என் மலர்
நீங்கள் தேடியது "உடல் அடக்கம்"
- சிகிச்சை பலனின்றி இரண்டு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
- சமூக சேவகர் தமிழ்செல்வன், சந்திரசேகர் ஆகியோர் சடலத்திற்க்கு இறுதி மரியாதை செலுத்தி அடக்கம் செய்தனர்.
தருமபுரி,
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள வெலக்கல்நத்தத்தில் கடந்த சில மாதங்களாக 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சாலை ஓரத்தில் இருந்து வந்துள்ளார்.
மாலை நேரத்தில் சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்ட காவல்துறையினர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி இரண்டு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணை பற்றி காவல்துறையினர் விசாரித்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் அவரை தேடி எந்த உறவினர்களும் வராத சூழ்நிலையில் தருமபுரி அமரர் சேவை மூலம் இறந்த பெண்ணின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
நாட்றம்பள்ளி போலீஸ் மதி, மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் அருணாசலம், சமூக சேவகர் தமிழ்செல்வன், சந்திரசேகர் ஆகியோர் சடலத்திற்க்கு இறுதி மரியாதை செலுத்தி அடக்கம் செய்தனர். தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 40 ஆதரவற்ற சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
- நேற்று காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.
- 21 குண்டுகள் முழங்க காவலர் விஜயன் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த சங்கிலிவாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார்.
தற்பொழுது சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட விஜயனுக்கு ஐந்து மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
தற்பொழுது சென்னை ஆலந்தூர், கண்ணன் காலனி,5-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு தனது மைத்துனர் வாசுதேவன் என்பவருடன் பழவந்தாங்கல் மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது ஆலந்தூர் கண்ணன் காலனி மைதானத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் விஜயன் உயிரிழந்தார்.
இதுகுறித்து பரங்கிமலை காவல் துறையினர் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து காவலரை தாக்கிய அஜித், வினோத், விவேக் ரவிகுமார் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இறந்த காவலர் விஜயன் உடலை சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த சங்கிலிவாடி கிராமத்திற்கு நேற்று காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.
இதனை தொடர்ந்து இறுதி ஊர்வலமாக எடுத்துச் சென்று மயானத்தில் காவல்துறையில் முழு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க காவலர் விஜயன் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மூன்றாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய விஜயன் 5 மாத கைக்கு குழந்தையுடன் மனைவியை விட்டு சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் காவலர் விஜயனை இழந்ததால், கிராமம் முழுவதும் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளது.
- மோப்பநாய் ராஜாவுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
- முதுமலையில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.
சூலூர்:
கோவை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 7 மோப்ப நாய்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாய்கள் கொலை, கொள்ளை, வெடிகுண்டு கண்டுபிடிப்பு ஆகிய சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் கடந்த 3 ஆண்டுகளாக லேப்ரடார் வகையை சேர்ந்த ராஜா என்ற மோப்பநாய் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த மோப்ப நாய் கடந்த ஒருவார காலமாக உடல் சரியில்லாமல் இருந்து வந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தது. உயிரிழந்த மோப்ப நாய்க்கு கோவை மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி. தென்னரசு தலைமையில் இறுதி சடங்கு நடந்தது.
அப்போது மோப்பநாய் ராஜாவுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சூலூர் போலீஸ் நிலையத்தில் உள்ள துப்பறியும் மோப்ப நாய் பிரிவு வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த மோப்ப நாய் ராஜா சென்னையில் நடந்த சுதந்திர தின விழா, நீலகிரி மாவட்டம் முதுமலையில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.
- பிலடெல்பியாவின் ரீடிங் பகுதியில் பிக்பாக்கெட் செய்து பிடிப்பட்ட நபர் 1895-ம் ஆண்டு சிறையில் சிறுநீரக செயலிழப்பால் இறந்தார்.
- உடல் 128 ஆண்டுகளாக ரீடிங் பகுதியில் உள்ள ஆமன் தேவாலயத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் பென்சில் வெனியா மாகாணத்தில் எம்பாமிங் செய்து பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டு வந்த உடல் சுமார் 128 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பிலடெல்பியாவின் ரீடிங் பகுதியில் பிக்பாக்கெட் செய்து பிடிப்பட்ட நபர் 1895-ம் ஆண்டு சிறையில் சிறுநீரக செயலிழப்பால் இறந்தார்.
அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்ட போது தனது உண்மையான பெயரை கூறாமல் ஜேம்ஸ் மர்பி என்று பதிவு செய்திருந்தார். அவரது உடலை யாரும் வாங்கி செல்ல வரவில்லை.
இதையடுத்து அவரது உடலை உரியவர்கள் பெற்று கொள்ளும் வரை எம்பாமிங் நுட்பங்களை பயன்படுத்தி மம்மியாக மாற்றினர். அந்த உடலை பதப்படுத்தி பாதுகாத்து வந்தனர்.
