search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழடி அகழ்வாராய்ச்சி"

    • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன
    • தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை விளக்கும் வகையில் பல்வேறு அரியவகை பொருட்கள் கண்டறியப்பட்டன.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை விளக்கும் வகையில் பல்வேறு அரியவகை பொருட்கள் கண்டறியப்பட்டன.

    இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் முடிவ டைந்துள்ளன. இதற்காக கீழடி கிராமத்தில் 48-க்கும் மேற்பட்ட சதுர குழிகள் வெட்டப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் பழமையான உறை கிணறுகள், செங்கல் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், அணிகலன்கள், தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனை பொதுமக்கள் பார்வையிட பலகோடி ரூபாய் மதிப்பில் நவீன அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆய்வின் மூலம் கீழடி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலம் கி.மு. 3-ம் நூற்றாண்டில் இருந்து 10ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் கீழடி நாகரீகத்துக்கும், சிந்துவெளி நாகரீகத்துக்கும் பல்வேறு ஒற்றுமைகள் காணப்பட்டன.

    தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தொடர் வற்புறுத்தலின்படி தற்போது கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தொல்லியல் துறை இணை இயக்குநர் ரமேஷ், ஆய்வாளர் அஜய், காவ்யா ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 6-ந்தேதி தொடங்கிய இந்த அகழாய்வு 22 செண்டு நிலத்தில் முதற்கட்டமாக தொடங்கியுள்ளது.

    வீரணன் என்பவரது நிலத்தில் 2 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுப் பணிகள் நடந்தன. 1 ½ அடி ஆழத்தில் தோண்டியபோது வலுவலுப்பான பச்சை நிறத்திலான மிகப்பெரிய தரை தளம் காணப்பட்டது. ஒழுங்கற்று உள்ள இந்த தரை தளம் சுடுமண் செங்கற்களால் செய்யப்பட்டுள்ளது.

    இந்த கண்டுபிடிப்பு தொல்லியல் ஆய்வாளர்களிடையே மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் கூடுதலாக குறிப்பிட்ட பகுதிகளில் தோண்டி ஆய்வுப்பணிகள் நடத்தினால் மேலும் அரிய வகை பொருட்கள், தமிழர் நாகரீகத்தின் தகவல்கள் தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறினர்.

    • கீழடி அகழ்வாராய்ச்சியால் கிராமங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.
    • கீழடி பஞ்சாயத்து தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்தார்.

    மானாமதுரை, மார்ச்.5-

    சிவகங்கை மாவட்டம் கீழடிபகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சி பணியால் தற்போது இந்த பகுதியில் உள்ள ஊராட்சிகள் வளர்ச்சி அடைந்து வருகிறது.

    தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகளை உலகில் அனைவரும் தெரிந்து கொள்ள அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு கூடுதல் நிதிஒதுக்கீடு செய்து கீழடி மட்டுமின்றி அருகே உள்ள கொந்தகை, மணலூர்ஆகிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன.

    இங்கு கிடைத்த அரிய பொருள்களை தமிழக மக்கள் அனைத்து பகுதி களிலும் இருந்து பார்க்கும் வகையில் சுமார் ரூ.18 கோடி செலவில் தமிழக கட்டிட கலைக்கு எடுத்து காட்டாக கீழடி அருங் காட்சியகம் கட்டப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திருக்கரங்கலால் இன்று மாலை இது திறக்கப் படுகிறது. இதுதவிர தமிழகத்தில் இன்னும் பலகிராம ஊராட்சி பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிநடைபெற்றுவருகிறது. இந்த பணிகளால் கீழடி பகுதியில் புதியதார்சாலை, சிமெண்டு சாலை, பள்ளி களில் மேம்பாடுவசதி, கூடுதல் போக்குவரத்து வசதிகள் கிடைத்தன.

    மேலும் கீழடி ஊராட்சி தமிழகத்தின் சுற்றுலா தலமாக மாறி வருகிறது என்று கீழடி பஞ்சாயத்து தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்தார்.

    • மர வேலைபாடுகள், குளம், கல் இருக்கைகள், பசுமையுடன் புல்தரைகள், அழகு செடிகள், சிறு மரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
    • முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை, சிவகங்கை மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ளது கீழடி கிராமம். கடந்த 5 ஆண்டுகள் முன்பு தமிழக அரசு சார்பில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியது. தி.மு.க. ஆட்சியில் இந்த பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் விரிவுபடுத்தப்பட்டது.

    இங்கு நடத்தப்பட்ட ஆய்வில் பண்டைய காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், அணிகலன்கள், இரும்பு துண்டு உள்பட பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன. அப்போதைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட உறை கிணறு, சுடுமண், செங்கல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கீழடி அருகே உள்ள கொந்தகை, மணலூர் போன்ற வைகை ஆற்று கரை பகுதியிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளன.

    இதில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தும் வகையிலும், பண்டைய தமிழர்களின் வாழ்வில் முறைகளை தற்போது நம் தலைமுறையினர் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையிலும் தமிழக அரசு சார்பில் கீழடியில் சுமார் ரூ.11 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான அகழ்வாராய்ச்சி வைப்பக கட்டிடம் செட்டிநாடு கட்டிட கலையில் அமைக்கப்பட்டுள்ளது.

    சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழகத்தில் உள்ள கோவிலில் உள்ள கல்மண்டபங்கள் போல் இங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மர வேலைபாடுகள், குளம், கல் இருக்கைகள், பசுமையுடன் புல்தரைகள், அழகு செடிகள், சிறு மரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    பள்ளி மாணவ-மாணவிகள், முதியோர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஆகியோர் எளிதாக பார்வையிடுவதற்கு லிப்ட் வசதி, அழகிய வடிவைப்பில் மரபடிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தனி கட்டிடங்களில் காட்சிபடுத்தப்படும் பொருட்களான மண்பாண்ட குடுவைகள், முதுமக்கள் தாழி, ஓடுகள், அணிகலன்கள், இதுதவிர சுவரில் வண்ண ஓவியங்கள், தத்ரூபமாக ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு அறைக்கும் எளிதில் வந்துசெல்லும் வகையில் வழிகள், குளிர்ச்சி தரும் செட்டிநாடு ஆத்தங்குடி தரைகற்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமரா, தீ தடுக்கும் சென்சார் கருவி, அலாரம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது கீழடியில் சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் நாளை (3-ந்தேதி) நிறைவு பெறுகிறது.

    வருகிற 5-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழடி அகழ்வாராய்ச்சி வைப்பகத்தை திறந்துவைத்து பார்வையிடுகிறார். அவரது வருகையை முன்னிட்டு மதுரை, சிவகங்கை மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பல வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் பஸ் வசதியே இல்லாமல் இருந்தது. தற்போது கீழடி அகழ்வாராய்ச்சி பணியால் இப்பகுதியில் கிராமங்களில் பஸ் வசதி, சாலை மற்றும் குடிநீர் வசதி, அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படும் பணிகள் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பண்டைய தமிழர்கள் தங்கள் பகுதியில் வாழ்ந்ததை பெருமையாக கருதுகின்றனர். கீழடி பகுதியில் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த பொருட்கள் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×