என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசிக"

    • தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு விசிக துருப்புசீட்டாக உள்ளது.
    • திமுக கூட்டணியை உடைப்பதற்கு சிலர் கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள்.

    விசிக மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிபட்டில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா நடைபெற்றது.

    விழாவில் கவுதம புத்தர், அம்பேத்கர், அன்னை மீனாம்பாள், அன்னை சாவித்திரி பாய் பூலே, அன்னை ரமாபாய் ஆகியோரின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் திருமாவளவன் கூறியதாவது:-

    * திமுக கூட்டணியை உடைப்பதற்கு சிலர் கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுத்து விடக்கூடாது.

    * தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜக, முதலில் அதிமுகவை தான் பலவீனப்படுத்த நினைக்கும். தப்பித்தவறி பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எடப்பாடி பழனிச்சாமியின் கதை முடிந்துவிடும்.

    * தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு விசிக துருப்புசீட்டாக உள்ளது.

    * விசிகவிற்கு எத்தனை சீட்டு கிடைக்கும். 6 சீட்டு 7, 8 ஆகுமா என்று கேட்கிறார்கள். 6 சீட்டு 10 சீட்டு ஆனாலும் 20 சீட்டு ஆனாலும் நாங்கள் ஆட்சியை பிடிக்க போவதில்லை. ஆனால் நாங்கள் இருக்கும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் வலுவான ஒரு சக்தி என்பதை வரும் தேர்தலிலும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துவோம்.

    • தி.மு.க.வில் கூட்டணி வைத்து அழித்தார்களோ, அதேபோல் தற்போது வி.சி.க.வை அழித்து வருகிறார்கள்.
    • திமுக - விசிக கூட்டணி குறித்து விமர்சனம் செய்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், " ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை எப்படி தி.மு.க.வில் கூட்டணி வைத்து அழித்தார்களோ, அதேபோல் தற்போது வி.சி.க.வை அழித்து வருகிறார்கள்" என்றார்.

    திமுக - விசிக கூட்டணி குறித்து விமர்சனம் செய்த ஆதவ் அர்ஜூனாவுக்கு வி.சி.க எம்.எல்.ஏசிந்தனைச் செல்வன் பதிலடி கொடுத்துள்ளார்.

    அப்போது அவர், " விசிகவுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை" என்று கூறியுள்ளார்.

    • தமிழக அரசியலில் பூதாகாரமாக வெடித்துள்ளது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்பு.

    தமிழ்நாடு அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடி வரையிலான ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பூதாகாரமாக வெடித்துள்ளது.

    டாஸ்மாக் ஊழல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த வரிசையில், தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் இன்று டாஸ்மாக் ஊழலை எதிர்த்து மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் நடத்த முயன்ற பா.ஜ.க. தலைவர் அண்ணாலை உள்பட அக்கட்சியை சேர்ந்த பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், டாஸ்மாக் விவகாரத்தை கண்டித்து பா.ஜ.க. முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "டாஸ்மாக்கிற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் வரவேற்போம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மது ஒழிப்பை அமல்படுத்தினால் வரவேற்கலாம், பாராட்டலாம். மதுபான கடைகளை ஒழிக்க வேண்டும், மூடப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு," என்று தெரிவித்தார்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதுவும் செய்துவிட முடியாது.
    • கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நம் கனவு.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் வெற்றி விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவடத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன், ஒரு தேர்தலிலும் போட்டியிடாத நடிகர் தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள் என்று பேசினார்.

    கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கும் போதெல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறி வந்தனர். விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் போதும் அப்படித் தான் சொன்னார்கள். ஆனால், அதனை கடந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி களத்தில் நீடித்து வருகிறது. யார் கட்சி தொடங்கினாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதுவும் செய்துவிட முடியாது.

    கவர்ச்சியின் மூலம் இந்த இயக்கத்தை சேர்ந்த யாரையும் திசை திருப்ப முடியாது. 25 ஆண்டுகளாக ஒரு பட்டாளத்தை விடுதலை சிறுத்தைகள் அதே வேகத்தில் வைத்துக் கொண்டுள்ளது. எந்த சரிவும் ஏற்படவில்லை, வீழ்ச்சியும் இல்லை. ஒரு அரசியல் கட்சியை 25 ஆண்டுகள் கடந்து தாக்குப் பிடிப்பதே சாதனை, வெற்றி.

    தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுடன் இணைந்து இருப்பதால் தான் வெற்றி கிடைப்பதாக சிலர் ஏளனம் பேசி வருகின்றனர். பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் தங்கள் செல்வாக்கை நிரூபித்து தான் கூட்டணியில் இணைந்துள்ளன. ஆண்ட கட்சிகள் தான் விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு வேண்டும் என விரும்பும் நிலைக்கு நாம் உறுதியாக இருக்கிறோம்.

    தற்போது ஒரு நடிகர், எந்த தேர்தலிலும் நிற்கவில்லை, போட்டியிடவில்லை. ஆனால் அடுத்த முதல்வர் அவர் தான் என்று பேசுகின்றனர். நான் தொடக்கத்தில் அதிக வாக்குகள் பெற்றபோது என்னை பற்றி யாரும் பேசவில்லை. நாம் வாக்கு வங்கியை தனியாக நிரூபிக்காததால், பெரிய அரசியல் கட்சியினர் நம் செல்வாக்கை வைத்து 10 தொகுதிகளுக்குள் ஒதுக்குகின்றனர்.

    கடந்த 2006-ம் ஆண்டு தான் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது. எங்களுக்கு கொள்கை தான் பெரியது என்பதால் குறைந்த தொகுதிகளை வாங்குகிறோம். தமிழ்நாடு மக்கள் நலனுக்காக, வகுப்புவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகவே தொடர்கிறோம். கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நம் கனவு. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நம் இலக்கு,"

    என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேசிய கட்சிக்கான தகுதியைப் பெற வேண்டுமெனில், 3 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
    • தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கான தலைமை அலுவலகம் உள்ளிட்ட விவரங்களைக் கோரும் பணியில் மாநிலத் தேர்தல் துறை ஈடுபட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எவை எவை என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற, தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தையோ அல்லது வெற்றியையோ கட்சிகள் பெற்றிருக்க வேண்டும்.

    மாநில கட்சிகளாக அங்கீகாரம்பெற வேண்டுமெனில், நான்கு நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதாவது, சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

    மக்களவைத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி., தொகுதிளில் ஒவ்வொரு 25 இடங்களில் ஒரு இடத்திலாவது வெற்றியைப் பதிவு செய்திருக்க வேண்டும்.

    மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை அல்லது 2 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். எந்தத் தொகுதியிலும் வெற்றியைப் பதிவு செய்யாவிட்டால் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.

    இதேபோன்று தேசிய கட்சிக்கான தகுதியைப் பெற வேண்டுமெனில், 3 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் குறைந்த பட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 சதவீத வாக்குகள் பெறுவதுடன், 4 மக்களவைத் தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும். நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று பூர்த்தியானால், தேசிய கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

    தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்தால், தேர்தலின் போது அந்த கட்சி மற்றும் அதன் வேட்பாளருக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசிய வாதகாங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்தன.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.,பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தேர்தல் ஆணை யம் அண்மையில் வெளியிட்ட உத்தரவால், தமிழகத்திலும் அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பட்டியலில் இருந்து சில கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

    அதேசமயம், தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கான தலைமை அலுவலகம் உள்ளிட்ட விவரங்களைக் கோரும் பணியில் மாநிலத் தேர்தல் துறை ஈடுபட்டுள்ளது.

    தேசிய கட்சிக்கான அந்தஸ்து பட்டியலிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீக்கப்பட்டாலும், தமிழகத்தில் மாநிலக் கட்சிக்கான அந்தஸ்து பட்டியலில் அந்தக் கட்சி இடம் பெற்றுள்ளது.

    இதன்மூலம், மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., ஆம்ஆத்மி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் மாநில கட்சிகளாக உள்ள பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத் தைகள் உள்ளிட்ட கட்சிகள் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை ஏற்கனவே இழந்துள்ளன. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் 8 சதவீத வாக்குகளுக்கும் குறைவாக பெற்று வரும் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இன்னும் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை பெறாமலேயே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும் சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
    • பாஜகவை அதிமுக எதிர்ப்பது கோட்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதை விடுதலைச்சிறுத்தைகள் சரியாக புரிந்து கொண்டுள்ளோம்.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து எப்படி எமது தலைவர் திருமாவளவன் களமாடுகிறாரோ அப்படித்தான்

    ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டே களமாடி வருகிறார் முதல்வர் அவர்கள்.

    திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும் சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் விடுதலைச்சிறுத்தைகள் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருக்கிறது.

    கடந்த 2021ல் நடைப்பெற்ற சட்டப்பேரவைத்தேர்தலில் 6 இடங்களே ஒதுக்கப்பட்ட போதும், பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம்.

    ஆகவே, திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் இடம் பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே.

    இச்சூழலில்,பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி இல்லை என்று நேற்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தவுடன்,

    விடுதலைச்சிறுத்தைகள் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் எனவும் வரப்போகிறது எனவும் கக்கத்தில் பையை வைத்துக்கொண்டு ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் அரசியல் புரோக்கர்கள்.

    பாஜகவை அதிமுக எதிர்ப்பது கோட்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதை விடுதலைச்சிறுத்தைகள் சரியாக புரிந்து கொண்டுள்ளோம். எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை.

    திமுக தலைமையிலான கூட்டணியால் மட்டுமே பாஜக எனும் தீய சக்தியை அழித்தொழிக்க முடியும். அந்த வகையில், அரசியல் புரோக்கர்களின் கேடு செயல் நிறைவேறாது. விடுதலைச்சிறுத்தைகள் அரசியல் புரோக்கர்களின் அற்ப ஆசைக்கு வைக்கப்பட்ட களிமண் அல்ல; காட்டாற்று வெள்ளத்தையே திசைதிருப்பும் கற்பாறை என எச்சரிக்க கடமைப்பட்டுள்ளோம்.

    இந்த கற்பாறையில் அரசியல் புரோக்கர்கள் அடிபடப்போவது உறுதி!

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ராஜிவ் காந்தியுடன் 17 பேர் கொல்லப்பட்டதை மூடி மறைக்க கூடாது என்றார் கார்த்தி சிதம்பரம்
    • ராஜிவ் காந்தியின் முடிவு அவரே தேடி கொண்ட ஒன்று என்றார் வன்னி அரசு

    தி.மு.க.வின் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு நேர்காணலில் "சரித்திர புகழ் வாய்ந்த தலைவர் ஒருவருடன் உணவருந்த வேண்டும் என்றால், விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுடன் உணவு அருந்த விரும்புகிறேன். அப்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக அவரிடம் மன்னிப்பும் கேட்பேன்" என கருத்து தெரிவித்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் பதிவிட்டார்.

    அதில் அவர் கூறியதாவது:

    பிரபாகரனை பாராட்டி பேசுவது இந்திய காங்கிரஸ் கட்சியினருக்கு இசைவான கருத்து அல்ல. ராஜிவ் காந்தியும், அவருடன் 17 பேரும் விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட படுகொலை சம்பவத்தை மூடி மறைத்து பிரபாகரனின் புகழ் பாட நினைப்பது தவறு. இந்துத்துவா தேசியவாதம் போல்தான் பிரபாகரனின் தமிழ் தேசிய சித்தாந்தங்களும் மிக சிறுமையானது.

    இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிவிட்டார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் புத்த, சிங்கள ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகவும் போராடிய பெரும் தலைவர், மேதகு பிரபாகரன்.

    சனாதன இந்துத்துவம் ஆதிக்க மனப்பான்மையை வலியுறுத்துகிறது. மேதகு பிரபாகரனின் அரசியல், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எப்போதுமே ஆதரவு அளித்ததில்லை.

    திரு. ராஜிவ் காந்தியின் படுகொலையை காரணம் காட்டி எத்தனை நாட்கள் தமிழ் மக்களை நீங்கள் இழிவு படுத்துவீர்கள்? தமிழ் ஈழத்தில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தங்கள் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை காங்கிரஸ் கொண்டு வர வேண்டிய தருணம் இது என்பதை உணருங்கள்.

    சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதால் மேதகு பிரபாகரனுக்கும் விடுதலை புலிகளுக்கும் திருமதி இந்திரா காந்தி ஆதரவு அளித்தார்.

    ராஜிவ் காந்தியின் படுகொலையை யாரும் கொண்டாடவில்லை. அவரது முடிவு அவரே தேடி கொண்ட ஒன்றாகும்.

    மேதகு பிரபாகரனுக்கு ஆதரவு அளிப்பதுதான் இந்துத்துவாவை எதிர்ப்பதற்கு ஒப்பாகும்.

    இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.

