என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விவேகானந்தர் பாறை"
- கண்ணாடி பாலம் அமைக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
- கண்ணாடி இழை பாலம் ரூ. 37 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள பாறைகளில் சுவாமி விவேகானந்தர் நினைவிடம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது. இங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் நினைவிடத்திற்கும் இடையே பாதை ஏற்படுத்தும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
அதன்படி திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் கண்ணாடி இழை பாலம் ரூ. 37 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் இப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடல் சீற்றத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கடின தன்மை கொண்டதாக கண்ணாடி இழை பாலம் அமைக்கப்படுகிறது.
இதற்காகத் திருவள்ளுவர் சிலை அருகேயும், விவேகானந்தர் பாறையிலும் கம்பிகள் பொருத்தப்பட்டு காங்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கண்ணாடி பாலத்தின் கட்டுமான பணிகளை நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, முன்னாள் அமைச்சரும், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மனோ தங்கராஜ், நாகர்கோயில் மாநகராட்சி மேயர் ஆர்.மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- 77 மீட்டர் நீளத்திலும் 10 மீட்டர் அகலத்திலும் பாலம் அமைக்கப்பட உள்ளது.
- இரு பக்கங்களிலும் கல் மண்டபம் அமைக்கப்படுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடிஉயர திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் இரண்டுக்கும் இடையே நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழையிலான கூண்டு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
77 மீட்டர் நீளத்திலும் 10 மீட்டர் அகலத்திலும் பாலம் அமைக்கப்பட உள்ளது. அதிகபட்சம் கடல் அலைக்கு மேல் 7 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.
இந்த பாலத்தின் ஆர்ச் உயரம் 11 மீட்டர் ஆகும். முற்றிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகளால் வடிவமைக்கப்பட்ட கூண்டின் மீது 2.40 மீட்டர் அகலத்தில் கண்ணாடி பகுதி அமைகிறது. இரு பக்கங்களிலும் கல் மண்டபம் அமைக்கப்படுகிறது.
இந்த பாலத்தில் 101 கூண்டுகள் பொருத்தப்பட உள்ளன. இவை புதுச்சேரியில் இருந்து கண்டெய்னர் லாரிகள் மூலம் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து முதல் கட்டமாக 30 கூண்டுகள் படகு மூலம் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் கொண்டு சென்று இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்காக திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையிலும் விவேகானந்தர் பாறையிலும் ராட்சத கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு இரு பக்கத்தையும் இணைக்கும் வகையில் ஆர்ச் போன்ற கூண்டு அமைப்பை பொருத்து வதற்காக இரும்பு தூண்கள் மூலம் சாரமும் அமைக் கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் பாறை மற்றும் விவேகானந்தர் பாறையில் அமைக்கப்பட்டு உள்ள 2 ராட்சத தூண்களுக்கு இடையே இரும்பு கம்பிகளால் வடம் போன்று தயாரிக்கப்பட்ட ரோப்புகள் அமைக்கப்பட்டு அந்த ரோப்புகள் வழியாக தொழில் நுட்ப வல்லுநர்கள் விஞ்சு மூலம் சென்று இந்த கூண்டு ஆர்சுகளை பொருத்தி வருகின்றனர்.
இந்த இரு பாறைகளிலும் தலா 4 ஆர்ச்சுகள் பொருத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறும் வெள்ளி விழா அடுத்த மாதம் வர உள்ளது.
இதனை முன்னிட்டு வருகிற ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு பிறக்கும் போது வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைப்பார் என கூறப்படுகிறது.
- நேற்று முன்தினம் மாலை பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தார்.
- மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கான தடை அமலில் இருக்கும் என்று பூம்புகார் படகு கழகம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி கடந்த 3 நாட்களாக தியானம் செய்து வருகிறார். இதற்காக நேற்று முன்தினம் மாலை பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தார். இன்று 3-வது நாளாக அங்கு பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டுள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 11 மணிக்கு விவேகானந்தர் பாறைக்கு சென்ற படகு திரும்பி வந்த பிறகு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கான தடை அமலில் இருக்கும் என்று பூம்புகார் படகு கழகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தனது தியானத்தை முடித்துக்கொண்டு இன்று பிற்பகல் 3 மணிக்கு புறப்படுகிறார்.
- விடுதியில் முன்பதிவு செய்திருந்த அறைகள் ரத்து செய்யப்பட்டது.
