search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணதாசன்"

    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், காப்பியங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் என அவரது எழுத்துக்கள் புகழ்பெற்றவை.
    • ஊடக இதழாசிரியர், தமிழக அரசவைக் கவிஞர், சாகித்ய அகாடமி விருது என, தமது திறமையால் அவர் அடைந்த உயரங்கள் பல.

    சென்னை:

    பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    எல்லாச் சூழலுக்கும் பொருந்தும்படியாக, ஆறுதலாக, உத்வேகமாக இருக்கும் தமது வைர வரிகளால், காலங்களைக் கடந்து வாழும் கவியரசர் கண்ணதாசன் நினைவு தினம் இன்று.

    கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் முதலான நூல்கள், அவரது ஆழ்ந்த இறைபக்தியை விளக்கும். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், காப்பியங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் என அவரது எழுத்துக்கள் புகழ்பெற்றவை. ஊடக இதழாசிரியர், தமிழக அரசவைக் கவிஞர், சாகித்ய அகாடமி விருது என, தமது திறமையால் அவர் அடைந்த உயரங்கள் பல.

    இறவாப் புகழ் பெற்ற கவியரசர் கண்ணதாசனுக்கு நினைவஞ்சலிகள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில், பள்ளிக்கூடமே போகாத, மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக் கூடிய வலிமை பெற்றது.
    • வானொலியில் நான் நிகழ்த்திய உரைக்கு மன்னிப்பு கேட்டு விட்டு ஃபோனை கீழே வைத்தேன்.

    கண்ணதாசனிடமிருந்து அப்படி ஒரு கேள்வியை அந்த கல்லூரிப் பேராசிரியை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!

    தனக்கு நடந்த நிகழ்வை அந்த பேராசிரியையே சொல்கிறார் இப்படி:

    "ஒரு முறை சென்னை வானொலியில் 'இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள்.

    இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி, கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரையை நிகழ்த்தினேன்.

    அது வானொலியில் ஒலிபரப்பானது. ஒலிபரப்பாகி சுமார் அரை மணிநேரம் கழித்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, எடுத்துப்பேசினேன்.

    மறுமுனையில் 'நான் கண்ணதாசன் பேசுகிறேன்' என்று கேட்டதும் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. கண்ணதாசன் தொடர்ந்து பேசினார். 'சற்று முன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன். மிகவும் அருமையாக பேசியிருந்தீர்கள். ஆனால் ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் நல்ல பல விஷயங்கள், உங்களைப் போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன.

    ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில், பள்ளிக்கூடமே போகாத, மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக் கூடிய வலிமை பெற்றது. அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன்.

    உதாரணமாக திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட 'நான் மனமாக இருந்து நினைப்பேன். நீ வாக்காக இருந்து பேசு' என்று ஒரு வரி வரும்.

    அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால் அதையே நான் 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்' என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது. இது தவறு என்று சொல்கிறீர்களா' என்று கண்ணதாசன் கேட்டார்."

    என்ன பதில் சொல்ல முடியும் கண்ணதாசனின் இந்த கேள்விக்கு?

    வானொலியில் நான் நிகழ்த்திய உரைக்கு மன்னிப்பு கேட்டு விட்டு ஃபோனை கீழே வைத்தேன்.

    "கண்ணதாசன் அப்படி சொன்னதைக் கேட்டது முதல் அவர் மீது நான் கொண்டிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது. ஏனெனில் அவர் என்னிடம் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை."

    -ஜான் துரை ஆசிர் செல்லையா

    • கண்ணதாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • கவிதை தொகுப்பை வெளியிட்டு கவிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிறுகூடல் பட்டியில் கவியரசு கண்ணதாசன் 97-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூர் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு, பாரதி இலக்கியக் கழகம் இணைந்து 101 கவிஞர்களின் கவிதை தொகுப்பு வெளியீடு நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து கவிதை தொகுப்பை வெளியிட்டு கவிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் சேது பாஸ்கரா கல்வி குழும நிறுவனர் சேது குமணன், பழனியப்பன், பொற்கை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நூல் ஆசிரியர் ஜெயச்சந்திரன் செய்திருந்தார்.

    • கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன்.
    • தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே தேங்காயைப் போலிருப்பான் ஒருவன்.

    கவிஞர் கண்ணதாசன் நாத்தீகத்திலிருந்து மீண்டு, ஆன்மீகத்திற்கு மாறி, அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து பெறும் புகழ் பெற்றிருந்த நேரம்.

    இதை பொறுக்க முடியாத சில நாத்தீக அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து கடவுள் "இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?" என கிண்டலாக கேட்டனர்.

    அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர்.

    இறைவன் குறித்த கவிஞரின் அற்புதமான தத்துவம் இதோ...


    பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு

    புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்

    புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்


    ஒன்பது ஓட்டைக்குள்ளே

    ஒருதுளிக் காற்றை வைத்து

    சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் -அவன்

    தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்


    முற்றும் கசந்ததென்று

    பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென

    நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்

    தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்


    தென்னை இளநீருக்குள்ளே

    தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே

    தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத்தெரிந்து கொண்டால்

    அவன்தான் இறைவன்


    வெள்ளருவிக் குள்ளிருந்து

    மேலிருந்து கீழ்விழுந்து

    உள்ளுயிரைச் சுத்தம் செய்வான்

    ஒருவன் - அவனை

    உணர்ந்து கொண்டால்

    அவன்தான் இறைவன்


    வானவெளிப் பட்டணத்தில்

    வட்டமதிச் சக்கரத்தில்

    ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் - அவனை

    நாடிவிட்டால் அவன்தான் இறைவன்


    அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே

    ஆசைமலர் பூத்திருந்தால்

    நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் - அவனை

    நினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன்


    கற்றவர்க்குக் கண் கொடுப்பான்

    அற்றவர்க்குக் கை கொடுப்பான்

    பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் - அவனைபின்தொடர்ந்தால்

    அவன்தான் இறைவன்


    பஞ்சுபடும் பாடுபடும்

    நெஞ்சுபடும் பாடறிந்து

    அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் - அவன்தான்ஆறுதலைத் தந்தருளும் இறைவன்


    கல்லிருக்கும் தேரைகண்டு

    கருவிருக்கும் பிள்ளை கண்டு

    உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன் - அதைஉண்டுகளிப் போர்க்கவனே இறைவன்


    முதலினுக்கு மேலிருப்பான்

    முடிவினுக்குக் கீழிருப்பான்

    உதவிக்கு ஓடிவரும் ஒருவன் - அவனை

    உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்


    நெருப்பினில் சூடு வைத்தான்

    நீரினில் குளிர்ச்சி வைத்தான்


    உள்ளத்தின் உள் விளங்கி

    உள்ளுக்குள்ளே அடங்கி

    உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் -

    ஓர்உருவமில்லா அவன்தான் இறைவன்.


    கோழிக்குள் முட்டை வைத்து

    முட்டைக்குள் கோழி வைத்து

    வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன் - அந்தஏழையின் பேர் உலகில் இறைவன்


    சின்னஞ்சிறு சக்கரத்தில்

    ஜீவன்களைச் சுற்ற வைத்து

    தன்மைமறந்தே இருக்கும் ஒருவன் - அவனைத்தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்


    தான் பெரிய வீரனென்று

    தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்

    நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் -அவன்தான்

    நாடகத்தை ஆடவைத்த இறைவன்!


    -ஆர்.எஸ். மனோகரன்

    • ஆயுதமோ, அணுகுண்டோ இல்லாமல், அகிம்சை என்னும் அறவழியை பின்பற்றி இந்திய சுதந்திரத்தை வாங்கி தந்த பெருமை அண்ணல் காந்தியடிகளுக்கே உரியது என்றெல்லாம் பெருமை கொள்வார் கண்ணதாசன்.
    • பகுத்தறிவு பகலவனாக திகழ்ந்திட்ட தந்தை பெரியாரிடம் தனி மதிப்புக் கொண்டிருந்தார் கண்ணதாசன்.

    இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே நமது கவியரசர் கண்ணதாசன் 1927-ம் ஆண்டிலேயே சிறுகூடல் பட்டியிலே பிறந்திட்டார். சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டின் போது கண்ணதாசனுக்கு வயது இருபது. எனவே சுதந்திரப்போராட்ட வரலாறுகளை எல்லாம் நன்கறிந்தவர். சிறுகூடல் பட்டியிலே இருந்த `பாரதமாதா' வாசகசாலைதான் கண்ணதாசனுக்கு அறிவை வளர்த்தது. சிந்தனையை ஊட்டியது என்பதே உண்மையாகும்.

    அண்ணல் காந்தியடிகளை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை விரும்பி தேர்ந்தெடுத்து படிப்பார். ஏடுகளில் காந்தியடிகளை பற்றி வருகிற செய்திகளை எல்லாம் படித்து உள்வாங்கிக் கொள்வார். எவ்வித ஆயுதமோ, அணுகுண்டோ இல்லாமல், அகிம்சை என்னும் அறவழியை பின்பற்றி இந்திய சுதந்திரத்தை வாங்கி தந்த பெருமை அண்ணல் காந்தியடிகளுக்கே உரியது என்றெல்லாம் பெருமை கொள்வார் கண்ணதாசன்.

