search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வானவில் மன்றம்"

    • வானவில் மன்ற தொடக்க விழாவிற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலோசியஸ் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.
    • நகர்மன்றத் தலைவர் சாதிர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தென்காசி நகராட்சியில் 13-வது வார்டுக்கு உட்பட்ட நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலோசியஸ் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.

    மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சீவலமுத்து முன்னிலை வகித்தார். தென்காசி வட்டார கல்வி அலுவலர் சண்முக சுந்தரபாண்டியன் வரவேற்றார். தென்காசி நகர்மன்றத் தலைவர் சாதிர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார்.

    விழாவில் தென்காசி வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜ், எஸ்.எஸ்.ஏ. மேற்பார்வையாளர் (பொறுப்பு) சரஸ்வதி மற்றும் அறிவியல் ஆசிரியை கவுசல்யா, நகர்மன்ற உறுப்பினர்கள் நாகூர்மீரான் மற்றும் ராசப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம் நன்றி கூறினார். ஏற்பாட்டினை ஆசிரியர்கள் வின்சென்ட், மணிமந்திரி, எப்சிபா, விமலா, யாஸ்மின், தமிழ்செல்வி, மாலையம்மாள் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் செய்திருந்தினர்.

    • மன்றத்தின் தொடக்கமாக ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்றிரண்டு எளிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
    • அமைச்சர்கள் முன்னிலையில் கலெக்டர், மக்கள் பிரதிநிதிகளையும் நிகழ்வில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

    திருச்சி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    இதற்காக இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, காலை 9.50 மணிக்கு திருச்சி சென்றார்.

    அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, காலை 10.30 மணிக்கு திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ரூ.25 கோடி செலவில் 'வானவில் மன்றம்' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    'வானவில் மன்றம்' என்பது தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்காக முதல் முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி ஆகும்.

    இதற்காக ஆர்வமும் செயல்திறனும் மிக்க கருத்தாளர்கள் இந்தத் திட்டத்தை பள்ளிகளில் செயல்முறையில் மாணவர்களுக்கு விளக்கிட பள்ளிக்கு வருவார்கள். தேவையான கருவிகளையும் அவர்களே கொண்டு வருவார்கள்.

    இதையடுத்து பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் பல்வேறு சோதனைகளைச் செய்து காட்டி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவுவார்கள்.

    6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு வகுப்பறைகளுக்குள் கற்பிக்கப்படும் பாடங்களோடு தொடர்பான அறிவியல், கணிதப் பரிசோதனைகளைச் செய்வதற்கு குறைந்த விலையில் பொருள்களை வாங்க, ஒரு பள்ளிக்கு முதல் கட்டமாக ரூ.1,200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து வாரந்தோறும் பாடத்துடன் தொடர்புடைய கருத்துகளை விளக்குவதற்கு ஏற்ற பொருள்களை குறைந்த விலையில் வாங்கி, பல்வேறு சோதனைகளைச் செய்து காட்ட வேண்டும். பின்னர் மாணவர்களை கேள்வி கேட்க ஊக்குவிக்க வேண்டும்.

    'ஸ்டெம்' (அறிவியல்), தொழில் நுட்பம், பொறியியல், கணிதம் குறித்து கருத்தாளர்கள் பள்ளிக்கு வரும்போது ஆசிரியர்கள் அவர்களுடன் இணைந்து பரிசோதனைகளைச் செய்து காட்டவும் மற்றும் வானவில் மன்றத்தில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கவும் ஊக்குவிக்க வேண்டும்.

    வானவில் மன்றத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்ததும், பிற்பகல் 2 மணிக்கு 13 ஆயிரத்து 210 அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் வானவில் மன்றம் தொடங்கப்படுகிறது.

    மன்றத்தின் தொடக்கமாக ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்றிரண்டு எளிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அமைச்சர்கள் முன்னிலையில் கலெக்டர், மக்கள் பிரதிநிதிகளையும் நிகழ்வில் பங்கேற்கச் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்துக்காக 3,095 உயர்நிலைப் பள்ளிகள், 3,123 மேல்நிலைப் பள்ளிகள், 6,992 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 210 அரசுப் பள்ளிகளுக்கு மொத்தம் ரூ.1.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனத்தையும், மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் க. நந்த குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுதன், திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும், திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். மதியம் 12 மணிக்கு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூருக்கு செல்லும் முதல்-அமைச்சர், அங்கு சிப்காட் தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த சிப்காட், பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் சிப்காட் என்பது குறிப்பிடத்தக்கது.

    பின்னர், பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்கு சென்று, மதிய உணவு சாப்பிட்டு ஓய்வு எடுக்கிறார். இன்று பிற்பகல் 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேட்டுக்கு மாலை 5.15 மணிக்கு சென்றடைகிறார்.

    அங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு இரவு 7 மணிக்கு வந்தடைகிறார். இரவு உணவை முடித்துவிட்டு அங்கேயே தங்கி ஓய்வு எடுக்கிறார்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.15 மணிக்கு அங்கிருந்து புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை 9.30 மணிக்கு அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். அத்துடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கியும் வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் திருச்சிக்கு காரில் வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 12.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். முதல்-அமைச்சரின் வருகையையொட்டி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ×