search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை ஐகோர்ட்"

    • இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியை நேரில்தான் ஆஜராக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.

    சென்னை:

    அமெரிக்காவில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், காணொலி காட்சி வாயிலாக விசாரணைக்கு ஆஜராகினர். ஆனால், அவர்கள், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலியில் ஆஜராகவில்லை என்று கூறி, அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய குடும்பநல கோர்ட்டு மறுத்துவிட்டது.

    இதை எதிர்த்து மனைவி தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், "குற்றவியல் வழக்குகளில்தான் விசாரணைக்கு நேரில் ஆஜராவது கட்டாயமாகும். இதுபோன்ற விவாகரத்து வழக்கில் காணொலி வாயிலாக ஆஜராக வாய்ப்பு அளிக்க வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியை நேரில்தான் ஆஜராக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அமெரிக்காவில் வசிக்கும் தம்பதியிடம் காணொலி காட்சி வாயிலாக விசாரிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபைக்குள் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
    • கனகசபைக்குள் தீட்சிதர்கள் மட்டுமே சென்று வந்தநிலையில் இன்று காலை முதல் பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

    சென்னை:

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையில் ஏறி நின்று சாமி தரிசனம் செய்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபைக்குள் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று காலை முதல் கனகசபைக்குள் நின்று நடராஜரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கனகசபைக்குள் தீட்சிதர்கள் மட்டுமே சென்று வந்தநிலையில் இன்று காலை முதல் பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

    • கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    • விதிமீறல்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

    சென்னை:

    சிதம்பரம், நடராஜர் கோவிலில், நாளை முதல் 3 நாட்கள் ஆனி திருமஞ்சன விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில், அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், ''கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அதனால், பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதில் விதிமீறல்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். யாராவது சாமி தரிசனத்தை தடுக்கும் விதமாக சட்டத்தை கையில் எடுத்து செயல்பட்டால், அவர்களுக்கு எதிராக அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் அறநிலையத்துறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

    • தமிழ்நாட்டில் யானைகள் வழித்தடம் என அறிவிக்கப்பட்டுள்ள 38 வழித்தடங்கள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும்.
    • தோட்டக்கலைத் துறை செயலாளருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    வனம், வன விலங்கு, சுற்றுச்சூழல் ஆகிய வழக்குகளை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த சிறப்பு டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள், நேற்று வழக்குகளை விசாரித்தனர்.

    அப்போது, தமிழ்நாட்டில் யானைகள் வழித்தடம் என அறிவிக்கப்பட்டுள்ள 38 வழித்தடங்கள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும். வனப்பகுதியில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகர கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.

    ஏற்கனவே இந்த மனுவுக்கு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டும், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை ஜூலை 5-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை தமிழ்நாடு தொழில்நுட்ப நகர கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    பின்னர், ''ஊட்டி கல்லார் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான தோட்டத்தை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டு 3 ஆண்டுகளாகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க வேண்டும்.

    தோட்டக்கலைத் துறை செயலாளருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று நீதிபதிகள் எச்சரிக்கை செய்தனர். இதுதொடர்பான வழக்கை வருகிற ஆகஸ்டு 7-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    • வழக்கு நீதிபதிகள் எஸ்எஸ் சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
    • தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலரான வக்கீல் ஹென்றி திபேன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்எஸ் சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை, மதுரை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நிராகரித்து விட்டது. அதனால், தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், மதுரை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 1-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • மனுதாரர் ஆசிரியையாக பணியில் சேருவதற்கு முன்பு திருமணமாகி, 2 குழந்தைகளும் பிறந்துவிட்டனர்.
    • அரசு ஊழியர்களுக்கான அடிப்படை விதியை கல்வி அதிகாரி தவறாக புரிந்துகொண்டார்.

