search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு விமான நிலையம்"

    • ஆத்திரத்தில் இருந்த குற்றவாளி, விமான நிலைய ஊழியரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
    • சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர் ஒருவர் கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குற்றவாளியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொலை செய்யப்பட்டவருடன் குற்றவாளியின் மனைவிக்கு ஏற்பட்ட தகாத உறவு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த குற்றவாளி, விமான நிலைய ஊழியரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

    இதற்காக ஒரு பையில் கத்தியை வாங்கி மறைத்து வைத்துக்கொண்டு பஸ்சில் விமான நிலையத்திற்கு சென்ற அவர், அந்த வாலிபர் வெளியே வரும்வரை காத்திருந்தார். கொலையானவர் விமான நிலையத்தில் ட்ரோலி ஆபரேட்டர் வேலை பார்த்து வந்தார். அவர் வேலை முடிந்து வெளியே வந்ததும் குற்றவாளி தனது திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 40க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்.
    • பிரச்சினையை தீர்க்க மைக்ரோசாப்ட் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

    மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக நாடு முழுவதும் 192 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    விமான முன்பதிவு மற்றும் பணத்தை திரும்ப வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    பிரச்சினையை தீர்க்க மைக்ரோசாப்ட் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சென்னையை பொருத்தவரையில், மைக்ரோசாப்ட் சேவை முடங்கிய விவகாரத்தால், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 40க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படும் என்றும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், பெங்களூரு விமான நிலையத்தின் முணையம்-1ல் இருந்து புறப்பட வேண்டிய 90 சதவீத விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    விமான சேவை பாதிப்பு, நள்ளிரவு வரை தொடர வாய்ப்புள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

    • விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் விமான நுழைவு வாயில் வழியாக வெளியே வந்து கொண்டிருந்தனர்.
    • வாலிபர் மீது கடத்தல் மற்றும் சுங்க வரி ஏய்ப்பு செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெங்களூரு:

    துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

    இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் விமான நுழைவு வாயில் வழியாக வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது குடகு பகுதியை சேர்ந்த 24 வயது பயணி ஒருவர் வழக்கத்திற்கு மாறாக சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கவனித்தனர்,

    அவரது பொருட்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த கருப்பு நிற ஜீன்ஸ் பேண்டை ஆய்வு செய்ததில் இடுப்புப் பகுதியில் தங்கத்தை பேஸ்டாக உருவாக்கி அதன் மேல் ஜீன்ஸ் துணியை வைத்து தைத்து கடத்தி கொண்டு வந்துள்ளதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அவர் வைத்திருந்த சூட்கேசில் சோதனை செய்யப்பட்டது. அதில் இருந்த உள்ளாடைகளில் இதுபோல் தங்கத்தை பேஸ்டாக மாற்றி ஒட்டி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து ரூ. 55 லட்சம் மதிப்புள்ள 907 கிராம் தங்க பேஸ்டை கைப்பற்றிய போலீசார் அவர் மீது கடத்தல் மற்றும் சுங்க வரி ஏய்ப்பு செய்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகள் ஒவ்வொருவராக பரிசோதனை செய்யப்பட்டனர்.
    • தங்கம் கடத்தி வந்த 4 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை தீவிர சோதனை செய்தனர். அப்போது துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகள் ஒவ்வொருவராக பரிசோதனை செய்யப்பட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக 4 பயணிகள் இருந்தனர். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தொப்பி, முழங்கால் மற்றும் உடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் 4 பேரிடம் இருந்து 3 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.77 கோடி ஆகும். தங்கம் கடத்தி வந்த 4 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பெயர், விவரம் வெளியிடப்படவில்லை.

    • பயணிகள் விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
    • போலீசார் விரைந்துவந்து வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    பெங்களூரு:

    பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் சிலர் தனது உடைமைகளை இழந்துவிட்டதாக கூறியும், பர்சை தவற விட்டதாகவும் கூறி பணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இத்தகைய மோசடி நபர்கள் தற்போது விமான நிலையம்வரை வந்து விமான பயணிகளிடமும் கைவரிசை காட்ட தொடங்கிவிட்டனர்.

    பெங்களூரு தேவனஹள்ளியில் கெம்பேகவுட சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று ஒரு வாலிபர் எனது தந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருக்கு சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. பணம் கொடுத்து உதவுங்கள் என்று பலரிடம் பணம் வசூலித்தார்.

    அவரது நிலையை அறிந்த பலரும் அவரிடம் பணம் கொடுத்தனர். இந்த நிலையில் அவரது நடவடிக்கையில் சில பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்துவந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பதும், தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லி பணம் வசூலித்ததும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் அவரை சோதனை செய்ததில் அவரது பர்சில் பல்வேறு வங்கிகளை சேர்ந்த 26 கிரெடிட் கார்டுகள் இருந்தன.

    சென்னைக்கு செல்வதற்கான முன்பதிவு டிக்கெட்டும் அவரிடம் இருந்தது. இதை தொடர்ந்து விக்னேசை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த விக்னேஷ் கடந்த ஆண்டு சென்னை, ஐதராபாத், மும்பை விமான நிலையங்களிலும் இதுபோன்று பணம் வசூலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் யாரும் அதுபற்றி புகார் செய்யவில்லை.

