search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிபிசி ஆவணப்படம்"

    • பிபிசி இந்தியா சார்பில் குஜராத் கலவரம் தொடர்பாகவும் ஆவணப்படம் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
    • இந்திய பிபிசி நிறுவனத்தின் தில்லி, மும்பை அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன

    பிபிசி இந்தியா என்கிற பெயரில் பிரிட்டன் அரசாங்கத்தின் பொது நிறுவனத்தின் கிளையாக இயங்கிவந்த நிறுவனமே, பிபிசி செய்திகளை வெளியிட்டு வந்தது. அதன் அனைத்து அம்சங்களுக்கும் முழுமையாக பிபிசி நிறுவனமே பொறுப்பாக இருந்துவந்தது. இங்கு பணியாற்றும் ஏழு மொழிகளின் பிரிவுகளைச் சேர்ந்த 200+ ஊழியர்களும் பிபிசி ஊழியர்களாக இருந்துவந்தனர்.

    பிபிசி இந்தியா சார்பில் குஜராத் கலவரம் தொடர்பாகவும் அப்போது முதல்வராக இருந்த தற்போதைய பிரதமர் மோடி குறித்தும் ஆவணப்படம் கடந்தாண்டு வெளியிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதானி குழுமம் தொடர்பான இண்டென்பர்க் அறிக்கையை முன்வைத்து பிபிசி சிறப்புச் செய்திகளை வழங்கியிருந்தது.

    இந்நிலையில், குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படம் வெளியான அடுத்த சில வாரங்களில் இந்திய பிபிசி நிறுவனத்தின் தில்லி, மும்பை உட்பட்ட அலுவலகங்களில் வரி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வருமானவரித் துறை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    விதிமுறை மீறல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டதால் அந்நிறுவனத்தின் அலுவலகங்கள் இந்தியாவில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது

    இதனை அடுத்து தற்போது கலெக்டிவ் நியூஸ் ரூம் என்ற பெயரில் தனியாக செய்தி ஏஜென்சியை தொடங்கி இந்த ஏஜென்சி இந்தியாவில் இருந்து பிபிசி நிறுவனத்திற்கு செய்திகளை தயாரித்து தர இருக்கிறது.

    அதன்படி, பிபிசி செய்திகளை இனி 'கலெக்டிவ் நியூஸ்ரூம்' என்கிற புதிய இந்திய தனியார் நிறுவனம் வெளியிடும். அதாவது செய்தி வெளியீட்டு உரிமையை இந்திய நிறுவனமே கையாளும் எனக் கூறப்பட்டுள்ளது.

    இந்த தனியார் நிறுவனம் வேறொரு நிறுவனம்தான் என்றாலும், பிபிசி தரப்புக்குத் தொடர்பே இல்லாத நிறுவனம் என்றும் சொல்லிவிட முடியாது. நான்கு மூத்த பிபிசி பத்திரிகையாளர்கள் ராஜினாமா செய்துவிட்டு, கலெக்டிவ் நியூஸ்ரூம் நிறுவனத்தை நிறுவியுள்ளனர்.

    இந்த நிறுவனத்தில், 2021 நேரடி அந்நிய முதலீட்டுச் சட்டப்படி, 26 சதவீதம் அளவுக்கு தங்களின் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்குமாறு பிரிட்டன் அரசாங்க நிறுவனமான பிபிசி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

    புதிய நிறுவனம் தற்போது பிபிசிக்கான உள்ளடக்கத்தை உருவாக்கி வெளியிடும், ஆயினும் எதிர்காலத்தில் ஒரு சுதந்திரமான ஊடக நிறுவனமாக பிற நிறுவனங்களுக்கும் உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்க விரும்புகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிபிசி நியூஸ் தமிழ், பிபிசி நியூஸ் தெலுங்கு, பிபிசி நியூஸ் ஹிந்தி, பிபிசி நியூஸ் மராத்தி, பிபிசி நியூஸ் குஜராத்தி, பிபிசி நியூஸ் பஞ்சாபி ஆகிய 6 இந்திய மொழிகளுடன் பிபிசி ஆங்கிலத்திற்கும் டிஜிட்டல் மற்றும் யூடியூபில் இந்திய நேயர்களுக்கான செய்திகளை கலெக்டிவ் நியூஸ்ரூம் தயாரித்து வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் தேர்தல் காலம் தொடங்கிவிட்டது என ஜெய்சங்கர் தெரிவித்தார்
    • பிபிசி ஆவணப்படம் வெளியான நேரம் எதிர்பாராமல் நடந்தது என்று நினைக்கிறீர்களா?

