search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திலக் வர்மா"

    • லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் இருக்கிறது.
    • இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் பெருத்த தடுமாற்றத்தை சந்தித்ததுடன் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை முதல் அணியாக பறிகொடுத்தது.

    அந்த அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கேப்டன் மாற்றத்தால் வீரர்கள் இடையே ஏற்பட்ட புகைச்சல் அந்த அணியின் சறுக்கலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    மும்பை அணியில் பேட்டிங்கில் திலக் வர்மா (3 அரைசதம் உள்பட 416 ரன்), ரோகித் சர்மா (ஒருசதம் உள்பட 349 ரன்), சூர்யகுமார் யாதவ் (1 சதம், 3 அரைசதம் உள்பட 345 ரன்), இஷான் கிஷன் (306 ரன்), டிம் டேவிட் என்று பெரிய பட்டாளமே அணிவகுத்து நிற்கிறது. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பியுஷ் சாவ்லா, நுவன் துஷாரா ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் (-0.787) மிகவும் பின்தங்கி இருக்கும் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விட்டது. லக்னோ தனது கடைசி 3 ஆட்டங்களில் கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்தது பெருத்த சரிவாக அமைந்தது.

    வெற்றியுடன் விடைபெறுவது யார்?

    லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (3 அரைசதத்துடன் 465 ரன்), நிகோலஸ் பூரன் (2 அரைசதத்துடன் 424 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (1 சதம், 2 அரைசதத்துடன் 360 ரன்), குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் நவீன் உல்-ஹக், யாஷ் தாக்குர், மொசின் கான், ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஆடும் இரு அணிகளும் வெற்றியுடன் விடைபெறுவதுடன், புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், மும்பை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    மும்பை: ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்),நேஹல் வதேரா, டிம் டேவிட், பியுஷ் சாவ்லா, ஜெரால்டு கோட்ஜீ, ஜஸ்பிரித் பும்ரா, நுவன் துஷாரா.

    லக்னோ: லோகேஷ் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், குருணல் பாண்ட்யா, ஆயுஷ் பதோனி, அர்ஷத் கான் அல்லது மொசின் கான், யுத்விர் சிங், ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று அறிவித்தது
    • உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

    இதன் தொடர்ச்சியாக அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் ஜெய்ஷாவை சந்திக்கிறது. இந்த கூட்டத்தில் 15 வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    இதை தொடர்ந்து உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று அறிவித்தது.

    இந்திய அணியில் பினிஷராக ரிங்கு சிங் இடம் பெறுவாரா? இல்லை சிவம் துபே இடம் பெறுவாரா என்ற இழுபறி நீடித்தது. இந்த போட்டியில் முந்திய துபே அணியில் இடம் பெற்றுள்ளார்.

    உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்திருந்த நிலையில் அவர் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சீசனில் ரிங்கு சிங்கால் போதிய ரன்களை குவிக்க முடியவில்லை. அதனை காரணம் காட்டியே அவர் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து ரிங்கு சிங் கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தார். அந்த சீசனில் அவர் 474 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் வழியாக பிசிசிஐ தேர்வாளர்களின் கவனத்தை அவர் டி20 கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார்.

    இந்தியாவுக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங் இரண்டு அரைசதங்களுடன் 176 ஸ்ட்ரைக்-ரேட்டுடன் சிறப்பாக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் திலக் வர்மாவுக்கும் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் அவர் 9 போட்டிகளில் விளையாடி 336 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிம் டேவிட் 17 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • திலக் வர்மா 32 பந்தில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி மெக்கர்க் (27 பந்தில் 84 ரன்), ஸ்டப்ஸ் (25 பந்தில் 48 ரன்), ஷாய் ஹோப் (17 பந்தில் 41 ரன்) ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் டெல்லி அணி 257 ரன்கள் குவித்தது.

    பின்னர் 258 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. பவர்பிளேயான முதல் ஆறு ஓவரில் மும்பை இந்தியன்ஸ் ரன்கள் குவிக்க திணறியது. இஷான் கிஷன் 14 பந்தில் 20 ரன்களும், ரோகித் சர்மா 8 பந்தில் 8 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 13 பந்தில் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆறு ஓவரில் 65 ரன்கள் அடிப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. என்றபோதிலும் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் கொடுக்க முடியவில்லை. ஹர்திக் பாண்ட்யா 24 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வதேரா 2 பந்தில் 4 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

    6-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஒரு கட்டத்தில் மும்பை அணி வெற்றி பெறும் என்ற நிலைக்கு வந்தது.