    அப்படிப்பட்ட காந்தியடிகளை பற்றி பல மேடைகளில் கண்ணதாசன் உதாரணம் காட்டி அவரது அருமை பெருமைகளை பேசுவதுண்டு. கட்டுரைகளை எழுதியதும் உண்டு. ஆனால் ஒரே ஒரு கவிதை மட்டுமே கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள 6-ம் தொகுதியிலே காந்தியடிகளைப்பற்றி `தீபம் போதும்' என்ற தலைப்பிலே வெளியாகி உள்ளது. அதை அப்படியே வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    காட்டினுள் தேடித் தேடிக்

    கற்பகத் தருவைக் காண்போம்...!

    வீட்டினிள் தேடித் தேடி

    விளக்கையோர் இடத்திற் கண்டோம்...!

    ஏட்டினுள் தேடித் தேடி

    இணையிலாக் கவிதை கண்டோம்

    நாட்டினுள் தேடுகின்றோம்

    நாயக! நின்னைக்காணோம்...!

    நாற்பது கோடிக் கென்று

    நடுங்கிய தடியை ஊன்றி

    ஏற்பதை ஏற்று வாழ

    இருப்பினும் தொடர்ந்து சென்று

    நூற்பது முதலாய் நன்மை

    நுவல்வது வரையிற் சொல்லி

    வேற்படை திரட்டி வென்றாய்

    வீரனே நின்னைக் காணோம்...

    காந்தியின் பெயரைக் கண்டோம்

    காலடிச் சுவடைக் கண்டோம்

    காந்தமென் றொன்றைக் கண்டோம்

    தனியறம் தழைக்க கண்டோம்

    மாந்தருள் நின்னைப் போல

    மற்றொரு வைரம் காணோம்...

    ஏந்திய தீபம் நின்சொல்

    இன்னொளி போதும் தேவா...

    என்று காந்தியை பற்றிய கவிதையை நிறைவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.

    சாந்தமாய் திகழ்ந்து சரித்திரம் படைத்திட்ட ஒரு மகத்தான மாமனிதரை எங்கெல்லாமோ தேடிப்பார்க்கிறோம். அப்படி ஒரு மனிதர் எங்கள் கண்களுக்கு இதுவரை தென்படவில்லை என்று காந்திக்கு புகழாரம் சூட்டுவதோடு, கொள்கையிலும், மனதைரியத்திலும் ஒரு வைரம் போலே ஒளிவீசி வாழ்ந்து மறைந்தார் என்று வர்ணித்து எழுதுகிறார் கண்ணதாசன்.

    `ராஜாஜி பற்றி கண்ணதாசன்'

    முதறிஞர் ராஜாஜி மீதும் பெரும் மதிப்பு கொண்டிருந்தார் கண்ணதாசன். கட்சி ரீதியாக அவரோடு கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும், அவருடைய வயதின் மூப்புக்கருதியும், அவருடைய இலக்கிய ஞானம் கருதியும் ராஜாஜி மீது தனி மரியாதை வைத்திருந்தார் கண்ணதாசன்.

    `சக்கரவர்த்தி திருமகன்' என்ற ராமாயணம் பற்றிய நூலில் ராஜாஜி ரத்தின சுருக்கமாக எழுதி வெளியிட்டதை எப்போதும் பெருமையுடன் கண்ணதாசன் கூறி மகிழ்ந்திடுவார். அதேபோல மகாபாரதத்திலும் ராஜாஜிக்கு நல்ல புலமை உண்டு. ராஜாஜியின் சில புத்தகங்கள், திரைப்படங்களாக வடிவம் பெற்றுள்ளதையும் கண்ணதாசன் அடிக்கடி குறிப்பிடுவார்.

    'திக்கற்ற பார்வதி' என்ற ராஜாஜியின் நாவல் திரைப்படமாக வந்து வெற்றி பெற்றதையும் கண்ணதாசன் குறிப்பிடத் தவறுவதில்லை. ஆனால் ராஜாஜி முதல்வராக இருந்த போது கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் கண்ணதாசனும் ஒருவர். ராஜாஜி எப்பொழுதுமே மேல்தட்டு மக்களின் பக்கமே இருப்பார் என்பதிலும் கண்ணதாசனுக்கு ராஜாஜியின் மீது கடும் கோபம் இருந்தது.

