search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயானக்கொள்ளை"

    • நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
    • தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் புகழ்பெற்றதும், பழமைவாய்ந்ததுமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மாசிப்பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சக்தி கரக ஊர்வலமும், மறுநாள் மயானக்கொள்ளை நிகழ்ச்சியும், 12-ந்தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் இரவில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலாவாக வந்து அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அங்காளம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ அம்மன், சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதனைத்தொடர்ந்து பனை, புளி, காட்டுவாகை, சவுக்கு உள்ளிட்ட மரங்களைக்கொண்டு புதிதாக கோவிலின் மேற்கு வாசலில் தேர் வடிவமைக்கப்பட்டது. அந்த தேருக்கு பலவித பூக்களால் ஆன மாலைகள், பனங்குலை, தென்னங்குலை, ஈச்சங்குலை, வாழை மரங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேற்கு வாசலில் இருந்த தேரை வடக்கு வாசலுக்கு இழுத்து வந்து நிறுத்தினர்.

    பின்னர் கோவிலின் உட்பிரகாரத்தில் இருந்த உற்சவ அம்மனை பூசாரிகள் பம்பை, மேள, தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தினர். அதன் பிறகு ஊரின் முக்கிய பிரமுகர்களுக்கு கோவில் சார்பில் மரியாதை செய்தவுடன் அம்மனுக்கும், தேருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கோவிந்தா... அங்காளம்மா... ஈஸ்வரி தாயே என்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேர், பக்தர்களின் வெள்ளத்தில் கோவிலைச்சுற்றி அசைந்தாடியபடி நிலைக்கு வந்தது.

    தேர் சென்ற வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள், தங்கள் வயல்களில் விளைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றையும், சுண்டல், கொழுக்கட்டை, சில்லறை நாணயங்கள் ஆகியவற்றையும் தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

     அதுமட்டுமின்றி சில பக்தர்கள், திருநங்கைகள் பலவித அம்மன் மற்றும் சித்தாங்கு வேடமணிந்தும், கையில் தீச்சட்டி ஏந்தியும், நாக்கு, தாடைகளில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழாவின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் அம்மன், வெள்ளை யானை வாகனத்தில் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    • ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை அன்று அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படும்.
    • ஆடி மாதத்தன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

    ஆண்டு தோறும் ஆடி மாதத்தன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விடும். உடனடியாக அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படும். பிறகு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

    ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை தினத்தன்று அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படும். அந்த அலங்காரத்தில் அம்மனை வழிபடுவது கண்கொள்ளா காட்சி யாக இருக்கும்.

    முன்பெல்லாம் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் நடை அடைக்கப்பட்டு விடுவது உண்டு. ஆனால் ஆடி மாதம் பக்தர்கள் வருகை ஆண்டு தோறும் அதிகரித்தபடி உள்ளது. இதன் காரணமாக மேல்மலையனூர் மேல்தலத்தில் பகலில் நடைசாத்தப்படுவது இல்லை.

    எனவே பக்தர்கள் நாள் முழுக்க அங்காளம்மனை தரிசனம் செய்ய முடிகிறது. நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு இது வசதியாக உள்ளது. இரவு 9 மணி வரை கோவில் திறந்து இருக்கும்.

    அமாவாசை அன்று இரவு முழுவதும் கோவில் திறந்து இருக்கும். ஊஞ்சலில் உற்சவரை காணும் மக்களில் பலர் கருவறை அம்மனையும் வழிபட்டு செல்கிறார்கள்.

    அங்காளம்மனை அமைதிப்படுத்தும் நிகழ்வு ஆதிகாலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. ஆனால் ஊஞ்சலில் அம்மனை வைத்து தாலாட்டுவதை பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்யும் நடைமுறை வழக்கம் சுமார் 28 ஆண்டுக்கு முன்புதான் தோன்றியது. மிக குறுகிய காலத்துக்குள் இது பக்தர்கள் மத்தியில் இடம் பிடித்து உள்ளது.

    அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கும் போது சில பக்தர்கள் ஆர்வ மிகுதியால் தேங்காய், எலுமிச்சை, பழத்தில் சூடம் ஏற்றி வழிபடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது என்று கோவில் நிர்வாகம் எச்சரித்து உள்ளது.

    லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இடத்தில் இத்தகைய வழிபாட்டை, பக்தர்கள் தவிர்ப்பது நல்லது என்று கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    • மேல்மலையனூரில் மட்டுமே ஆதி திருவிழா கொண்டாடப்படுகிறது.
    • கந்தாயத்தின் கடைசி மாதம் மாசி மாதம் அமாவாசையாகும்.

    கந்தாயத்தின் கடைசி மாதம் மாசி மாதம் அமாவாசையாகும். அன்றுதான் சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் விலகிய நாள். அன்றுதான் அங்காளி என்ற பூங்காவனத்தாள் அங்காளம்மனாக ஆனாள்.

    சிவசுயம்பு புற்றுருவாகவும், புற்றுக்குள் குடி கொண்ட நாக வடிவமாகவும் ஆனாள் என்று அறிந்த வண்ணம் நாகத்தின் படம் சுருங்காமல் சீறிபாயும் நிலையில் இருந்ததாகவும், இந்த நிகழ்வுகளை கண்ணுற்ற, பூலோகத்தில் இருந்த பூதகணங்களான, ஆண்பூதம், பெண்பூதம், மிருக கணங்கள், பறவை கணங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்த வண்ணம் வகை வகையாக வந்து அப்புற்றை சுற்றி பணிந்து தொழுததாக ஐதீகம்.

    அதற்கும் அந்த நாகப்பாம்பு படம் சுருங்காமல் இருப்பதை கண்ட பூலோக கணங்களில் வேண்டுகோளுக்கு இணங்க தேவர் உலக தேவர்கள் தங்களின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகமான இப்புற்றை வந்து தொழுது நின்றதாகவும், அதற்கும் இந்த நாகப்பாம்பின் படம் சுருங்காமல் இருப்பதைக் கண்ட தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் திருவுருவமாக "திருத் தேர் ஆகி" நின்ற அப்புற்றை சுற்றி வரும் போது கலியுகம் பிறந்ததாக அறிந்த வண்ணம் கலியுகத்தில் அந்த பாம்பு படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்ததாகவும் அறியப்பட்டுள்ளது.

    இந்த வரலாற்று நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறவே எழுந்த நிலைகளே திருவிழாக்கள் ஆகும்.

    மாசி மாதம் சிவபெருமான் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வந்து இரவு தங்கியதால், அன்றைய இரவு சிவன் ராத்திரி என்றும், அன்று இரவில் கரம் என்ற சக்தி கரக திருவிழாவாகவும், மறுநாள் பூரண அமாவாசை தினத்தில் அங்காளி ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் பொதுவில் சூறையிடும் நாள், இதையே மயானக்கொள்ளை என்றும் அன்று தான் அங்காளி அங்காளம்மனாக ஆனாள்.

    ஆண்பூத கணங்கள் புற்றை சுற்றி பணிந்தன என்று அறிந்த வண்ணம், இரவில் ஆண்பூத வாகனத்தில் அம்மன் பவனி என்றும், மூன்றாம் நாள் பெண்பூதவாகனத்தில் அம்மன் பவனி என்றும், நான்காம் நாள், காட்டில் இருக்கும் மிருகத்தின் தலைவன் சிங்க வாகனத்தில் அம்மன் பவனி என்றும், ஐந்தாம் நாள் வாகனத்தில் இருந்த பறவை கணங்கள் தன்னுடைய தலைவனான அன்னத்தை வாகனமாக ஏற்று அன்ன வாகனத்தில் அம்மன் பவனி என்றும், அன்றைய பகல் திருவிழாவாக கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் என்ற நிலையில் உச்ச கட்டமாக கருதி "தீமிதி" திருவிழாவாகவும் நடக்கிறது.

