என் மலர்
நீங்கள் தேடியது "மதுவிலக்கு"
- ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
- ஆளுநருக்கு காந்தி மண்டபத்தில் மது பாட்டில் தெரிந்திருக்கிறது.
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான உறவை துண்டிப்பதாக ஆளுநரின் செயல்பாடு உள்ளது.
ஆளுநருக்கு காந்தி மண்டபத்தில் மது பாட்டில் தெரிந்திருக்கிறது.
காந்தி மண்டபம் உள்ளிட்ட இடங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. திமுக அரசு மது விலக்கிற்கு எப்போதும் ஆதரவான அரசு.
மதுவை ஒழிப்பது மத்திய அரசின் கையில் தான் உள்ளது. மதுவை தமிழக அரசால் மட்டும் ஒழித்து விட முடியாது.
மது விலக்கு தொடர்பாக ஒட்டுமொத்த தேசத்திற்குமான கொள்கையை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மதுவிலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குடிகாரர்களை விட அதிக தள்ளாட்டத்தில் உள்ளது.
- மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது கூட சாத்தியமற்றது என்று அமைச்சர் ரகுபதி கூறுகிறார்.
சென்னை:
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க மாநில அரசால் முடியாது; நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட்டால் மட்டும் தான் மதுவிலக்கு சாத்தியமாகும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார். அமைச்சர் ரகுபதியின் பேச்சு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசின் குரலாகத் தெரியவில்லை. மாறாக, மது ஆலை அதிபர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுவதைப் போல இருக்கிறது. மதுவுக்கு ஆதரவான சட்ட அமைச்சர் ரகுபதியின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது.
மதுவிலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குடிகாரர்களை விட அதிக தள்ளாட்டத்தில் உள்ளது. 2015-ஆம் ஆண்டு காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி பேசும்போது அடுத்த காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி பேசிய மு.க.ஸ்டாலின், அடுத்த காந்தியடிகள் பிறந்தநாளுக்குள் தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
2016-ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் நாள் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று பா.ம.க.வின் கொள்கை முழக்கத்தை காப்பியடித்து மு.க.ஸ்டாலின் முழங்கினார். 2021-ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். இப்போது அதற்கு முற்றிலும் எதிராக அமைச்சர் ரகுபதி பேசுகிறார். அப்படியானால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினா, ரகுபதியா?
தேசிய அளவில் மதுவிலக்கு என்பதே போகாத ஊருக்கு வழிகாட்டும் செயல் தான். அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முழங்கும் திமுக, மக்கள் நலனுக்காக மதுவிலக்கு கேட்டால் மத்திய அரசை கேளுங்கள் என்பதும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால் மத்திய அரசை கேளுங்கள் என்பதும் மக்களை முட்டாள்களாக நினைத்து ஏமாற்றும் செயல்கள்.
மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது கூட சாத்தியமற்றது என்று அமைச்சர் ரகுபதி கூறுகிறார். ''பாதி கடையை மூடுங்கள்; பாதியை திறங்கள் என்றால், 1 கி.மீ., தூரம் சென்று குடியுங்கள் என்பது தான் அர்த்தம் என்பதால் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியாது" என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லை என்பதையும், திமுகவைச் சேர்ந்த மது ஆலை அதிபர்களின் கஜானாக்களை நிரப்புவதற்காக மட்டும் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்பதை அமைச்சர் ரகுபதி ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலின் முதல் இடத்தில் சட்டம்-ஒழுங்கு, பொதுஅமைதி ஆகியவையும், எட்டாவது இடத்தில் மது விலக்கும் உள்ளன. மக்கள் நலன் கருதி இவற்றை செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அதற்கான அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு உள்ளன. அதனால் மதுவிலக்கை மாநில அரசுகள் தான் செயல்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களில் மது விலக்கு இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அதை செயல்படுத்துவது சாத்தியமற்றது என்பது தோல்வியின் வெளிப்பாடு.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், கள்ளச்சாராயம் பெருகி விடும்; அத்தகைய நிலை உருவானால் மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பதிலாக கள்ளச்சாராய ஒழிப்பில் மட்டும் தான் அரசு கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்று அமைச்சர் ரகுபதி கூறுகிறார்.
தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகாதா? அப்போது கள்ளச்சாராயத்தை தடுப்பது உள்ளிட்ட மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை மத்திய அரசிடம் திராவிட மாடல் அரசு தாரை வார்த்து விடுமா?
