search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசவ வலி"

    • திட உணவை சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது.
    • உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமமாகலாம்.

    கர்ப்பத்தின் ஒன்பது மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்கு கிளம்பத் தயாராகிவிட வேண்டும். பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது.

    முக்கியமாக, மருத்துவமனை பணிநேரம் முடிந்த பிறகு எவ்வாறு மருத்துவரைத் தொடர்புகொள்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்துக்கு அசாதாரண நேரங்களிலும் அவசர நேரங்களிலும் சென்றாலும் கவலை ஏற்படாது.

    பேறுகால விடுமுறை எடுப்பதில் தொடங்கி, வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் இடையில் உள்ள தூரம், மருத்துவ மனைக்குச் செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம், வாகன வசதி, எந்த நேரத்தில் சென்றால் சாலையில் வாகன நெருக்கடி இல்லாமல் இருக்கும், வீட்டில் உள்ள குழந்தையை யார் கவனிப்பது போன்ற விஷயங்கள் வரை அனைத்திலும் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்.

    தற்போது தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட காரணத்தாலும், வீட்டில் உள்ளவர்கள் எல்லோருமே பணிக்குச் செல்வதாலும், பிரசவ நேரத்தில் வீட்டைக் கவனிக்க ஒரு நபரை முன்கூட்டியே வரவழைத்து பழக்கிவிடுவது நல்லது.

     கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.

    'குழந்தையை பெற்றெடுக்க சக்தி வேண்டும் அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ' என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமமாகலாம்.

    கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி அழுத்தம் கொடுக்க வேண்டி இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.

    மிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பி இருக்காது பிரசவத்துக்கும் தடை ஏற்படாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.

    மருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.

    • சிவகாமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • டோலி கட்டி தூக்கி செல்ல சிவகாமி மறுத்தார்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் உள்ள மலை கிராமங்களில் போதிய சாலை வசதி இல்லை. கர்ப்பிணி, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மலையில் இருந்து டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் கர்ப்பிணி ஒருவர் மலையில் இருந்து நடந்தே ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தை பெற்று ஆபத்திலிருந்து தப்பியுள்ளார்.

    அணைக்கட்டு அருகே உள்ள ஜார்த்தான்கொல்லை ஊராட்சி, முத்தன் குடிசை மலை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது26), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி (22). தம்பதியினருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    சிவகாமி மீண்டும் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உறவினர்கள் சிவகாமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர்.

    போதுமான சாலை வசதி இல்லாததால், வாகனங்கள் மூலம் அவரை அழைத்துச் செல்ல முடியாத சூழல் நிலவியது. டோலி கட்டி தூக்கி செல்ல சிவகாமி மறுத்தார்.

    முத்தன்குடிசை கிராமத்தில் இருந்து ஆஸ்பத்திரி செல்ல வேண்டுமென்றால் சுமார் 30 கிலோமீட்டர் உள்ள ஒடுகத்தூர், 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நம்மியம்பட்டு அல்லது 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடுக்கம்பாறைக்கு தான் செல்ல வேண்டும்.

    என்ன செய்வது என தெரியாமல் திணறிய நேரத்தில், சிவகாமியை முத்தன் குடிசை கிராமத்தில் இருந்து நடைபயணமாக ஆஸ்பத்திரி செல்ல அழைத்து வந்தனர்.

    கர்ப்பிணி பெண் பிரசவ வலியோடு நடந்தார். தெள்ளை மலை கிராமம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே கணியம்பாடி அடுத்த துத்திக்காட்டிற்கு வந்தார்.

    பின்னர் அங்கிருந்து சிவகாமியை அவரது உறவினர்கள், ஆட்டோ மூலம் வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அதிர்ஷ்டவசமாக தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.

    சாலை வசதி மட்டும் இருந்திருந்தால் இது போன்ற ஆபத்தான சூழல் உருவாகி இருக்காது.

    எங்களது நீண்ட கால சிரமத்தை போக்கும் வகையில் சாலை வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை வேண்டும் என மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • அழகான ஆண் குழந்தை பிறந்தது
    • மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் மங்கை. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

    இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அதன்பேரில் ஆம்புலன்ஸ் அங்கு வந்து, மங்கையை ஏற்றிக்கொண்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு சென்றது.

    ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் ராஜேஷ், ஓட்டுநர் சக்திவேல் ஆகியோர் இருந்தனர். ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி வனப்பகுதியில் செல்லும் போது மங்கைக்கு பிரசவ வலி அதிகரித்ததால், மருத்துவ உதவியாளர் ராஜேஷ் பிரசவம் பார்த்தார். இதில் மங்கைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் தாயும், குழந்தையும் ஆம்பூர் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர்.

    • அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 2-வது நடைமேடைக்கு ரெயில் வந்துகொண்டிருந்தபோது சாந்தினிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • அரக்கோணம் ரெயில்வே டாக்டரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சாந்தினி அழைத்து செல்லப்பட்டார்.

    சென்னை:

    மங்களூருவில் இருந்து சென்னை சென்டிரல் வரை செல்லும் ''வெஸ்ட் கோஸ்ட்'' விரைவு ரெயிலில் திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டராக வேலை பார்க்கும் அஸ்வின் குமார் தனது மனைவி சாந்தினியுடன் பயணம் செய்தார். நிறைமாத கர்ப்பிணியான சாந்தினியை பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிப்பதற்காக திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து இருவரும் ஏறினர்.

    மதியம் 2.20 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 2-வது நடைமேடைக்கு ரெயில் வந்துகொண்டிருந்தபோது சாந்தினிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீஸ் பரமேஸ்வரி துரிதமாக செயல்பட்டு சாந்தினியை ரெயிலில் இருந்து இறக்கி அருகில் இருந்த பயணிகள் தங்கும் அறைக்கு அழைத்துச்சென்றார். சிறிது நேரத்தில் பயணிகள் தங்கும் அறையிலேயே அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    இதனிடையே அரக்கோணம் ரெயில்வே டாக்டரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சாந்தினி அழைத்து செல்லப்பட்டார். அங்கு தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    துரிதமாக செயல்பட்டு பிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை ரெயிலில் இருந்து இறக்கி பயணிகள் ஓய்வு அறைக்கு அழைத்துச்சென்று பிரசவத்துக்கு உதவியாக இருந்த பெண் போலீஸ் பரமேஸ்வரியை பயணிகளும், பொதுமக்களும் வெகுவாக பாரட்டினர்.

    ×