    மேலும் பெங்களூரு விமான நிலையத்தில் ஏற்கனவே ஒரு பயணியிடம் வேலைக்கான இண்டர்வியூ செல்ல வேண்டும், எனது உடைமைகளை இழந்துவிட்டேன் என கூறி ரூ.8 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இதுபற்றி அந்த பயணி கொடுத்த புகாரில்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • பெங்களூருவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் 2-வது முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • பயணிகள் வருகை மற்றும் விமான சேவை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெங்களூரு:

    பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்டு பெங்களூரு வந்தார். பெங்களூருவில் இன்று காலை 9.45 மணிக்கு கன்னட பக்தி இலக்கிய முன்னோடியான கனக தாசா் மற்றும் மகரிஷி வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து முதலில் மரியாதை செலுத்தினார். பின்னர், பிரதமர் மோடி நாட்டில் 5-வதாகவும், தென் இந்தியாவில் முதலாவதாகவும் வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை சென்னை-மைசூரு இடையே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அதன்பின்னர் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2-வது முனையத்தை திறந்து வைத்தார்.

    பெங்களூரு விமான நிலையத்தில் நெரிசலை சமாளிப்பதற்காக கட்டப்பட்டுள்ள இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் பயணிகள் வருகை மற்றும் விமான சேவை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆண்டுக்கு தற்போது 2.5 கோடி பயணிகள் கையாளப்படும் நிலையில், இந்தப் புதிய முனையம் மூலம், 5 முதல் 6 கோடி பயணிகள் வரை கையாள முடியும். தோட்டநகரம் என்றழைக்கப்படும் பெங்களூருவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் 2-வது முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு தோட்டத்தில் நடப்பது போன்ற அனுபவத்தை பயணிகள் உணர்வார்கள். பசுமை சுவர்கள், தொங்கு தோட்டங்கள் மற்றும் வெளிப்புறத் தோட்டங்கள் என 10,000 சதுர மீட்டருக்கும் மேலான பரப்பளவைப் பயணிகள் பயன்படுத்தப்பட உள்ளனர். 

    • நவராத்திரி விழா உற்சாக நடைபெற்று வரும் வேளையில் இதன் கொண்டாட்டங்கள் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன.
    • கர்நாடக மாநிலத்தில் மைசூர் தசரா விழா உலக பிரசித்தி பெற்றதாகும்.

    பெங்களூரு:

    நாடு முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. இது விஜயதசமி, தசரா, துர்கா பூஜை, பத்துகம்மா பண்டுகா, குல்லு தசரா, துர்கா மா என இன்னும் பல்வேறு பெயர்களில் வெவ்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

    மற்ற திருவிழாக்கள் எல்லாம், ஓரிரு நாட்களில் முடிந்து விடும். ஆனால் நவராத்திரி திருவிழா மட்டும் தான் 9 நாட்கள் நடைபெறும் என்பது இதன் சிறப்பாகும். அதன்படி, இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    நவராத்திரி விழா உற்சாக நடைபெற்று வரும் வேளையில் இதன் கொண்டாட்டங்கள் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன.

    கர்நாடக மாநிலத்தில் மைசூர் தசரா விழா உலக பிரசித்தி பெற்றதாகும். அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் பண்டிகையாக நவராத்திரி திகழ்வதற்கு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் கர்பா நடனம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

    பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகள் கர்பா நடனம் ஆடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ட்விட்டர் பயனாளர் திவ்யா புத்ரேவு இதை பகிர்ந்துள்ளார்.

    பயணிகள் குழுவினர் விமான நிலையத்தில் திடீரென திரண்டு கர்பா நடனத்தில் ஈடுபடுவது வீடியோவில் பதிவாகி உள்ளது. பயணிகள் தங்கள் பொருட்களைத் தூக்கி விட்டுவிட்டு தன்னிச்சையாக குழுவோடு இணைந்து நடனம் ஆடினர்.

    ஊழியர்களில் சிலர் புலிகளைப் போலவும், சில பெண்கள் வண்ணமயமான பாரம்பரிய ஆடைகளிலும் காணப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் இசைக்கு ஒத்திசைந்து ஆடியது பார்வையாளர்களை கவர்ந்தது. பார்வையாளர்களும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதைக் காணக்கூடியதாக இருந்ததால், நடன நிகழ்ச்சியில் ஒரு மகிழ்ச்சியான கூட்டம் பங்கேற்பதை வீடியோ காட்டியது. பயணிகள் சரியான ஒத்திசைவில் நடனமாடுகிறார்கள்.

    இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் 4500க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பெங்களூரு விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பயணிகளின் நடனத்துக்கு நன்றி தெரிவித்து கருத்து வெளியிடப்பட்டு உள்ளது. அதில் சிறந்த பயணிகள் அனுபவத்தை வழங்குவதில் பெங்களூரு விமான நிலையம் முன்னோடியாக இருக்க முயற்சிக்கிறது. எங்கள் பயணிகள் இந்த முயற்சியை பாராட்டுகிறோம்!" என்று குறிப்பிட்டுள்ளனர்.

    நடனம் குறித்து கருத்து கூறியுள்ள மற்றொருவர், " பெங்களூரு பல கலாச்சாரங்களின் கலவையாகும்" என்று குறிப்பிட்டுள்ளார். கர்பா என்பது ஒரு அழகிய நடனமாகும், நவராத்திரி முழுவதும் இந்த நடன கொண்டாட்டங்கள் தொடரும். பெங்களூருவில் தற்போது நவராத்திரி கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×