search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுத பூஜை விடுமுறை"

    • ஊட்டியை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர்.
    • சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி இன்றும், நாளையும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ணமான சூழ்நிலையை அனுபவிக்கவும், அங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.

    அதுவும் விடுமுறை தினங்கள், கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையொட்டி பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    தொடர் விடுமுறையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி மலைப்பாதையில் பயணித்து நீலகிரிக்கு சென்றனர். இதனால் அந்த சாலையில் வழக்கத்தை விட போக்குவரத்து அதிகமாக இருந்தது. ஊட்டியை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் குவிந்தனர். அவர்கள் அங்கு 2-வது சீசனையொட்டி மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர்களை கண்டு ரசித்தனர். அதன்முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர்.அத்துடன் தாவரவியல் பூங்காவில் உள்ள புல்தரையில் அமர்ந்து பேசி, குழந்தைகளுடன் விளையாடியும் தங்கள் விடுமுறையை கழித்தனர்.

    ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், மரவியல் பூங்கா, பைக்காரா படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    அவர்கள் அங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து, அங்கு நிலவிய இதமான காலநிலையை அனுபவித்தனர்.

    இதேபோல் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, டால்பினோஸ் காட்சி முனை, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி இன்றும், நாளையும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இன்று காலை 8.20 மணிக்கு குன்னூரில் இருந்து சிறப்பு ரெயில் ஊட்டிக்கு புறப்பட்டது. இந்த ரெயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர். இதேபோல் ஊட்டி-கேத்தி இடையே 3 ரவுண்ட் ஜாய் ரைட் சிறப்பு ரெயிலும் இயக்கப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நீலகிரியில் உள்ள அனைத்து சாலைகளிலுமே போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்களில் சாலைகளில் காத்திருந்து புறப்பட்டு சென்றதையும் காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் வருகையால் சுற்றுலா தலங்களையொட்டி உள்ள கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்தது.

    விடுமுறை தினத்தையொட்டி கோவையில் உள்ள சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. பொள்ளாச்சி ஆழியார் அணை பூங்காவுக்கு திருப்பூர், கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்கள், மோட்டார் சைக்கிள், பஸ்கள், வேன்கள் உள்ளிட்டவற்றில் வந்திருந்தனர்.

    அவர்கள் ஆழியார் அணை, அணை பூங்கா உள்ளிட்டவற்றையும் பார்த்து ரசித்தனர். ஆழியார் அருகே உள்ள கவியருவியிலும் (குரங்கு நீர்வீழ்ச்சி) சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ச்சியடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் ஆழியார் பகுதியில் உள்ள கடைகளிலும் வியாபாரம் களை கட்டியது.

    இதேபோல் கோவை குற்றாலம், வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களு க்கு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தற்போது கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து, குளர்ச்சியான கால நிலையே நிலவி வருகிறது. சுற்றுலா தலங்களில் நிலவிய இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். 

    • விசேஷ நாட்களில் வெளியூர் பயணம் அதிகரிப்பது வழக்கம்.
    • வந்தே பாரத் ரெயில்களும் நிரம்பிவிட்டன.

    சென்னை:

    பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் வெளியூர் பயணம் அதிகரிப்பது வழக்கம். வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப் படும் தசரா பண்டிகை நேற்று தொடங்கியது.

    இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்திலும் இடங்கள் நிரம்பின.

    தமிழகத்தில் ஆயுதபூஜை, வருகிற 11-ந் தேதி (வெள்ளிக் கிழமை), 12-ந் தேதி (சனிக்கிழமை) விஜய தசமி கொண்டாடப்பட உள்ளது. இதனால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.


    இதனை தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும் எல்லா ரெயில்களிலும் 10-ந் தேதி (வியாழக்கிழமை) பயணத்திற்கான இடங்கள் நிரம்பின.

    குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் நெல்லை, முத்து நகர், அனந்தபுரி, திருச்செந்தூர், பொதிகை, பாண்டியன், கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பிவிட்டன.

