search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குத்தி கொலை"

    • மதுபோதையில் நண்பர்கள் வெறிச்செயல்
    • போலீசார் 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையத்தை சேர்ந்தவர் ஹக்கீம் (வயது 38). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான மீனாங்கரை ரோட்டை சேர்ந்த அல்பாரூக் (47), இந்திரா நகர் காலனியை சேர்ந்த முருகேசன் (43),குமாரபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (48) ஆகியோருடன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஜாலியாக மது குடித்தனர்.

    போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த அல்பாரூக், முருகேசன், செந்தில்குமார் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து சாவியால் ஹக்கீமின் முகம் மற்றும் கழுத்தில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். பின்னர் 3 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஹக்கீமை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஹக்கீமை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை சாவியால் குத்திக்கொலை செய்த அல்பாரூக், முருகேசன், செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • திருமண விழாவில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம்
    • பாறசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளையை அடுத்த பாறசாலை இஞ்சிவிளை பகுதியை சேர்ந்தவர் ரென்ஜித் ( வயது 40).

    இவரது நண்பர்கள் விபின், றிஜூ , ரெஜி. நேற்று காலை நண்பர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமணவீட்டிற்கு சென்றனர். திருமணம் முடிந்து நண்பர்கள் சேர்ந்து மது விருந்து நடத்தினர். அப்போது நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அக்கம்பக்கத்தினர் சமரசம் செய்தனர்.

    இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து நண்பர்கள் அந்த இடத்தை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். ரென்ஜித் மது போதையில் வீட்டிற்கு சென்று படுத்து தூங்கியுள்ளார். அவரது நண்பர்களான விபின், றிஜூ , ரெஜி ஆகியோர் மீண்டும் மது அருந்தியுள்ளனர்.

    மது போதையில் ரென்ஜித் வீட்டிற்கு சென்று 3 பேரும் சேர்ந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றவே 3 பேரும் சேர்ந்து ரென்ஜித்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். பதிலுக்கு ரென்ஜித்தும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் 3 பேரும் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் ரென்ஜித் தலையில் தாக்கியதோடு, அவரது கழுத்திலும் குத்தினர். இதில் ரென்ஜித் படுகாயமடைந்தார். அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.

    அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் அந்த இடத்திற்கு ஓடி வந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த உடன் 3 பேரும் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து அக்கம்பக்கத்தினர் பாறசாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது படுகாயமடைந்த ரென்ஜித் இறந்த நிலையில் காணப்பட்டார். மேலும் போலீசார் ரென்ஜித் உடலை மீட்டுஉடல் கூறு ஆய்விற்கு பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

    மேலும் நண்பர்கள் இடையே மாறி மாறி தாக்கியதில் விபின் தலையிலும் காயம் ஏற்ப்பட்டுள்ளது. அவர் பாறசாலை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பாறசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து ரெஜூ, றஜி யை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் இடையே மது போதையில் நடந்த கொலை சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×