search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவிசாஸ்திரி"

    • அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ்- அமெரிக்காவில் நடக்கிறது.
    • 20 ஓவர் கிரிக்கெட் வடிவில் இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நேற்று அளித்த ஒரு பேட்டியில், 'உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றதால் இதயமே நொறுங்கி போய்விட்டது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், வலிமையான அணியாக இருந்தும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது இன்னும் வேதனையாக உள்ளது. ஆனால் நமது வீரர்கள் அதில் இருந்து கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறி செல்ல வேண்டும். இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விரைவில் பார்க்கப்போகிறேன். அது 50 ஓவர் உலகக் கோப்பையாக இருப்பது கடினம். ஏனெனில் இதற்கு அணியை மீண்டும் கட்டமைக்க வேண்டும்.

    ஆனால் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்- அமெரிக்காவில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா பட்டம் வெல்வதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. ஏனெனில் 20 ஓவர் கிரிக்கெட் வடிவில் இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கிறது. எனவே 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கடுமையான போட்டியாளராக இருக்கும்' என்றார்.

    மேலும் ரவிசாஸ்திரி, 'உலகக் கோப்பையை எளிதில் வென்று விட முடியாது. இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட ஒரு உலகக் கோப்பையை கையில் ஏந்த 6 உலகக் கோப்பை தொடர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. உலகக் கோப்பையை வெல்ல இறுதிப்போட்டிக்குரிய நாள் சிறப்பாக அமைய வேண்டும். இறுதிப்போட்டிக்கு முன்பாக நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படாது' என்றும் குறிப்பிட்டார்.

    • சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மகுடம் சூடுவதற்கு வாய்ப்பு அதிகம்.
    • வலுமிக்க அணியாக களம் இறக்கும் போது, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் இந்தியாவும் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கும்.

    மும்பை:

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அதிகாரபூர்வ அட்டவணை மும்பையில் நாளை நடக்கும் ஐ.சி.சி. நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது.

    உலகக் கோப்பை போட்டியில் எந்த மாதிரியான இந்திய அணி தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மகுடம் சூடுவதற்கு வாய்ப்பு அதிகம். ஆனால் சரியான கலவையில் அனுபவமும், இளமையும் கொண்ட ஒரு அணியை உருவாக்க வேண்டும். விரும்பிய வீரர்களை எடுப்பதற்கு போதுமான காலஅவகாசம் உள்ளது. முழுமையான, வலுமிக்க அணியாக களம் இறக்கும் போது, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் இந்தியாவும் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கும்.

    இந்திய அணியின் டாப்-6 வரிசை பேட்ஸ்மேன்களில் குறைந்தது இருவர் இடக்கை ஆட்டக்காரராக இருக்க வேண்டும். அப்போது தான் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அணியின் கலவையும் கச்சிதமாக அமையும். கார் விபத்தில் சிக்கி குணமடைந்து வரும் இளம் இடக்கை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விளையாட முடியாத சூழலில் இருக்கிறார்.

    ஆனாலும் இந்தியாவில் இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், ஜெய்ஸ்வால், திலக் வர்மா உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இவர்களால் எந்த சீனியர் வீரரின் இடத்தையும் நிரப்ப முடியும். இன்னும் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர்.

    ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் கலக்கிய சாய் சுதர்சன், நேஹல் வதோரா ஆகியோரையும் சொல்லலாம். இப்போது முன்னணி வீரர்கள் சிலர் காயத்தில் உள்ளனர். அதனால் உலகக் கோப்பை போட்டிக்கான பட்டியலில் 15-20 வீரர்களை நாம் வைத்திருக்க வேண்டும். காயத்தில் சிக்கிய வீரர்கள் திரும்ப முடியாமல் போனால் மாற்று வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்.

    சஞ்சு சாம்சன் ஒரு மேட்ச் வின்னர். உண்மையிலேயே தன்னுடைய முழு திறமையையும் அவர் இன்னும் உணரவில்லை. சாம்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் போது ரன்வேட்டையில் எந்த சாதனையும் முறியடிக்காமல் முடித்தால் நிச்சயம் ஏமாற்றம் அடைவேன். நான் பயிற்சியாளராக இருந்தபோது ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இடம் பெறமாட்டார்.