    தி.மு.க.வுடன் தமிழகத்தில் ஒரே கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் இந்த சித்தாந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

    • ‘தேர்தல் பத்திரத் திட்டம்’ அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
    • நன்கொடையாளர்கள் குறித்த ரகசியம் காப்பாற்றப்பட வேண்டுமென பாஜக அரசு இந்த வழக்கில் வாதாடியது. அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

    தேர்தல் பத்திரத் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுள்ளது.

    இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் பத்திரத் திட்டம்' அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி குறித்த காலத்தில் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

    பாஜக அரசு 2017 ஆம் ஆண்டு கொண்டு வந்த 'தேர்தல் பத்திர திட்டம்' அரசமைப்புச் சட்டத்துக்கும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கும் எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 19 (1 ) (A) க்கு எதிராகத் தேர்தல் பத்திர திட்டம் உள்ளது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் யாரெல்லாம் நன்கொடை வழங்கினார்கள், எவ்வளவு வழங்கினார்கள், என்ற முழுமையான விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மார்ச் 6 க்குள் வழங்க வேண்டுமென்றும், தேர்தல் ஆணையம் அந்த விவரங்கள் அனைத்தையும் தனது இணையப் பக்கத்தில் மார்ச் 13ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது மட்டுமின்றி நன்கொடை கொடுப்பவரின் விவரங்களை ரகசியமாக வைத்திருப்பதற்கென வருமானவரிச் சட்டம், ரிசர்வ் வங்கி சட்டம் முதலானவற்றில் பாஜக அரசு செய்த திருத்தங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் எந்த அரசியல் கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை வழங்கியது என்ற உண்மை இந்திய குடிமக்களுக்குத் தெரியவரும்.

    2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், 2024 ஆம் ஆண்டு ஜனவரி வரையிலான காலத்தில் 16,518 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகி உள்ளன எனவும், அதில் சுமார் 6600 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரியவந்துள்ளது.

    இந்தியாவிலேயே மிக அதிகமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை தேர்தல் நன்கொடையாகப் பெற்றுள்ள பாஜக, அதை எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெற்றது என்பதும், அதற்காக அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு என்னென்ன சலுகைகள் கொடுக்கப்பட்டன என்பதும் விரைவில் தெரியவரும்.

    நன்கொடையாளர்கள் குறித்த ரகசியம் காப்பாற்றப்பட வேண்டுமென பாஜக அரசு இந்த வழக்கில் வாதாடியது. அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த வழக்கில் பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி, அடுத்து நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் அது அடையப்போகும் தோல்விக்கு முன்னோட்டம் என்றே மக்கள் கருதுகின்றனர்.

    உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தன்னை இணைத்துக்கொண்டிருந்தது. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரியதற்கு மற்றவர்கள் குறிப்பிட்ட காரணங்களை ஆதரித்ததோடு, விசிக போன்று விளிம்புநிலை மக்களுக்கு சேவை செய்யும் சிறிய கட்சிகளுக்கு இந்தத் திட்டம் பாகுபாடு காட்டுகிறது எனவே இதை ரத்து செய்யவேண்டும் என விசிக தரப்பில் வாதிடப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்து கருத்து தெரிவித்திருந்தது.

    இந்திய தேர்தல் சனநாயகத்தைக் காப்பாற்றுவதில் இந்தத் தீர்ப்பு பெரும் பங்களிப்பாக அமைந்துள்ளது. அதற்காக உச்சநீதிமன்றத்தை மனமாரப் பாராட்டி நன்றி தெரிவிக்கிறோம். இந்தத் தீர்ப்பை வழங்கியது போலவே மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் குறித்த வழக்கையும் விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாடாளுமன்ற பொதுத் தேர்தலை 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் நடத்த வேண்டும்
    • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறுவதற்கு பாஜக அரசு சதி செய்கிறது

    நாடாளுமன்ற பொதுத் தேர்தலை 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறுவதற்கு பாஜக அரசு சதி செய்கிறது என்ற ஐயம் நாடு முழுவதும் மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் துணை போகிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே, 'நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்' என வலியுறுத்தி பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதில் எளிதாக முறைகேடு செய்ய முடியும்; ஆளும் கட்சி தான் விரும்பிய வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று வல்லுநர்கள் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். மக்களுடைய சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் பாஜக அரசும் செயல்பட்டு வருகிறது. அதற்குத் தேர்தல் ஆணையமும் துணை போகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாக உள்ள தேர்தல் முறையைச் சிதைப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது. எனவே, வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக்கூடாது. மாறாக, எல்லா வாக்குப்பதிவு எந்திரங்களோடும் ஒப்புகைச் சீட்டினைப் பெறும் எந்திரமும் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான், வாக்காளர் தான் விரும்பிய சின்னத்தில் வாக்களித்தபின்னர், தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள முடியும். அந்த ஒப்புகைச் சீட்டினை வாக்குப் பெட்டியில் போடுதல் வேண்டும். அவற்றை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்.