    அந்த நேரத்தில்தான் 18-வது ஓவரின் 4-வது பந்தில் டிம் டேவிட் 17 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ரிசிக் சலாம் வீசினார். இந்த ஓவரில் மும்பை அணிக்கு 16 ரன்கள் கிடைத்தது.

    இதனால் கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. திலக் வர்மா எதிர்கொண்டார். முகேஷ் குமார் இந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் இரண்டு ரன்களுக்கு ஓடும்போது திலக் வர்மா ரன்அவுட் ஆனார். அவர் 32 பந்தில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். அத்துடன் மும்பை அணியின் நம்பிக்கை வீணானது.

    கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.

    • இந்தியா 19.3 ஓவரில் 180 ரன்கள் சேர்த்தது.
    • தென்ஆப்பிரிக்கா 13.5 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 15 ஓவரில் 152 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கை 13.5 ஓவரில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி தொடக்கத்தில் 6 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினர். 3-வது வீரராக களம் இறங்கிய திலக் வர்மா 20 பந்தில் 29 ரன்கள் விளாசினார். இவர் ஆட்மிழக்கும்போது 5.5 ஓவரில் 55 ரன்கள் சேர்த்திருந்தது.

    வேகப்பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு விளையாடினார்கள். ஆனால் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்களான ஷம்சி, மார்க்கிராம் பந்து வீச்சில் சற்று திணறினர். ஷம்சி 4 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மார்க்கிராம் 3 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினர்.

    மிடில் ஓவர்களில் இருவரும் சிறப்பாக செயல்பட்டதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை என திலக் வர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து திலக் வர்மா கூறியதாவது:-

    நாங்கள் பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் சற்று மெதுவாக இருந்தது. புதுப்பந்து சற்று கூடுதலாக சீமிங்-கிற்கு ஒத்துழைத்தது. மார்க்கிராம் மற்றும் ஷம்சி ஆகியோர் பந்து வீசும்போது ஆடுகளம் க்ரிப் (grip) ஆக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஷம்சி, மார்கிராம் ஸ்பெல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இல்லையெனில் நாங்கள் 200 ரன்களை கடந்திருப்போம்.

    நாங்கள் பவர்பிளேயில் சற்று கூடுதலாக ரன்கள் கொடுத்து விட்டோம். அதன்பின் நாங்கள் வலுவான நிலைக்கு திரும்பிய நிலையில், பவுண்டரி லைன் அருகே ஈரப்பதாக இருந்ததால் பந்து நனைந்து, க்ரிப் இல்லாமல் போனது.

    இவ்வாறு திலக் வர்மா தெரிவித்தார்.

    • இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டி 20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.
    • விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    திருவனந்தபுரம்:

    ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.

    இந்த ஆட்டத்திலும் வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இருக்கிறது.

    மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையில் உள்ளது. இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    இந்தப் போட்டி குறித்து இந்திய வீரர் திலக்வர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ரிங்கு சிங் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருவதால் அவரிடம் இருந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது எப்படி என்று கற்று வருகிறேன். இனி வரும் போட்டிகளில் நானும் அதை செய்ய விரும்புகிறேன். அதை செய்வேன் என்று நம்புகிறேன்.

    எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. எந்தவித நெருக்கடியும் இல்லாமல் ஆட்டத்தை நிறைவு செய்ய நினைக்கிறேன். 5-வது வரிசையில் ஆடும் நான் எனது பங்களிப்பை முடிந்தவரை செயல்படுத்துவேன் என தெரிவித்தார்.

    இடதுகை பேட்ஸ்மேன் ஆன திலக் வர்மா, 11 டி20 போட்டியில் விளையாடி 243 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 அரைசதம் அடங்கும்.

    • இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    • திலக் வர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.

    பீஜிங்:

    சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவரில் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்தியா சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டானார். கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட், திலக் வர்மா ஜோடி அதிரடியாக ஆடியது. திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். திலக் வர்மா 55 ரன்னும், கெயிக்வாட் 40 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில் இந்தியா 97 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றது.