    ஆனால் ஒரு கவிஞன் என்று வரும் போது, பொது மனிதனாக இருந்து எல்லோரையும் சமமாக பாவிப்பதே கவிஞருடைய கொள்கை என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை. அப்படிப்பட்ட சமநோக்கில் தான் ராஜாஜியின் குணநலன் குறித்தும், அவருடைய ஒழுக்கமான பொது வாழ்க்கை குறித்தும், மதி நுட்பம் குறித்தும் கவிதையில் மிக சிறப்பான பாராட்டுக்களை வழங்கியுள்ளார் கண்ணதாசன்...

    தலை சிறந்த தமிழர்களான பேராசிரியர் கல்கியும், கல்கி சதாசிவமும், தமிழ் அறிஞர் டி.கே.சி.யும் ராஜாஜியின் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். கல்கியின் எழுத்துகளில் மனதை பறிகொடுத்தவர் கண்ணதாசன். எனவே அந்த வகையிலும் ராஜாஜியின் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் கண்ணதாசன். 'தேசத்தை ஈர்த்த தமிழன்' என்ற தலைப்பிலே கண்ணதாசன் எழுதிய கவிதையை பார்ப்போம்.

    ஊராண்டு நாடாண்டு

    உயர்வான மேதைகளின்

    உள்ளத்தை ஆண்ட மனிதன்...

    உடலாண்டு மனம் ஆண்டு

    ஒரு தொன்னூற் றைந்தாண்டு

    உலகத்தில் வாழ்ந்த அறிஞன்

    சீராண்டு வேதாந்த

    சித்தாந்த மெஞ்ஞானம்

    சேர்த்தாண்ட ஞான முனிவன்

    தெளிவோடு பலவாண்டு

    தென்னாட்டு மாந்தர்க்கு

    தெய்வத்தை சொன்ன கலைஞன்

    என்று முதல் கவிதையிலேயே முத்திரைபதிக்கிறார் கண்ணதாசன். ராஜாஜியின் தேசத் தொண்டினை மட்டுமல்ல தெய்வீகத் தொண்டினையும் பாராட்டி மகிழ்ந்தார் கண்ணதாசன்.

    ஊராட்சி என்றாலும்

    நகராட்சி என்றாலும்

    ஒழுக்கத்தை வேண்டும் ஒருவன்

    ஒரு போதும் தன் கட்சி

    நிருவாக தலையீட்டை

    ஒப்புக் கொள்ளாத தலைவன்

    சீரான அரசாட்சி

    சிலகாலம் செய்தாலும்

    திறமாக செய்த புனிதன்

    தென்னாட்டு மாந்தர்தம்

    திறமைக்குச் சான்றாகி

    தேசத்தை ஈர்த்த தமிழன்

    தேராத நூலில்லை

    தெளியாத பொருளில்லை

    சென்றோடி விட்டதெனவோ...

    என்று அடுத்த கவிதையில்... ராஜாஜியின் குண நலன்களை பாராட்டி மகிழ்கிறார் கண்ணதாசன்

    வாழ்வாங்கு வாழ்வாரைத்

    தெய்வத்துள் வைக்குமொரு

    வையத்துள் வாழும் மனிதா- இந்த

    வையத்துள் ராஜாஜி

    வாழ்வுக்குச் சான்றாக

    வாழ்வொன்று எங்கும் உளதா...?

    மாபார தத்தினிலும்

    ராமாயணத்திலும்

    மனதார மூழ்கி நீந்தி

    மனநீதி பொய்யாது

    மறைநீதி அகலாது

    வாழ்வார்க்கு ஆத்ம சாந்தி

    பூபாரம் ஏற்றானை

    புகழ்பாரம் கொண்டானை

    பொழுதென்றும் வாழ்த்து மனமே

    என்று பாடி ராஜாஜியை போல பொய்யாத மானிடர்கள் வருக தினமே என்று கவிதையை நிறைவு செய்கிறார் கண்ணதாசன்...

    பெரியார் பற்றி கண்ணதாசன்

    பகுத்தறிவு பகலவனாக திகழ்ந்திட்ட தந்தை பெரியாரிடம் தனி மதிப்புக் கொண்டிருந்தார் கண்ணதாசன். ஆரம்ப காலங்களில் நாத்திகராகவும், பகுத்தறிவு வாதியாகவும் இருந்தவர் தான் கண்ணதாசன்... அப்போதெல்லாம் பெரியாரின் கொள்கை பற்றி பேசாத நாளில்லை. தி.மு.க.வில் இணைந்து, பின்னர் அங்கிருந்து வெளியேறிய பின்னும் பெரியாரை பற்றி எந்த விமர்சனமும் செய்ததில்லை. பெரியார் மட்டும் இல்லையெனில் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்வில் இப்படி ஓர் விழிப்புணர்வு வந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதே கண்ணதாசனின் கருத்தாகும். "ஈரோட்டு விடிவெள்ளி" என தலைப்பிட்டு

    தங்க வண்ண மேனியும், புன்னகை

    தாங்கும் இன்ப வதனமும், கண்களில்

    பொங்கும் வீரப்புலிப் பார்வையும்

    புவனம் யாவையும் தன் வயமாக்கிடும்

    எங்கள் தந்தை ஈரோட்டு அண்ணல்

    என்று புகழாரம் சூட்டி மகிழ்கிறார் கண்ணதாசன்.

