என் மலர்
நீங்கள் தேடியது "சைபர் கிளப்"
- வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இணையவழிக் குற்றங்கள் சர்வசாதாரணமாக அதிகரித்து வருகிறது.
- கல்லூரிகளில் ‘சைபர் கிளப்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை,
நவீன உலகில் சைபர் கிரைம் எனப்படும் இணையவழிக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வங்கியிலிருந்து பேசு வதாகக்கூறி ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாதுகாப்பு குறியீட்டு எண்ணை பெற்று வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து பணத்தை திருடுவது, உடனடிக் கடன் வழங்கும் செயலிகள் மூலமாக ஏமாற்றுவது, பரிசுத் தொகை விழுந்துள்ளதாகக் கூறி லிங்கை அனுப்பி மோசடி செய்வது, முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என லிங்க்கை அனுப்பி மோசடி செய்வது என பல வழிகளில் இணைய வழிக் குற்றங்கள் அரங்கேறுகின்றன.
இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வகையில் கோவை மாநகரில் உள்ள கல்லூரிகளில் 'சைபர் கிளப்' அமைக்கும் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இணையவழிக் குற்றங்கள் சர்வசாதாரணமாக அதிகரித்து வருகிறது. இணையவழிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டு, பணத்தை இழந்தவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் அளித்தால் திருடுபோன பணத்தை திரும்பப்பெற வாய்ப்புள்ளது. இதில் தொடர்புடையவர்களை பிடிப்பது கடினம். அதேசமயம் நாம் எச்சரிக்கையாக இருந்தால் இணையவழிக் குற்றங்களில் சிக்காமல் இருக்கலாம்.இணையவழிக் குற்றங்கள், இணையதளங்களை பாது காப்பாக பயன்படுத்துவது குறித்து மாணவ, மாணவிகள், இளைஞர்கள், இளம் பெண்கள், பொதுமக்கள் அறிந்திருப்பது அவசியம், என்றனர்.
கோவை மாநகர காவல் தலைமையிட துணை போலீஸ் கமிஷனர் சுகாஷினி கூறியதாவது:-
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், கல்லூரிகளில் 'சைபர் கிளப்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் உள்ள ஐ.டி பிரிவை தலைமையாகக் கொண்டு இந்த கிளப் தொடங்கப்படுகிறது. இக்கு ழுவில் பேராசிரியர்கள், மாணவர்கள் என 30 பேர் உறுப்பினர்களாக இருப்பர்.
இணையவழிக் குற்றங்கள் என்றால் என்ன?, அதில் பாதிக்கப் படாமல் இருப்பது எப்படி? என போலீசாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இக்குழு வினர், மற்றவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்துவர். மாநகரில் தற்போது வரை 15 கல்லூரிகளில் சைபர் கிளப் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற கல்லூரிகளுக்கும் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு துறை வல்லுனர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
- சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்.
ஊட்டி:
சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த மோசடிகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சைபர் கிளப் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டு அதில் ஆன்லைன் மோசடி குறித்து தகவல்கள் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பொதுமக்களிடம் சைபர் கிரைம் குறித்து தேவையான அளவு விழிப்புணர்வு இல்லாததால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே நீலகிரி மாவட்டத்தில் புதிதாக சைபர் பள்ளிக்கூடம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
அதன்படி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை முகநூல் நேரலை நிகழ்ச்சி மூலமாக சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு துறை வல்லுனர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கூறியதாவது:-
நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் துறை சார்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலை பார்ப்பவர்கள் தங்களுக்கு எந்த சந்தேகம் என்றாலும் தொடர்பு கொள்ளலாம். சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். ஓ.டி.பி. உள்ளிட்ட தகவல்களை யாரும் கூற வேண்டாம்.
அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீடியோ கால் பேச வேண்டாம். சமீபகாலமாக டிஜிட்டல் கைது என்று கூறி வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி ஆசாமிகள் தங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றி ஏமாற்றுகின்றனர்.
டிஜிட்டல் கைது என்று கூறி போலீசார் யாரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள். மேலும் சைபர் குற்றங்கள் மூலமாக பணம் இழப்பு ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ உடனடியாக தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.