    இந்நிலையில், திலக் வர்மா தான் அடித்த அரை சதத்தை தாய்க்கு சமர்ப்பிக்கும் வகையில், தனது உடம்பில் வரைந்திருந்த தாயின் டாட்டூ படத்தை குறிப்பிட்டுக் காட்டினார்.

    • இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்ற கனவு எனக்குள் இருந்தது.
    • எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

    மும்பை:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 20 வயதான திலக் வர்மா, அண்மையில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். ஒரு அரை சதம் 173 ரன்கள் சேர்த்தார். இதில் 2 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வந்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இளம் வீரர் திலக் வர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்ற கனவு எனக்குள் இருந்தது. ஆனால், இது மிகவும் பெரியது. அடுத்தடுத்த மாதங்களில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அதற்கு நான் தயாராகிக் கொண்டுள்ளேன்.


    லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் எனது மாநில அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிகம் விளையாடி உள்ளேன். அந்த நம்பிக்கையை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலும் காட்டுவேன்.

    என திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

    மேற்கிந்திய தீவுகளில் திலக் வர்மாவிடம் செயல்திறனை மட்டும் நாங்கள் பார்க்கவில்லை, சிறந்த மனோபாவத்துடன் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் செயல்பட்டார். இதுவே அவரை, ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற செய்தது என அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்,

    • இந்த அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளான சமைராவுக்கு நான் அர்ப்பணிக்கிறேன்.
    • அதற்காகத்தான் வித்தியாசமான முறையில் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று கயானாவில் நடந்தது. இதில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. எனினும், ஒருபுறம் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா சர்வதேச டி20 போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதவு செய்தார். அவர் 41 பந்துகளில் ஒரு சிக்சர் 5 பவுண்டரிகள் உள்பட 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தப் போட்டியில் இந்தியா 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அரைசதம் மற்றும் சதம் அடித்தால் வீரர்கள் அவர்களுக்கு என்று ஒரு பாணியை வைத்துள்ளனர். ஜடேஜா என்றால் பேட்டை சுழற்றி காட்டுவார். கேஎல் ராகுல் காதை மூடிக்கொள்வார். இப்படி இருக்க திலக் வர்மாவும் தனக்கென ஒரு பாணியை கொண்டுள்ளார்.


    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது போட்டியில் அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் திலக் வர்மா இரு கட்டை விரல்களையும் மாற்றி மாற்றி காண்பித்து குழந்தையை போல் கொண்டாடினார்.

    இது குறித்து திலக் வர்மா கூறியிருப்பதாவது:-

    இந்த அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளான சமைராவுக்கு நான் அர்ப்பணிக்கிறேன். அதற்காகத்தான் வித்தியாசமான முறையில் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.

    நாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். ஆதலால், நான் எனது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எப்போது அரைசதம் அடிக்கிறேனோ அதனை சமைராவுக்கு அர்ப்பணிப்பதாக சொல்லியிருந்தேன். அதன்படியே செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐபிஎல் தொடர் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது.
    • ரோகித் சர்மா எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் திலக் வர்மாவை தவிர மற்ற இந்திய அணி வீரர்கள் சொதப்பினர். திலக் வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20-யில் தனது முதல் அரை சதம் அடித்தார்.

    இந்நிலையில் எனது உத்வேகம் சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா என்று திலக் வர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து திலக் வர்மா கூறியதாவது:-

    சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா எனது உத்வேகம். ரோகித் பாயுடன் அதிக நேரம் செலவிடுகிறேன். என்னுடைய முதல் ஐபிஎல் தொடரில், திலக் நீங்கள் ஒரு அனைத்து வடிவ கிரிக்கெட் வீரர் என்று அவர் என்னிடம் கூறினார். அது என் நம்பிக்கையை அதிகரித்தது. அவருடைய வழிகாட்டுதல் எனக்கு மிகப்பெரியதாக இருந்தது.

