என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்புக்கட்டுரை"

    • மேரி அழுகையுடன் அப்படியே சாய்ந்து ஒரு பாறையில் அமர்ந்தாள்.
    • ராஜேஷ் தைரியமாய் நிற்க, டேவிட் ‘டிரிக்’கரில் விரல் வைக்க, அழகர் உள்பட மொத்த போலீஸ் டீமும் பதறியது.

    அழுதபடியே தொடர்ந்து பேசினாள் மேரி... "உங்கள காப்பாத்தணும்னு தனி ஆளா போலீஸ் ஸ்டேஷனுக்கு, வந்தேன். வந்து பார்த்தா உங்களை மிரட்டி கார்ல ஏத்தி.. ராஜேஷோட ஆளுங்க எங்கேயோ கொண்டு போக போறாங்கன்னு யூகிச்சு யாருக்கும் தெரியாம டிக்கியில ஏறி... இவ்ளோ தூரம் மூச்சுவிட முடியாம சிரமப்பட்டு நீங்க வந்த கார்லதான் நானும் வந்தேன்.. கடைசியில பார்த்தா எல்லாத்துக்கும் காரணம் என் அப்பான்னு நெனைக்கிறப்போ நெஞ்சுக்குழில நெருப்ப வெச்ச மாதிரி இருக்குப்பா…" தலையில அடித்தபடி மேரி அழ, தேவசகாயம் மவுனமாய் நின்று கொண்டிருந்தான்.

    டேவிட்டின் துப்பாக்கி முனை எப்போது அழுத்தப்படுமோ என்ற பயத்தில், ராஜேஷ் மற்றும் அவன்கூட வந்தவர்கள் வெலவெலத்து போய் நின்று கொண்டு இருந்தனர்.

    மேரி அழுகையுடன் அப்படியே சாய்ந்து ஒரு பாறையில் அமர்ந்தாள். இப்போது பெருமாள் வெடித்தான்.

    "தேவசகாயம்.. நானும் கட்சியில் இருக்கிறதால, எங்கட்சிக்கு பிடிக்காதேன்னு, என் தங்கச்சி திவ்யா வேற மதத்துகாரனை காதலிக்கிறான்னு தெரிஞ்சதும் எதிர்ப்பு தெரிவிச்சேன், அவங்க கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு தடுக்க ரொம்ப முயற்சி பண்ணேன். இன்னும் சொல்லப் போனா அவங்க கல்யாணத்தை நிறுத்த நான் முயற்சி பண்ணதுதான் இந்த கதையோட ஆரம்ப அத்தியாயமே. ஆனா- பாருங்க.. ஆரம்பத்துல இருந்து எதிர்த்த நான், டேவிட்டும், திவ்யாவும் கல்யாணம் பண்ணிகிட்டாங்கன்னு தெரிஞ்சதும், ஒதுங்கிட்டேனே தவிர இப்படி உங்கள மாதிரி திட்டம் போடல. உங்க வயசுக்கு நீங்க மத்தவங்களை வாழ்த்தணும். இப்படி வாழவேண்டியவங்க வாழக்கையில வீணா விளையாடி, உங்க மானத்தை மட்டுமல்ல...மரியாதையையும் இழந்து நிக்குறீங்க. சே.. உங்களை பார்க்கவே அருவருப்பா இருக்குது சார்..!" பெருமாள் முகம் சுழித்து, வெறுப்பை உமிழ்ந்தான்.

    டேவிட்டின் நண்பர்கள் நெல்சன் முன் வந்து, "அப்பான்னுதான் உங்களை கூப்பிடுவோம். அதுக்கு காரணம், நீங்க டேவிட்டோட அப்பா அப்படிங்கிறதால மட்டுமல்ல. உங்க வயசுக்கு நாங்க குடுத்த மரியாதைதான் இது. நானும் கிறிஸ்டியன்தான் சார். ஆனா, உங்களுடைய மதவெறி ஆபத்தான, அசிங்கமான ஒரு குணம். இதே டேவிட் இடத்துல நான் இருந்தா எடுக்கிற முடிவு வேற மாதிரி இருந்திருக்கும்.."

    அவன் சொல்லி முடிக்கவும் ராஜேஷ் கத்தினான். "என்னடா.. ஆளு ஆளுக்கு இதான் சமயம்னு அந்தாளை பிடிச்சு உலுக்குறீங்க.. ஆமாய்யா அந்த தேவசகாயம் என்கூட சேர்ந்து திட்டமிட்டு, இந்த தில்லாலங்கடி வேலை செஞ்சது தப்புதான்! அதுக்கு என்ன பண்ண போறீங்க.. எங்க தைரியம் இருந்தா.. அந்த டேவிட் கையில துப்பாக்கி இருக்குல்ல.. டொப்பு டொப்புனு என்னையும், அந்த தேவசகாயத்தையும் சுடச்சொல்லுங்களேன்.."

    பெருமாள் டேவிட்டை பார்க்க, டேவிட் ராஜேஷை முறைத்தான்.

    "என்னயா டேவிட் முறைக்கிற. நியாயப்படி பார்த்தா உன் பொண்டாட்டிய நான் கடத்தி இருக்கேன், அது என்னவோ சொல்வாங்களே என்ன அது..?" யோசித்த ராஜேஷ், நினைவுக்கு வந்தவனாய் தொடர்ந்தான்.

    "ஆங்.. நீ தொட்டு தாலி கட்டின, உன் பொண்டாட்டி தாலிய, கட் பண்ணி பார்சல் அனுப்பினவன் நான். கொச்சையா சொல்லனும்னா தாலிய அறுத்து எரிஞ்சவன் நான். நியாயப்படி பார்த்தா நான்தான் முதல் குற்றவாளி. உங்க அப்பா ரெண்டாவது குற்றவாளி. புரியுதா..?" - எகத்தாளமாய் ராஜேஷ் பேசினான்.

    டேவிட்டின் கண்கள் சிவந்தது. ராஜேஷ் தொடர்ந்தான்.

    "அதனால… நீ ஆம்பளையா இருந்தா என்னை ஒரு புல்லட்டால சோலிய முடுச்சுட்டு, இன்னொரு புல்லட்டால உன் அப்பனையும் முடுச்சுடு. கோர்ட்ல கேட்டா யாரோ சொன்னாங்களே.. அது மாதிரி தற்காப்புக்கு சுட்டேன்னு சொல்லிக்கோ… சுடு… சுடு… சுடு… சுடுமா..!"தன் சட்டைப்பட்டனை திறந்து மார்பை காட்டினான் ராஜேஷ்.

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

    டேவிட்டின் ரத்தம் சூடேறியது. துப்பாக்கியை அவன் நெஞ்சுக்கு நேராக நீட்டினான். - திவ்யா திகைத்து போய் பார்க்க.. டேவிட்டின் நண்பன் தியாகு கத்தினான்.

    "சுடுறா.. மாப்பிள்ளை இவன் எல்லாம் பூமிக்கு பாரம்தான்.."

    ராஜேஷ் தைரியமாய் நிற்க, டேவிட் 'டிரிக்'கரில் விரல் வைக்க, அழகர் உள்பட மொத்த போலீஸ் டீமும் பதறியது.

    "சுடுறா.. மாப்ளே.." - செந்தில் குரல் கொடுத்தான்.

    இப்போது, ட்ரிக்கரை அழுத்தப்போன டேவிட், துப்பாக்கியை கீழ் இறக்க, எல்லோரும் அவனையே பார்க்க, டேவிட் பேசினான்.

    "நான் எப்பவுமே தப்பு செய்ற மனிதர்களை மன்னிக்கணும்னு நெனைக்கிறவன். காரணம் - பயம் இல்ல பக்குவம். அவங்க அவங்களுக்கு ஒரு நியாயம், ஒரு காரணம் அவங்க பண்ற செயலுக்கு வச்சிருப்பாங்க. அது தப்புன்னு அவங்க உணரனும்னா, அவங்களுக்கு தண்டணை தர்றதை விட மன்னிக்கிறது தான் சரி..!" சொன்ன டேவிட் தொடர்ந்தான்.

    "ராஜேஷ் விளையாட்டுல கூட சில சமயம் இந்த விளையாட்ட விளையாட வேண்டாம்னு முடிவு எடுக்கணும். தப்பா விளையாடி தோற்கறதை விட, விளையாடாம இருக்கிறது கூட ஒரு வகையில் வெற்றிதான்..!" டேவிட் சொல்லி முடிக்கவும், அவன் கையில் இருந்த, ரிவால்வர் பறிக்கப்பட்டு, ராஜேஷ் மார்பின் மீது 'படபட' வென்று குண்டுகள் பாய, ராஜேஷ் சரிந்து விழுந்தான்.

