search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் கையாடல்"

    • நிறுவனத்தில் வேலை செய்து வந்த பிரபு உட்பட சிலர் சேர்ந்து சுமார் ரூ.1 கோடி கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
    • குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.

    சென்னை:

    குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகை குமார் (வயது 42) என்பவர் தி.நகர், கிரியப்பா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிறுவனம் தனது ஊழியர்கள் மூலம் சென்னையில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்தபோது, மேற்கண்ட நிறுவனத்தில் வேலை செய்து வந்த பிரபு உட்பட சிலர் சேர்ந்து சுமார் ரூ.1 கோடி கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இது குறித்து மேற்படி தனியார் நிறுவனத்தின் மேலாளர் கார்த்திகை குமார் சவுந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

    குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இது தொடர்பாக ஆர்.ஏ. புரத்தைசேர்ந்த பிரபு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.63 லட்சத்து 69 ஆயிரம் மீட்கப்பட்டது.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    • பால்வண்ணன் என்பவர் கடந்த 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை ஊத்தங்கரை அறநிலையத்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
    • அரசு அதிகாரியை அரசுக்கு எதிராக கையாடல் செய்திருப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்துக்கு எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி எதிரே இயங்கி வரும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பால்வண்ணன் என்பவர் கடந்த 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை ஊத்தங்கரை அறநிலையத்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

    அப்போது ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதியில் உள்ள 43 கோவில்களுக்கான வழங்கப்பட்ட அரசு நிதியையும் கோவில் அறநிலையத்துறை உண்டியல் பணங்களையும் அறநிலையத்துறை வங்கிக் கணக்கானது ஆய்வாளர் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வந்ததாக தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து இவர் மோசடி செய்யும் நோக்கத்தோடு வங்கி கணக்கு புத்தகங்களில் அளித்தல் மற்றும் மாறுதல் செய்து அரசு ஆவணங்களை சரிவர பராமரிக்கப்படாமல் அரசு பணம் ரூ.86,06,026 பணத்தை எடுத்து கையாடல் செய்ததாக தெரியவந்தது.

    மேலும் அரசு சொத்தினை ஏமாற்றி பணத்தைக் கையொப்பமிட்டு அரசு முத்திரையும் பயன்படுத்தி வஞ்சித்துள்ளதாகவும் பால்வண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஜோதி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதியப்பட்ட வழக்கினை விசாரணை அதிகாரி சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், முன்னாள் அறநிலையத்துறை அலுவலர் பால்வண்ணன் மீதான வழக்கினை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரசு அதிகாரியை அரசுக்கு எதிராக கையாடல் செய்திருப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    தற்போது பால்வண்ணன் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் அறநிலையத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    • வங்கி அதிகாரிகள், கேஷியரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.
    • ரூ.44 லட்சத்துடன் மாயமான வங்கி கேஷியர் சென்னையில் பதுங்கி உள்ளாரா என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை இயங்கி வருகிறது. இங்கு கேஷியராக பணியாற்றி வருபவர், நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்தார்.

    அப்போது கேஷியர் அறைக்கு சென்ற அவர், அங்குள்ளபெட்டியில் கட்டுக்கட்டுகளாக இருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து, தான் கொண்டு வந்திருந்த ஒரு பையினுள் போட்டார். பின்னர் காலை 10.45 மணியளவில் அங்கிருந்த அதிகாரிகளிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக கூறி அந்தபையுடன் வங்கியில் இருந்து வெளியே சென்றார்.

    ஆனால் வெகு நேரமாகியும் அவர், வங்கிக்கு வரவில்லை. அவரது அறையில் வேறொருவர், கேஷியர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வங்கியின் சேமிப்பு கணக்கு விவரத்தை அங்கிருந்த கணினி மூலம் சரிபார்த்தபோது ரூ.43 லட்சத்து 89 ஆயிரம் இருப்பு இருந்ததும், ஆனால் அந்த பணம், வங்கியில் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனே வங்கி அதிகாரிகள், கேஷியரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. நீண்டநேரமாகியும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினரை வங்கி அதிகாரிகள் தொடர்புகொண்டு விசாரித்தபோது வீட்டிற்கு வரவில்லை என்று தெரிவித்தனர். இதனால் அந்த பணத்துடன் கேஷியர் தலைமறைவாகி இருக்கலாம் என்று வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