    ரோகித் சர்மா எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார். எப்போதும் என்னிடம் பேசி விளையாட்டை ரசிக்கச் சொல்வார். ஐபிஎல் தொடர் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்தியாவுக்காக விளையாட எனக்கு இந்த சிறப்பான ஆட்டம் உதவியது. முன்னோக்கி செல்லும் நான் அதை தொடர விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்தது.

    கயானா:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

    5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கயானாவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 51 ரன்னில் அவுட்டானார். இஷான் கிஷன் 27, ஹர்திக் பாண்ட்யா 24 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

    • டாப் மூன்று பேட்ஸ்மேன்களில் இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் விளையாடுவார்கள்.
    • ஹர்திக் 5-ம் இடத்திலும், திலக் வர்மா 6-ம் இடத்திலும் பேட் செய்ய வேண்டி இருக்கும்.

    மும்பை:

    மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா தலைமையில் 15 பேர் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டது.

    இந்த அணியில் ரிங்கு சிங் இடம் பெறவில்லை. அது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-

    இந்திய அணியின் நடு வரிசையில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட் செய்யலாம். நிச்சயம் திலக் வர்மாவை மூன்றாவது பேட்ஸ்மேனாக விளையாட வைக்கும் யோசனை அணிக்கு இருக்காது. அவர் ஹர்திக் பாண்டியாவிற்கு பிறகு பேட் செய்ய வருகிறார் என்றால் அதற்கு ரிங்கு சிங் தான் சிறந்த தேர்வாக நிச்சயம் இருப்பார்.

    டாப் மூன்று பேட்ஸ்மேன்களில் இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் விளையாடுவார்கள். அது தான் அவர்கள் பேட் செய்ய ஏற்ற இடமும் கூட. சூர்யகுமார் யாதவ் டாப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளையாடுவார்.

    ஹர்திக் 5-ம் இடத்திலும், திலக் வர்மா 6-ம் இடத்திலும் பேட் செய்ய வேண்டி இருக்கும். அந்த இடத்திற்கு திலக் வர்மா, சரி வருவாரா என்பது தான் எனது கேள்வி. அவர் டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர். இதை கடந்த ஐபிஎல் சீசனில் நாம் பார்த்திருந்தோம். அதே சீசனில் கேமரூன் கிரீன் டாப் ஆர்டரில் ஆடி இருந்தார். அதனால் திலக் பின்வரிசையில் ஆடினார். ஆனால், இந்திய அணியில் அவர் பின்வரிசையில் ஆடுவதற்காக தேர்வாகி இருந்தால் நிச்சயம் அதற்கு ரிங்கு தான் சரியான நபர்.

    என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    • இந்த இரண்டு வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் பெரிய நட்சத்திரங்களாக மாறுவார்கள்.
    • இளம் வீரர்களான திலக் வர்மா, வதேரா ஆகியோர் இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் குர்ணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது.

    டாஸ் வென்று மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இம்பெக்ட் பிளேயராக களமிறங்கிய நெகல் வதேரா 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் இவர் அடித்த ரன் மும்பை அணிக்கு கூடுதல் பலமாக இருந்தது. இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 16.3 ஓவரில் 101 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் மத்வால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இந்த ஐபில் சீசனில் சில அனுபவம் வாய்ந்த வீரர்களை மட்டுமே மும்பை அணியில் உள்ளனர். பும்ரா, ஆர்ச்சர் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலே மும்பை அணி இளம் வீரர்கள் உதவியுடன் பிளே ஆப் சுற்று வரை வந்துள்ளது மிக பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இளம் வீரர்களான திலக் வர்மா, வதேரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னர் ரோகித் சர்மா பேசும்போது பும்ரா, பாண்ட்யா சென்ற உயரம் திலக் மற்றும் வதேரா செல்வார்கள் என கூறினார்.

    இது குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, ஹர்திக் மற்றும் குர்ணால் பாண்ட்யா போன்ற வீரர்களுடைய முன்னேற்றம் எப்படி இருந்ததோ, அதே போன்ற கதைதான் திலக் வர்மா மற்றும் நேகல் வதேரா இருவருக்கும் இருக்கப்போகிறது.

    இந்த இரண்டு வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் பெரிய நட்சத்திரங்களாக மாறுவார்கள். ஒருநாள் எங்களுடைய இந்த மும்பை அணியையும் சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த அணி என்று கூறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×