    'மேடை ஏறி நின்றிடில் ஓர்எழில்

    மெய் சிலிர்க்க பேசிடில் ஓர் எழில்

    தாடை தாங்கும் தாடி அசைந்திடில்

    தனிப்பெரும் எழில்! கருநிறத் தமிழ்

    ஆசை காற்றில் அசைந்திடில் ஓர்எழில்

    ஈடிலாத நம் ஈவெரா' என்று

    பெரியாரின் தோற்றப் பொலிவை வர்ணித்து மகிழ்கிறார் கண்ணதாசன்.

    'தூங்கினோர் தமை தட்டி எழுப்பியும்

    சோம்பல் நெஞ்சினை சுறுசுறுப்பாக்கியும்

    பாங்கு காட்டியும், பண்பை ஊட்டியும்

    பாதை மாறிய வேதனை கூறியும்

    தீங்கு நீங்கிட தினவு கொண்டெழு

    தீரனே என வீரம் ஊட்டிய வேந்தர்'

    என்றும்...

    எனது தாயகம்! எனது தோழர்கள்

    எனது தாய்மொழி! எனது சோதரர்

    என்பதே நினைவான உள்ளமாம்

    இழையும் மூச்சிலும் இந்த வெள்ளமாம்

    என்றும் பெரியாருக்கு புகழ்மாலை சூட்டுகிறார் கண்ணதாசன்.

    ஊன்றி வரும் தடிசற்று நடுங்கக் கூடும்

    உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கமில்லை

    தோன்றி வரும் வடிவினிலே நடுக்கள் தோன்றும்

    துவலாத கொள்கையிலே நடுக்கமில்லை

    வான் தவழும் வெண்மேகத் தாடி ஆடும்

    வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை.

    ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார் எங்கள்

    ஐயாவுக்கிணை அவரே! மாற்றோர் இல்லை.

    சாதியெனும் நாகத்தை தாக்கி தாக்கி

    சாகடித்த பெருமை அவர் தடிக்கே உண்டு

    நாதியிலார் நாதி பெற நாப்படைத்தார்

    நாற்பத்து ஐங்கோடி மக்களுக்கும்

    பேதமிலா வாழ்வு தரப் பிறந்து வந்தார்.

    பிறப்பினிலே பெரியாராய்தான் பிறந்தார்.

    ஆக்காத நூலில்லை; ஆய்ந்து தோய்ந்து

    அளிக்காத கருத்தில்லை; அழுத்தமாக

    தாக்காத பழமையில்லை, தந்தை நெஞ்சில்

    தழைக்காத உவமையில்லை, தமிழ் நிலத்தில்

    நீக்காத களையில்லை, நினைத்துச் சொல்லி

    நிலைக்காத பொருளில்லை, நீதி கூடக்

    காக்காத உலகத்தை பெரியார் காத்தார்'

    என்று பெரியாரின் 85-வது ஆண்டு பிறந்த நாளின் கொண்டாட்டத்தின் போது எழுதியிருக்கிறார் கண்ணதாசன். இப்படிப்பட்ட பெருமைகளுக்குரிய பெரியார் மறைந்த போது...

    சரித்திரம் இறந்த செய்தி

    தலைவனின் மரணச் செய்தி

    விரித்ததோர் புத்தகத்தின்

    வீழ்ச்சியைக் கூறும் செய்தி

    மரித்தது பெரியாரல்ல..

    மாபெரும் தமிழர் வாழ்வு...

    இறக்கவே மாட்டார் என்று

    இயற்கையே நம்பும் வண்ணம்

    சிறக்கவே வாழ்ந்த வீரன்

    சென்றதை நம்புவேனா

    மறக்கவா முடியும் அந்த

    மன்னனை, அவன் எண்ணத்தை'... என்று

    பெரியாரின் பெருமையை வரிசைப்படுத்தி அஞ்சலி செலுத்துகிறார் கண்ணதாசன்...

    அடுத்த வாரம் சந்திப்போம்...

    ×