search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலவரையற்ற வேலை நிறுத்தம்"

    • விசைப்படகு மீனவர் சங்க அவசர கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
    • சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலையிழப்பு அபாயம்.

    ராமேசுவரம்:

    ராமநாதாபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகத்தில் சுமார் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

    இதில், பெரும்பாலும் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் மற்றும் கோழி தீவனத்திற்கு பயன்படும் சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்கள் ஆகியவற்றை பிடித்து வருகின்றனர்.

    சமீபத்திய மீன்பிடி தடை காலத்திற்கு முன்பு இறால் ரூ.650, கணவாய் ரூ.400, நண்டு ரூ.350, காரல் ரூ.70, சங்காயம் ரூ.25 என்ற அடிப்படையில் விலை இருந்து வந்தது.

    இந்தநிலையில், மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்கச் சென்ற பின்னர் இறால் ரூ.350-400, நன்டு ரூ.250, கணவாய் ரூ.180, காரல் ரூ.15, சங்காயம் ரூ.10 என 50 சதவீதம் வரை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒன்றிணைந்து சிண்டிகேட் அமைத்துக்கொண்டு விலையை வெகுவாக குறைத்துள்ளனர்.

    இதனால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.

    இந்தநிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர் சங்க அவசர கூட்டம் மாவட்டத்தலைவர் வி.பி.ஜேசுராஜா தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மீனவ சங்கத்தலைவர் சகாயம், எமரிட், எடிசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ராமேசு வரம் மீன்பிடி துறைமுகத்தில் இறால் மீன் கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விலையை 50 சதவீதம் வரை குறைத்து எடுப்பதை கண்டித்தும், மீனவர்கள் பிடித்தும் வரும் இறால் மீனுக்கு உரிய விலை நிர்ணயம் செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

    அதன்படி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இந்த போராட்டம் காரணமாக மீன்பிடி மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

    ராமேசுவரம் மீனவர்கள் அடுத்தடுத்த சிறைபிடிப்பை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது மீன்களுக்கு உரிய விலை நிர்யணம் செய்வது தொடர்பாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அரசுக்கு பெரும் வருவாய் இழப்பையும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தொழிலாளர்களுக்கு கொரோனா காலத்தில் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை
    • வருகிற 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    கோவை,

    கோவை மாநகராட்சியில் தூய்மை பணி, திடக்கழிவு மேலாண்மை, டிரைவர் மற்றும் சுகாதார பணிகளில் சுமார் 4,000 தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களுக்கு தின கூலியாக 323 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டாக ஊதிய உயர்வு எதுவும் செய்யப்படவில்லை.

    தொழிலாளர்களுக்கு கொரோனா காலத்தில் வழங்கு வதாக அறிவிக்க ப்பட்ட ஊக்கத்தொகையும் இதுவரை வழங்கப்ப டவில்லை.கடந்த சில ஆண்டுகளாக முறையான ஊதியம் மற்றும் தொழிலாளர்களுக்கான சலுகைகள் வழங்க கோரிக்கை விடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15 ஆயிரம் ரூபாய் போனஸாக வழங்க கோரிக்கை விடப்பட்டது.

    தொழிலாளர்களின் 19 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் சார்பில் நிர்வாகிகள் பன்னீர்செ ல்வம், செல்வராஜ், மணியரசு, செல்வம் உள்ளி ட்டோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கோவை மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு முறையான ஊதிய உயர்வு மற்றும் போனஸ் தொடர்பாக பதில் தரவில்லை.

    கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 3000 ரூபாய் போனஸ் ஆக வழங்கப்பட்டது. இந்தத் தொகை கூட இந்த ஆண்டில் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் சங்கங்க ளை சார்ந்தவர்கள் கூறியதாவது:-

    தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு அரசாணைப்படி சம்பளம் வழங்கப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த நிறுவனங்களுடன் பேசி முறையான சம்பளம் மற்றும் போனஸ் பெற்று தர முன் வரவில்லை. ஊதியம் போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் வருகிற 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள்.

    கோவை மாநகராட்சியில் தினமும் சுமார் ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. போராட்டம் காரணமாக குப்பை அகற்றும் பணி நடத்தப்பட மாட்டாது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கும் வரை போராட்டம் தொடரும்.‌ எங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டால் போராட்டத்தை வாபஸ் பெற தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×