அவருக்கு ஸ்டோன்மேன் வில்லி என்று பெயரிடப்பட்டது. அவரது உடல் 128 ஆண்டுகளாக ரீடிங் பகுதியில் உள்ள ஆமன் தேவாலயத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.
இந்தநிலையில் கைதியின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் படி ஸ்டோன்மேன் வில்லி உடல் அங்குள்ள பாரெஸ்ட் ஹில்ஸ் மெமோரியல் பூங்காவில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக ஸ்டோன்மேன் வில்லி, ஐரிஷ் வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், அவர் நியூயார்க்கில் வசித்ததும், மதுவுக்கு அடிமையானவர் என்பதையும் கண்டு பிடித்தனர்.
அவரது தந்தை ஒரு பணக்கார தொழில் அதிபர் ஆவார். தான் திருட்டு வழக்கில் சிக்கியதால் தந்தை பெயரை கொடுக்க விரும்பாததால் தனது உண்மையான பெயரை கூறாமல் போலி பெயரை பயன்படுத்தினார் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
- ராணுவ முகாமில் வேலைபார்த்து வந்த ஜெய்ஜவான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.
- உடலுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றுகூடி மரியாதை செலுத்தினர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே சங்கராபுரத்தை சேர்ந்தவர் சின்னராஜ் மகன் ஜெய்ஜவான்(41). இவர் ராணுவத்தில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி(31) என்ற மனைவியும், ருத்ரன்(4) என்ற மகனும், பிரியதர்சினி(8) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 22 ஆண்டுகளாக காஷ்மீரில் பணிபுரிந்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் விடுமுறைமுடிந்து அருணாசலபிரதேசத்திற்கு பணிமாறுதலில் சென்றார். அங்கு உள்ள ராணுவ முகாமில் வேலைபார்த்து வந்த ஜெய்ஜவான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ராணுவ அதிகாரிகள் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் போடி சங்கராபுரத்திற்கு கொணடுவரப்பட்டது. இன்று காலை ஜெய்ஜவான் உடலுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றுகூடி மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
- போலீசாரும் வேறு வழியில்லாமல் விஷ்ணு பிரசாத் உடலை தாங்களே இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்தனர்.
- விஷ்ணு பிரசாத் தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது அவரை அடித்துக் கொன்றார்களா? என்பதும் தெரியவில்லை.
கர்நாடக மாநில பெங்களூரு கோனனகுண்டே கனகபுரா ரோட்டில், ஆயத்த ஆடை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் பின்பகுதியில் புதர் பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்து சென்ற கோனனகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இறந்து போன வாலிபர் யார்? என்பது முதலில் தெரியாமல் இருந்தது. வாலிபரின் பிணம் கிடந்த இடத்தில் செல்போன் ஒன்று கிடைத்தது. அதனை வைத்து போலீசார் துப்பு துலக்கினர்.
அப்போது பிணமாக கிடந்தவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பிணமாக கிடந்த வாலிபரின் உருவப்படத்தை கோனனகுண்டே போலீசார், கேரளா போலீசாருக்கு அனுப்பிவைத்தனர். இதில் இறந்தவர் கேரளாவை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 37) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரது தாயை கண்டுபிடித்த போலீசார், விஷ்ணு பிரசாத்தின் உடலை அடையாளம் காண வரும்படியும், உடலை பெற்றுச் செல்லும்படியும் கூறினர். ஆனால் தனது மகன் திருடன், அவன் நல்லொழுக்கம் இல்லாதவன், அவனது உடலை பார்க்க வர மாட்டேன் என அவரது தாய் கூறி பிடிவாதம் பிடித்துள்ளார். ஒரு வழியாக அவரை போலீசார் சமாதானப்படுத்தி பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். அவரும் மருத்துவமனை பிணவறையில் வைத்திருந்த உடலை பார்த்து, இது தனது மகன் விஷ்ணு பிரசாத் தான் என அடையாளம் காட்டினார்.
ஆனால் அவரது உடலை சொந்த ஊரான கேரளாவுக்கு எடுத்துச் செல்ல அவர் மறுத்துவிட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் நல்லொழுக்கம் இல்லாமல் திருடி வந்த இவனது உடலை நான் சொந்த ஊர் எடுத்துச் செல்ல மாட்டேன் என திட்டவட்டமாக கூறி அங்கிருந்து தாய் கேரளாவுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
இதனால் போலீசாரும் வேறு வழியில்லாமல் விஷ்ணு பிரசாத் உடலை தாங்களே இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்தனர். மேலும் விஷ்ணு பிரசாத்தின் பின்னணி பற்றி விசாரித்தனர். இதில் அவர் பிரபல திருடன் என்பதும், இவர் மீது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
விஷ்ணு பிரசாத் தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது அவரை அடித்துக் கொன்றார்களா? என்பதும் தெரியவில்லை. அவரது சாவில் மர்மம் இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.