என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக பிரமுகர் பலி"

    • வடுகந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே மார்க்கபந்து டிஜிட்டல் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டார்.
    • அந்த வழியாக செல்லும் மின் கம்பியில் பேனரின் பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த இரும்புச்சட்டம் உரசியது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள வடுகந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மார்க்கப்பந்து (வயது 54). இவர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். தற்போது தி.மு.க. ஊராட்சி செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய மனைவி மாலா ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.

    நேற்று அந்தப் பகுதியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.

    இதற்காக அமைச்சர் துரைமுருகனை வரவேற்று கொடி தோரணங்கள் கட்டினர்.

    நேற்று மாலை வடுகந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே மார்க்கபந்து டிஜிட்டல் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக செல்லும் மின் கம்பியில் பேனரின் பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த இரும்புச்சட்டம் உரசியது. அதில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட மார்கபந்து மயங்கி விழுந்தார். அவருக்கு உதவியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மார்க்கபந்துவை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மார்க்கபந்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    காயமடைந்த கார்த்திகேயன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கே.வி‌.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மார்க்கபந்துவுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

    மின்சாரம் தாக்கி தி.மு.க. பிரமுகர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாகர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
    • பதறிய சுதாகர் உயிர் பிழைக்க அபயகுரலிட்டார்.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுமன்னார் கோவில் போலீஸ் சரகம் வடக்கு கஞ்சன் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 45). தி.மு.க. பிரமுகர்.

    இவர் நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த பகுதியில் ஓடும் வடலாற்றுக்கு சென்றார். அப்போது ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    இதனை கவனிக்காமல் சுதாகர் ஆற்றில் இறங்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பதறிய சுதாகர் உயிர் பிழைக்க அபயகுரலிட்டார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். ஆனாலும் சுதாகரை காப்பாற்ற முடியவில்லை. அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

    இது குறித்து காட்டு மன்னார்கோவில் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து வந்து சுதாகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவரது கதி என்ன? என்று தெரியவில்லை.

    இன்று காலையும் சுதாகரை தேடும்பணி நடந்தது. அப்போது கஞ்சன்கொல்லை கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் சுதாகரின் உடல் கரை ஒதுங்கி கிடந்தது. அந்த உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

    பின்னர் சுதாகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • எண்ணூர் விரைவு சாலையில் உள்ள திருவொற்றியூர் மண்டல நவீன எரிவாயு தகன மேடை அருகே சண்முகம் சாலையை கடக்க முயன்றார்.
    • வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சண்முகம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், கிராமத்தெரு, அம்சா தோட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது73). தி.மு.க.வில் முன்னாள் வட்ட செயலாளராக இருந்தார். இவர் நேற்று இரவு 10 மணி அளவில் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள திருவொற்றியூர் மண்டல நவீன எரிவாயு தகன மேடை அருகே சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சண்முகம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சண்முகத்தை திருவொற்றியூர் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சண்முகம் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தியவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×