search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் வாரியம்"

    • மின் வாரியத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை
    • வீடுகளுக்கான 100 யூனிட், கைத்தறி உள்ளிட்ட தொழில்களுக்கு இலவச மின்சாரம்

    மார்த்தாண்டம், நவ.9-

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிள்ளியூர் வட்டார செயலாளர் சாந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

    மின்துறையில் தனியாரை ஊக்குவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மின்சார திருத்த மசோதா 2023-ஐ மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு காரணமாக இம்மசோதா நிலைக்குழு வுக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றபட்டால் மின் உற்பத்தி மட்டுமின்றி வினி யோகத்திலும் தனியார்துறை ஈடுபடுத்தப்படும் சூழ்நிலை ஏற்படும்.

    ஏற்கனவே தமிழகத்தில் விவசாய இலவச மின்சாரம், வீடுகளுக்கான 100 யூனிட், கைத்தறி உள்ளிட்ட தொழில்களுக்கு இலவச மின்சாரம் நடைமுறையில் உள்ளது. ஒன்றிய மின்சார திருத்தசட்டம் 2023 அமுலாகும்போது மின்துறை தனியார்மயம் ஆகும் சூழலில் மேற்கண்ட சலுகைகள் அனைத்தையும் தமிழகம் இழக்கும் நிலை உருவாகும்.

    இந்த நிலையில் தமிழக அரசு புதிய ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர் கோரியுள்ளது. மீட்டர் மாற்றி பொருத்த 3000 கோடி ரூபாய் தேவை. ஏற்கனவே தமிழக மின் வாரியத்திற்கு பல கோடி ரூபாய் கடன் உள்ளது. மாநில அரசு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தாவிட்டால், மானியத்தை கொடுக்க முடியாது என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பக்கத்து மாநிலமான கேரளம், ஒன்றிய அரசின் நிர்பந்தத்தை நிராகரித்து அம்மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளது.

    எனவே தமிழக அரசு ஒன்றிய அரசின் நிர்பந்தத்தை நிராகரித்து தமிழக மின்துறையை பாதுகாக்கவும், இலவச மின்சாரத்தை தொடரவும் ஸ்மார்ட் மீட்டர் என்ற பிரிபெய்டு மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிள்ளியூர் கிழக்கு வட்டார கமிட்டி சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு
    • வீட்டில் இருந்த பெண் ஆய்வு பணிக்கு இடையூறு

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவரின் வீட்டுக்கு நேற்று டிப்-டாப் உடையணிந்த வாலிபர் ஒருவர் சென்றார்.

    வீட்டில் அவரது மனைவி மட்டுமே இருந்தார். அவர் அந்த வாலிபரிடம் யார் நீங்கள்? எதற்காக வந்துள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த நபர் மின் வாரிய ஊழியர் என்றும் வீட்டின் மின் மீட்டரை சோதனையிட வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

    அவரிடம் தொழிலாளியின் மனைவி அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டார். ஆனால் அவரோ முறையாக அடையாள அட்டையை காண்பிக்காததால் சந்தேகமடைந்த தொழிலாளியின் மனைவி வாக்குவாதம் செய்தார்.

    மேலும் இதுகுறித்து அவர் தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். அதோடு வீட்டுக்கு வந்த வாலிபர் வெளியே தப்பி செல்லாதவாறு வீட்டின் கேட்டையும் பூட்டி அந்த வாலிபரை சிறைபிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் அங்கிருந்தபடியே சிலருக்கு போன் செய்து அவர்களை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தார்.

    மேலும் தொழிலாளியின் மனைவியையும் மிரட்டினார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் செய்வேன் என்றும் எச்சரித்தார். ஆனால் வாலிபரின் மிரட்டலுக்கு பயப்படாத பெண் தன் கணவர் வந்த பின்பு இதுபற்றி பேசி கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.

    இந்த நிலையில் அந்த வாலிபரின் அழைப்பின் பேரில் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் தொழிலாளியின் மனைவியிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் வீட்டுக்குள் சிறைபிடிக்கப்பட்ட நபரை மீட்டு செல்லவும் முயன்றனர். ஆனால் அந்த பெண், சிறைபிடித்த நபரை வெளியே விடமாட்டேன் என்று கூறியபடி கேட்டை இழுத்து மூடி விட்டார்.

