.க. வெற்றிக்கு வாக்கு வங்கியை விட கூட்டணி பலம் தான் காரணம்.
    • இறந்தவர்கள், இடம் பெயர்ந்து போனவர்களின் பெயர்களை சரிபார்த்து நீக்க வேண்டும்.

    சென்னை:

    2026 சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராகுமாறு அ.தி.மு.க.வினருக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கான காரணம் குறித்து அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தினார். அப்போது வாக்கு சதவீதம் சரிவதற்கான காரணம் பற்றி கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வு கூட்டத்தின்போது 40 வயதை கடந்த கட்சியினரின் ஆதரவு குறையாமல் அப்படியே இருப்பதை கண்டறிந்துள்ளார்.

    தி.மு.க. வெற்றிக்கு வாக்கு வங்கியை விட கூட்டணி பலம் தான் காரணம். தி.மு.க.வை வீழ்த்த நமது வாக்கு வங்கியை மீட்டெடுத்தால் போதும் என்ற நிலையில் கீழ் மட்ட அளவில் பிரச்சனைகளை களையவும் வாக்கு வங்கியை பலப்படுத்தவும் புதிய வியூகம் வகுத்துள்ளார்.

    அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்ட, கிளை கழக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தவும் 81 மாவட்ட செயலாளர்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த கூட்டங்களை நேரில் ஆய்வு செய்ய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதன் முதல் கூட்டம் சென்னை புறநகர் மாவட்டத்தில் உள்ள கொளப்பாக்கத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்துக்கு பூத் அளவிலான நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மேலிடப் பார்வையாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் விஜய பாஸ்கர், பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதலில் ஒவ்வொரு நிர்வாகியாக பேச விட்டு அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்கள்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமியின் செயல் திட்டங்களை அவர்களிடம் விளக்கி கூறினார்கள்.

    பூத் அளவில் கட்சியை வலிமைப்படுத்த முக்கியமான செயல்திட்டங்களை வகுத்துள்ளார்கள். ஒரு பூத்தில் சராசரியாக 1000 வாக்காளர்கள் இருப்பார்கள். இந்த பூத் ஒவ்வொன்றிலும் 9 நிர்வாகிகள் கட்டாயம் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இவர்கள் ஒவ்வொருவரும் 100 வாக்களர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சியினர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சேர்க்க வேண்டும். இறந்தவர்கள், இடம் பெயர்ந்து போனவர்களின் பெயர்களை சரிபார்த்து நீக்க வேண்டும்.

    இளைஞர்களின் ஆதரவை பெற வேண்டும். அதற்காக புதிய இளைஞர்களை தேட வேண்டியதில்லை. அ.தி.மு.க.வினரின் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை கட்சியில் சேருங்கள். அவர்கள் தமிழக வெற்றிக் கழகம், சீமான் கட்சிகளுக்கு செல்வதை தடுக்க வேண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு லேப்-டாப் கொடுத்ததையும், இளம்பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுத்ததையும் நிறுத்தி வைத்திருப்பதையும் எடுத்து சொல்லி அ.தி.மு.க. பக்கம் இழுக்க வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியில் நடக்கும் சீர்கேடுகளையும் குறிப்பிட்டு அதை சீரமைக்க அ.தி.மு.க.வில் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும்.

    பா.ஜனதாவுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். சிறுபான்மையினருக்கு உண்மையாகவே நலத்திட்டங்களை செய்தது அ.தி.மு.க. என்பதையும் தற்போதைய தி.மு.க. அரசு செயல்படுத்தும் தேவையற்ற திட்டங்களையும் அடிமட்டத்தில் இருக்கும் மக்களிடமும் விளக்கி சொல்ல வேண்டும்.

    3 மாதங்களுக்கு ஒரு முறை வட்ட கழகம், கிளை கழகம் நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும். அந்த பகுதியில் இருக்கும் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்கள்.

    2 கோடியே 5 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ள நிலையில் நமது வெற்றி எளிதானது. அதற்கு நீங்கள் உழைத்தால் போதும் என்றனர்.

    சுமார் 4 மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் ஆர்வமுடன் கேட்டு சென்றார்கள். இதேபோல் 81 மாவட்டங்களிலும் கூட்டம் நடத்தவும், தி.மு.க., பா.ஜனதா, த.வெ.க. ஆகிய கட்சிகளின் செயல்பாட்டை உரிய முறையில் கடுமையாக விமர்சிக்கும் படியும் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கட்சியினர் குடும்பத்து இளம் வாக்காளர்களை வாட்ஸ் அப் குழுக்களில் இணைத்து தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    2026-க்கான தேர்தல் வேலை அ.தி.மு.க.வில் இப்போதே சூடுபிடித்துள்ளது.

    • டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்தபோது, பல்லாயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தார்.
    • தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    தூத்துக்குடி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    பைபிள், கந்தசஷ்டி கவசம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் 'சண்டாளன்' என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இந்த வார்த்தையை கூறியதற்காக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டது அநியாயம். என்னுடைய அரசியலை சமாளிக்க முடியாத காரணத்தால் என் மீது ஏதாவது ஒரு வழக்கை தொடுத்து வருகின்றனர். ஆனால் நான் ஜாலியாக இருக்கிறேன்.

    பார்முலா4 பந்தயத்தில் கார் ஓட்டுபவர்கள் மேல்தட்டு மக்கள்தான். இது அவர்களுக்கான விளையாட்டு. சிற்றூர்களில் சிறிய விளையாட்டு திடல்கள்தான் உள்ளன. அங்கு ஓடி விளையாடுவதற்கு வழியில்லை. அதுபோன்ற சிற்றூர்களில் திறமையான குழந்தைகளை தேர்வு செய்து பயிற்சி அளித்து விளையாட்டு வீரர்களாக மாற்றலாம்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்தபோது, பல்லாயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தார். அவர் இறந்தபோது, விளையாட்டு வீரர்களும், இஸ்லாமிய மக்களும் அதிகமாக வந்தனர். அந்த அளவுக்கு அவர் விளையாட்டுக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளார். அதுபோன்று தி.மு.க.வினர் ஏதாவது செய்தார்களா?. பொதுமக்கள் செல்லும் இடத்தில், 2 அரசு ஆஸ்பத்திரிகள் உள்ள பகுதியில் கார் பந்தயம் நடத்துகிறார்கள். இந்த விளையாட்டுக்கு பதிலாக சாலை, பள்ளிக்கூடங்களை சீரமையுங்கள். ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. ஆனால் பந்தயம் நடத்த எப்படி பணம் வருகிறது?. டோல்கேட்டில் கட்டணம் உயர்வை போராடி தடுப்போம்.

    தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதுதான் பாலியல் சீண்டலுக்கு காரணமாக அமைகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவரிடம் வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் கூறுகையில், '2026-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. தற்போது 60 வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டேன்' என்றார்.

    • அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.
    • அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    அரியானா மாநிலத்தில் முதல் மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 1-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்படுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

    அதன்படி, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    அரியானாவில் பிஜோனி சமுதாய மக்களின் முக்கிய பண்டிகை தேர்தல் நடைபெறவிருந்த நாளன்று வருவதால் அக்டோபர் 1-ம் தேதிக்கு பதில் அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல, 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    ஜம்மு காஷ்மீரில் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேதியும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஜம்மு காஷ்மீரில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • நீங்கள் எல்லோரும் கழக ஆட்சியின் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது குறிஞ்சி இல்லத்தில் தி.மு.க. பிரமுகர் திராவிட மணி இல்லத் திருமணத்தை நடத்தி வைத்தார்.

    மணமக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

    திருமண நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    இந்த திருமணம் ஒரு மகிழ்ச்சியான தினத்தில் நடைபெறுகிறது. 6 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் கழக தலைவராக நம் தலைவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று கழக தலைவராக 7-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அப்படிப்பட்ட சிறப்பான நாளில் இந்த திருமணம் நடைபெறுகிறது.

    இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    நீங்கள் எல்லோரும் கழக ஆட்சியின் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள்தான் இருக்கிறது. எனவே இப்போதில் இருந்தே நம்முடைய தேர்தல் பிரசாரத்தை நாம் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு நம்முடைய முதலமைச்சர் தலைமையில் மீண்டும் கழக ஆட்சியை அமைத்திட, இந்த திருமண நிகழ்ச்சி மூலம் நம்முடைய உறுதியை ஏற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம், மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • அக்டோபர் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை.

    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர், அரியானா, மராட்டியம், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்ட சபை தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.

    இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

    காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    இதேபோல அரியானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 1-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 3-ந்தேதியுடன் அங்கு சட்டசபை பதவி காலம் முடிவடைகிறது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 4-ந்தேதி நடக்கிறது.

    இந்த தேர்தலோடு மராட்டியம் மாநிலத்துக்கான தேர்தல் தேதியை அறிவிக்காததால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தன.

    இந்த நிலையில் காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான தேர்தல் முடிவு வெளியான பிறகே மராட்டியம், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப் படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    அக்டோபர் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடை பெறுகிறது. அதன் பிறகு தான் மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்க ளுக்கான சட்டசபை தேர்தல் தேதி வெளியாகும்.

    மராட்டிய மாநில சட்ட சபையின் பதவி காலம் நவம்பர் 26-ந்தேதியும் , ஜார்க்கண்ட் மாநில சட்ட சபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதியும் முடிவடைகிறது.

    மராட்டிய மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும் மராட்டிய தேர்தலோடு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×