    ஆறாம் நாள் உலகின் ஐராவத்தில் இருந்து தேவர்கள் வந்தனர் என்றும் அவர்களின் வாகனமான ஐராவதத்தில் அம்மன் பவனி என்றும், ஏழாம் நாள் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் உருவமான திருத்தேர் வடிவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர் என்பதன் நினைவாக ஏழாம் நாள் அம்மன் திருத்தேரில் பவனி என்றும் நடத்தப்படுகிறது.

    எட்டாம் நாள் கலியுகம் பிறந்ததை நினைவு கூறவே குதிரை வாகனத்தில் அம்மன் பவனி என்றும், ஒன்பதாம் நாள் தான் எடுத்த உருவமான நாகத்தை நினைவு கூறவே 9 தலை நாக வாகனத்தில் அம்மன் பவனி என்றும், பத்தாம் நாள் சத்தாபரணம் அணிந்து அனைவருக்கும் அருள் கொடுக்கும் சத்தாபரணத் திருவிழா என்றும், தெப்பல் திருவிழா என்றும், ஆதி முதல் இன்று வரையில் இந்த திருவிழாவில் மாற்றம் இல்லாமல் கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.

    இந்த 10 நாட்களும் திருவிழாவாக கொண்டாடுவது முழுக்க முழுக்க இந்த அம்மனின் வரலாற்றுத் திருவிழாவாகும்.

    மேலும் இந்த விசேஷ திருவிழா நாட்களில் அங்காளம்மன் தான் எடுத்த அலங்கோல உருவத்தை நினைவு கூறவே, ஒவ்வொரு நாளும் பக்தர்கள் மொட்டை அடிப்பது, காது குத்துவது, ஆடு, கோழி, அறுத்து, பொங்கல் வைத்து, அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்வது சித்தாங்கு, கஞ்சுலி, கபால வேஷம் அணிந்து வருவது, மஞ்சள் ஆடை, வேப்பஞ்சேலை அணிந்து வருவது போன்ற வேஷத்துடன் மேல்மலையனூருக்கு திருவிழா காலங்களில் வந்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

    வேண்டுதல் காணிக்கை பிரார்த்தனைகளான, பொன், வெள்ளி பணம் போன்ற காணிக்கை களை உண்டியலில் செலுத்தி பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பிரார்த்தனையை செய்து செல்வதே இந்த 10 நாள் திருவிழாவாகும்.

    இந்த அம்மனின் வரலாற்றை தொடர்புபடுத்தி செய்யும் திருவிழா வேறு எங்கும் கொண்டாடுவதில்லை. இந்த மேல்மலையனூரில் மட்டுமே ஆதி திருவிழாவாக கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.

    • அமாவாசை தினத்தன்று இத்தலத்தில் தங்கி இருந்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.
    • அர்த்தசாம பூஜையை கண்டால் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தை காண வருவது வழக்கம்.

    உலக ஜீவன்களுக்கு படி அளக்கும் சிவனுக்கே ஒரு தடவை பிரம்ம தோஷம் பிடிக்கிறது.

    சிவ ராத்திரி அடுத்த நாள் மயானக் கொள்ளை மூலம் அங்காள பரமேஸ்வரியால் சிவனுக்கு பிரம்ம தோஷம் நீங்குகிறது. ஆகையால் மேல்மலையனூர் சக்தி புராணங்களில் இடம் பிடித்தது.

    அமாவாசைக்கு முன்பு சிவராத்திரி தினமாகும். மறுநாள் அமாவாசை அன்று சுடுகாட்டில் அம்மனை சாந்தி படுத்த படையலிட்டு பொறி, கடலை, கொழுக்கட்டை போன்றவற்றை படையலிட்டு பிரம்மன் தலைக்கு இறைப்பது வழக்கம்.

    அன்று இரவு அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடல்கள் பாடி அம்மனை சாந்தி படுத்துவார்கள். அமாவாசை அன்று வழக்கமாகவே அம்மன் உக்கிரமாக இருப்பாள் என்றும் அம்மனை சாந்தி படுத்தவே ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. அதனால் அன்றைக்கு வரும் பக்தர்களுக்கு அம்மன் அருள் பூர்ணமாக கிடைக்கும்.