    சென்னை:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர், 3-வது பிரசவத்துக்காக பேறுகால விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 2 குழந்தைகள் பிரசவத்துக்கு மட்டும் பேறுகால விடுப்பு வழங்கப்படும். 3-வது பிரசவத்துக்கு வழங்கப்படாது என்று உத்தரவிடப்பட்டது. அதை எதிர்த்து அந்த ஆசிரியை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் என்.மனோகரன் ஆஜராகி கூறியதாவது:-

    'மனுதாரர் ஆசிரியையாக பணியில் சேருவதற்கு முன்பு திருமணமாகி, 2 குழந்தைகளும் பிறந்துவிட்டனர். அவரது கணவர் 2004-ம் ஆண்டு இறந்துவிட்டார்.

    அதன்பின்னர் ஆசிரியை பணியில் சேர்ந்த மனுதாரர், மறுமணம் செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து அவர் கர்ப்பம் ஆனார். அவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி இரட்டைக்குழந்தைகள் பிறந்தன. அவர் பேறுகால விடுப்பு கேட்டு, 2022-ம் ஆண்டு ஜனவரி 21-ந் தேதி செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான அடிப்படை விதியை கல்வி அதிகாரி தவறாக புரிந்துகொண்டார். 1961-ம் ஆண்டு பேறுகால பலன்கள் சட்டம், அரசியல் அமைப்பு சாசனத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டது. பேறுகால சட்டம் என்பது நலச்சட்டமாகும். அந்த சட்டத்தில், இதுபோல 3-வது பிரசவத்துக்கு விடுப்பு வழங்க முடியாது என்று கூற முடியாது.'

    இவ்வாறு அவர் வாதிட்டார்.

    அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'பேறுகால விடுப்பு குறித்து அரசு அவ்வப்போது தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கிறது. தமிழ்நாடு பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்துறை கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் அரசாணைகளை பிறப்பித்துள்ளது. அதன்மூலம், 2 குழந்தைகள் பிரசவத்துக்கு மட்டுமே பேறுகால விடுப்பு வழங்க முடியும். மேலும், அரசு ஊழியர்களுக்கு அடிப்படை விதிகள் மட்டுமே பொருந்தும். இந்த விதிகளின்படி, மனுதாரருக்கு 3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு வழங்க முடியாது. இதுதொடர்பாக ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சும் தீர்ப்பு அளித்துள்ளது' என்று வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    அரசு பெண் ஊழியர்களுக்கு 2 குழந்தைகள் பிரசவிக்க மட்டுமே பேறுகால விடுப்பு கண்டிப்பாக வழங்கப்படும் என்று விதிகள் உள்ளன. அதுவும் 365 நாட்களுக்கு மேல் விடுப்பு வழங்க முடியாது. இந்த விவகாரத்தில் அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்த பின்னர், அதை மீறி 3-வது பிரசவத்துக்கு மனுதாரர் விடுப்பு கோர முடியாது.

    மேலும், 3-வது குழந்தையை பெற்றெடுப்பதை தடுக்கும்விதமாக இதுபோன்ற விதிகளை கொண்டுவந்துள்ள நிலையில், மனுதாரர் தற்போது 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அதனால், மனுதாரர் 3-வது குழந்தை பெற்று எடுக்க விடுப்பு கோர முடியாது. இவரது விண்ணப்பத்தை நிராகரித்தது சரிதான். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

    இதேபோல சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியையும் 3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கேட்டு கொடுத்த விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். அதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.சதீஷ்குமார், 'மனுதாரர் பணியில் சேருவதற்கு முன்பே 2 குழந்தைகளை பெற்றுவிட்டார். தற்போது பணியில் சேர்ந்த பின்னர், 3-வது குழந்தைக்காக பேறுகால விடுப்பு கேட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் பிறப்பித்த தீர்ப்பின்படி, 2 குழந்தைகளுக்கு மேல் பேறுகால விடுப்பு கோர முடியாது. எனவே, அவருக்கு பேறுகால விடுப்பு வழங்க மறுத்த உத்தரவு சரிதான். அதில் தலையிட முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறேன்' என்று தீர்ப்பு அளித்துள்ளார்.

    • சுற்றுலாவாசிகளை கவரும் விதமாக ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா என்ற திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
    • வனத்துறை ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை.

