என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொடநாடு கொலை"
- கோத்தகிரி போலீசார் 10 பேரை கைது செய்தனர்.
- வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இன்று இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது சயான், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகிய 3 பேர் ஆஜராகி இருந்தனர்.
அப்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிஜின்குட்டி, திபு உள்ளிட்டோரின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால், கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை பிப்ரவரி 9-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோரின் செல்போன், வாட்ஸ் அப் உரையாடல்களை ஆய்வு செய்வதற்காக சி.பி.சி.ஐ.டி போலீசார் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்குள்ள ஆய்வகத்தில் இவர்களின் பேச்சுக்கள், உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து, அதில் கிடைக்கப்பெறும் தகவல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் டி.எஸ்.பி.மாதவன் தலைமையிலான போலீசார் அகமதாபாத்திலேயே முகாமிட்டுள்ளனர்.
இந்த உரையாடல்களில் பேசப்பட்டது என்ன என்பது தெரியவரும் பட்சத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கும்.
- வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
சென்னை:
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக மாஸ்டர் கோர்ட்டில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தல் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சாமுவேல் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அப்போது, மாஸ்டர் நீதி மன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கூறக்கூடிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என தெரிவித்த நீதிபதிகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என ஏற்கனவே கூறியதை மீண்டும் நினைவுப் படுத்துவதாக கூறினர்.
மேலும், சென்னை ஐகோர்ட்டில் சிறப்பான பாதுகாப்புகளை வழங்கி வருவதால், எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்த அவர் தரப்பு வக்கீலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 5-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் என்னை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அதற்கு சம்மதிப்பேன்.
- ரூ.2 ஆயிரம் கோடி வரை தருவதாக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தனது வீட்டுக்கு வந்து பேசினார் .
சேலம்:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டிற்குள் நுழைந்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கனகராஜ் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் ஆத்தூர் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார்.
இதற்கிடையில் கனகராஜ் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய அண்ணன் தனபால் புகார் கூறி வருகிறார். அவர் இன்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் குறித்த விபரங்களை தான் வெளியிட்டதால் தான் மனநலம் பாதிக்கப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்டிடம் என் மீது புகார் அளித்துள்ளனர். மேலும் அதில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.
தான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நான் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இது பற்றி மருத்துவரும் குறிப்பிடவில்லை. அதற்கான ஆதாரங்களை தர தயாரா?.
சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தடையாக இருக்கும் என்பதால் இது போன்ற நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நான் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் நல்ல மனநிலையோடு தெரிந்த உண்மைகளை வெளிப்படையாக சொல்லி இருக்கிறேன். தேவைப்பட்டால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் என்னை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அதற்கு சம்மதிப்பேன்.
சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க தன்னிடம் பேரம் பேசப்பட்டது. ரூ.2 ஆயிரம் கோடி வரை தருவதாக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தனது வீட்டுக்கு வந்து பேசினார் .
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்த உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக தான் போராடி வருகிறேன். தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு கடிதம் கொடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 4 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் வழக்கு தொடர்பாக 167 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- நீதிபதி அப்துல்காதர் வழக்கை அக்டோபர் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.
தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் இதுவரை பலரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி உள்ளிட்டோர் கோர்ட்டில் ஆஜராகினர்.
சி.பி.சி.ஐ.டி. தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் வாதாடினர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஏ.டி.எஸ்.பி. முருகவேல், வழக்கின் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
4 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் வழக்கு தொடர்பாக 167 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தவேண்டியுள்ளது. எனவே தங்களுக்கு விசாரணையை இறுதி செய்ய அவகாசம் தேவை என கூறப்பட்டு இருந்தது. இதை ஏற்று நீதிபதி அப்துல்காதர் வழக்கை அக்டோபர் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபாலும் கைது செய்யப்பட்டிருந்தார். ஜாமினில் வெளியே வந்த அவர் வழக்கு தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தபடி உள்ளார். இதனால் அவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. வருகிற 14-ந் தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
- ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர்.
- இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.
தேனி:
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-
எனது சொந்த ஊர் தஞ்சை என்றாலும், அரசியல் பயணம் தொடங்கியது தேனி மாவட்டம் தான். இங்குள்ள நிர்வாகிகள் அனைவரையும் பெயர்சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவன். இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர். இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.