    ஒரு கணம் 'என்ன நடந்தது' என அனைவரும் யூகிக்கும் போதுதான் தெரிந்தது ராஜேஷை சுட்டு விட்டு, குண்டுகள் தீர்ந்து துப்பாக்கியுடன் தேவசகாயம் நின்றுகொண்டு இருந்தார்.

    "அவசரப்பட்டுடீங்களே அப்பா.." டேவிட் அழும் குரலில் சொன்னான். "இல்லே டேவிட்.. இப்பதான் நிதானமா செயல்பட்டு இருக்கேன். மதம் என்னை மனுஷனா நடக்க விடலை… உன் கல்யாணம் எனக்கு பிடிக்கலேன்னா நான் ஒதுங்கி போயிருக்கணும்.. இப்படி தரம் தாழ்ந்து இந்த ராஜேஷ் கூட சேர்ந்து செயல்பட்டு இருக்க கூடாது. என்ன நீயும், திவ்யாவும் மன்னிச்சுடுங்க.. கண்ணீர் மல்க, தன் உதடு வெடிக்க பேசினார் தேவசகாயம்.

    ஏதோ சொல்ல, டேவிட் வாயை திறக்க முயல, அவன் வாயை பொத்தி, "எதுவும் சொல்லாத டேவிட்.. நான் வாழத்தகுதி இல்லாத ஒரு ஆளு.." - சொன்னவர், அடுத்த கணம் யாரும் எதிர்பார்க்காமல், அந்த காட்டு பகுதியில் இருந்து இறங்கி, ரோடு நோக்கி ஓடினார். என்ன? ஏது? என்று உணரும் முன் ரோட்டில் படுவேகமாய் வந்த லாரியின் குறுக்கே பாய்ந்தார். 'ஐயோ' என்ற ஒட்டுமொத்த பேரின் கூக்குரல் காடு எங்கும் ஒலிக்க, உடல் சிதறி உருக்குலைந்தார் தேவசகாயம்.

    அதே நேரம்! டேவிட் நண்பர்கள் கொடுத்த தகவல்படி போலீஸ் படைகள் வேனில் வந்து இறங்கவும் சரியாய் இருந்தது.

    ஆயிற்று! ஒரு வருஷம் ஓடிப்போனது!

    எல்லாம் முடிந்து, தேவசகாயம் மாலையுடன் போட்டோவாய் தூங்கிக் கொண்டிருந்தார். நடந்த சம்பவங்களை எல்லோரும் மறந்து அவர் அவர் வேலைகளில் ஈடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். போலீஸ், கோர்ட் என விசாரித்து ராஜேஷின் கூட்டாளிகள் ஜெயில் தண்டனை பெற்றுவர, அழகர் தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தார். வழக்கு போய் கொண்டிருக்கிறது.

    அதே குறுக்குத்துறை முருகன் கோவில்.

    சாமி கும்பிட்டுவிட்டு வெளிப்பிரகாரத்தில் அமர்ந்திருந்தனர் திவ்யாவும், டேவிட்டும். இருவரும் இப்போது இருவேறு கம்பெனிகளில் வேலைகிடைத்து, போய் வந்தாலும், பகுதி நேரமாய், இன்னும் தங்களது 'திவ்ய கானங்கள் வைப்ஸ்' இசைக்குழுவை நடத்திக்கொண்டு இருந்தனர். இருவருக்குமே நேரம் கிடைப்பது அரிதாய் இருந்தாலும் மாதா மாதம் ஒரு இரண்டாம் செய்வாய்க்கிழமை இந்த குறுக்குத்துறை முருகன் கோவிலுக்கு வருவதை மட்டும் தவற விடுவதே இல்லை.

    தன்னை பெரிய ஆபத்தில் இருத்து காப்பாற்றியது இந்த முருகன்தான் என்பதில் திவ்யாவுக்கு அப்படி ஒரு நம்பிக்கை. அவள் நம்பிக்கையை மதித்து டேவிட்டும் அவளுடன் வருகிறான். அதேபோல, டேவிட்டின் நம்பிக்கைக்காக வாரம் தவறாமல் அவனுடன் ஞாயிற்றுகிழமை சர்ச்சுக்கு செல்ல திவ்யாவும் தவறவிடுவதில்லை.

    அப்போது பைக்குகள் சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்க்க, டேவிட் நண்பர்கள் நெல்சன், தியாகு, செந்தில் முகம் நிறைய மகிழ்ச்சியுடன் ஓடி வந்தனர்.