    இந்த கோரிக்கையைத்தான், "இந்தியா கூட்டணி" கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதே கருத்தை முன்னாள் தேர்தல் ஆணையர் திரு. குரேஷி உட்பட பல அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் இதற்காக தலைநகர் டெல்லியில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தை பல சிவில் சமூக அமைப்புகளும் ஆதரித்து பல்லாயிரக்கணக்கில் திரண்டு தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். ஆனால், பாஜக அரசு அதற்கு செவிசாய்க்காமல் தொடர்ந்து அதிகாரத்துவ மமதையோடு நடந்து கொள்கிறது.

    தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் இரத்து செய்து தலைமை நீதிபதிக்குப் பதிலாக ஒரு அமைச்சரை நியமித்துக் கொள்ள வகை செய்யும் வகையில் புதிய சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான 'பெல் நிறுவனத்தின்' இயக்குனர்களாக பாஜகவினரே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாகத் தமது கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்ட போதும் இந்திய தேர்தல் ஆணையம் அவர்களை சந்திக்க மறுத்து வருகிறது.

    மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தொடர்பாக வெளியிடப்படும் உண்மைகளை மக்களுக்குத் தெரியாமல் மறைக்கும் விதமாக அவற்றை சமூக ஊடகங்களிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கி வருகிறது.



    கடந்த தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இருந்த எண்ணிக்கைக்கும் ஒப்புகை சீட்டில் வந்த எண்ணிக்கைக்கும் பல இடங்களில் வேறுபாடுகள் இருந்தன. அதற்கான காரணம் தேர்தல் ஆணையத்தால் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. லட்சக்கணக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காணாமல் போய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது அதைப் பற்றியும் தேர்தல் ஆணையமோ, ஒன்றிய அரசோ விளக்கம் எதையும் அளிக்கவில்லை. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் பயன்படுத்தப்படும் 'சிப்'பில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வெளியிலிருந்து மாற்றி அமைக்க முடியும் அதன் மூலம் தேர்தல் முடிவுகளை மாற்ற முடியும் என்பதை வல்லுநர்கள் நிரூபணம் செய்துள்ளனர்.

    இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக நடத்தப்படும் தேர்தல் முறை மீது மக்கள் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக் கூடாது. வாக்குப்பதிவு எந்திரங்கள் எல்லாவற்றோடும் ஒப்புகைச் சீட்டு கருவியை இணைக்க வேண்டும்; வாக்களித்ததும் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒப்புகைச்சீட்டினைத் தனியே ஒரு பெட்டியில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அந்த ஒப்புகைச் சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என எல்லோரும் வலியுறுத்துகின்றனர். ஆனால், பாஜக அரசாங்கமோ, தேர்தல் ஆணையமோ இதற்கு எந்த பதிலையும் கூறவில்லை.

    'இந்தத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்' என்று பிரதமர் மோடியும், பாஜகவினரும் கூறி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாஜக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், 400 இடங்களில் வெல்வோம் என்று அவர்கள் கூறுவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அவர்கள் முறைகேடு செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது. பாஜகவின் இந்த சதித் திட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் துணைபோகக்கூடாது. 100 சதவீதம் ஒப்புகை சீட்டை எண்ணித் தேர்தல் முடிவை அறிவிப்போம் என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

    இதனை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 23- 02- 2024 ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகளும், சனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    இந்திய தேர்தல் முறையைப் பாதுகாப்பது தான், இந்திய சனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படையாகும். எனவே, நேர்மையாகத் தேர்தல் நடத்த வலியுறுத்துவோம். பாஜகவின் சதித் திட்டத்தை முறியடிப்போம்!- என சனநாயக சக்திகளை அறைகூவி அழைக்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
    • பவதாரிணியின் திருஉருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

    இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.

    பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது.

    பவதாரிணி மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

    அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இசைஞானி இளையராஜா வீட்டிற்கு நேரில் சென்று பவதாரிணியின் திருஉருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

    பிறகு, இளையராஜாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    • தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக வறுமை ஒழிக்கப்படும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறி வருகிறது.
    • கோவையில் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

    இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கின்ற தொலைநோக்குத் திட்டமாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டியுள்ளது.

    இது தொடர்பாக விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக வறுமை ஒழிக்கப்படும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறி வருகிறது. தற்போது வறுமையில் இருக்கும் ஐந்து லட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்பதற்கு ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்படுவதாக இந்த நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பது ஏழை மக்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுள்ள அரசாக இது திகழ்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இருக்கும் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அனைத்து குடிசை வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான மாபெரும் திட்டம் உருவாக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அந்தத் திட்டத்தில் 2 ஆண்டுகளில் 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன.

    2011 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அந்தத் திட்டத்தை அதிமுக அரசு நிறுத்திவிட்டது. தற்போது கலைஞர் அவர்களின் வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் அவர்கள், 'குடிசை இல்லா தமிழ்நாடு' திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆறு ஆண்டுகளில் 8 இலட்சம் வீடுகள் கட்டப்படுமென்றும், நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறதென்றும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதனைப் பாராட்டி வரவேற்கின்றோம். வீடு ஒன்றுக்கு 3.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாக இதில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை ரூ.5 இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

    பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்திய "புதுமைப்பெண் திட்டம்" பெருமளவில் பயனளித்துள்ளது. அதனை ஆண்களுக்கும் விரிவு படுத்துவதற்காக 'தமிழ்ப் புதல்வன் திட்டம்' என்கிற புதிய திட்டம் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் மனமுவந்து வரவேற்கிறோம்.

    புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை சிற்றுண்டித்திட்டம் இரண்டையும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவதாக அறிவித்திருப்பது எளிய மக்களின் கோரிக்கையை இந்த அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்குச் சான்றாகும்.

    கோவையில் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

    அறிவு சார் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடியில் "விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா" அமைக்கப்படும் என்றும்; தமிழ்நாட்டில் முதன்முறையாக "உலகப் புத்தொழில் மாநாடு" நடத்தப்படும் என்றும்; மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் "தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்" உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருப்பது தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துவதில் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டியாக விளங்குகிறது என்பதற்குச் சான்றுகளாக உள்ளன.

    அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி, ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிப்பதாகும்.

    சென்னையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கென்று பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'வடசென்னை வளர்ச்சித் திட்டம்' அறிவிக்கப்பட்டிருப்பதை மகிழ்வோடு வரவேற்கிறோம்.

    பழங்குடியின மக்களின் வாழ்விடங்களில் சாலை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'தொல்குடி' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் பாராட்டி வரவேற்கிறோம்.

    ஒட்டுமொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்குமான தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய செயல் திட்டமாக விளங்குகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் மற்றும் நிதித் துறை அமைச்சர் அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்று தொகுதிகளில் உறுதியாக உள்ளது.
    • மதிமுக ஒரு மக்களவை இடமும், ஒரு மாநிலங்களவை இடமும் கேட்கிறது.

    திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

    மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    விடுதலை சிறுத்தைகளை கட்சி கடந்த முறை திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் நின்றன. தற்போது மூன்று தொகுதிகள் கேட்கிறது. இரண்டு தனித்தொகுதி மற்றும் ஒரு பொதுத்தொகுதி கேட்கிறது. ஆனால் திமுக சார்பில் இரண்டு தனித்தொகுதியை வழங்க தயாராக இருக்கிறது.

    ஆனால் மூன்று தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளது விசிக. இதனால் இன்னும் உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது. பொதுத்தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கூட போட்டியிட தயார் என விசிக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மதிமுக ஒரு தொகுதியுடன் ஒரு மாநிலங்களவை இடங்களையும் சேர்த்து கேட்கிறது. மேலும் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாமல் உள்ளது. பம்பரம் சின்னம் தொடர்பாக மதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    திமுக விருப்ப மனு பெற்று வருகிற 10-ந்தேதியில் இருந்து நேர்காணல் நடத்த இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையாததால் நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள திமுக குழு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே முன்னதாக ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    இந்த நிலையில் இன்று மதிமுக மற்றும் விசக உடன் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி உடனும் இன்னும் ஒரிரு நாட்களில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    ×