என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று நடக்கிறது
- திருவாரூர் நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது.
- அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடிக்கப்படுகிறது.
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் ஆழித்தேர், ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை பெற்றது.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழாவையொட்டி ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் ஆழித்தேர், திருவாரூர் நகர வீதிகளில் அசைந்தாடி வரும் அழகு காண்போரின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும்.
ஆழித்தேரை சீராக இயக்க திருச்சி பாய்லர் ஆலை நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டுள்ளது.
ஆழித்தேரின் முன்பகுதியில் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 300 டன்னாக இருக்கும். திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேேராட்டம் இன்று(சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு வடம் பிடிக்கப்பட்டு தொடங்குகிறது.
அத்துடன் அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு ஆழித்தேரின் முன்பு இந்த தேர்கள் கொண்டு வந்து நிறுத்தப்படும்.
ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் நகராட்சி மூலம் பக்தர்கள் வசதிக்காக நகரின் முக்கிய இடங்கள் மற்றும் தேரோடும் வீதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வசதி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் நிரந்தர மற்றும் தற்காலிக கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.தேரோடும் வீதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு வாகனம் தேருக்கு பின்னால் தொடர தயார் நிலையில் உள்ளது. இதேபோல 108 ஆம்புலன்ஸ் வாகனம், நடமாடும் மருத்துவ வாகனம் போன்றவை தேரை பின் தொடர்ந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆழித்தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சங்கிலி பறிப்பு, திருட்டு போன்றவற்றை தடுக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனா். மேலும் அசம்பாவிதங்களை தவிா்க்க 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக பெரிய தேருக்கு மட்டுமே 60 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஆழித்தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் மொத்தம் 30 பேர் ஈடுபட உள்ளனர். முட்டுக்கட்டைகளை சரக்குவேன் அல்லது டிராக்டரில் தேருக்கு பின்னால் தொடர்ந்து எடுத்து வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேரை நான்கு வீதிகளிலும் திருப்புவதற்கான இடங்களை அதிகாரிகள் குறித்து வைத்து உள்ளனா்.
தற்போது ஆழித்தேர் பணிகள் முழுவதும் முடிந்து தேர் அழகாகவும், கம்பீரமாகவும் காட்சி அளிக்கிறது.
தேரோட்டத்தையொட்டி ஏராளமானோர் திருவாரூரில் தரைக்கடைகள் அமைத்து உள்ளனா். லட்சக்கணக்கானோர் ஆழித்தேரோட்டத்தை காண வருகை தருவார்கள் என்பதால் திருவாரூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் பல்வேறு துறையினர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்