    ஏவல், பில்லி சூனியம் நீங்கும் நினைத்த காரியங்கள் நடை பெறும். பிரம்மனின் தலைகளில் ஒன்றை கொய்த சிவபெருமானுக்கு பிரம்ம கத்தி தோஷம் பிடித்த இந்த பிரம்ம கத்தி தோஷம் மேல்மலையனூரில் நடக்கும் மயான கொள்ளையின் போது நிவர்த்தியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரம்மனால் படைக்கப்பட்ட எந்த உயிரையும் கொன்றாலோ அல்லது அழித்தாலோ பிரம்ம கத்தி தோஷம் பிடிக்கும் என்று திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகிறது. எனவே இந்த ஜென்மத்தில் நாம் தெரிந்தோ தெரியாமலோ உயிர்களை கொன்று இருக்கலாம். இதனால் பிரம்மகத்தி தோஷம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

    நீங்களும் சிவன் போல் பித்து பிடித்து அலைய வேண்டாம். இதற்கு பரிகாரம் மேல்மலையனூரில் அமாவாசை நாளில் சென்று இரவு தங்கினால் உங்களுடைய பாவங்கள் நீங்கும். பிரம்மகத்தி தோஷமும் நிவர்த்தியாகும்.

    1. மேல்மலையனூரில் அமாவாசை தினத்தன்று நடக்கும் அர்த்தசாம பூஜையை கண்டால் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    2. அமாவாசை தினத்தன்று இத்தலத்தில் தங்கி இருந்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.

    3. தோல் நீக்கிய வாழைப்பழம் ஒரு பங்கு, பசுவின் பால் முக்கால் பங்கு, தேன் அரைப்பங்கு கலந்து தயாரிக்கப்படும் நைவேத்தியத்துக்கு `திரிமதுரம்' என்று பெயர். இந்த நைவேத்தியம் அங்காள பரமேசுவரிக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியமாகும்.

    4. அங்காள பரமேசுவரிக்கு செம்பருத்திப்பூ மாலை அணிவித்து 48 நாட்கள் வணங்கினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    5. கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் ஒரு மண்டலம் புற்றுக்கு பால் ஊற்றி கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் தோஷம் விலகும்.

    6. அங்காள பரமேஸ்வரி அருளால் குழந்தைபாக்கியம் பெறுபவர்கள், பிறகு அந்த குழந்தை எடைக்கு எடை நாணயம் வழங்குவது வழக்கமாக உள்ளது.

    7. தடைகள் விலகி திருமணமாகும் பெண்கள் மாங்கல்யத்தை கழற்றி உண்டியலில் போடுவதை திருப்பதியில் பார்திருப்பீர்கள். அதே போன்று இத்தலத்திலும் மாங்கல்யத்தை காணிக்கையாக வழங்குகிறார்கள்.

    8. மாவிளக்கில் தீபம் ஏற்றி வழிபடுபவர்களில் பலர் அதை பிரசாதமாக வினியோகிப்பார்கள். சிலர் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று அடை மாதிரி மாற்றி சாப்பிடுவார்கள்.

    9. இத்தலத்து கொடி மரம் பலி பீடம் அருகில் இல்லாமல், கோவிலுக்கு வெளியில் அமைந்துள்ளது.

    10. ஆடி அமாவாசை தினத்தன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் நடை முழுவதும் திறந்து இருக்கும்.

    • சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலைரனூரை சுற்றி வருகிறது.
    • சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது.

    ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலைரனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் நடைபெறாது. அங்காளபரமேஸ்வரி சக்தி கிரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து அந்த பூசாரியின் ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை அவர் மேல் வர வைத்து மேல்மயைனூர் அக்னி குலக்கரையில் சக்தி கிரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு சக்தி கிரகத்தை தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கிரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருள்ளாட்டம் ஆடி வருவார்.

    பிறகு அவர் மயானத்திற்கு சென்று அங்குள்ள சுண்டல் கொழுக்கொட்டை தான்யம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காளபரமேஷ்வரி சக்தி என்று பாவிப்பார்கள். ஏன் என்றால் அங்காளம்மன் தன் பித்து பிடித்த கணவரை காப்பாற்ற மூன்று பிடிசாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழா உருவாகின.

    சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கிரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும் மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்லமாட்டார்.

    • பக்தர்கள் பலர் கோழி, ஆடு ஆகியவற்றை கடித்து ரத்தத்தை உறிஞ்சினர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பெண்ணாடத்தில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மயானக்கொள்ளை விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து மேள, தாளம் முழங்க அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு அதே பகுதியில் உள்ள வெள்ளாற்றுக்கு சென்றார். இந்த ஊர்வலத்தில் பலர் சாமி வேடமணிந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து வெள்ளாற்றில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் பலர் கோழி, ஆடு ஆகியவற்றை கடித்து ரத்தத்தை உறிஞ்சினர். மேலும் ஆடு, கோழியின் ரத்தத்தை சாதத்தில் கலந்து அதனை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கொடுத்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் குழந்தை பாக்கியம் இல்லாத பலர் இந்த விழாவில் கலந்து கொண்டு ரத்தம் கலந்த சாதத்தை போட்டி போட்டு வாங்கி சாப்பிட்டனர். இது தவிர சாமி வேடம் அணிந்து வந்தவர்களிடம் பலர் முறத்தால் அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் மற்றும் கிராமப்புற பகுதிகளில் 8 இடங்களில் மயான கொள்ளை நடைபெற்றது.

    குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் இரண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்கள் உள்ளது, அதனால் இரண்டு கோயில்களிலும் தனித்தனியே அலங்கரிக்கப்பட்ட உற்சவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை கவுண்டன்ய மகாநதி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 2 மயான கொள்ளை தனித்தனியாக நடைபெற்றது.

    அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து பூங்கரகம் கொண்டுவரப்பட்டது. அப்போது வேண்டுதல் நிறைவேற்ற தரையில் ஏராளமான பெண்கள் படுத்து இருந்தனர். அவர்களை மிதித்தபடி பூங்கரகம் கொண்டு செல்லப்பட்டது.

    இந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சிகளை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். மயான கொள்ளையில் முட்டை எடுக்க குவிந்த இளைஞர்கள் மயான கொள்ளை முன்னிட்டு இரண்டு மயான கொள்ளை களிலும் முட்டைகளை எடுக்க ஏராளமான இளைஞர்கள் முயன்றனர். அவர்களை தடுக்க சுற்றிலும் காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

    இருப்பினும் சில இளைஞர்கள் முட்டையை எடுக்க முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் தடுத்தனர். ஊர்வலமாக வந்த அம்மன் மயானத்திற்கு வந்தவுடன் நூற்றுக்கணக்கானோர் மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த சாமி மீது திரண்டு சென்று முட்டைகளை எடுத்தனர்.

    இந்த மயான கொள்ளைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், அப்பகுதி இளைஞரணியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.இதேபோல் கவுண்டன்யா மகாநதி புவனேஸ்வரி பேட்டை பகுதியில் மயான கொள்ளை குடியாத்தம் அடுத்த வடக்கு பற்றை கிராமத்தில் மயான கொள்ளை நடைபெற்றது. அதேபோல் பரதராமி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி மோட்டூர் கொத்தூர் கதிரிகுளம் தட்டிமாணப்பள்ளி ஆகிய ஊர்களிலும் மயான கொள்ளை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

    குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த மயான கொள்ளை பாதுகாப்பு ஏற்பாடுகளை குடியாத்தம் உதவி கலெக்டர் எம் வெங்கட்ராமன் தலைமையில் வருவாய் துறையினர் கண்காணித்து வந்தனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் இந்த மகா சிவராத்திரியை முன்னிட்டு சுண்ணாம்பு பேட்டையில் உள்ள சுடுகாட்டில் இறந்த முன்னோர்களுக்கு அவர்கள் குடும்பத்தினர் படையல் வைத்து வழிபட்டனர். குடியாத்தம் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் உள்ள சுடுகாட்டிலும் இறந்த முன்னோர்களுக்கு குடும்பத்தினர் படையல் வைத்து வழிபட்டனர்.