ஆனால் நம்மிடம் இருப்பவர்கள் உண்மையான தொண்டர் படை. தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடித்து தண்டனை பெற்றுத்தருவோம் என்று கூறினார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுவரை அதில் ஆர்வம் காட்டாமல் உள்ளார். இந்த வழக்கு விரைவு படுத்தப்பட்டால் பல உண்மை சம்பவங்கள் நாட்டிற்கு வெளிவரும். பலர் கம்பி எண்ண நேரிடும்.
நாங்கள் பொழுது போகாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஜெயக்குமார் கூறுகிறார். அவர்தான் பொழுதை போக்க தினந்தோறும் பிரஸ்மீட் நடத்துகிறார். இந்த வழக்கை சிந்துபாத் கதைபோல முடிவு பெறாமல் இழுத்துக் கொண்டே செல்லக்கூடாது. விரைந்து விசாரித்து குற்றாவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது
- தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
தேனி:
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தேனியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு கருத்துகளையும் தெரிவித்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி தினகரன் பேசினர். இதனால் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நாளை காலை 10மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
- ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன் முன்னிலை வகிக்கிறார்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விசாரணை தொடங்கியது.
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் கொடநாடு கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார்? என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தினார்.
தி.மு.க. அரசு உரிய நடவடிக்கையை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்களில் நாளை (1-ந் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நாளை காலை 10-மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு அளித்தார். ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. வினர் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.
இதையொட்டி ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் அ.ம.மு.க. நிர்வாகிகளும் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தனர்.
அதன்படி ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன் முன்னிலை வகிக்கிறார். மகிழன்பன், வி.என்.பி.வெங்கட்ராமன், எம்.எம்.பாபு, ராயபுரம் பி.எஸ்.சிவா, வழக்கறிஞர் எம்.வி.சதீஷ், ரெட்சன் அம்பிகா பதி, என்.கே.அச்சுதன் ஆகியோர் ஏற்பாட்டில் நடக்கும். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம்-டி.டி.வி.தினகரன் இருவரும் இணைப்புக்கு பிறகு நடக்கும் முதல் போராட்டம் என்பதால் இதனை சிறப்பாக நடத்த வேண்டும் என இரு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
- விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் வாளையார் மனோஜ் மட்டுமே ஆஜராகி இருந்தார்.
- வழக்கு விசாரணைக்கு வந்த போது, சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் கோர்ட்டில் எந்தவித இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யப்படவில்லை.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.
இந்த பங்களாவில் கடந்த 2017-ம் கொள்ளை, கொலை சம்பவம் அரங்கேறியது.
இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.
தற்போது இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.
இது தொடர்பான வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே சி.பி.சி. ஐ.டி போலீசார் கொடநாடு பங்காளவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள், ஜெயலலிதா, சசிகலாவின் அறைகள் மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றின் சில பொருட்கள் என 9 பொருட்களை ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் சி.பி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்தனர்.
மேலும் கோர்ட்டில் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்ட 8 செல்போன்களையும் விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி போலீசார் கேட்டிருந்தனர்.
இன்று காலை கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி. முருகேவல் ஆஜராகி இருந்தார். அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் ஆஜராகி தனது வாதங்களை முன் வைத்தார்.
வாதங்கள் அனைத்தும் முடிந்த பின்னர், நீதிபதி ஸ்ரீதரன் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை செப்டம்பர் மாதம் 8-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இன்று நடந்த விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் வாளையார் மனோஜ் மட்டுமே ஆஜராகி இருந்தார்.
சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று தாங்கள் இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில் இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் இன்று நடைபெறும் விசாரணையானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வழக்கு விசாரணைக்கு வந்த போது, சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் கோர்ட்டில் எந்தவித இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யப்படவில்லை. மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர் விடுமுறை என்பதால் இன்றைய வழக்கை குடும்ப நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் விசாரித்தார்.
- அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
- தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச ஓ.பன்னீர்செல்வத்துக்குதான் முழு தகுதி உள்ளது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவு அணியைச் சேர்ந்த கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தலைமையில் மருது அழகுராஜ் மற்றும் சேலம், ஈரோடு, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட செயலாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று வரை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றுதான் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு தீர்மானம் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இன்னும் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது.
இது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் இணையதளத்தில் புதிய பதிவேற்றம் செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனை மறைத்து எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச் செயலாளர் என கூறி கட்சியினரை ஏமாற்றி வருகிறார். இனிமேல் அவர் அ.தி.மு.க. கொடியை பற்றி பேசினால் பொடிப்பொடியாகி விடுவார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை விரைந்து நடத்தக் கோரி ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து நடத்துவோம். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவரது கட்சி கொள்கையின்படி ஊழல்வாதிகளை சேர்க்க மாட்டோம் என்கிறார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, காமராஜ், தங்கமணி, அன்பழகனை வைத்துக் கொண்டு தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை.
தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச ஓ.பன்னீர்செல்வத்துக்குதான் முழு தகுதி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.
- பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.
இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது. இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.
கொடநாடு கொலை, கொள்ள தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில், சயான், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, திபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ்சாமி, பிஜின் குட்டி, ஆகிய 10 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தவிர, வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் உள்பட 316 பேரிடம் மறு விசாரணையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கூடுதல் எஸ்.பி முருகவேல் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதரிடம் மனு தாக்கல் செய்தனர்.
அதில், இந்த வழக்கில் தொடர்புடைய விபத்தில் இறந்த கனகராஜ் மற்றும் சகோதரர் தனபால் உட்பட குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து, 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏற்கனவே கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அந்த போன்களை விசாரணைக்காக தங்களிடம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
அந்த செல்போன்கள் சி.பி.சி.ஐ.டி வசம் வந்ததும், போன்களில் பதிவாகியுள்ள தகவல்களை ஆய்வு செய்யும் வகையில், கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி, அதில் கிடைக்கும் தகவல்களை வைத்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர்.
- வெயில் தொடர்ந்து கடுமையாக நீடிப்பதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீடிக்க வேண்டும்.
- தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கும் 10 லட்சம். விஷ சாராயத்திற்கும் 10 லட்சம் என்பது என்ன நியாயம்?
புதுச்சேரி:
முத்தரையர் நினைவு நாளை முன்னிட்டு புதுவை-கடலூர் சாலை 100 அடி சாலை சந்திப்பில் அவரது உருவப்பட மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது.
இதில் பங்கேற்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்திற்கு மரியாதை செலுத்தி கட்சி கொடியை ஏற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விஷ சாராய விவகாரத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, செஞ்சி மஸ்தான் பதவி விலகி இருக்க வேண்டும். விஷ சாராயத்திற்கு அனைவரும் பதவி விலகி இருக்க வேண்டும். கொடநாடு கொலைக்கு எடப்பாடி பதவி விலகி இருக்க வேண்டும்.
ஆனால் யாருக்கும் தார்மீக பொறுப்பு என்பது இல்லை. எடப்பாடி ஆட்சியில் கள்ளச்சாராயம் இருந்தது. ஆனால் மக்கள் சாகவில்லை. இப்போது சாராயத்துக்கு பலர் இறந்துள்ளனர். ஆட்சியாளர்களை தேர்வு செய்தது மக்கள். அவர்கள்தான் இனி முடிவு செய்வார்கள்.
கவர்னரிடம் அ.தி.மு.க.வினர் கடிதம் கொடுக்கின்றனர். அப்படியென்றால் கொடநாடு கொலை விசாரணைக்கும் கடிதம் தரலாமா? தமிழக முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு ஏற்கனவே பலமுறை சென்றுள்ளார். அவர் சென்றதால் என்ன முதலீடு பெற்றார்?
தொழில் வளர்ச்சி என்பது பசப்பு வார்த்தை. புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை தொடங்குகின்றனர். இதில் நமது பாட்டனார் பற்றிய வரலாறு வருமா? தமிழ் இருக்கு என சொல்கிறார்கள். எங்கே இருக்கிறது? 12 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை. தமிழ், தமிழ் என கூறுகிறீர்கள். இரு தலைமுறை தாய்மொழியே இல்லாமல் வளர்ந்து விட்டது.
தமிழ் எங்கு வாழ்கிறது? இதுதான் திராவிட மாடலா? நீண்ட காலமாக சூழ்ச்சி செய்து தமிழனை ஏமாற்றி விட்டார்கள். தமிழ் வாழ்க என மாநகராட்சியில் எழுதினால் போதுமா? கோப்பில் தமிழ் வேண்டாமா? கொஞ்ச நாளைக்கு இந்த கொடுமை போகும். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழைத்தேடி பயணம் செல்கிறார்.
காலம் கடந்து விட்டது. ஒரு கடைத்தெருவில்கூட தமிழில் பெயர் பலகை இல்லை. ஒரு வானூர்தியில் ஓட்டுநர் தமிழில் அறிவிப்பு வெளியிட்டார் என அனைவரும் கைதட்டினார்கள். தமிழ் உணர்வு அனைவருக்கும் இருக்கு. டாக்டர் ராமதாஸ் 80 வயதிலும் தமிழை தேடி செல்கிறார், அவரை பாராட்டுகிறேன். அடுத்து வருபவர்கள் இதை தொடர வேண்டும்.
