search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் வழங்கும் முகாம்"

    • திருப்பூர் மாவட்டத்திற்கு 2023-24 ம் ஆண்டிற்கு டாம்கோ திட்டத்தின் கீழ் ரூ. 1.55 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    • திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பல்வேறுகடன் திட்டங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளின் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

    திருப்பூர் மாவட்டத்திற்கு 2023-24 ம் ஆண்டிற்கு டாம்கோ திட்டத்தின் கீழ் ரூ. 1.55 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000 க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000 மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000 மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000 கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000 கடன் வழங்கப்படுகிறது.

    மேலும் சிறுபான்மை மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை - முதுகலை தொழிற்கல்வி - தொழில் நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3 சதவீதம் வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.அதன் அடிப்படையில் டாம்கோ திட்டங்களின் பயனை சிறுபான்மையின மக்கள் முழுமையாக அடைய கீழ்க்காணும் இடங்களில் கடன் வழங்கும் முகாம்கள் நடைபெறுகிறது.

    25-ந்தேதி திருப்பூர் கூட்டுறவு நகர வங்கி, 26-ந்தேதி தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி, 27-ந்தேதி உடுமலை நகர கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் 5மணி வரை நடைபெறும்.

    இம்முகாமில் புதியதொழில் மேற்கொள்ளவும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்யவும் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த, 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் சிறுபான்மையினருக்கு கிராமப்புறங்களில் வசிப்போர் ரூ.98,000 நகர்புறங்களில் வசிப்போர் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சாதிச்சான்று, ஆதார்கார்டு, செல்லத்தக்க வருமானச் சான்று, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் - திட்டதொழில் அறிக்கை, டிரைவிங் லைசென்ஸ் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுபவர்கள் மட்டும்) மற்றும் வங்கிகள் கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மை சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண்.0421-2999130 மற்றும் மின்னஞ்சல் dbcwotpr@gmail.com - ஐ தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • 20 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை வழங்கினார்
    • விண்ணப்பங்களை நிலுவையில் வைத்திருக்க கூடாது என அறிவுரை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் வங்கியாளர்களுக்கான சிறப்பு ஆய்வுக் கூட்டம் மற்றும் தொழில் கடன் வழங்கும் முகாம் நடந்தது.

    முகாமிற்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கி மாவட்ட தொழில் மையம் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.2.61 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை வழங்கி பேசினார்.

    தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு வங்கிகள் துரிதமான முறையில் கடன் உதவிகளை வழங்க வேண்டும். அரசின் மானியத்துடன் கூடிய கடன் விண்ணப்பங்களை வங்கிகள் 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் வைத்திருக்க கூடாது என கூறினார்.

    இதில் மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவி, மகளிர் திட்ட இயக்குநர் சையித் சுலைமான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவா தாட்கோ மேலாளர் ஏழுமலை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • டாப்செட்கோ டாம்கோ சார்பில் அரியலூரில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது
    • கடன் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், சாதிச்சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் திட்டதொழில் அறிக்கை ஆகியவை இணைக்கப்பட வேண்டும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கீழ்கண்ட பகுதிகளில் டாப்செட்கோ, டாம்கோ சார்பில் நடைபெறும் லோன் மேளாவில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் விண்ணப்பித்து கடனுதவி பெறலாம் என கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துளளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற் கடன் வழங்கும் திட்டம் செயல்படத்தப்பட்டு வருகிறது. தொழிற்கடன், தனிநபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறுகடன் மற்றும் கறவை மாடு வாங்க கடனுதவி பெற விரும்புவர்கள், மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள், உயர் கல்வி பயில்வதற்கான கல்வி கடன் பெற விரும்புவர்கள் கீழ்கண்டவாறு நடைபெறவுள்ள டாப்செட்கோ மற்றும் டாம்கோ லோன்மேளாவில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம். வருகிற 4ம் தேதி அன்று அரியலூர் ஜிம்மா மசூதியில் காலை 10 மணி முதல் 2 மணி வரையும், கீழப்பழுவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பிற்பகல் 2 முதல் மாலை5 மணி வரையும் நடைபெற உள்ளது. ஜனவரி 10ம் தேதி அன்று மணப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 20ம் தேதி அன்று கோட்டியால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், தென்னூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கடன் பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டார், சிறுபான்மையின மக்களாக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 60க்குள் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3,00,000க்குள் இருக்க வேண்டும். மேலும் ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும். கடன் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், சாதிச்சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் திட்டதொழில் அறிக்கை ஆகியவை இணைக்கப்பட வேண்டும். மேலும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    • தீவனப்புல் வளர்க்கவும்-புல்கறணைகள் வாங்கவும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.
    • கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதை தொகுப்பும் மற்றும் புல்கறணைகள் ஒரு பயனாளிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களை சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பரிந்துரைப்பார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்கக்கூடாது. மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பம் செய்ய பெரம்பலூர் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி, உரிய விவரத்தினைப் பெற்று புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, ஆகிய சான்றுகளுடன் ஆன்லைனில் http://application.tahdco.com, http://fast.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-276317, 9445029470 ஆகிய தொலைப்பேசி எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்."

    • திருச்சி இருதயபுரம் கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குதல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
    • இவ்வங்கியில் சிறு வணிகர் கடன் ரூ.27.35 லட்சமும் மற்றும் இதர கடன்கள் உள்பட ெமாத்தம் ரூ.1869.24 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது

    திருச்சி:

    திருச்சி இருதயபுரம் கூட்டுறவு வங்கியில் கடன் மேளா திட்டம், திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் உறுப்பினர் கல்வி திட்டம், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சியை சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் திருச்சி சரக கூட்டுறவு துணைப்பதிவாளர் ஜி.சாய்நந்தினி கலந்து கொண்டு கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்கள் கடன் வாங்கி பயன்பெறும் வழிமுறைகள் பற்றி ஆலோசனைகள் வழங்கினார். திருச்சி இருதயபுரம் கூட்டுறவு வங்கி 1912-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

    இவ்வங்கியில் மொத்தம் 18,783 உறுப்பினர்கள் உள்ளனர். மொத்த உறுப்பினர்களின் வைப்புதொகை ரூ.1681.70 லட்சம், சிறுவணிகர் கடன் ரூ.27.35 லட்சமும் மற்றும் இதர கடன்கள் உள்பட ெமாத்தம் ரூ.1869.24 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் இருதயபுரம் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் டி.மீனாம்பிகை, வங்கியின் பொது மேலாளர் ஆர்.ஜென்சி, வங்கியின் மேலாளர் சி. செந்தில்குமார், இருதயபுரம் கூட்டுறவு வங்கிதலைவர் பி. செல்லப்பன்,

    துணைத்தலைவர் ஏ.ஜெயராஜ், வங்கியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அ.ஹபிபுல்லா, வங்கி அலுவலர்கள் மற்றும் வங்கிப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×