    • புதன் கிழமை தீ மிதி உற்சவமும், இரவில் அன்ன வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.
    • 24-ந்தேதி மதியம் 1 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து 2-ம் நாள் திருவிழாவான மயானக்கொள்ளை நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

    உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷமான அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தார். காலை 9.30 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மயானம் நோக்கி புறப்பட்டார்.

    பின்னர் பூசாரிகள் பிரம்ம கபாலத்தை (கப்பறைமுகம்) எடுத்துக் கொண்டு ஆடியபடி மயானம் நோக்கி சென்றனர். அங்கு மயானக்காளி முன்பு பக்தர்கள் தங்களது வயல்களில் விளைந்த தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் சுண்டல், கொழுக்கட்டை போன்றவைகளை நேர்த்திக்கடனாக செலுத்தி இருந்தனர். உற்சவ அம்மனுக்கு தீபாராதனை காண்பித்ததும், பக்தர்கள் செலுத்தி இருந்த பொருட்களை பூசாரிகள் வாரி இறைத்தனர். இதை சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், தீராத நோய் குணமாகும் என்பதும் ஐதீகம். எனவே அங்கு கூடியிருந்த பக்தர்கள் போட்டி போட்டு அந்த பொருட்களை பிடித்து சாப்பிட்டனர். இதுவே மயானக்கொள்ளை என்று அழைக்கப்படுகிறது.

    தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பித்தவுடன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    விழாவில் அம்மனை வேண்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து வந்தனர். மேலும் சிலர் கோழியை கடித்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். அதேபோன்று திருமணம் நடக்கக்கோரியும், ஏற்கனவே வேண்டுதலின்படி திருமணம் நடைபெற்றதற்காக அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையிலும் பெண்கள், கூரைப்புடவை அணிந்து வந்திருந்ததையும் பார்க்க முடிந்தது. அதேபோன்று குழந்தைகள் பலரும் அம்மன் வேடம் அணிந்து வந்திருந்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவின் 3-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு பெண் பூதவாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தங்க நிற பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (புதன் கிழமை) தீ மிதி உற்சவமும், இரவில் அன்ன வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது.

    • 20-ந்தேதி மகா கும்பாபாளையம் உற்சவம் நடக்கிறது.
    • 24-ந்தேதி சாந்தி அபிஷேகம் நடக்கிறது.

    சித்தூர் நகரில் சுயம்பு அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயானக் கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டும் மயானக் கொள்ளை திருவிழா பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட உள்ளது.

    இதுகுறித்து கோவில் தர்மகத்தா கே.எம்.குமார் கூறியதாவது:-

    சித்தூர் நகரம் குறவப்பாநாயுடு தெருவில் சுயம்பு அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 220 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியதாகும். அந்தப் பகுதி மக்கள் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயானக் கொள்ளை திருவிழா நடப்பது வழக்கம். மயானக் கொள்ளை திருவிழா 190 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீப ஆராதனை நடக்கிறது. 19-ந்தேதி காலை 6 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீப ஆராதனை, சிறப்புப்பூஜைகள் நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு அங்காள பரமேஸ்வரியம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி சித்தூரில் உள்ள நீவா நதிக்கு செல்கிறார். அங்கு நடக்கும் மயானக் கொள்ளை திருவிழாவில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    20-ந்தேதி மாலை 6 மணிக்கு மகா கும்பாபாளையம் உற்சவம் நடக்கிறது. அன்று இரவு அம்மன் குறத்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    விழாவில் பங்கேற்று தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் குறைகளை அம்மனிடம் தெரிவித்து அரிசியை காணிக்கையாக வழங்குவார்கள்.

    24-ந்தேதி காலை 7 மணிக்கு சாந்தி அபிஷேகம், காலை 10 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. அன்று பக்தர்களுக்கு அரிசி, விபூதி, குங்குமம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

    கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு மயானக் கொள்ளை திருவிழா நடப்பதால் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கோவில் அர்ச்சகர் பி.குமார் உடனிருந்தார்.

    ×