    சென்னை:

    சுற்றுலாவாசிகளை கவரும் விதமாக ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா என்ற திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இதன்படி சுற்றுலாவாசிகள் மலைக்கு மேல் ஹெலிகாப்டரில் பறந்து இயற்கை அழகை ரசிக்கலாம். இந்த திட்டம் நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை செயல்பட இருந்தது.

    இந்தநிலையில், இந்த திட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முருகவேல் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், மலைக்கு மேல் ஹெலிகாப்டர் பறப்பது அபாயகரமானது. அதுமட்டுமல்ல விலங்குகள் மனஉளைச்சலுக்கு உள்ளாகும். கடுமையாக பாதிக்கும். இந்த திட்டம் குறித்து அரசுக்கு தவறாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனால், இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, 'ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் குறித்து இதுவரை அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல வனத்துறையும் இந்த சுற்றுலா திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை'' என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதிகள், ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் குறித்து வருகிற 17-ந்தேதி வரை எந்த முடிவையும் அரசு எடுக்கக்கூடாது. செயல்படுத்தவும் கூடாது என்று தடை விதித்து, விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

    • ஆஸ்பத்திரிகள், பள்ளி, கல்லூரிகள், மத வழிப்பாட்டு தலங்கள் உள்ளன. இந்த பகுதியில் மதுக்கடை திறந்தால், பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
    • பெரியமேட்டில் புதிதாக திறக்கப்பட உள்ள மதுக்கடையினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்று போலீஸ் தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    சென்னை:

    சென்னை பெரியமேட்டை சேர்ந்தவர் மனோகர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ''பெரிய மேட்டில் உள்ள நேவல் ஆஸ்பத்திரி சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பகுதியில் அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள், பள்ளி, கல்லூரிகள், மத வழிப்பாட்டு தலங்கள் உள்ளன. இந்த பகுதியில் மதுக்கடை திறந்தால், பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இங்கு மதுக்கடை திறக்க தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணை வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், பெரியமேட்டில் புதிதாக திறக்கப்பட உள்ள மதுக்கடையினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்று போலீஸ் தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுக்கடை திறக்க தடை விதித்தனர். வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

    • 2013-ம் ஆண்டு மே 15-ந் தேதி அறுவைசிகிச்சை நடந்தது. அதன்பின்னர் எனக்கு மூச்சுத்திணறல், வாந்தி, தாங்கமுடியாத வயிற்றுவலி ஏற்பட்டன.
    • என்னைப் பரிசோதித்த டாக்டர்கள், அறுவைசிகிச்சையில் தவறு நடந்துள்ளதாகவும், பெருங்குடலில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.

    சென்னை:

    பிரான்ஸ் நாட்டில் வசித்து வருபவர் புளோரா. இலங்கை தமிழரான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.ஜி. ஆஸ்பத்திரி கருத்தரிப்பு சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றது என்று கூறப்பட்டதால், அங்கு சிகிச்சைக்காக சென்றேன். என்னைப் பரிசோதித்த டாக்டர்கள், கருப்பையில் கட்டி உள்ளதாக கூறி அதை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்றனர்.

    அதன்படி எனக்கு 2013-ம் ஆண்டு மே 15-ந் தேதி அறுவைசிகிச்சை நடந்தது. அதன்பின்னர் எனக்கு மூச்சுத்திணறல், வாந்தி, தாங்கமுடியாத வயிற்றுவலி ஏற்பட்டன. அங்கிருந்த நர்சு மூலம் டாக்டர்கள் செல்வராஜ், கமலா செல்வராஜ் ஆகியோர், இவையெல்லாம் சிகிச்சைக்கு பின்னர் வழக்கமாக ஏற்படும் நிகழ்வுகள்தான் என்று கூறிவிட்டனர்.