    புதுடெல்லி:

    குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் இந்திய அரசியலில் தொடர்ந்து விவாதப்பொருளாகி உள்ளது. 'இந்தியா: மோடி கேள்விகள்' என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.  ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் டெல்லி வன்முறை, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது. ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனாலும் தடையை மீறி இந்த ஆவணப்படம் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டது.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று ஏஎன்ஐ செய்தி முகமைக்கு பேட்டியளித்தார். அப்போது பிபிசி ஆவணப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து ஜெய்சங்கர் கூறியதாவது:

    நீங்கள் ஆவணப்படம் எடுக்க வேண்டுமா? 1984ல் டெல்லியில் பல விஷயங்கள் நடந்தன. ஏன் ஒரு ஆவணப்படத்தையும் நாம் பார்க்கவில்லை? எனவே, பிபிசி ஆவணப்படம் வெளியான நேரம் எதிர்பாராமல் நடந்தது என்று நினைக்கிறீர்களா?.

    ஒன்றை மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியாவிலும் டெல்லியிலும் தேர்தல் சீசன் தொடங்கிவிட்டதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் தேர்தல் காலம் தொடங்கிவிட்டது. அரசியல் களத்திற்கு வர தைரியமில்லாதவர்களால் விளையாடப்படும் அரசியல் இது. இதை கொண்டாடுபவர்கள் யார் என்று பாருங்கள். இந்தியா, இந்திய அரசு, பாஜக, பிரதமர் மீது தீவிரவாத தன்மை கொண்ட பார்வையை வடிவமைக்கும் வேலை சிறிது சிறிதாக நடைபெறுகிறது. இது 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது
    • மத்திய அமைப்புகள் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    சென்னை:

    டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி. ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினார்கள். அலுவலகத்துக்குள் சென்ற அதிகாரிகள் முதலில் ஊழியர்களின் செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்துவிட்டு விசாரணை நடத்தி உள்ளனர். வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. நாளையும் சோதனை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தவண்ணம் உள்ளனர்.

    பிபிசி அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    'எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும் சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருபவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்' என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • பி.பி.சி. ஆவணப்படத்துக்கு தடை விதித்தது தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
    • 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயிலுக்கு தீ வைத்ததில் கரசேவகர்கள் பலர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு பிறகு குஜராத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள்.

    இதற்கிடையே குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் மோடி தொடர்பாக பிரபல சர்வதேச ஊடகமான பி.பி.சி. ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இரண்டு பாகங்களாக வெளியான ஆவணப்படத்தில் சர்ச்சைக்குரிய மற்றும் உண்மைக்கு மாறான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. ஆவணப்படத்தின் லிங்க்குகளை கொண்ட டுவிட்களும், பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டன. யூடியூபில் இருந்தும் ஆவணப்படம் நீக்கப்பட்டது.

    ஆவணப்படம் மீதான மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, மூத்த பத்திரிகையாளர் என்.ராம், வக்கீல் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது.

    அப்போது பி.பி.சி. ஆவணப்படத்துக்கு தடை விதித்தது தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். அதில் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பின்னர் வழக்கு விசாரணை ஏப்ரலுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • ஆவணப்படத்தை பகிர்வதை தடுக்கும்படி சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
    • சில குழுக்களுக்கு ஆதரவாக மற்றொரு தரப்புக்கு எதிரான கருவியாக பிபிசி செயல்பட்டது.

    மாஸ்கோ:

    குஜராத் கலவரத்தில் இந்திய பிரதமர் மோடியை தொடர்புபடுத்தியும், மத்திய அரசின் செயல்பாடுகளை மையப்படுத்தியும் பிபிசி ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்திற்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஆவணப்படத்தை இந்தியாவில் சமூகவலைதளங்கள் மூலம் பகிர்வதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் தடையை மீறி ஆவணப்படங்கள் திரையிடப்படுகின்றன.

    இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து பிபிசி எடுத்துள்ள ஆவணப்படம் குறித்து ரஷியா கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவித்துள்ள ரஷிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மரியா சகரோவா, சுதந்திரமான கொள்கைகளை கொண்டுள்ள ரஷியா மட்டுமின்றி சக்திவாய்ந்த பிற உலக நாடுகளுக்கு எதிராக பிபிசி தகவல் போர் நடத்துகிறது என்பதற்கான மற்றொரு ஆதாரம் இது. சில ஆண்டுகளுக்கு பின், இங்கிலாந்து அரசாங்கத்துடனும் பிபிசி சண்டையிட்டது என்பது தெரியவந்தது. சில குழுக்களுக்கு ஆதரவாக மற்றொரு தரப்புக்கு எதிரான கருவியாக பிபிசி செயல்பட்டது. பிபிசி-க்கு அதற்கேற்ப பதிலடி கொடுக்க வேண்டும்' என்றார்.

    • ஆவணப்படம் காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.
    • நீதித்துறையின் தீர்ப்புகளை விட ஒரு ஆவணப்படத்தை மக்கள் சிலர் நம்புவதாக கேரள கவர்னர் தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    2002-ம் ஆண்டு குஜராத்தில் மதக்கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானார்.

    இந்நிலையில், குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடிக்கான கேள்விகள், என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.

    ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது. இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு தடை விதித்தது.

    ஆனால், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழங்களில் தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. தடையை மீறி பல்கலைக்கழங்களில் ஒளிபரப்பப்படும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிடுவதில் இருந்து தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிபிசி ஆவணப்படம் குறித்து கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கவர்னர் ஆரிப், 'உலகம் முழுவதும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால், இந்த மக்கள் (பிபிசி செய்தி நிறுவனம்) மிகவும் கவலைப்படுகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சியின் அட்டூழியங்கள் குறித்து பிபிசி ஏன் ஆவணப்படம் எடுக்கவில்லை?. நமது மக்களில் சிலரை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். ஏனென்றால் நீதித்துறையின் தீர்ப்புகளை விட ஒரு ஆவணப்படத்தை அவர்கள் நம்புகின்றனர்' என்றார்.

    ''ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள தருணம் இது. ஆவணப்படத்தை வெளியிட ஏன் இந்த குறிப்பிட்ட தருணம் தேர்ந்தெடுக்கப்பட்டது? குறிப்பாக, நமது சுதந்திரத்தின் போது, இந்தியாவால் அதன் சுதந்திரம், ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது, இந்தியா துண்டு துண்டாக உடைந்து விடும் என்று கணித்தவர்களிடம் இருந்து இந்த முயற்சி வந்துள்ளது'' என்றும் கேரள ஆளுநர் கூறினார்.

    • தமிழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் திருவாரூர் மத்திய தமிழ் பல்கலைக்கழகத்தில் திரையிட்டனர்.
    • சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பி.பி.சி. ஆவணப்படத்தை வெளியிட மாணவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

    சென்னை:

    2002-ம் ஆண்டு நடந்த குஜராத் இனப்படுகொலை குறித்து பி.பி.சி. நிறுவனம் ஆவணப்படம் தயாரித்து உள்ளது. இதனை உலகளவில் பி.பி.சி. வெளியிட்டு உள்ளது. கூகுள் இணையதளத்திலும் வெளியிட்டு உள்ளது.

    இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் மாணவர் அமைப்பினர் குஜராத் ஆவணப்படத்தை கல்லூரிகளில் வெளியிட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் பொது இடங்களில் திரையிட்டு வருகிறார்கள்.

    பி.பி.சி. தயாரித்த ஆவணப்படத்தை வெளியிட தடை செய்யப்பட்டது. ஆனாலும் மாணவர்கள் பொது இடங்கள், கல்லூரி வளாகம், வீதிகளில் ஒளிபரப்பி வருகின்றனர். மேலும் லேப்டாப் வழியாக மாணவ-மாணவிகள் இடையே பரப்பி வருகிறார்கள்.

    தமிழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் திருவாரூர் மத்திய தமிழ் பல்கலைக்கழகத்தில் திரையிட்டனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரியிலும் வெளியிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    சென்னை மாநில கல்லூரி விடுதியிலும், பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரி, எம்.சி. ராஜா, கல்லூரி விடுதி உள்ளிட்ட இடங்களிலும் ஆவணப்படத்தை மாணவர்கள் வெளியிட முயற்சிக்கின்றனர்.

    சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பி.பி.சி. ஆவணப்படத்தை வெளியிட மாணவர்கள் திட்டமிட்டு இருந்தனர். இதற்கு பல்கலைக்கழகம் தடை விதித்து உள்ளது. ஆனாலும் பல்கலைக்கழக வளாகம் அல்லது சுவற்றில் ஆவணப்படத்தை வெளியிட முயற்சி செய்வதில் மாணவ அமைப்பினர் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    • ஆவணப்படம் தொடர்பான லிங்க்குகளுடன் பகிரப்பட்ட ட்வீட்களை நீக்கவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
    • மக்களை பயமுறுத்தினாலும் உண்மை வெளிவருவதைத் தடுக்க முடியாது என ராகுல் காந்தி பேச்சு

    திருவனந்தபுரம்:

    கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தோடு, அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி பிபிசி ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. 'இந்தியா: மோடிக்கான கேள்விகள்' எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், ''இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்தியாவின் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையே இருக்கும் பதற்றங்களை பாருங்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட 2002 குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு உள்ள பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், ஆவணப்படத்தை டுவிட்டர் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட தடை விதித்துள்ளது. மேலும் ஆவணப்படம் தொடர்பான லிங்க்குகளுடன் பகிரப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ட்வீட்களை நீக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ், இன்று அந்த ஆவணப்படத்தை கேரளாவில் மக்களுக்கு திரையிட்டு காட்டி உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள சங்குமுகம் கடற்கரையில், மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று இரவு ஆவணப்படம் திரையிடப்பட்டது.

    ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்தாலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான டெல்லி, தெலுங்கனா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ சார்பில் சண்டிகரில் திரையிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கேரளாவில் இன்று திரையிடப்பட்டிருக்கிறது.

    இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆவணப்படம் மீதான தடை குறித்து கேள்வி எழுப்பினார். "உண்மை பிரகாசமாக ஒளிர்கிறது. தடையோ, அடக்குமுறை மற்றும் மக்களை பயமுறுத்தினாலும் உண்மை வெளிவருவதைத் தடுக்க முடியாது" என்றார் ராகுல் காந்தி.

    கேரளாவில், மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் கே.அந்தோணி, காங்கிரசின் நிலைப்பாட்டை மீறி, ஆவணப்படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய நிர்வாக அமைப்புகள் குறித்து பி.பி.சி. நீண்ட காலமாகவே தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.
    • ஏ.கே. அந்தோணி மகன் அனில் தெரிவித்துள்ள கருத்துக்கள் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குஜராத் மாநில முதலமைச்சராக பிரதமர் மோடி பதவி வகித்த போது கடந்த 2002-ம் ஆண்டு அங்கு கலவரம் நடந்தது. இந்த கலவரம் தொடர்பாக மறு விசாரணை செய்துள்ளதாக கூறி பி.பி.சி., 2 பாகங்கள் கொண்ட ஆவணப்படம் தயாரித்து உள்ளது. இதன் முதல் பாகம் சமீபத்தில் வெளியானது.

    இதில் கூறப்பட்ட தகவல்கள் தவறானவை என்று அந்த ஆவணப்படம் வெளியான யூ டியூப் மற்றும் டிவிட்டர் பதிவுகளை மத்திய அரசு தடை செய்தது.

    மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் பி.பி.சி. ஆவண படங்களை மக்களுக்கு திரையிட்டு காட்டப்போவதாகவும் அறிவித்தன.

    அதன்படி கேரளாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பல இடங்களில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர். இதுபோல இளைஞர் காங்கிரசாரும் திருவனந்தபுரம், எர்ணா குளம், பாலக்காடு பகுதிகளில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர்.