    அது எனக்கு வேதனையாக இருக்கும். அதன் பிறகு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி இப்போது தொடர்ந்து டெஸ்டிலும் விளையாடுகிறார். அந்த சமயத்தில் ரோகித் சர்மாவை எப்படி தவற விட்டதாக உணர்ந்தேனோ அதே போல் சஞ்சு சாம்சனையும் நினைக்கிறேன்.

    ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் உடல்தகுதியை வைத்து பார்த்தால் அவரால் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்பது தெளிவாகிறது. ஆனால் வெள்ளைநிறப்பந்துகளில் விளையாடப்படும் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பு, உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு அவர் வசம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், தற்போதைய உலகக் கோப்பை போட்டியில், அணியை ரோகித் சர்மா வழிநடத்த வேண்டும். அதில் எந்த கேள்வியும் இல்லை.

    இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

    • தெண்டுல்கரின் 100 சதங்கள் எடுத்த சாதனையை கோலி முறியடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்து இருந்தார்.
    • வீராட்கோலி சிறப்பாக விளையாடினாலும் 100 சதங்களை எடுப்பது என்பது கடினமானதே.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான வீராட் கோலி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்தார்.

    அவர் கிட்டத்தட்ட 3½ ஆண்டுகளுக்கு பிறகு செஞ்சுரி அடித்தார். வீராட் கோலி சர்வதேச போட்டிகளில் மொத்தம் 75 சதங்கள் (டெஸ்ட் 28 + ஒருநாள் போட்டி 46 + 20 ஓவர் 1) அடித்துள்ளார்.

    தெண்டுல்கரின் 100 சதங்கள் எடுத்த சாதனையை கோலி முறியடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் தெண்டுல்கரின் 100 சதம் சாதனையை வீராட்கோலி முறியடிப்பது எளிதல்ல என்று முன்னாள் கேப்டனும், இந்திய அணி முன்னாள் பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்தவர் ஒருவரே என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். எனவே அதை யாராவது கடக்க முடியும் என்று சொன்னால் அது பெரிய விஷயம்.

    வீராட்கோலி இன்னும் 5 ஆண்டுகள் வரை விளையாட முடியும். அவர் சிறப்பாக விளையாடினாலும் 100 சதங்களை எடுப்பது என்பது கடினமானதே.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

    • கங்குலி 2-வது முறையாக கிரிக்கெட் வாரிய தலைவராக விரும்பினார் என்று தகவல்கள் வெளியானது.
    • கங்குலிக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும் கூறப்பட்டது.

    முன்னாள் கேப்டன் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருக்கிறார். அவரது பதவி காலம் அடுத்த வாரம் முடிகிறது. கங்குலிக்கு விருப்பம் இருந்த போதிலும் 2-வது முறையாக அவருக்கு பதவி வழங்க மறுக்கப்பட்டது.

    அதே நேரத்தில் ஜெய்ஷா கிரிக்கெட் வாரிய செயலாளர் பதவியில் மேலும் 3 ஆண்டு நீடிக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார்.

    கங்குலிக்கு பதிலாக ரோஜர் பின்னி பி.சி.சி.ஐ. தலைவராவது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோஜர் பின்னி கிரிக்கெட் வாரிய தலைவராவதை வரவேற்கிறேன். உலக கோப்பையை வென்ற (1983) அணியில் இடம்பெற்ற சக வீரர் அந்த பொறுப்பை ஏற்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    அவர் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தார். ரோஜர் பின்னி பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ஏற்க எல்லா தகுதியும் இருக்கிறது. அவர் ஒரு உலக கோப்பையை வென்றவர்.

    நேர்மையான அவர் நல்ல குணாதியசங்களை பெற்றவர். மைதானத்தில் உள்ள வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக ரோஜர் பின்னியிடம் வலியுறுத்துவோம்.

    கங்குலி 2-வது முறையாக கிரிக்கெட் வாரிய தலைவராக விரும்பினார் என்று தகவல்கள் வெளியானது. அவருக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும் கூறப்பட்டது. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை.

    இன்றைக்கு நான் எதையாவது செய்கிறேன் என்றால் இன்னும் 3 ஆண்டுக்கு நான் அதையே செய்வேன் என்பது கிடையாது. புதியவர்கள் வருவார்கள், பொறுப்பேற்பார்கள். இதுவும் ஒரு விதத்தில் ஆரோக்கியமானது.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

    ×