    "என்னடா… ரொம்ப சந்தோஷமா வர்ரீங்க… என்ன விஷயம்?"

    "மாப்ளே.. நாம எதிர்பாராமலே பெங்களூர்ல நமக்கு ஒரு கச்சேரி புக் ஆகிருக்குடா…"

    - நெல்சன் மூச்சு வாங்க சொன்னான்.

    "ஆமாம்., மாப்ளே நாம வாங்குற தொகையை விட ரெண்டு மடங்கு.." - செந்தில் குதித்தான்.

    "ஆரம்பத்துல பிரியா கச்சேரி பண்ணோம்.. இப்போ ரெண்டு மடங்கு சம்பளம்.. இதான் மாப்ளே வளர்ச்சி…" - தியாகு சொன்னான்.

    அனைவரின் முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாடியது. இப்படித்தான் 'முதல் வெளியூர் கச்சேரி' என்று மேலூர் போகும் சமயம் திவ்யாவை ஆபத்து சூழ்ந்தது. இம்முறை பெங்களூர் செல்லப்போகும் அவளை எந்த ஆபத்தும் நெருங்காது என திவ்யா நம்பினாலும், அவள் மனசுக்குள் ஒரு பயம் வரத்தான் செய்தது. ஆனால் - மகிழ்ச்சியில் டேவிட் அவளை பார்த்து "உசுரே நீதானே…" என விசிலில் பாடி, தோளை அணைத்தான்.

    (முற்றும்)

    E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

    • அமெரிக்காவை சேர்ந்த ‘ஓபன் ஏ.ஐ.’ என்ற நிறுவனம் தான் இதை உருவாக்கி இருக்கிறது.
    • தகவல் தொழில்நுட்ப உலகில் கூகுள் தேடுபொறிதான் உலக அளவில் மிகப்பெரிய ஜாம்பவனாக நிற்கிறது.

    கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் ஆச்சரியமானவர்கள் என்றால் மனிதர்களால் படைக்கப்படும் கண்டுபிடிப்புகள் அதைவிட ஆச்சரியமானவைகளாக இருப்பது நிதர்சனமான உண்மை.

    'சாட் ஜி.பி.டி.' இது ஒரு செயற்கை நுண்ணறிவு இயங்குதளம்! அறிவியல் உலகின் அதிசயம். ஆனால் உண்மை.

    பழங்கால சினிமாவில் 'ஜீபூம்பா' என்று சொன்னவுடன் 'சொல்லுங்க பிரபு. நான் உங்கள் அடிமை' என்று சொல்லி ஒரு பூதம் வந்து நிற்குமே. அதேபோல் இந்த இயங்குதளம் உண்மையாகவே நம் முன் வந்து நிற்கிறது.

    அமெரிக்காவை சேர்ந்த 'ஓபன் ஏ.ஐ.' என்ற நிறுவனம் தான் இதை உருவாக்கி இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப உலகில் கூகுள் தேடுபொறிதான் உலக அளவில் மிகப்பெரிய ஜாம்பவனாக நிற்கிறது. ஆனால் இந்த 'சாட் ஜி.பி.டி.' வந்ததும் தகவல் தொழில் நுட்பம் முழுவதையும் தனது சாம்ராஜ்யத்துக்குள் அடக்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

    இந்த செயற்கை நுண்ணறிவு தளம் மனிதர்களுக்கு மிகச்சிறந்த மதியூக மந்திரியாக இருந்து செயல்படுகிறது. இந்த வேலைக்கு யாரையாவது நியமித்தால் ரகசியங்கள் கசிந்து விடலாம். ஆனால் இந்த தளத்தை துணையாக வைத்து கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம். எந்த ரகசியமும், எந்த சூழ்நிலையிலும் கசிய போவதில்லை. இதை வைத்து என்னதான் செய்ய முடியும்? அப்படி என்னதான் செய்கிறது? என்ன கேட்டாலும் சொல்லும்... எதை சொன்னாலும் செய்யும்...!

    ஒரு கட்டுரை தேவை, ஏதாவது ஒரு தலைப்பில் கவிதை தேவை, கேள்விகளுக்கு விடை தேவை, ஒரு பிரச்சினைக்கு தீர்வு தேவை, வரலாற்று தகவல்கள், அறிவியல் தேடல்கள்... என்று எதை கேட்டாலும் உடனே பதிலை தரும். அதுவும் ஒற்றைவரி பதிலாக இருக்காது. ஆதாரங்களுடன் அற்புதமாக செய்து தந்துவிடும்.