    இந்தியாவில் பி.பி.சி. ஆவணப்படம் திரையிடப்படுவதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாரதிய ஜனதா கட்சியுடன் எனக்கு மிகப்பெரும் கருத்து வேறுபாடுகள் உள்ளது.

    ஆனால் இந்திய நிர்வாக அமைப்புகள் குறித்து பி.பி.சி. நீண்ட காலமாகவே தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

    இத்தகைய எண்ணம் கொண்ட பி.பி.சி. தயாரித்த ஆவணப்படத்தையும், அவர்கள் தெரிவித்து இருக்கும் கருத்தையும் ஆதரிப்பது தேச இறையாண்மைக்கு எதிராக அமையும்.

    இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    ஏ.கே. அந்தோணி மகன் அனில் தெரிவித்துள்ள கருத்துக்கள் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட சில எதிர்க்கட்சித் தலைவர்களின் ட்வீட்களை டுவிட்டர் நீக்கியது.
    • காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதை இந்த ஆவணப்படம் காட்டுவதாக மத்திய அரசு கண்டனம்

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி குறித்து பிபிசி சேனல் தயாரித்துள்ள குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை டுவிட்டர் மற்றும் யூடியூபில் வெளியிட மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. மேலும் ஆவணப்படம் தொடர்பான லிங்க்குகளுடன் பகிரப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ட்வீட்களை நீக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    ஆவணப்படத்தை யாரேனும் மீண்டும் பதிவேற்றினாலோ அல்லது ட்வீட் செய்தாலோ அதன் புதிய லிங்க்குகளை நீக்குமாறு யூடியூப் மற்றும் ட்விட்டரிடம் மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மத்திய அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட சில எதிர்க்கட்சித் தலைவர்களின் ட்வீட்களை டுவிட்டர் நீக்கியது.

    இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள பிரையன், 'பிபிசி ஆவணப்படத்தின் எனது ட்வீட்டை ட்விட்டர் நீக்கியுள்ளது. லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது. ஒரு மணி நேர பிபிசி ஆவணப்படம், சிறுபான்மையினரை பிரதமர் எப்படி வெறுக்கிறார் என்பதை அம்பலப்படுத்துகிறது' என கூறியுள்ளார்.

    கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தோடு, அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி பிபிசி இந்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. 'இந்தியா: மோடிக்கான கேள்விகள்' எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், ''இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்தியாவின் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையே இருக்கும் பதற்றங்களை பாருங்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட 2002 குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு உள்ள பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ''இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை தயாரித்த நிறுவனத்தை இது பிரதிபலிக்கிறது. ஒரு சார்பான ஆவணப்படம் இது. காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதை இது காட்டுகிறது. இந்த ஆவணப்படம் கண்ணியமானது அல்ல'' என விமர்சித்துள்ளார்.

    குஜராத்தில் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், குஜராத் கலவரத்தின்போது முதல்வராக இருந்த பிரதமர் மோடி எந்த தவறும் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது.
    • இதுதொடர்பான சர்ச்சையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இங்கிலாந்து பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது குஜராத் முதல் மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார்.

    இதற்கிடையே லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற தலைப்பில் 2 பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது. முதல் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பானது. அதில், குஜராத் கலவரத்தில் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது இங்கிலாந்து அரசுக்கு தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. 2-வது பகுதி 23-ம் தேதி ஒலிபரப்பாகிறது.

    இந்நிலையில், இந்த ஆவணப்படத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:

    பி.பி.சி. ஆவணப்படம் அடிப்படையற்ற ஒன்றை முன்னிறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட பிரசார படம். அதில் பாரபட்சமும், தொடரும் காலனி ஆதிக்க மனப்பான்மையும் அப்பட்டமாகத் தெரிகிறது.

    இந்தப் பிரச்சினையை மீண்டும் கிளற விரும்புபவர்களின் வெளிப்பாடாக அப்படம் தோன்றுகிறது. அதன் நோக்கமும், அதற்கு பின்னால் உள்ள செயல்திட்டமும் நமக்கு வியப்பளிக்கிறது என தெரிவித்தார்.

    இந்த சர்ச்சையில் பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    ×