அண்டை மாநிலத்தில் மது விற்பனை செய்யப்படும்போது தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்பதெல்லாம் நகைச்சுவையான போலி சாக்குகள். தமிழ்நாட்டைச் சுற்றிலும் மது வெள்ளமாக பாய்ந்து கொண்டிருந்த காலத்தில் தான் உத்தமர் ஓமந்தூரார், குமாரசாமி இராஜா, இராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், பக்தவச்சலம், அறிஞர் அண்ணா ஆகியோர் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினர்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது, கள்ளச்சாராயத்தை தடுப்பது, அரசின் வருவாய் குறையாமல் பாதுகாப்பது ஆகிய அனைத்தும் சாத்தியம் தான். அதற்கான வழிமுறைகளை பாட்டாளி மக்கள் கட்சி 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆவணமாக தயாரித்து வெளியிட்டுள்ளது. திராவிட மாடல் அரசுக்கு மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளன.
- தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு இத்தீர்ப்பு பெரும் பாடம் ஆகும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி போதை தரும் மதுவை உற்பத்தி செய்வது, வணிகம் செய்வது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாகவும், இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மத்திய அரசை காரணம் காட்டி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு இத்தீர்ப்பு பெரும் பாடம் ஆகும்.
''தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆல்கஹாலின் தன்மை மாறுபட்டதாக இருந்தாலும் கூட, அடிப்படையில் அதுவும் போதை தரும் மது வகை தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள மாநிலப் பட்டியலில் எட்டாவது அம்சமாக போதை தரும் மது இடம்பெற்றுள்ளது. அதில் போதை தரும் மது வகைகளை தயாரித்தல், இருப்பு வைத்தல், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லுதல், கொள்முதல் செய்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளன. இதில் தலையிட மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதுகுறித்து சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை'' என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இவை எதையும் புரிந்து கொள்ளாமல்,''தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கைக் கொண்டு வர முடியாது. இந்தியா முழுவதும் மது விலக்கை மத்திய அரசு கொண்டு வந்தால், அதை செயல்படுத்தும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்'' என்று கூறி வருகின்றனர்.
மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இனியும் மத்திய அரசைக் காரணம் காட்டிக் கொண்டிருக்காமல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பீகார் அரசின் மதுவிலக்கு சட்டம் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு வழிவகுத்துள்ளது.
- மதுவிலக்கு சட்டம் அரசு அதிகாரிகள் அதிகளவில் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு கருவியாக மாறியுள்ளது.
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனையும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. இதனால் கள்ளச்சாராயம் குடித்து பலர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.
பீகார் மாநில கலால் துறையின் சோதனையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களை பதுக்கி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி காவல் நிலைய ஆய்வாளர் முகேஷ் குமார் பாஸ்வான் 2020 நவம்பரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தனது சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் முகேஷ் மனுத்தாக்கல் செய்தார். அக்டோபர் 29 அன்று இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரின் சஸ்பெண்ட்-ஐ ரத்து செய்து உத்தரவிட்டது. நீதிபதியின் 24 பக்க உத்தரவு நவம்பர் 13-ம் தேதி இணையத்தில் பதிவேற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணேந்து சிங், "பீகார் அரசின் மதுவிலக்கு சட்டம் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு வழிவகுத்துள்ளது. இது அரசு அதிகாரிகள் அதிகளவில் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு கருவியாக மாறியுள்ளது" என்று காட்டமாக கருத்து தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், காவல்துறை அதிகாரிகள், கலால் அதிகாரிகள் மட்டுமல்ல, மாநில வரித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் மதுவிலக்கை விரும்புகிறார்கள். அவர்களுக்கு இதனால் பெரியளவில் பணம் கிடைக்கிறது.
மது அருந்தும் ஏழைகளுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்குகளுடன் ஒப்பிடும்போது, சட்டவிரோதமாக மது கடத்தும் கும்பல்களின் மீதான வழக்குகள் குறைவாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.
- தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தினால் அதை கொ.ம.தே.க. வரவேற்கும்.
- அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது நல்லதல்ல. தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை:
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சின்னியம்பாளையத்தில் நடந்தது.
கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தை எங்களது கோரிக்கையை ஏற்று சின்னியம்பாளையம் வரை நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். கோவை மாவட்டத்தில் 10 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஒருவர் கூட முதலமைச்சரிடம் இந்த கோரிக்கையை வைக்கவில்லை. சென்னை மாநகராட்சி 3-ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதுபோல், கோவை மாநகராட்சியை 2-ஆக பிரிக்க வேண்டும்.
வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என சில அரசியல் கட்சி தலைவர்கள் சுயநலத்துடன் பேசி வருகிறார்கள். விளைநிலங்கள் வழியாக கியாஸ் லைன் பதிப்பது விவசாயிகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு நாம் தமிழர் கட்சியிலும், சீமானிடமும் வித்தியாசத்தை காண முடிகிறது. சீமான் போக்கில் மாற்றம் தெரிகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. அதற்குள் கூட்டணி தொகுதி பங்கீடு பற்றியெல்லாம் கேட்கிறார்கள்.
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தினால் அதை கொ.ம.தே.க. வரவேற்கும். அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது நல்லதல்ல. தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்களை நிறைவேற்றி கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். பொள்ளாச்சியை புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும். விமானநிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தமிழ்நாட்டில் அரசின் அங்கீகாரம் பெற்ற போதை மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கை 35 ஆகும்.
- அரசின் அங்கீகாரம் பெறாமல் நூற்றுக்கணக்கான மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் போதை மறுவாழ்வு மையங்களில் மருத்துவம் பெறுவோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 5 மடங்கு அதிகரித்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் போதை மறுவாழ்வு மையங்களில் மருத்துவம் பெறுவோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 5 மடங்கு அதிகரிப்பு: இளைய தலைமுறையை காக்க மதுவிலக்கு மட்டும் தான் தீர்வு!
தமிழ்நாட்டில் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி போதை மறுவாழ்வு மையங்களில் மருத்துவம் பெற்று வருவோரின் எண்ணிக்கை 2023-24ஆம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டை விட 5 மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மதுவால் ஏற்பட்டுள்ள தீமைகளை நன்கு அறிந்தவன் என்ற முறையில் இந்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கவில்லை.
தமிழ்நாட்டில் அரசின் அங்கீகாரம் பெற்ற போதை மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கை 35 ஆகும். அவற்றில் 2022-23ஆம் ஆண்டில் 3,668 பேர் மருத்துவம் பெற்று வந்தனர்.
2023-24ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 15,938 ஆக உயர்ந்து விட்டதாக மத்திய அரசின் சமூகநீதித்துறை வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட போதை மறுவாழ்வு மையங்களில் மருத்துவம் பெறுவோரின் எண்ணிக்கை மட்டும் தான்.
அரசின் அங்கீகாரம் பெறாமல் நூற்றுக்கணக்கான மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் லட்சக்கணக்கான குடிநோயர்கள் மருத்துவம் பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மதுக்கடைகள் கடந்த 2002-03ஆம் ஆண்டில் அரசுடைமையாக்கப்பட்ட பிறகு மது குடிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2015-16 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மதுவுக்கு அடிமையான 18 வயது நிறைவடைந்தவர்களின் அளவு 46.50% ஆக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக அதிகரித்திருக்கக் கூடும்.
தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக மது விற்பனையாகி வருகிறது . அதிகாரப்பூர்வமற்ற வகையில் சந்துக்கடைகள் உள்ளிட்ட வழிகளில் அதே அளவு மது விற்பனையாகி வருகிறது.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் மதுவுக்கு அடிமையான குடி நோயர்களின் எண்ணிக்கை கணக்கில் காட்டப்படுவதை விட நூறு மடங்குக்கும் கூடுதலாக இருக்கும்.
மது, கஞ்சா ஆகிய போதைப் பொருட்கள் போதை நோயர்களை உருவாக்குவது மட்டுமின்றி, குற்றங்கள் பெருகுவதற்கும் காரணமாக உள்ளன.
போதைப் பழக்கத்தால் நாம் நமது எதிர்காலத் தூண்களான இளைஞர் சமுதாயத்தை இழந்து கொண்டிருக்கிறோம். இதைத் தடுப்பதற்கானத் தீர்வு தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு ஏற்படுத்துவதும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களில் நடமாட்டத்தை ஒழிப்பதும் தான்.
தமிழக அரசு இவற்றை உடனடியாக செய்வதுடன் போதைக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் போதை மீட்பு மையங்களைத் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.