    இதேபோல கோவை செல்லக் கூடிய ரெயில்களில் இடங்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் நீடிக்கிறது. பெங்களூர் பயணத்திற்கும் இடமில்லை. சிறப்பு ரெயில்களும் நிரம்பிவிட்டதால் மக்கள் அரசு பஸ்களை நாடி செல்கின்றனர்.

    சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில்களும் நிரம்பிவிட்டன. தீபாவளி, பொங்கல், வரை அதில் இடமில்லை.

    ஆயுதபூஜை விடுமுறை பயணத்திற்கு இதுவரை 27 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அடுத்த வாரம் முன்பதிவு விறு விறுப்பாக இருக்கும் என்று அரசு விரைவு போக்கு வரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரி வித்தார்.


    ஆயுத பூஜை விடுமுறையை யொட்டி வருகிற 9, 10-ந் தேதிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். இதுபற்றிய அறிவிப்பு 7-ந் தேதி வெளியிடப்படும்.

    பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணத்தை தொடர முன்பதிவு செய்து கொள்ளலாம். தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் 14 அல்லது 15-ந் தேதி நடைபெறும்.

    அதில் தமிழகம் முழுவ தும் சிறப்பு பஸ்கள் இயக்கு வது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.

    அரசு விரைவு பஸ் போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 200 பஸ்கள் வந்துள்ளன. பழைய பஸ்களுக்கு பதிலாக இவை இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆயுத பூஜை, காலாண்டு விடுமுறையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது.

    கோவை

    பொள்ளாச்சி நகரில் மையப்பகுதியில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது.

    தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பயணிகள் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ் இயக்கப்படும்.

    இந்த ஆண்டில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு வரை அவ்வப்போது முகூர்த்த நாட்கள் இருந்ததால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர்களுக்கு கூடுதல் பஸ் இயக்கப்பட்டது. பின்னர் கடந்த 2 வாரமாக பஸ் நிலையத்தில் கூட்டம் குறைவால், வெளியூர் பஸ்களிலும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

    இதற்கிடையே, வரும் 30-ந் தேதியுடன் பள்ளி அரையாண்டு தேர்வு நிறைவடைந்து அக்டோபர் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை என தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் அந்த நாட்களில் காந்தி ஜெயந்தி விடுமுறையும் அதன்தொடர்ந்து 4 மற்றும் 5-ந் தேதிகளில் சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து விடுமுறைகள் இருப்பதால், வெளியூர் பயணிகள் வசதிக்காக, வரும் 30-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை முதல் 5-ந் தேதி வரை என தொடர்ந்து 5 நாட்களும், வழக்கம்போல் இயக்கப்படுவதை விட, பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதிலும் குறிப்பாக கோவை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருப்பூர், கரூர், ஈரோடு, திருச்சி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 35 பஸ்கள் சிறப்பு பஸ்களாக கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று வால்பாறையில் வசிக்கும் பலரும் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றுவதால், சரஸ்வதி பூஜையையொட்டி வால்பாறைக்கு அக்டோபர் 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கும், வெகுதூர பகுதிகளுக்கும் என தினமும் 190 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், சுமார் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் வெகுதூர பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

    விசேஷ நாட்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படு கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வரும் 30-ந் தேதி வரை பள்ளிகளில் தேர்வு நடக்கிறது. 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரையிலும் காலாண்டு விடுமுறையாக இருந்தாலும், சரஸ்வதி பூஜை பண்டிகை இருப்பதால், பெரும்பாலானோர் குடும்ப த்துடன் வெளியூர்களுக்கு செல்வர்.

    இதனால், வெளியூர்களுக்கு கடந்த ஆண்டை விட கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.இந்த முறை சரஸ்வதி பூஜை மற்றும் பள்ளி விடுமுறை என்பதால், 35 பஸ்கள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    இதேபோன்று கோவையில் இருந்தும் நெல்லை, தென்காசி மதுரை, சேலம், ஊட்டி, உள்பட மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.  

    ×