search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு ஆலை வெடி விபத்து"

    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
    • எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அக்கறையற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு காளையார்குறிச்சி, சிதம்பராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். அவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் குடோன் அமைந்துள்ள அறையில் வெடி மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் அந்த குடோன் அறை பலத்த சேதம் அடைந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் அனைத்தும் வெடித்து சிதறியதோடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதற்கிடையே வெடி மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரா புரத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 45), முத்துமுருகன் (45) ஆகிய 2 பேரும் உடல் சிதறியும், கருகியும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் இந்த கோர விபத்தில் சரோஜா (55), சங்கரவேல் (54) ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

    விபத்து ஏற்பட்டதும் அங்கு பணியில் இருந்த மற்ற தொழிலாளர்கள் பட்டாசு ஆலையை விட்டு பதறியடித்து கொண்டு வெளியில் ஓடினர். மேலும் அவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் எம்.புதுப் பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் சிவகாசி உள்ளிட்ட அருகில் உள்ள ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலைக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டன. அத்துடன் பலியான மாரியப்பன், முத்துமுருகன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்ததாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

    படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    விருதுநகர் மாவட்டத்தின் பட்டாசு ஆலைகளில் தொடர்ச்சியாக வெடிவிபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து நானும் பல்வேறு முறை சுட்டிக்காட்டி வந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அக்கறையற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தரப்பரிசோதனை மேற்கொள்வதுடன், வெடிவிபத்தை தடுப்பதற்கான புதிய கொள்கை வடிவமைத்து செயல்படுத்துமாறும் விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • அரசுத்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
    • தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன.

    தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஜி.கே. வாசன் கூறியிருப்பதாவது,

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர்ந்து வெடிவிபத்துகள் ஏற்படுவதும், தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன. இத்தகைய விபத்துகளுக்கு யார் காரணம் ? யார் பொறுப்பு என்பதை அறிய முடியாமலேயே விபத்துகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்துகளை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அரசுத்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார்.

    பட்டாசு ஆலை வெடி விபத்துகள் இனி நிகழாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ஒரு லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 ஆண்கள், 4 பெண்கள் அடங்குவர்.

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ஒரு லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விபத்தின்போது பட்டாசுகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்தன.
    • காயமடைந்தவர்கள் தஞ்சாவூர், அரியலூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் யாழ் அன்ட் கோ என்ற பெயரில் நாட்டு வெடி தயாரிப்பு ஆலை நடத்தி வருகிறார்.

    இந்த ஆலையை ராஜேந்திரனின் உறவினர் அருண்குமார் (வயது 35) என்பவர் நிர்வகித்து வருகிறார். ஆலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி நாட்டு வெடிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்றது.

    பட்டாசுகள் தயாரிப்பு பணியில் நேற்று காலை 2 பெண்கள் உள்பட சுமார் 40 பேர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஆலையில் தயாரித்து வைத்திருந்த வெடிகள் திடீரென வெடித்து நாலாபுறமும் சிதறின.

    இதில் பெண்கள் உள்பட 11 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

    இந்த விபத்தின்போது பட்டாசுகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்தன. காயமடைந்தவர்கள் தஞ்சாவூர், அரியலூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர்கள் சிவசங்கர், சி.வி.கணேசன், எம்.எல்.ஏ. கு.சின்னப்பா, அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    மேலும் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

    பின்னர் அரசு சார்பில் தலா ரூ.50 ஆயிரம் உதவி த்தொகை வழங்கினர்.

    இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆலை உரிமையாளர் ராஜேந்திரன், அவரது மருமகன் அருண்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலையின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள், மினி வேன்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலானது.
    • சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா மீட்பு பணிகளை விரைவுபடுத்த துரித நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.

    திருமானூர்:

    தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    உரிய பாதுகாப்புடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திருமானூரை சேர்ந்தவர் அருண். இவருக்கு விரகாலூர் கிராமத்தில் சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது.

    இந்த ஆலையில் நாட்டு வெடிகள், திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் வாணவெடிகள் மற்றும் தீபாவளி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அடுத்த மாதம் (நவம்பர்) தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் இங்கு தீவிரமாக நடந்து வந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    வழக்கம் போல் இன்று காலை பணிக்கு வந்த தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் வெடித்து சிதறிய பட்டாசுகளுக்கிடையே தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனா்.

    அந்த பகுதி முழுவதும் கடுமையான புகை மண்டலம் கிளம்பி பட்டாசு ஆலை முழுவதும் கரும்புகை மூட்டமாக மாறியது. வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது போல பட்டாசுகளின் சத்தம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்ததால் சம்பவ இடத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

    இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.

    மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டவர்களை வீரர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பட்டு வருகிறது. இதில் சிகிச்சை பலனின்றி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலை என்ன என்று தற்போது வரை தெரியவில்லை. தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகுதான் துள்ளியமாக தெரியவரும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஆலையின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள், மினி வேன்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலானது.

    சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா மீட்பு பணிகளை விரைவுபடுத்த துரித நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.

    பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருப்பதால், தீயணைப்புத் துறையினரால் தீயை அணைக்க முடியவில்லை. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இந்த பட்டாசு ஆலையில் கடந்த ஆண்டும் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெடி தயாரிக்கும் போது எதிர்பாரதவிதமாக இந்த திடீர் விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது.
    • நேற்று மாலை தலைமறைவான சரவணன் தானாக முன்வந்து பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் அப்பகுதி யில் பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

    இந்த பட்டாசு ஆலை விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த பழனியம்மாள்(50), முனியம்மாள்(65) ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிவாலிங்கம் (52) என்ற பெண் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    பட்டாசு குடோனில் ஒரு பகுதியில், கோவில் திருவிழா உள்ளிட்ட விழா விசேங்களுக்கு பயன்படுத்தக்கூடிய வானவெடி உள்ளி்ட்ட பட்டாசு ரகங்களை தயாரிப்பு பணியும், தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை சேமித்து வைக்க கூடிய குடோனும் செயல்பட்டு வந்தது.

    வெடி தயாரிக்கும் போது எதிர்பாரதவிதமாக இந்த திடீர் விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்த நிலையில் பட்டாசு குடோன் உரிமையாளர் சரவணன் தலைமறைவானார்.

    இந்த நிலையில் நேற்று மாலை தலைமறைவான சரவணன் தானாக முன்வந்து பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் வெம்பக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • வழக்குப்பதிவு செய்துபட்டாசு ஆலை போர்மேன் கண்ணன் என்பவரை கைது செய்தனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி கணஞ்சாம்பட்டி கிராமத்தில் மாயகண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் நடத்தி வந்தார்.

    இந்த பட்டாசு ஆலையில் மொத்தம் 41 அறைகள் உள்ளன. இங்கு நேற்று 38 பேர் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். மாலை 3 மணி அளவில் இந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

    அப்போது பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் 8 அறைகள் இடிந்து சேதமானது. இதில் சாத்தூர் அருகே சத்திரப்பட்டியை சேர்ந்த குமார் மகள் முனீஸ்வரி (வயது 30), அமீர்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் (60)ஆகிய 2 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    மேலும் இந்த விபத்தில் அமீர்பாளையம் முனியசாமி (28), சிவகாசி சுப்பிரமணியாபுரம் காலனி ராஜ்குமார் (38), மேல கோதைநாச்சியார்புரம் மாரிமுத்து (54), தாயில்பட்டி மேலகோதை நாச்சியார்புரம் மகேஸ்வரன் (42), அன்பின் நகரம் காலனி தெரு தங்கராஜ் (49), படந்தால் மாரியப்பன் (42), அன்பின் நகரம் நடுத்தெரு ஜெயராஜ் (70), புதுப்பாளையம் முருகன் (52), செல்லதாய் (45), மேட்டுப்பட்டி குருசாமி (60), ஆலங்குளம் ஜோதி (51), சுண்டங்குளம் முனீஸ்வரி (38), மேல கோதைநாச்சியார்புரம் கருப்பசாமி (38) உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இவர்கள் சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவர் நிலைமை கவலைகிடமாக உள்ளது.

    இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் வெம்பக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துபட்டாசு ஆலை போர்மேன் கண்ணன் என்பவரை கைது செய்தனர்.

    பட்டாசு ஆலை உரிமையாளர் மாயக்கண்ணன், அவரது மனைவி ஆறுமுகத்தாய் மற்றும் ஒப்பந்ததாரர் கந்தசாமி ஆகியோர் மீது விபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் பலியான தகவல் கிடைத்ததும் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் பார்த்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    இந்த விபத்தில் காயம் அடைந்த ராஜ்குமார், மாரிமுத்து, கருப்பசாமி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • வெடி விபத்தில் அறையில் இருந்த ரவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • வெடி விபத்தில் சிக்கிய சாமுவேல் ஜெயராஜை மீட்ட வீரர்கள் அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    வட மாநிலங்களில் பண்டிகைகள் வருவதை முன்னிட்டு தற்போது இங்கு பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. திருத்தங்கல் மேல மாட வீதியைச் சேர்ந்த ரவி (வயது 58), சாமுவேல் ஜெயராஜ் ஆகிய 2 பேர் இங்கு வேலை பார்த்து வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த இவர்கள் ஆலையில் உள்ள தனியறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்துகளை தயார் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது மருந்துகளுக்குள் உராய்வு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் தீ பரவி அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவியது. சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் அவை வெடிக்க தொடங்கியது. இந்த வெடி விபத்தில் அந்த அறையில் இருந்த ரவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெடி விபத்தில் சிக்கிய சாமுவேல் ஜெயராஜை மீட்ட வீரர்கள் அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து நடந்த கட்டிடம் 80 சதவீதம் இடிந்து தரை மட்டமாகி உள்ளது. விபத்தில் வேறு யாரேனும் தொழிலாளர்கள் சிக்கி உள்ளார்களா? என தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிந்துபட்டி போலீசார் அனுசுயாதேவியை கைது செய்து திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தலைமறைவாக உள்ள வெள்ளையன் பாண்டி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காண்டை ஊராட்சிக்குட்பட்ட அழகுசிறை கிராமத்தில் அனுசுயா தேவி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று மதியம் பட்டாசு தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் பட்டாசு ஆலையில் இருந்த 4 கட்டிடங்கள் தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த கோபி, விக்கி, வல்லரசு, அம்மாசி, ரகுபதி கொண்டம்மாள் ஆகிய 5பேர் உடல் சிதறி பலியானார்கள். 13 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.

    நிவாரணத்தொகைக்கான காசோலையை அமைச்சர் பி.மூர்த்தி, இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார். மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவின் பேரில் இந்த விபத்து குறித்து சிந்துபட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பட்டாசு ஆலை உரிமையாளர் அனுசுயா தேவி, அவரது கணவர் வெள்ளையன், ஆலை மேலாளர் பாண்டி ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் அனுசுயாதேவி நேற்று இரவு விக்கிரமங்கலம் போலீசில் சரண் அடைந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் சிந்துபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சிந்துபட்டி போலீசார் அனுசுயாதேவியை கைது செய்து திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள வெள்ளையன் பாண்டி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். 

    ×