என் மலர்
நீங்கள் தேடியது "வீடுகளை இடிக்க எதிர்ப்பு"
- அரசுக்கு சொந்தமான இடத்தில் 7 வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக ஒரு சிலர் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர்.
- மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வீடுகளை இடிக்க சென்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன் குளம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 7 வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக ஒரு சிலர் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 21 -ந் தேதி மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை இடிக்க சென்ற போது துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் வீடுகளை இடிப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து வீடுகளை காலி செய்ய வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடர அவகாசம் வழங்கி சென்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வீடுகளை இடிக்க சென்றனர். அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டனர். பின்னர் மீண்டும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த அதிமுக கவுன்சிலர் தஷ்ணா, நிர்வாகி நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குளோப் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து கடலூர் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
அப்போது பொதுமக்களிடம் கூறுகையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வீடுகளை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்துள்ளனர். ஆனால் கடந்த முறை நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என தெரிவித்து கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டதை தொடர்ந்து நாங்கள் வீடுகளை இடிக்காமல் சென்றோம். ஆனால் நீதிமன்ற உத்தரவுபடி வருகிற 6-ம் தேதிக்குள் கண்டிப்பாக வீடுகளை இடிக்க வேண்டும். ஆனால் நீங்கள் மீண்டும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். ஆகையால் வருகிற 4-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் அல்லது வீடுகளை காலி செய்யுங்கள் இதனை மீறினால் பாரபட்சம் இன்றி கண்டிப்பாக வீடுகள் இடிக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- விசாரித்த நீதிபதி வனத்துறை இடத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டார்.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது மேல்பாக்கம் கிராமம். இங்கு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட வீடுகள், கோவில்கள் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் சுமார் ஐந்து தலைமுறையாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைத்து குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை, மின் இணைப்பு ஆகியவை வழங்கப்பட்டு வீட்டு வரியும் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி வனத்துறை இடத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் முதல் கட்டமாக 40 வீடுகளை அகற்ற கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் சரவணக்குமாரி தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார், மின்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் ஜே.சி.பி.எந்திரத்துடன் வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும் திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, தற்போது வசித்து வரும் நிலத்தினை குடியிருப்பவர்களுக்கே சொந்தமாக்கிட வேண்டும் அல்லது தங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டதால் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.