    என்னால் வலியைத் தாங்கமுடியாமல் துடித்தபோது, என்னைப் பரிசோதித்த டாக்டர்கள் எந்த ஒரு ஒப்புதலையும் பெறாமல் 2-வது அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர். பின்னர், என்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு இடம்மாற்றினர். அங்கு என்னைப் பரிசோதித்த டாக்டர்கள், அறுவைசிகிச்சையில் தவறு நடந்துள்ளதாகவும், பெருங்குடலில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர். அதன்பின்னர் 3-வது அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அப்போது என் சகோதரரிடம் ஜி.ஜி. ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ரூ.5 லட்சம் தருவதாகவும், இந்த பிரச்சினையை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் சமரசம் பேசினர். அதை நாங்கள் ஏற்கவில்லை. தவறான அறுவைசிகிச்சையால், சுமார் 37 நாட்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து, உயிரைக் காப்பாற்ற போராடியுள்ளேன்.

    கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளேன். எனவே எனக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜி.ஜி. ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி ஜி.சந்திரசேகரன் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், 'தவறான அறுவைசிகிச்சையால் மனுதாரரின் பெருங்குடல் நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர் மலத்தை வெளியேற்ற வயிற்றுக்கு மேல் பை ஒன்று நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது. அதன் வழியாகத்தான் மலம் கழிக்க வேண்டும். இதனால் அவரால் பிறருடன் பழக முடியவில்லை. பார்த்துக்கொண்டிருந்த வேலையையும் இழந்துள்ளார். பிறர் உதவி இல்லாமல் வாழமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவர் சொல்ல முடியாத அளவுக்கு மனவேதனையில் வாழ்ந்துவருகிறார். எனவே, உரிய இழப்பீட்டை அவருக்கு வழங்க உத்தரவிட வேண்டும்' என்று வாதிட்டார்.

    அதற்கு மறுப்பு தெரிவித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், 'தவறான சிகிச்சையால் மனுதாரர் நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கமான, அன்றாட வாழ்க்கையை வாழமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். எனவே அவருக்கு இழப்பீடாக ரூ.40 லட்சத்தை 12 சதவீத வட்டியுடன் ஜி.ஜி. ஆஸ்பத்திரி நிர்வாகம் வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

    • தங்களை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராஜசேகர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
    • வழக்குகளுக்கு ஆவின் நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆவின் தலைமையகங்களில் பல்வேறு பணிகளுக்கு பெருந்தொகை லஞ்சம் பெற்றுக்கொண்டு தேர்வு நடத்தாமல் பணி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திருப்பூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர், திருச்சி, தேனி மற்றும் சென்னை ஆகிய பால் உற்பத்தியாளர் சங்கங்களில் ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவின் பால்வள துணைப்பதிவாளர் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த விசாரணையின் அடிப்படையில், ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணிநீக்கம் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக 26 அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், தங்களை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராஜசேகர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

    அதில், அனைத்து தேர்வு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு, முறையான நியமனத்தின் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆவினில் பணியாற்றிவரும் நிலையில், எங்களுக்கு எவ்வித நோட்டீசும் அளிக்காமல் திடீரென பணிநீக்கம் செய்தது சட்டவிரோதமானது என்று கூறியிருந்தனர். இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தன.

    மனுதாரர்கள் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுதாரர்களான ஆவின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்குகளுக்கு ஆவின் நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற மார்ச் 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    • பெங்களூரைச் சேர்ந்த பன் வேர்ல்டு என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
    • ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.

    சென்னை

    சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வர்த்தக பொருட்காட்சிக்கான டெண்டர் நடைமுறைகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பெங்களூரைச் சேர்ந்த பன் வேர்ல்டு என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அப்போது, கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட சுற்றுலா பொருட்காட்சியின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.3 லட்சம் பாக்கியை செலுத்தாததால், அந்த நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.50 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதித்து வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து பன் வேர்ல்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, டெண்டரில் வெற்றி பெற்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பொருட்காட்சி அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும், வருகிற 28-ந்தேதி முதல் பொருட்காட்சி தொடங்கவுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், பொருட்காட்சியை திட்டமிட்டபடி வருகிற 28-ந்தேதி தொடங்க அனுமதியளித்தனர். மனுதாரர் நிறுவனத்துக்கு தனி நீதிபதி விதித்த அபராதத்துக்கு மட்டும் தடை விதித்தனர். மேலும், இதுதொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற ஜனவரி 5-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    ×