- கட்சி நிர்வாகிகள் யாரும் கன்னியாகுமரிக்கு வரவில்லை.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார். அவரை வரவேற்க மத்திய மந்திரி எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக கன்னியாகுமரி விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும்வர வேண்டாம் என்று தமிழக பா.ஜ.க.வினருக்கு டெல்லி தலைமை உத்தரவிட்டது. அதன்பேரில் விடுதியில் முன்பதிவு செய்திருந்த அறைகள் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்ததும் அரசு விருந்தினர் மாளிகை அருகே முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் சிலரும் வந்து நின்றனர்.
ஆனால் போலீசார் பாதுகாப்பு காரணங்களை காட்டி, பொன். ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கன்னியாகுமரியில் முன்பதிவு செய்திருந்த அறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் கட்சி நிர்வாகிகள் யாரும் நேற்று கன்னியாகுமரிக்கு வரவில்லை.
- விவேகானந்தர் மண்டபம், கடற்கரை பகுதிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
- மண்டபத்தின் மேல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடற்கரையையொட்டி காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் உள்ளது. பிரதமர் வருகையையடுத்து காந்தி, காமராஜர் மண்டபத்திற்கு செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விவேகானந்தர் மண்டபம், கடற்கரை பகுதிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் காந்தி மண்டபத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. காலை 10 மணிக்கு பிறகு காந்தி மண்டபத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மண்டபத்தின் மேல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
காமராஜர் மண்டபத்திற்குள் சுற்றுலா பயணிகள் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். காமராஜர் மண்டபம் வளாகத்திற்குள் டவர் அமைக்கப்பட்டு போலீசார் பைனாக்குலர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகு படகு தளத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
- கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி 3 நாட்கள் தியானம் செய்கிறார். இதற்காக நேற்று மாலை கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வந்தார். இன்று 2-வது நாளாக விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு உள்ளார்.
பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டுள்ளதையடுத்து கன்னியாகுமரி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சன்னதி தெரு படகு தளத்திற்கு செல்லும் சாலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு வருபவர்கள் முழுமையான சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் வழக்கம்போல் கடைகள் திறந்திருந்தது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு பலத்த சோதனைக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். விவேகானந்தர் மண்டபத்திற்கு வழக்கம்போல் படகு இயக்கப்பட்டது. இன்று காலை விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். அவர்கள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள் உடமைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகு படகு தளத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். விவேகானந்தர் மண்டபம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டுள்ள பகுதியில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மற்ற பகுதிகளில் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி கடற்கரைக்கும் காலையிலேயே சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் வழக்கம்போல் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். கடற்கரை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- பகவதி அம்மனின் பாதம் பதித்த ஸ்ரீ பாதம் மண்டபத்தில் தரிசனம் செய்தார்.
- மோடி இன்று அதிகாலை 5 மணிக்கு தியான மண்டபத்தை விட்டு வெளியே வந்தார்.
கன்னியாகுமரி:
பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பிரசாரம் நிறைவடைந்ததும் பிரதமர் மோடி ஆன்மீக தலங்களுக்கு சென்று தியானம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்ததும் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார்.
தற்போது மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தியானம் செய்வதற்காக நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார். இதற்காக அவர் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்து சேர்ந்த பிரதமர் மோடி, அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் குண்டு துளைக்காத காரில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பகவதி அம்மன் படம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு பூம்புகார் தனி படகு மூலம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார். அங்கு பகவதி அம்மனின் பாதம் பதித்த ஸ்ரீ பாதம் மண்டபத்தில் தரிசனம் செய்தார்.
மேலும் விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி ஆகியோரின் உருவப்படங்களை வணங்கினார். விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு விவேகானந்தர் மண்டபத்தில் நின்றபடி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்தார்.
அதன்பிறகு தியான மண்டபத்திற்கு சென்று பிரதமர் மோடி தியானத்தை தொடங்கினார். இரவு முழுவதும் தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அவர் இன்று அதிகாலை வரை அவர் தொடர்ந்து தியானம் செய்தபடி இருந்தார்.
மோடி இன்று அதிகாலை 5 மணிக்கு தியான மண்டபத்தை விட்டு வெளியே வந்தார். விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து காலை 5:55 மணிக்கு சூரிய உதய காட்சிகளை கண்டு ரசித்தார். அங்கிருந்து கடல் அழகையும் ரசித்து பார்த்தார்.
