என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்னம் முடக்கம்"

    • அனைத்து கட்சிகளும் நேரடியாக மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • தேர்தல் களப்பணியை தொடங்க முடியாமல் திணறல்.

    பெருந்துறை:

    ஈரோடு கிழக்கு இடை த்தேர்தலில் முக்கிய கட்சிகளான அதிமுக, பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளன. இதன் காரணமாக இத்தொகுதியில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் நேரடியாக மோதும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

    தற்போது ஆளும் கட்சி யான தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோரின் வேட்பு மனுக்கள் உள்பட 55 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் மாநில கட்சியாக நாம் தமிழர் கட்சிக்கு அந்தஸ்து வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

    ஆனால் அக்கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சியை பொறுத்த வரை முன்பு கரும்புடன் கூடிய விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

    2024 மக்களவைத் தேர்தலில் இக்கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த கரும்புடன் கூடிய விவசாயி சின்னம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து மைக் சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    8 சதவீத வாக்குகளுடன் தற்போது மாநில கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளதால் நாம் தமிழர் கட்சிக்கு இதுவரை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட வில்லை.

    இம்முறை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டால் கிட்டத்தட்ட இதுவே நாம் தமிழர் கட்சிக்கு நிரந்தர சின்னமாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயி அல்லது மைக் சின்னத்தை ஒதுக்கீடு செய்யுமாறு நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மணிஷ் கூறுகையில், கரும்பு விவசாயி அல்லது மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யு மாறு நாம் தமிழர் கட்சியினர் கேட்டுள்ளனர். கரும்புடன் உள்ள விவசாயி சின்னம் ஏற்கனவே வேறு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதால் அந்த சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை.

    நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும். நாம் தமிழர் கட்சிக்கு என்ன சின்னம் என்பது குறித்து நாளை 20-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    பிப்ரவரி 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்னும் தேர்தலுக்கு முழுமையாக 15 நாட்கள் மட்டுமே உள்ளது.

    இன்னும் சின்னம் அறிவிக்கப்படாததால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி சின்னத்தைக் கூறி வாக்கு களை சேகரிக்க முடியாமல் தவிக்கிறார். பொது மக்களையும் வாக்காளர்களையும் சந்தித்து சின்னத்தை கூறாமல் வாக்குகளை சேகரிக்கிறார்.

    தற்போது தொகுதி முழுவதும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கு இணையாக தேர்தல் களப்பணியை தொடங்க முடியாமல் நாம் தமிழர் கட்சியினர் சுணங்கி போய் உள்ளனர்.

    இதன் காரணமாக தேர்தல் களத்தில் திமுகவை தவிர சுயேச்சைகள் மற்றும் உள்ளிட்ட எந்த கட்சியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாததால் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் களம் ஒரு வழி பாதையாக மாறிவிட்டது.

    • அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரு அணியினரும் வேறு பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த வேண்டும்.
    • சிவ சேனா கட்சிக்கு உரிமை கோரி இரு தரப்பினரும் சட்டப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் ஆளும் சிவ சேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. சிவ சேனா கட்சியானது ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகியோர் தலைமையில் 2 அணிகளாக பிரிந்து, தனித்தனியே கட்சிக்கு உரிமை கோரிய நிலையில் சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

    இரு அணிகளும் மறு அறிவிப்பு வெளியிடும் வரை 'வில், அம்பு' சின்னத்தை பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, அந்தேரி (கிழக்கு) தொகுதி இடைத்தேர்தலில் இரு அணியினரும் வேறு பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த வேண்டும். வரும் 10ஆம் தேதி (நாளை மறுநாள்) மதியம் 1 மணிக்குள் இரு அணிகளும் தங்களுக்கான புதிய பெயர் மற்றும் சின்னத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

    சிவசேனாவின் முக்கிய தலைவரான ஏக்நாத் ஷிண்டே, கடந்த ஜூன் 20ஆம் தேதி உத்தவ் தாக்கரே மற்றும் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். மொத்தம் உள்ள 55 சேனா எம்எல்ஏக்களில் 40 எம்எல்ஏக்கள் ஷிண்டேவுக்கு ஆதரவாக திரும்பினர். மொத்தமுள்ள 18 சிவசேனா மக்களவை எம்.பி.க்களில் 12 பேர் ஷிண்டே அணிக்கு மாறினர்.

    உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார். பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

    அதன்பின்னர் சிவ சேனா கட்சிக்கு உரிமை கோரி இரு தரப்பினரும் நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு சட்டப் போராட்டத்தை நடத்திவருகின்றனர். இரு தரப்பினரும் தாங்கள்தான் உண்மையான சிவ சேனா என கூறி வருவதால் தேர்தல் ஆணையம் தற்போது சின்னத்தை முடக்கி உள்ளது.

    ×