    இதனால் அரண்டு போன நபர், வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    இதற்கிடையே பெண்ணின் கணவர் அங்கு வந்தார். அவர் வீட்டில் இருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி அதில் இருந்த பதிவுகளை பார்வையிட்டார்.

    மேலும் அந்த காட்சியில் இருந்த நபர் குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விசாரித்தார். இதில் தொழிலாளியின் வீட்டுக்கு வந்தது மின் வாரிய ஊழியர்தான் என்பது தெரிந்தது. மின் வாரிய ஊழியர் என்றால், அவர் அடையாள அட்டையை காட்டாமல் வாக்குவாதம் செய்தது ஏன்? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து இரவிபுதூர்கடை மின் வாரிய அலுவலக இளநிலை பொறியாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அந்த வீட்டில் காடை கோழிகள் வளர்ப்பதாகவும் அதற்காக தனி மின் இணைப்பு பெற்றுள்ளார்களா? என ஆய்வு செய்ய சென்றதாகவும் தெரிவித்தார். ஆனால் வீட்டில் இருந்த பெண் ஆய்வு பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அங்கு சென்ற ஊழியர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தி மின் வாரிய ஊழியர் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தற்போது இந்த சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரும்பாலான இடங்களில் உதவியாளர் பணியிடமே நிரப்பப்படவில்லை.
    • தற்காலிக பணியாளர்களை வைத்துதான் மின்வாரியம் இயங்கி வருகிறது.

    திருப்பூர்:

    வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில் மின் கம்பிகள் அறுந்து விழுவது,மின்கம்பம் சாய்வது, மின் கம்பிகள் மீது மரக்கிளை, மரங்கள் விழுவது போன்ற காரணங்களால் மின் சப்ளை தடைபடும். இத்தகைய பிரச்சினைகளை உடனுக்குடன் எதிர்கொண்டு தடையில்லா மின் சப்ளை வழங்க ஒவ்வொரு மின் பகிர்மான கழக வட்டத்திற்கும் செயற் பொறியாளர் தலைமையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மேற்பார்வையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து திருப்பூர் மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், குறிப்பிட்ட ஒரு பிரிவிற்கு உட்பட்ட இடத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு கூடுதல் பணியாளர்களின் உழைப்பு தேவைப்படும் போது, அருகேயுள்ள பிரிவில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படும் என்றனர்.

    திருப்பூர் தனி மாவட்டமாக இருந்தாலும் கோவை மண்டல மின் வாரிய கட்டுப்பாட்டில் தான் உள்ளது. கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், உடுமலை, பல்லடம், நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியத்தால் ஒரு பிரிவிற்கு 14 கம்பியாளர், 14 உதவியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஒவ்வொரு பிரிவிலும் அதிகபட்சம் 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதிலும் பெரும்பாலான இடங்களில் உதவியாளர் பணியிடமே நிரப்பப்படவில்லை.

    ஒட்டு மொத்த கோவை மண்டலத்தில் மின்வாரியம் அனுமதித்துள்ள கம்பியாளர், உதவியாளர்கள் எண்ணிக்கை 5,921 பேர். ஆனால் பணியில் இருப்பவர்கள் வெறும் 482 பேர் மட்டுமே. 92 சதவீதம் காலி பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது என்ற புள்ளி விபரத்தை மின்வாரிய தொழிற்சங்கத்தினர் வெளியிட்டு பணியாளர் பற்றாக்குறையால் ஊழியர்கள் படும் சிரமத்தை விளக்கும் வீடியோவை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். தற்காலிக பணியாளர்களை வைத்துதான் மின்வாரியம் இயங்கி வருகிறது.

    இது குறித்து மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கூறுகையில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் ஊழியர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பணிச்சுமையால், பணிபுரியும் ஊழியர்களுக்கு மன உளைச்சல அதிகரித்துள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

    ×