என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
- ஆரூரா.. தியாகேசா.. கோஷம் விண்ணை பிளந்தது
- ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு.
திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர விழா கடந்த மாதம் (மார்ச்) 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் இன்று காலை நடந்தது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. ஆழித்தேரோட்ட விழாவை அப்பர் சுவாமிகளே நடத்துவதாக ஐதீகம். மேலும், பல்வேறு பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று இரவு அஜபா நடனத்துடன் கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, இன்று காலை 5.30 மணிக்கு விநாயகர், முருகன் தேரோட்டம் நடைபெற்றது. அடுத்ததாக, காலை 7.30 மணிக்கு ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டது.
கலெக்டர் சாருஸ்ரீ, செல்வராஜ் எம்.பி., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர்.
அதனை தொடர்ந்து பச்சைக்கொடி காட்டியவுடன் ஆரூரா.. தியாகேசா... என விண்ணை பிளக்க முழக்கமிட்டபடி லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.
திருவாரூர் நிலையடியில் இருந்து புறப்பட்ட தேர் கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது.
இந்த அழகை காண திருவாரூர், தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரின் அழகை கண்டு ரசித்தனர். இதனைத் தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் தேரோட்டமும் நடந்தது.
இன்று மாலையில் ஆழித்தேர் மீண்டும் நிலையை வந்தடையும்.
தேரோட்டத்தை முன்னிட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம், நடமாடும் மருத்துவ வாகனத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழு தேரை பின்தொடர்ந்து சென்றது. பக்தர்கள் வசதிக்காக நகரின் முக்கிய இடங்கள் மற்றும் தேரோடும் வீதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்காலிக கழிவறைகளும் ஏற்படுத்தப்பட்டன. 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆழித்தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்