    இதுகுறித்து வங்கியின் கிளைமேலாளர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், வங்கியில் இருந்த பணத்தை கேஷியர், எடுத்துச்சென்று விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து பணத்தை மீட்டுத்தருமாறும் கூறியிருந்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து, சைபர்கிரைம் போலீசாரின் உதவியுடன் போலீசார் விசாரித்தபோது, அந்த கேஷியரின் செல்போன், கடைசியாக சென்னை அருகே திருவான்மியூர் பகுதியில் சுவிட்ச் ஆப்செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

    மேலும் விசாரணையில் அவர், தனது உறவினர் ஒருவருக்கு ரூ.1½ லட்சத்தை அனுப்பியுள்ளதோடு, வாட்ஸ்-அப்மூலம் ஆடியோவாக பேசியும் அனுப்பியுள்ளார். அதனை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். அதில், அந்த காசாளர் கூறியிருப்பதாவது:-

    நான் இப்போது எங்கு இருக்கிறேன் என எனக்கு தெரியவில்லை. ஒரு கும்பல் என்னை மிரட்டி பணம் எடுத்து வரும்படி சொன்னார்கள். நானும் அவர்களுக்கு பயந்து பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டேன். என்னிடம் அவர்கள் ரொம்ப நாட்களாக பணம்கேட்டு டார்ச்சர் செய்தார்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை என்பதால் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

    நான் கூட்டேரிப்பட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கிருந்து பஸ் ஏறினேன். அவர்கள், என்னை அழைத்துக்கொண்டு எங்கேயோ சென்றார்கள். நான் தற்போது எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை. அந்த கும்பல், வங்கி கேஷியரை பார்த்து டார்க்கெட் செய்கிறார்கள். ஆகவே பத்திரமாக இருங்கள், எனது உடல் கிடைக்குமோ, கிடைக்காதோ என தெரியவில்லை என்று கண்ணீர்மல்க பேசியுள்ளார்.

    வங்கி கேஷியர் கடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் அவரது அக்காவுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பி உள்ளார். எனவே அவர் கடத்தல் நாடகம் ஆடுவதாக சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது செல்போன் சென்னை திருவான்மியூரில் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருப்பதால் அவர் சென்னையில் பதுங்கி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

    மேலும் காஞ்சிபுரம், வேலூர், புதுவை ஆகிய இடங்களுக்கும் போலீசார் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ரூ.44 லட்சத்துடன் வங்கி கேஷியர் மாயமான சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிபாண்டி, வெங்கடேசன், வினோத்குமார், சேகர், முருகன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • டாஸ்மாக் ஊழியர்களான 11 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

    சென்னை:

    சென்னை மதுரவாயல், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த 11 ஊழியர்கள், மது விற்பனையில் வசூலான ரூ.23 லட்சத்தை அரசுக்கு செலுத்தாமல் கையாடல் செய்ததாக 2010-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிபாண்டி, வெங்கடேசன், வினோத்குமார், சேகர், முருகன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்டாலின், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

    அப்போது டாஸ்மாக் ஊழியர்களான 11 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் இழப்பீட்டு தொகையாக ரூ.17 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    • ரூ.1.88 கோடி கையாடல் செய்த கரூவூல கணக்கருக்கு உடந்தையாக இருந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • தனது மகளின் மருத்துவ செலவுக்காக கையாடல் செய்தது தெரியவந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி(வயது 45). இவர் முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் கணக்கராக வேலைபார்த்தபோது கருவூல அலுவலகத்தில் ஓய்வூதிய கணக்கில் இருந்து ரூ.1 கோடியே 88 லட்சம் வரை மோசடி செய்தது தணிக்கையில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர்.

    இந்தநிலையில் முனியசாமி கடந்த 9-ந்தேதி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை ராமநாதபுரம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் முனியசாமி மகள் மகாமதிக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு இருந்ததும், மகளின் மருத்துவ செலவுக்காக ரூ.1.88 கோடி அரசு கரூவூல பணத்தில் இருந்து கையாடல் செய்தது தெரியவந்தது.

    அதற்கு அவரது மனைவியும், முன்னாள் படைவீரர் நல அலுவலக ஊழியரான கண்ணகி, முனியசாமியின் தங்கை கணவர் கண்ணன், நண்பர் எஸ்.வி.மங்கலம் ஜீவா ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கையாடல் செய்த பணத்தை வைத்து மகளின் மருத்துவ சிகிச்சையை முடித்த முனியசாமி, மீதம் உள்ள பணத்தில் சொத்துக்கள் வாங்கியதோடு வீடும் கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    முனியசாமியின் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த உறவினர் பாலமுருகன், வென்னீர் வாய்க்கால் ஆனந்தவள்ளி, முனியசாமியின் அண்ணன் சித்ரவேலு ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×