அதன்பிறகு ஸ்ரீபாத மண்டபத்திற்கு சென்ற பிரதமர் மோடி, 10 நிமிடம் அங்கு அமர்ந்திருந்தார். பின்பு காலை 7:15 மணிக்கு மீண்டும் தியான மண்டபத்திற்குள் சென்று தனது இரண்டாவது நாள் தியானத்தை தொடங்கினார்.
பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டு வருவதையடுத்து அங்கு சுற்றுலா பணிகள் நேற்று மதியத்துக்கு பிறகு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இன்று காலை விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களின் முகவரி உட்பட பல்வேறு தகவல்களை போலீசார் பதிவு செய்து பலத்த சோதனைக்கு பிறகு விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல அனுமதித்தனர். பயணிகள் சென்ற படகிலும் ஏராளமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் தியானம் மேற்கொண்டுள்ள பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. மற்ற இடங்களுக்கு வழக்கம் போல் செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள்.
பிரதமர் தியானம் செய்யும் மண்டப பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு போலீசார் மட்டுமின்றி, கமாண்டோ வீரர்களும் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
பிரதமர் மோடி நாளை (1-ந் தேதி) மாலை வரை விவேகானந்தர் மண்டபத்திலேயே தங்கி தியானம் செய்கிறார். 3 நாட்கள் தியானத்தை முடித்துக்கொண்டு நாளை மாலை விவேகானந்தர் மண்ட பத்திலிருந்து தனி படகு மூலமாக புறப்பட்டு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு திரும்புகிறார்.
பின்னர் அங்கிருந்து காரில் அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம் உட்பட அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடல் பகுதியில் கப்பற்படை கப்பலும் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல்களில் விவேகானந்தர் பாறையை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, குமரி கடல் பகுதி முழுவதும் நவீன படகுகளில் ரோந்து சுற்றி வந்து கண்காணித்து வருகின்றனர். கடலோர காவல் படை போலீசார் கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை கிராம பகுதி சோதனை சாவடிகள் மட்டுமின்றி மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- பிரதமர் மோடி தமிழகத்தின் தென்கோடியில் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு நேற்று மாலை வந்தார்.
- பா.ஜனதா மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷியுடன் விவேகானந்தர் பாறைக்கு அப்போது இளம் தலைவராக இருந்த மோடியும் வந்திருந்தார்.
சென்னை:
பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்ததும் பிரதமர் மோடி, தமிழகத்தின் தென்கோடியில் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு நேற்று மாலை வந்தார். தொடர்ந்து அவர் கன்னியாகுமரி கடலில் உள்ள பாறையில் அமைக்கப்பட்டு இருக்கும் விவேகானந்தர் நினைவிடத்துக்கு சென்று, தனது 3 நாள் தியானத்தை தொடங்கினார்.
இந்தநிலையில் பிரதமர் மோடி கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்னர், இதே விவேகானந்தர் நினைவிடத்துக்கு வந்துள்ளார். அப்போது அவர் அங்குள்ள விவேகானந்தர் சிலையை பார்வையிடும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி, வைரலாகியுள்ளது.
அதாவது கடந்த 1991-ம் ஆண்டு பா.ஜனதா மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி, ஏக்தா யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு தேசிய கொடி யாத்திரையை தொடங்கினார். 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி கன்னியாகுமரியில் யாத்திரையை தொடங்கும் முன், விவேகானந்தர் பாறைக்கு வந்த அவருடன், அப்போது இளம் தலைவராக இருந்த மோடியும் வந்திருந்தார்.
அவர்கள் இருவரும் விவேகானந்தர் சிலையை பார்வையிடும் புகைப்படம்தான் தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இன்று காலையில் விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
- காலை 10.45 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
பிரதமர் மோடி இன்று மாலை கன்னியாகுமரி வருகிறார். அங்கு கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு தனிப்படகில் செல்கிறார். அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து அவர் தியானம் செய்கிறார். வரும் 1-ம் தேதி மாலை வரை 3 நாட்கள் தரையில் அமர்ந்து பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுகிறார். இதற்காக அங்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்வதற்கு நேற்று முதலே கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலையிலும் விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளின் முகவரிகளை குறித்துவிட்டு போலீசார் அனுப்பி வைத்தனர். காலை 10.45 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து ஏற்கனவே சென்ற சுற்றுலா பயணிகள் அனைவரும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கன்னியாகுமரி படகு தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். விவேகானந்தர் மண்டபம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடலின் நடுவே பாறையில் 3 நாட்கள் தவம் இருந்த சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுவதும் பயணம் செய்தபோது 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி வந்தார். அவர் குமரிக்கடலின் நடுவே இருந்த ஸ்ரீபாத பாறையில் தவம் செய்யவேண்டும் என விரும்பினார். இதற்காக அவர் அங்கிருந்த மீன்பிடி படகோட்டியிடம் அங்குள்ள பாறையில் இறக்கிவிட முடியுமா? என்று கேட்டார். அதற்கு பணம் கொடுத்தால் படகில் ஏற்றி பாறையின் அருகில் கொண்டு விடுகிறேன் என்று படகோட்டி கூறியுள்ளார்.
