என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழித்தேரோட்டம்"

    • கடந்த மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    திருவாரூர்:

    சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கிய திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும், தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 87-வது தலமாகவும் விளங்குகிறது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசை யாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    பின்னர், கொடிமரத்திற்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அஜபா நடனத்துடன் தியாகராஜர் கோவிலில் இருந்து புறப்பட்டு, தேரில் எழுந்தருளினார்.

    பின்னர், இன்று காலை பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன், போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர், முருகன் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஆழித்தேரோட்டத்தை தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் இழுக்கப்பட்டன.

    ஆழித்தேரில் சுமார் 425 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு இருந்த 4 வடங்களை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா.. தியாகேசா... பக்தி கோஷம் விண்ணதிர பிடித்து இழுத்து சென்றனர்.

    தேரின் முன்பாக சிவனடியார்கள் பஞ்ச வாத்தியங்களை இசைத்தவாறும், தேவார திருமுறைகள் ஓதியவாறும் வீதிஉலா சென்றனர். ஆழித்தேரானது கீழ வீதியில் இருந்து புறப்பட்டு, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக இழுத்து வரப்பட்டு மாலை நிலையை அடையும்.

    ஆழித்தேரோட்டதை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட் தலைமையில், 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 17 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 50 இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினர், நடமாடும் மருத்துவ குழுவினர் உள்ளிட்டோரும் தயார் நிலையில் இருந்தனர்.

    மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடை பெறுவதால் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, அதுகுறித்து மாவட்ட போலீஸ் துறை சார்பில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    ஆழித்தேரோட்டதை யொட்டி மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார். பங்குனி உத்திர விழாவின் சிகர நிகழ்வை காண டெல்டா மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டது.

    • பங்குனி உத்திர திருவிழாவின் போது ஆழித்தேரோட்டம் நடைபெறுவதுண்டு.
    • பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் ஆழித்தே ரோட்டம் நடைபெறவில்லை.

    திருவாரூர் தியாராஜர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் போது முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் நடைபெறுவதுண்டு.


    இந்த விழாவிற்காக மாசி மாதத்தில் வரும் அஸ்த நட்சத்திரத்தில் கோவிலில் கொடியேற்றப்பட்டு, பங்குனி மாதத்தில் வரும் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடத்த வேண்டும் என்பது ஆகமவிதி.

    ஆனால், பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் ஆயில்ய நட்சத்திரத்தன்று ஆழித்தே ரோட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகமவிதியை கடைபிடித்து ஆரூரானுக்கு ஆயில்யத்தன்று தான் தேரோட்டம் நடத்த வேண்டும் என்ற பக்தர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.


    30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021-ம் ஆண்டு ஆயில்ய நட்சத்திர தினத்தன்று ஆழித்தேரோட்டம் நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளிலும், முறையே, கடந்த ஆண்டு (2024) நடந்த பங்குனி திருவிழாவின் போது ஆயில்ய நட்சத்திர தினத்தன்று தான் தேரோட்டம் நடந்தது.

    அதே போல், இந்த ஆண்டும் தொடர்ந்து 5-வது முறையாக ஆயில்ய நட்சத்திரம் வரும் அதே நாளான வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) ஆழித்தேர் திருவிழா நடைபெற உள்ளது. இது சிவபக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏப்ரல் 1-ந்தேதி ஆழி தேரோட்டம் நடைபெறுகிறது.
    • ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.

    திருவாரூர்திருவாரூர் ஆழி தேரோட்ட விழா வரும் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக திருவாரூர் தியாகராஜர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோவிலாகும். சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்படுகிறது.

    மிக பிரமாண்டமான ஆழித்தேரின் தியாகராஜா சுவாமி வீற்றிருக்க 4 வீதிகளில் வீதியுலா வரும் அழகும் காண்போர் வியக்கதக்கது. ஆழித்தேர் திருவிழா அஸ்த நட்சத்திரத்தில் கொடியேறி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் திருவிழா நடத்த வேண்டும் என்பது ஆகம விதியாக கருதப்படுகிறது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி ஆயில்ய நட்சத்திரம் வருவதை ஒட்டி அன்றைய தினம் தேரோட்டம் நடைபெற உள்ளது.

    அதை முன்னிட்டு இன்று திருவாரூர் தியாகராஜர் கோவிலின் பங்குனி உத்திரவிழாவுக்கான பந்தகால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. இதில் கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க பங்குனி உத்திர பெருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தத்தை செய்து வைத்தனர்.

    • திருவாரூர் நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது.
    • அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடிக்கப்படுகிறது.

    திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் ஆழித்தேர், ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை பெற்றது.

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழாவையொட்டி ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் ஆழித்தேர், திருவாரூர் நகர வீதிகளில் அசைந்தாடி வரும் அழகு காண்போரின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும்.

    ஆழித்தேரை சீராக இயக்க திருச்சி பாய்லர் ஆலை நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டுள்ளது.

    ஆழித்தேரின் முன்பகுதியில் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 300 டன்னாக இருக்கும். திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேேராட்டம் இன்று(சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு வடம் பிடிக்கப்பட்டு தொடங்குகிறது.

    அத்துடன் அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு ஆழித்தேரின் முன்பு இந்த தேர்கள் கொண்டு வந்து நிறுத்தப்படும்.

    ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் நகராட்சி மூலம் பக்தர்கள் வசதிக்காக நகரின் முக்கிய இடங்கள் மற்றும் தேரோடும் வீதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வசதி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் நிரந்தர மற்றும் தற்காலிக கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.தேரோடும் வீதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு வாகனம் தேருக்கு பின்னால் தொடர தயார் நிலையில் உள்ளது. இதேபோல 108 ஆம்புலன்ஸ் வாகனம், நடமாடும் மருத்துவ வாகனம் போன்றவை தேரை பின் தொடர்ந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆழித்தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சங்கிலி பறிப்பு, திருட்டு போன்றவற்றை தடுக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனா். மேலும் அசம்பாவிதங்களை தவிா்க்க 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக பெரிய தேருக்கு மட்டுமே 60 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    ஆழித்தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் மொத்தம் 30 பேர் ஈடுபட உள்ளனர். முட்டுக்கட்டைகளை சரக்குவேன் அல்லது டிராக்டரில் தேருக்கு பின்னால் தொடர்ந்து எடுத்து வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேரை நான்கு வீதிகளிலும் திருப்புவதற்கான இடங்களை அதிகாரிகள் குறித்து வைத்து உள்ளனா்.

    தற்போது ஆழித்தேர் பணிகள் முழுவதும் முடிந்து தேர் அழகாகவும், கம்பீரமாகவும் காட்சி அளிக்கிறது.

    தேரோட்டத்தையொட்டி ஏராளமானோர் திருவாரூரில் தரைக்கடைகள் அமைத்து உள்ளனா். லட்சக்கணக்கானோர் ஆழித்தேரோட்டத்தை காண வருகை தருவார்கள் என்பதால் திருவாரூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் பல்வேறு துறையினர் செய்து வருகின்றனர்.

    • ஆரூரா.. தியாகேசா.. கோஷம் விண்ணை பிளந்தது
    • ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு.

    திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர விழா கடந்த மாதம் (மார்ச்) 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் இன்று காலை நடந்தது.

    ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. ஆழித்தேரோட்ட விழாவை அப்பர் சுவாமிகளே நடத்துவதாக ஐதீகம். மேலும், பல்வேறு பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

    தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று இரவு அஜபா நடனத்துடன் கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, இன்று காலை 5.30 மணிக்கு விநாயகர், முருகன் தேரோட்டம் நடைபெற்றது. அடுத்ததாக, காலை 7.30 மணிக்கு ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டது.

    கலெக்டர் சாருஸ்ரீ, செல்வராஜ் எம்.பி., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர்.

    அதனை தொடர்ந்து பச்சைக்கொடி காட்டியவுடன் ஆரூரா.. தியாகேசா... என விண்ணை பிளக்க முழக்கமிட்டபடி லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

    திருவாரூர் நிலையடியில் இருந்து புறப்பட்ட தேர் கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது.

    இந்த அழகை காண திருவாரூர், தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரின் அழகை கண்டு ரசித்தனர். இதனைத் தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் தேரோட்டமும் நடந்தது.

    இன்று மாலையில் ஆழித்தேர் மீண்டும் நிலையை வந்தடையும்.

    தேரோட்டத்தை முன்னிட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம், நடமாடும் மருத்துவ வாகனத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழு தேரை பின்தொடர்ந்து சென்றது. பக்தர்கள் வசதிக்காக நகரின் முக்கிய இடங்கள் மற்றும் தேரோடும் வீதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்காலிக கழிவறைகளும் ஏற்படுத்தப்பட்டன. 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆழித்தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டது.

    • ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.
    • ஆழித்தேரோட்ட விழாவில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவாரூர்:

    திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.

    இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த பிப்ரவரி 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று 21-ந்தேதி நடைபெற்றது.

    பிரசித்தி பெற்ற இந்த திருவாரூர் தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய தேராகும். இந்த தேரின் நிலை பீடம் 30 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்டது. நான்கு ராட்சத இரும்பு சக்கரங்களுடன் இதன் எடை 220 டன்னாக இருக்கிறது. இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த தேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணியும் அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம் அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் இந்த தேர் கட்டப்பட்டு துணியால் அலங்கரிக்கப்பட்டு குதிரைகள் பூட்டப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை 300 டன் ஆகும். முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருளினார்.

    இந்த ஆழித்தேரோட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் ஆரூரா! தியாகேசா!! என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தியாகராஜர் கோவிலின் கீழவீதியில் தொடங்கும் இந்த தேரோட்டம் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி என சுற்றி வந்து இன்று மாலை மீண்டும் நிலையடிக்கு தேர் வந்து சேரும். பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேரோட்டத்திற்கு முன்பு முருகர் தேர், விநாயகர் தேர் இழுத்து செல்லப்பட்டது.

    ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய தேர்களும் இழுத்து செல்லப்பட்டன. மொத்தம் 5 தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக வீதியில் அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த தேரோட்டத்தின்போது தேரை நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் 500 முட்டுக்கட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த முட்டுக்கட்டைகள் புளிய மரக்கட்டையில் செய்யப்படுகிறது.

    உலகப் புகழ்பெற்ற இந்த ஆழித்தேரோட்டத்தை பார்ப்பதற்காக லட்ச க்கணக்கான பொதுமக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்துள்ளனர். மக்கள் அதிகம் கூடுவதால் அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையின் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது. தேரோட்டத்தில் போக்குவரத்தை சீர் செய்தல், அசம்பாவிதங்கள் மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகள் நடைபெறாத வகையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ×