search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல் கொலை"

    • குடும்ப சொத்து பிரச்சனை தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக கோர்ட்டில் நடந்து வருகிறது.
    • பிடிபட்ட 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி:

    நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் கீழூரை சேர்ந்தவர் பொன்னையா. இவரது மகன் இசக்கிமுத்து (வயது 32). தற்போது திருப்பதிசாரம் அரசு விதைப்பண்ணை அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இசக்கிமுத்து மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இசக்கி முத்துவின் தந்தைக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வருகிறது.

    இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை தக்கலையை சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் சோபி என்பவர் பொன்னையாவுக்கு ஆதரவாக நடத்தி வருகிறார். இந்த வக்கீலை இசக்கிமுத்து ஏற்பாடு செய்திருந்தார். வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் வழக்கு முடிவுக்கு வரவில்லை. இதனால் வக்கீல் கிறிஸ்டோபர் சோபிக்கும், இசக்கி முத்துவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கை விரைந்து முடிக்குமாறு கிறிஸ்டோபர் சோபிடம் இசக்கிமுத்து கூறி வந்தார். இந்த நிலையில் கிறிஸ்டோபர் சோபி திருப்பதிசாரம் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு வைத்து இசக்கிமுத்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

    பின்னர் உடலை பீமநகரி சந்தியான் குளக்கரையில் தீ வைத்து எரித்தார். பின்னர் இசக்கிமுத்து ஆரல்வாய்மொழி போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் குளத்தங்கரைக்கு சென்று பார்த்தபோது கிறிஸ்டோபர் சோபி எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    பிணத்தை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்ந்து இசக்கி முத்துவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொலை செய்யப்பட்ட இசக்கிமுத்து போலீசாரிடம் கூறியதாவது:-

    எனது தந்தையின் குடும்ப சொத்து பிரச்சினை தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு செலவுக்கு கிறிஸ்டோபர் சோபி லட்சக்கணக்கில் பணம் வாங்கினார். இந்த சொத்து பத்திரத்தையும் வக்கீல் தான் வைத்திருந்தார். கிறிஸ்டோபர் சோபி தங்களுக்கு எதிராக செயல்பட்டதால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சொத்து பத்திரத்தை திருப்பி தரும்படி கேட்டேன். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். இதனால் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. எனது மனைவியையும் தகாத வார்த்தைகளால் பேசி வந்தார். இந்த நிலையில் வக்கீல் கிறிஸ்டோபர் சோபி என்னைதொடர்பு கொண்டு தனக்கு வாழைக்கன்று வேண்டும் என்று கேட்டார்.

    இதையடுத்து அவரை எங்களது ஊருக்கு வரவழைத்து அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினேன். அவரும் மோட்டார் சைக்கிளில் எங்கள் ஊருக்கு வந்தார். அங்கு வைத்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன். பின்னர் எனது நண்பர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் அவரை சந்தியான் குளக்கரையில் வீசியதுடன் தீ வைத்து எரித்ததாக கூறினார்.

    தனிப்படை போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலை வழக்கில் அவரது நண்பர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் இசக்கிமுத்து நண்பர்கள் 4 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    விசாரணையில் வக்கீலை கொலை செய்து விட்டு 2 மோட்டார் சைக்கிள்களில் அவரது உடலை குளத்தின் கரையில் வீசி சென்றவுடன் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் கூறினார்கள். தொடர்ந்து 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீசார் அவர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • வக்கீலான கிறிஸ்டோபர் சோபி, இசக்கிமுத்துவின் சொத்து தொடர்பான வழக்கை நடத்தி வருகிறார்.

    ஆரல்வாய்மொழி:

    குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பீமநகரி விதை ஆராய்ச்சி மையம் அருகே சந்தியான் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் இன்று காலை வாலிபர் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    அவரை யாரோ கொன்று உடலை எரித்துள்ளனர். இறந்து கிடந்தவரின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்த நிலையில் கிடந்ததால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் முதலில் தெரியவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது திருப்பதி சாரம் கீழூர் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 21) என்பவர் ஒருவரை அழைத்து செல்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீசார் இசக்கிமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பிணமாக கிடந்தவரை இசக்கிமுத்து கொன்றதும், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தக்கலை குமாரபுரம் சரல்விளை பகுதியை சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் சோபி(50) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பிணமாக கிடந்த கிறிஸ்டோபர் சோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வக்கீல் கிறிஸ்டோபர் சோபியை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து இசக்கி முத்துவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிறிஸ்டோபர் சோபி கொலைக்கான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    வக்கீலான கிறிஸ்டோபர் சோபி, இசக்கிமுத்துவின் சொத்து தொடர்பான வழக்கை நடத்தி வருகிறார். அந்த வழக்கை விரைந்து முடிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் இசக்கி முத்து தனது சொத்து பத்திரங்களை தன்னிடம் தருமாறு கிறிஸ்டோபர் சோபியிடம் கூறியுள்ளார்.

    ஆனால் பத்திரங்களை கொடுக்க அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் வக்கீல் கிறிஸ்டோபர் சோபியை தீர்த்துக்கட்ட இசக்கிமுத்து முடிவு செய்துள்ளார் . இந்த நிலையில் நேற்று கிறிஸ்டோபர் சோபி தனக்கு வாழைக் கன்றுகள் வேண்டுமென்று இசக்கிமுத்துவிடம் கேட்டுள்ளார்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிறிஸ்டோபர் சோபியை தீர்த்துக்கட்ட இசக்கிமுத்து திட்டமிட்டுள்ளார். தங்களது ஊரில் வாழைக்கன்றுகள் இருப்பதாகவும், அங்கு வருமாறும் கிறிஸ்டோபர் சோபியிடம் கூறியுள்ளார். அதனை நம்பி அவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் இசக்கிமுத்து வீட்டிற்கு வந்துள்ளார்.

    சந்தியான் குளக்கரை பகுதியில் உள்ள தோட்டத்தில் வாழைக்கன்று இருப்பதாக கூறி அங்கு கிறிஸ்டோபர் சோபியை தனது மோட்டார் சைக்கிளில் இசக்கிமுத்து அழைத்து சென்றார். அங்கு வைத்து கிறிஸ்டோபர் சோபியை தன்னிடம் இருந்த அரிவாளால் இசக்கிமுத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். கொலை செய்யப்பட்ட கிறிஸ்டோபர் சோபியை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை எரித்துவிட முடிவு செய்தார். அதற்காக தனது மோட்டார் சைக்கிளில் இருந்தே பெட்ரோலை எடுத்து, கிறிஸ்டோபர் சோபி உடலில் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

    பின்பு அங்கிருந்து இசக்கிமுத்து அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததால் இசக்கிமுத்து சிக்கினார். கைது செய்யப்பட்ட இசக்கி முத்துமிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வக்கீல் வெட்டிக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தால் ஆரல்வாய்மொழி மற்றும் தக்கலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கொலைகள் சர்வசாதாரணமாகி இருக்கின்றன.
    • பொதுமக்கள் என, யார் உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை, தமிழகத்தில் நீடிப்பது அச்சத்திற்குரியது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயகுமார் என்பவர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கொலைகள் சர்வசாதாரணமாகி இருக்கின்றன. சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது குறித்து எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அமைச்சர்கள், கொலைகள் நடக்கத்தான் செய்யும் என்ற ரீதியில் பேசுவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல.

    ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் தொடங்கி, தி.மு.க. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என, யார் உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை, தமிழகத்தில் நீடிப்பது அச்சத்திற்குரியது.

    சமூக வலைத்தளங்களில், தி.மு.க. அரசின் தவறுகளை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதற்காக மட்டுமே காவல்துறையினர் பயன்படுத்தப்படுகின்றனரே தவிர, காவல்துறையின் முக்கியக் கடமையான சட்டம் ஒழுங்கு, முற்றிலும் சீர்குலைந்து கிடப்பது, அரசியல் கடந்து மிகவும் வருந்தத்தக்கது.

    சட்டம் ஒழுங்கைக்காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜெய்கணேசை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.
    • சைதாப்பேட்டை கோர்ட்டில் ஜெய்கணேஷ் பணிபுரிந்து வந்ததால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    சென்னை பெருங்குடி ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். 33 வயதான இவரது சொந்த ஊர் கோவில்பட்டி ஆகும். திருமணமான ஜெய்கணேஷ், மனைவி முருகேஸ்வரி மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் பெருங்குடியில் வசித்து வந்தார்.

    சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக பணி புரிந்து வந்த இவர் நேற்று மாலையில் நண்பர்களுடன் வெளியில் சென்று அதே பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார்.

    பின்னர் நேற்று இரவு 9 மணியளவில் வக்கீல் ஜெய்கணேஷ் வீடு திரும்பினார். ராஜீவ் நகர் முதல் மெயின் ரோட்டில் உள்ள தனது வீட்டு அருகே சென்ற போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் 'திடீர்' தாக்குதலில் ஈடுபட்டது. வக்கீல் ஜெய்கணேசை தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.

    இதில் நிலை குலைந்த ஜெய்கணேஷ் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார்.

    இதையடுத்து உயிருக்கு போராடிய ஜெய்கணேசை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஜெய்கணேஷ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஜெய்கணேசின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், நண்பர்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அதிக எண்ணிக்கையில் ஜெய்கணேசின் உறவினர்களும் நண்பர்களும் திரண்டு திடீரென ஆஸ்பத்திரி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெய்கணேசை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என்று உறுதி அளித்தனர். இதன்பிறகே அவர்கள் கலைந்து சென்றனர்.

    சைதாப்பேட்டை கோர்ட்டில் ஜெய்கணேஷ் பணிபுரிந்து வந்ததால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    கொலையாளிகளை பிடிக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டு உள்ளனர். கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜீவானந்தம், துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் ஆகியோர் கொலையாளிகள் பற்றி துப்பு துலக்கி வருகிறார்கள்.இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து ஜெய்கணேசை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஜெய்கணேஷ், கிரிக்கெட் விளையாடி விட்டு வீடு திரும்பியபோது அவரை ரவுடிக்கும்பலை சேர்ந்தவர்கள் பின் தொடர்ந்து சென்று திட்டம் போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதனால் ஜெய்கணேஷ் வீட்டுக்கு வந்த வழியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வில்லை. ரவுடிக் கும்பலை சேர்ந்த சிலரே இந்த கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததால் அவர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×