வெயில் தொடர்ந்து கடுமையாக நீடிப்பதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீடிக்க வேண்டும். மரணமடைந்த விவசாயிகள், இலங்கை தமிழர்கள் கொலை, பல கொடிய சம்பவங்களுக்கு தமிழக அரசு தொகை கொடுத்ததா?
தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கும் 10 லட்சம். விஷ சாராயத்திற்கும் 10 லட்சம் என்பது என்ன நியாயம்? காய்ச்சுவதே அவர்கள் என்பதால் பணம் கொடுத்து மறைக்க பார்க்கிறார்கள். இனி மனமுடைந்தால் விஷம் குடிக்க தேவையில்லை. கள்ளசாராயம் குடித்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும்.
ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்ப பெறுவது பைத்தியக்காரத்தனம். வேலையில்லா தையல்காரன் யானைக்கு டவுசர் தைத்த கதைதான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது.
- ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது.
இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளியான சயான் தனது குடும்பத்தினருடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் அவரது மனைவி, மகள் இறந்தனர்.
தொடர்ந்து, அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்கள் இந்த வழக்கில் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக தமிழக அரசு மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் தனிப்படை அமைத்தது.
ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க தொடங்கினர். சம்பவம் நடந்த கொடநாடு எஸ்டேட்டிலும் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ளவர்களிடம் விசாரித்தனர்.
மேலும் இது தொடர்பாக கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நட்ராஜ், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் என 300-க்கும் மேற்பட்டோரிடம் தனித்தனியாக சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சில மாதங்களுக்கு முன்பு திடீரென சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான சிறப்பு பிரிவினர் கொடநாடு வழக்கை தற்போது விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவருக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொடநாடு பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தது என்பது சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். அதனால் அங்கு மாயமான பொருட்கள் என்ன? கொள்ளை சம்பவம் குறித்து ஏதாவது தெரியுமா? என்பது குறித்து கேட்டு விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் டிரைவாக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த வகையில் ஆறுக்குட்டியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தில் இறந்து போன கனகராஜ் குறித்த முக்கிய தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.
2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கனகராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள் கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்து விட்டு, 2 பிரிவாக பிரிந்து சென்று விட்டனர். கனகராஜ் நேராக தனது சொந்த ஊரான சேலம் எடப்பாடிக்கு சென்று விட்டார்.
கொள்ளை சம்பவம் நடந்த 4 நாட்கள் கழித்து விபத்து நடந்த அன்று காலை கனகராஜ், தனது மனைவியுடன் எடப்பாடியில் உள்ள ஜோதிடர் ஒருவரை பார்க்க சென்றுள்ளார்.
ஜோதிடரிடம் தனது ஜாதகத்தை கொடுத்து தனக்கு நேரம் எப்படி இருக்கிறது. பிரச்சினைகள் ஏதாவது இருக்கிறதா? என கேட்டுள்ளார். அதனை ஆராய்ந்த ஜோதிடர், கனகராஜிடம், உனக்கு இன்றைய தினம் ஒரு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது.
அதனை மட்டும் கடந்து விட்டால் உன்னை எதுவும் நெருங்காது என தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த அன்றைய தினம் இரவே கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.
இந்த தகவல்களின் அடிப்படையில் கனகராஜ் சந்தித்த ஜோதிடர் யார் என்பது குறித்து விசாரித்தனர். தற்போது அவர் யார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அவரின் பெயர், விவரத்தை தெரிவிக்க மறுத்து விட்டனர்.
கனகராஜ் சந்தித்த ஜோதிடரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவருக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உள்ளனர்.
அவர் விசாரணைக்கு ஆஜராகும் போது, கனகராஜ் ஜாதகம் மட்டும் பார்த்தாரா? அல்லது வேறு ஏதாவது தகவல்களை உங்களிடம் தெரிவித்தாரா? கனகராஜூக்கு ஆபத்து இருப்பது எப்படி தெரியும் என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது கனகராஜ் தான். ஆனால் அவரும் இப்போது உயிருடன் இல்லை. இதனால் இந்த கொள்ளைக்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள் யார் என்பதே சி.பி.சிஐ.டி போலீசாரின் தேடுதலாக உள்ளது. தொடர்ந்து அதனை நோக்கி பயணித்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 20-ந் தேதி, இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலராக இருந்த உதவி கமிஷனர் கனகராஜிடமும் போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால், இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்