    மென்பொறியாளர்கள் வரி வரியாக எழுதும் கம்ப்யூட்டர் புரோகிராமில் ஏற்படும் தவறுகளை கண்டு பிடித்து திருத்துவதற்கு மணிகணக்கும் ஆகலாம். நாள் கணக்கும் ஆகலாம்.

    ஆனால் நம்ம ஆள் 'சாட் ஜி.பி.டி.'யிடம் சொன்னால் போதும். தவறு எங்கே இருக்கிறது என்பதை உடனே கண்டுபிடித்துவிடும். அதுமட்டுமல்ல. அந்த தவறை திருத்தியும் கொடுத்து விடுகிறது.

    ஒரு டிசைன் வரைய வேண்டும், ஒரு கார்ட்டூன் வரைய வேண்டும். எதுவானாலும் சரி மறுகணமே வரைந்து தருகிறது. அதுவும் நான்கைந்து மாடல்களில் தரும். தேவையானதை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.

    வீட்டுப்பாடம் எழுதி கை வலிக்கிறதா? என்ன பாடம் என்பதை சொன்னால் போதும் அதுவே எழுதி தந்து விடுகிறது.

    சரி இவையெல்லாம் நாம் கேட்பது. அதைவிட்டு விட்டு 'நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று கூறினால் உடனே 'நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? நான் ஏதேனும் உங்களுக்கு உதவ வேண்டுமா? என்று கேட்கிறது! அதாவது நம்மை பற்றி புரிந்தவர்கள் நம் அன்புரிக்குரியவர்கள் நம் மீது அக்கறையுடன் உரையாடுவது போல் உரையாடுவதை பார்த்தால் உடல் புல்லரித்து விடுகிறது.

    உனக்கு விடுகதை தெரியுமா என்று பதிவிட்டால் போதும். எனக்கு தெரியும் என்று சொல்லி ஒரு விடுகதையையும் பதிவிட்டு அதற்கு பதிலையும் பதிவிடுகிறது. அதோடு நிற்காது. நான் விடுகதை சொன்னால் கேட்க விருப்பமா என்று கேட்டு நம் அனுமதியை பெற்று விடுகதையை நமக்கு சொல்லி நம்மையே ஆழம் பார்க்கிறது. கற்பனை வளம், அறிவுத்திறன் மிக்கவர்கள், பலமணி நேரம் உழைத்து செய்யும் வேலையை சில நிமிடங்களில் செய்து முடித்து தந்து விடுகிறது. ஒரு ஊரை பற்றிய தகவல்கள் கேட்டால் அந்த ஊரின் சிறப்புக்களை புகைப்பட காட்சிகளுடன் நான்கைந்து பக்கங்களுக்கு டைப் செய்து தந்து விடுகிறது. சிக்கலான கணித சமன்பாடுகளை தீர்க்க முடியாமல் மணி கணக்கில் மண்டையை பிய்த்து கொண்டிருக்க வேண்டியதில்லை. விஷயத்தை சொல்லுங்கள் மறுவிநாடியே தீர்வை தந்து விடுகிறது.

    விஞ்ஞானத்தின் வளர்ச்சியும், கண்டுபிடிப்புகளும், உலகம் போகும் போக்கையும் நினைத்தால் மலைப்பாக தெரியும். அதே நேரம் இதனால் ஏற்பட போகும் எதிர்விளைவுகள் இனம் புரியாத பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    மூளைக்கு தீனி கொடுக்கும் அசகாய சாமர்த்தியத்தை ஏற்படுத்தி கொடுத்தாலும் நம் வயிற்றுக்கான பசியை அது தீர்க்குமா? என்ற கேள்வி எழுந்தால் விவசாயமும், விவசாயிகளும் மனக்கண் முன் தெரிவார்கள்.

    எது எப்படியோ மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல் வல்லவனுக்கு வல்லவன் எந்த வடிவத்திலா வது உருவாகி கொண்டே இருக்கிறான்.

    • இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே உறுப்பு தானம் செய்ய முன் வருகின்றனர்.
    • உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது.

    தானத்தில் சிறந்தது அன்னதானம், ரத்த தானம் என்ற நிலையெல்லாம் மாறி இன்று உடல் உறுப்பு தானம் மிகவும் உயரிய தானம் என்ற நிலையை எட்டியிருக்கிறது.

