search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி ஆவணங்கள்"

    • போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட செல்போன் இணைப்புகள் குறித்து தொலைத்தொடர்புத்துறை ஆய்வு நடத்தியது.
    • செல்போன் இணைப்புகளை 60 நாட்களுக்குள் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை தொலைத்தொடர்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    புதுடெல்லி:

    செல்போன் அழைப்புகள் மூலம் ஆன்லைன் மோசடிகள் மற்றும் இணையதள குற்றங்கள் நடப்பது அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட செல்போன் இணைப்புகள் குறித்து தொலைத்தொடர்புத்துறை ஆய்வு நடத்தியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில், 6 லட்சத்து 80 ஆயிரம் செல்போன் இணைப்புகள் மோசடியாக பெறப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    அதாவது, போலியான அடையாள ஆவணங்கள், முகவரி ஆவணங்கள், சுயவிவர ஆவணங்களை பயன்படுத்தி, இந்த செல்போன் எண்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால், அந்த செல்போன் இணைப்புகளை 60 நாட்களுக்குள் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை தொலைத்தொடர்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    அப்படி சரிபார்ப்பு நடவடிக்கையில் ஈடுபடாவிட்டால், அந்த செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று கூறியுள்ளது.

    • பணத்தைப் பெற்றுக்கொண்டு போலி தத்தெடுப்பு ஆவணங்களை உருவாக்கி குழந்தைகளை விற்றுள்ளனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.5.5 லட்சம் ரொக்கமும், ஆவணங்களும் மீட்கப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் அதையொட்டிய நகரங்களில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை நடைபெறுவதாக சி.பி.ஐ. கவனத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். அப்போது சிலர் சட்டவிரோதமாக குழந்தைகளை விற்பனை செய்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லியில் ரோகிணி மற்றும் கேசவ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக பெண்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்பட 7 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவர்களது பெயர் சோனிபட்டை சேர்ந்த நீரஜ், டெல்லி பஸ்சிம் விஹாரை சேர்ந்த இந்து பவார், படேல் நகரை சேர்ந்த அஸ்லம், கன்னையா நகரை சேர்ந்த பூஜா காஷ்யப், மாளவியா நகரை சேர்ந்த அஞ்சலி, கவிதா மற்றும் ரிது ஆகும். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    இந்த கும்பல், குழந்தை இல்லாத தம்பதிகளை சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். பிறந்த பச்சிளம் குழந்தைகளை தத்துக்கொடுப்பு என்ற பெயரில் முறையாக வழங்குவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி பலரும் இந்த கும்பலிடம் பணத்தைக் கொடுத்துள்ளனர். இதன்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் பெறப்பட்டு உள்ளது.

    பணத்தைப் பெற்றுக்கொண்டு போலி தத்தெடுப்பு ஆவணங்களை உருவாக்கி குழந்தைகளை விற்றுள்ளனர். இந்த குழந்தைகள் பெற்றோரிடமும், பாதுகாவலர்களிடமும் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 10 குழந்தைகளை இந்த கும்பல் விற்றுள்ளதாக தெரிகிறது.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.5.5 லட்சம் ரொக்கமும், ஆவணங்களும் மீட்கப்பட்டு உள்ளன.

    மேலும் இந்த சோதனையின்போது 2 பச்சிளம் குழந்தைகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

    இதுபோன்ற சட்டவிரோத குழந்தை விற்பனை செய்யும் தொழில் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியிருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சொத்துகள் கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.
    • அரியலுாரைச் சேர்ந்த மரிய சூசை வியாகுலம் என்பவர் உதவியுடன், போலி ஆவணம் தயாரித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மூலனுாரைச் சேர்ந்தவர் செல்லதுரை (31) ஈரோடு தனியார் நிதி நிறுவனத்தில் அவர் பெற்ற கடனுக்காக அவர் ஈடு வைத்த சொத்துகள் கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.

    இதனையடுத்து செல்லதுரை அரியலுாரைச் சேர்ந்த மரிய சூசை வியாகுலம் என்பவர் உதவியுடன், போலி ஆவணம் ஒன்றை தயாரித்தார். அதில், இசைவு தீர்ப்பாணையத்தில் அந்த சொத்து விவகாரத்தில் சமரசம் செய்து, கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவை நகலை பிரகாஷ், (45) என்பவர் மூலம் தாராபுரம் சப் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார். விசாரணையில் இது போலி எனத் தெரிய வந்தது. போலி ஆவணங்கள் மூலம் கோர்ட்டை மோசடி செய்ததாக, சப் கோர்ட் கிளார்க் சுதா, தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இது தொடர்பாக பிரகாஷ் மற்றும் மரிய சூசை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள செல்லதுரையை போலீசார் தேடுகின்றனர்.

    ×