பணம் இல்லாததால் கடலுக்குள் அப்படியே குதித்த சுவாமி விவேகானந்தர் அலைகளுக்கு இடையே நீந்திச்சென்று அந்த பாறையில் அமர்ந்து தவம் செய்தார். அதாவது டிசம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 3 நாட்கள் தவம் இருந்தார். அப்படி சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில்தான் தற்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. கடற்கரையில் இருந்து நேராக 1,350 அடி தூரத்தில் இந்தப் பாறை அமைந்துள்ளது.
இந்த தியான மண்டபத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 1-ம் தேதி வரை 3 நாட்கள் தியானம் இருக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Tamil Nadu: Visuals from outside the Vivekananda Rock Memorial in Kanniyakumari where PM Modi will meditate from 30th May evening to 1st June evening.
— ANI (@ANI) May 30, 2024
PM Modi will meditate day and night at the same place where Swami Vivekanand did meditation, at the Dhyan Mandapam. pic.twitter.com/b7J1wZEiPF
- மாலை மலர் செய்தி எதிரொலி
- பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப் பட்டு வருகிறது
கன்னியாகுமரி :
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப் பட்டு வருகிறது. இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப் படியான பாறைகளும் உள்ளது. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் இயக்கப்படுவதில்லை.
இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதைத்தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தவிட்டது. அதன் பயனாக ரூ.30 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.
இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது தாங்கள் நடந்துசெல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டு உள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளது.
இந்த பாலத்துக்கான கட்டுமான பணிகள் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் மட்டும் நடந்து வந்தது. ஆனால் இதன் மறுபுறம் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் இந்த இணைப்பு பாலத்துக்கான பணிகளில் தீவிரம் காட்டாமல் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது. மேலும் இந்த பால பணியினால் கடந்த 6 மாத காலமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை என்றும், இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று நேரடியாக பார்க்கமுடியாமல் ஏமாற்றம் அடைந்து உள்ளனர் என்றும், கன்னியாகுமரியில் மெயின் சீசன் காலமான சபரிமலை சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது என்றும் இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது என்றும் இந்த சீசன் காலங்களில் லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கன்னியா குமரிக்கு வருவார்கள் என்றும், எனவே இந்த இணைப்பு பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து வருகிற சபரிமலை சீசன் காலம் முடிவதற்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், தமிழ் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் மாலைமலரில் சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது.
அதன் எதிரொலியாக தற்போது திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதைதொடர்ந்து இதன் மறுபுறம் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை யிலும் இந்த கண்ணாடி கூண்டு இணைப்பு பாலம் கட்டுவதற்கான பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி படகில் சென்று நாளை மாலை ஏற்றுகிறார்
- பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசலை நோக்கி மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
கன்னியாகுமரி:
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நாளை (6-ந்தேதி) மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி தனிப்படகில் சென்று பாறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுகிறார்.
இதைெயாட்டி அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ள பகவதி அம்மன் கால் தடம் பதிந்து இருந்த இடத்தில் எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
அதன்பின்னர் அம்மனின் பாதத்திற்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஸ்ரீபாத மண்டபத்தில் இருந்து கோவில் மேல்சாந்தி கார்த்திகை தீபத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து மண்டபத்தின் மேற்கு பக்கம் கடற்கரையில் உள்ள பகவதிஅம்மன் கோவில் கிழக்கு வாசலை நோக்கி மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த தீபம் விடிய விடிய எரிந்து கொண்டே இருக்கும். இந்த தீபத்தை கடற்கரையில் இருந்தவாரே சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வணங்கி வழிபடுவார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்