என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சவுமியா அன்புமணி"
- தி.மு.க பொய் வாக்குறுதிகளை அளிப்பதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
- மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைவது என்பது 101 சதவீதம் உறுதி செய்யப்பட்ட ஒன்று.
தருமபுரி:
தருமபுரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து தருமபுரி மாவட்டம் தொப்பூரில் வாகன பிரசாரத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்தார்.
இந்தியாவிலேயே அன்புமணி ராமதாசை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 108 ஆம்புலன்ஸ் என்றால் உலகத்திலேயே இந்தியா அதற்கு ஒரு ரோல் மாடலாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அன்புமணி ராமதாஸ் .
தி.மு.க பொய் வாக்குறுதிகளை அளிப்பதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, மகளிருக்கு ஏராளமான பொய் வாக்குறுதிகளை திமுக அளித்து வருகிறது. ரூ.1,000 மகளிருக்கு தருவதாகக் சொன்னார்கள். ஆனால், இந்த தொகை சிலருக்கு மட்டுமே வந்துள்ளது. பலருக்கு இன்றுவரை வழங்கப்படவில்லை.
ஒருபுறம் உரிமைத் தொகை என்ற பெயரில் பணம் வழங்கும் இந்த அரசு மறுபுறம் மதுக்கடைகளை திறந்து அந்த பணத்தை பறித்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
திட்டங்களையும், வாக்குறுதிகளையும் செயல் படுத்துவதில் தமிழக அரசு முதலிடம் பிடித்துள்ளது என விளம்பரப்படுத்திக் கொள்கிறது. இந்த அரசு போதை பொருட்கள் புழக்கத்திலும், கஞ்சா விற்பனையிலும் முதலிடம் பிடித்த அரசாகத் திகழ்கிறது.
மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைவது என்பது 101 சதவீதம் உறுதி செய்யப்பட்ட ஒன்று. இந்த தேர்தலில் நீங்கள் தி.மு.க.வுக்கோ அ.தி.மு.க-வுக்கோ வாக்களிக்கக்கூடாது. அப்படி தவறுதலாக உங்கள் வாக்கை போட்டால் உங்களது வாக்கு குப்பைத் தொட்டியில் போடுவதற்கு சமம். என்றார்.
பின்னர் வேட்பாளர் சவுமியா அன்புமணி உடன் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன்
- அன்புமணி ராமதாஸ்- சவுமியாவின் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது
பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த தொகுதியின் வேட்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவியும், பசுமை இயக்கத்தின் நிர்வாகியுமான சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வருவாரா?, மாட்டாரா? என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன் என தெரிவித்தார். பசுமை இயக்கத்துக்கு அவர் வேலை செய்து இருக்கிறார். அவர் ஒன்றும் 24 வயதில் சீட் கேட்கவில்லை,30 வயதில் சீட் கேட்கவில்லை,35 வயதில் சீட் கேட்கவில்லை,50 வயதிலும் சீட் கேட்கவில்லை என தெரிவித்தார். சௌமியா அன்புமணிக்கு குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கும் திருமணமான பின்புதான் அரசியலுக்கே வந்துள்ளார் என்று குழப்பமான பதிலை கூறினார்.
இவரது பேச்சை கேட்டு, அங்கு கூடியிருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சிரிக்க தொடங்கினர்.
மேலும், கே.என்.நேரு பையனையும், டி.ஆர்.பி.ராஜாவையும் தயவு செய்து சவுமியா அன்புமணியுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்- சவுமியாவின் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சவுமியா அன்புமணியின் மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், பேத்திக்கு திருமணம் நடைபெற்றது என்று அண்ணாமலை மாற்றி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- சவுமியா அன்புமணி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.
- கடந்த தேர்தலில் தனது கணவர் அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
முதலில் வெளியான பட்டியலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவதாக அரசாங்கம் என்பவரின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவருக்கு பதிலாக சவுமியா அன்புமணி அறிவிக்கப்பட்டார்.
சவுமியா அன்புமணி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. அரசியல் குடும்பத்தில் இருந்தாலும் தீவிர அரசியலில் வெளிப்படையாக இறங்கியது இல்லை. பசுமை தாயகம் அமைப்பின் தலைவராக இருந்து சுற்றுச்சூழல் ஆர்வலராகவே இருந்து வந்தார்.
கடந்த தேர்தலில் தனது கணவர் அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
சவுமியாவின் தந்தை கிருஷ்ணசாமி முன்னாள் காங்கிரஸ் தலைவர். எம்.பி.யாகவும் இருந்தவர். அதே போல் சவுமியாவின் சகோதரர் டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி.யாக இருப்பவர். எனவே சிறு வயதில் இருந்தே அரசியல் சூழலுக்குள் வளர்ந்தவர்.
அதே போல் மாமனார் டாக்டர் ராமதாஸ் பா.ம.க. நிறுவனராகவும், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் தலைவராகவும் இருப்பவர். கணவர் மத்திய மந்திரியாக இருந்தவர்.
இப்படி அரசியல் சூழ்ந்த குடும்ப சூழலுக்குள் இருக்கும் சவுமியாவும் தேர்தலில் போட்டியிட விரும்பி இருக்கிறார். மனைவி போட்டியிட விரும்பியதால் தான் போட்டியிட்ட தர்மபுரி தொகுதியில் போட்டியிட அன்புமணி ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
முக்கியமாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றதும் 100 சதவீதம் தேர்தலில் குதிக்க தயாராகி இருக்கிறார். கடைசியில் கூட்டணி மாறியதால் போட்டியிட தயங்கியதாக கூறப்படுகிறது.
ஒருவேளை கடைசி நேரத்தில் மனம் மாறினால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் தான் கட்சி மேலிடமும் பிரபலமில்லாத அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அறிவித்ததாகவும், எதிர் பார்த்தது போலவே சமியா போட்டியிட தயார் என்று அறிவித்ததால் அரசாங்கத்தை மாற்றி விட்டு சவுமியாவை அறிவித்ததாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- தருமபுரி தொகுதியில் பா.ம.க. சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.
- காஞ்சிபுரம் தொகுதியில் ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுகிறார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான அணியில் பா.ம.க, தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் காஞ்சிபுரம் தொகுதியில் மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, தருமபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் மாற்றப்பட்டு, அன்புமணி ராமதாஸ் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், காஞ்சிபுரம் தொகுதிக்கு பா.ம.க. சார்பில் ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாஜக கூட்டணியில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன
- பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது.
இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.
இந்நிலையில், தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்தொகுதியில் அன்புமணியின் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- கடலில் தேங்கி உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- எண்ணெய் கழிவு கலந்த இடத்தில் பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
திருவொற்றியூர்:
மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கழிவு கலந்தது. இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளிலும் எண்ணெய் படலம் படர்ந்து பொது மக்களுக்கு பல்வேறு உடல் ரீதியான பிரச்சினையும் ஏற்பட்டது. எண்ணூர் முகத்துவார பகுதி மற்றும் கடலில் தேங்கி உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி இன்று காலை எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார்.
அவர் எண்ணூர் சிவன் படை குப்பம், கமலாம்பாள் நகர் பகுதிகளில் எண்ணெய் கழிவு கலந்த இடத்தில் பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- உலகின் 20 வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுகள் விளைவித்துள்ளன.
- இந்திய போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
சென்னை:
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் அரசு காலநிலை மாற்ற நடவடிக்கை குழுவை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்படுகிறது.
இதன் தொடக்க விழா தி.நகர் பஸ்நிலையம் அருகே இன்று நடந்தது. பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:- உலகின் 20 வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுகள் விளைவித்துள்ளன. இந்திய போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால் மக்கள் பாதிக்க கூடிய சூழல் உள்ளது.
தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் சுற்று சூழலுக்காக பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது. அந்த குழுக்களின் செயல்பாடுகள் சரியாக இல்லை. இதை தீவிரப்படுத்த வேண்டும்.
இதை தனிமனிதரால், சாத்தியப்படுத்த முடியாது. மத்திய-மாநில அரசுகள் இணைந்து புதிய திட்டத்தை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப் பாளர் மு.ஜெயராமன், பசுமைத்தாயம் மாநில செயலாளர் அருள், இணை செயலாளர்கள் எஸ்.கே.சங்கர், சத்ரிய சேகர், ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, முத்துக்குமார், அடையார் வடிவேல், சவுமியா அன்பு மணியின் மகள் சுஞ்சத்ரா சவுமியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும்.
- பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
சென்னை:
சென்னை ராணி மேரி கல்லூரியில் "பெண்களின் ஆரோக்கியம்" குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று நடந்தது. கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேசியதாவது:-
பெண்களுக்கு பேறுகால பிரசவம் மிகவும் சவால் மிக்கதாகும். கிராமங்களில் இரவு நேரங்களில் பெண்களுக்கு பிரசவவலி ஏற்படும்போது கர்ப்பிணிகள் துயரம் அடைவார்கள். அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல மிகவும் கஷ்டப்படுவார்கள்.
இந்த வேதனையை போக்குவதற்காக தான் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அதனை எனது கணவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் சுகாதார மந்திரியாக இருந்தபோது தொடங்கி வைத்தார்.
இப்போது கர்ப்பிணி பெண்களின் பிரசவ மரணங்கள் குறைந்து வருகின்றன. இரவு நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் 108 ஆம்புலன்சை அழைத்தால் உடனே வருகிறார்கள். இதனால் பிரசவங்கள் எளிதாக நடைபெற்று வருகின்றன. இதனால் நாடு முழுவதும் கர்ப்பிணி தாய்மார்கள் மரண விகிதம் குறைந்துள்ளது.
கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் போது உடனடியாக அது குறித்து தைரியமாக புகார் செய்ய வேண்டும். பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும். பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
மகளிர் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல்நலம் பேண வேண்டும். மனநல பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்