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்காக 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

    இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறித்து கடந்த சில ஆண்டுகளாக ஓரளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே உறுப்பு தானம் செய்ய முன் வருகின்றனர். இதனால் போதிய அளவு உடல் உறுப்புகள் கிடைக்காமல் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது.

    உடல் உறுப்பு தானத்தில் 2 விதமான தானம் உள்ளது. ஒன்று உயிரோடு இருக்கும் போது, மற்றொன்று இறந்த பிறகு. புற்றுநோய், ஹெபடிடிஸ், எச்.ஐ.வி. போன்ற நோய் அல்லாதவர்கள் வாழும்போதே உறுப்பு தானம் செய்ய முன் வரலாம். தானம் செய்யும் முன்பு ஏதேனும் நோய் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    தானம் செய்வது மிகவும் எளிது. அரசு தலைமை ஆஸ்பத்திரியை அணுகி உறுப்பு தானத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவர்கள் தரும் அட்டையை எப்போதும் உடன் இருக்குமாறு பர்சிலோ அல்லது சட்டை பையிலோ வைத்துக் கொள்ள வேண்டும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் உறுப்பு தான அட்டை பற்றி தகவல் தெரிவித்துக் கொள்வது அவசியம். உங்களின் ஆசையை அவர்கள் பூர்த்தி செய்ய இது உதவும்.

    இயற்கை மரணத்தின் போது கருவிழி, தோல், தசை நாண்கள் மற்றும் எலும்புகள் ஆகிய சில உறுப்புகள் மட்டுமே தானம் செய்ய முடியும். மற்ற உயிர்காக்கும் உறுப்புகள் பெரும்பாலும் ரத்த உறைதலால் அதிவேகமாக கெடக்கூடும் என்பதால் இவற்றை தானம் செய்வதில் சவால்கள் உள்ளன. மேலும் உறுப்புகள் 6 மணி நேரத்திற்குள் தானம் செய்யப்பட வேண்டும். கருவிழிகளை ஈரத்துணியால் பாதுகாக்க வேண்டும்.

    உயிரோடு இருந்தாலும், மூளை முற்றிலும் செயல்படாத நிலையில் இருந்தால் அது மூளைச்சாவு எனப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட நரம்பியல் நிபுணர், மருத்துவமனையின் தலைவர், நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் இதில் சம்பந்தப்படாத மற்றொரு டாக்டர் என 4 டாக்டர்கள் கொண்ட குழு தீவிர பரிசோதனை மேற்கொண்டே குறிப்பிட்ட நபர் மூளைச்சாவு அடைந்துள்ளார் என்பதை உறுதி செய்வர். அதன்பின்னரே உறுப்பு தானம் பற்றி குடும்பத்தினரிடம் டாக்டர்கள் ஆலோசிப்பர். குடும்பத்தினர் சம்மதம் கொடுக்கும்பட்சத்தில் தான் உடல் உறுப்பு தானம் ஏற்றுக் கொள்ளப்படும்.

    மூளைச்சாவு அடைந்தவரை வென்டிலேட்டரில் வைப்பதால் உறுப்புகளுக்கு சேதம் உருவாகுவதில்லை. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து கண், இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு, தோல் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக பெறலாம். இதன் மூலம் குறைந்தபட்சம் 8 பேர் முதல் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.

    மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்குள்ளாக பிறருக்கு பொருத்தப்பட வேண்டியது அவசியம். இதயம் என்றால் 6 மணி வரையிலும், நுரையீரல் என்றால் 4-6 மணி நேரம் வரையிலும், சிறுநீரகம் என்றால் 72 மணி நேரம் வரையிலும், கல்லீரல் என்றால் 24 மணி நேரம் வரையிலும் பாதுகாப்பாக வைத்திருந்து மற்றவர்களுக்கு பயன்படுத்த முடியும்.

    மூளைச்சாவு என்றால் என்ன?

    மனித உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் மையப்புள்ளி மூளையில் உள்ளது. கையை நன்றாக ஆட்டுகிறோம், காலால் வேகமாக ஓடுகிறோம் என்றால் அந்த சக்தியை கொடுக்க கூடியது மூளை.

    விபத்தின் போது ஒருவருக்கு மூளையில் அடிபட்டு மூளை வேலை செய்யவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பார்கள். அங்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படும். அப்போது இதயம் இயங்கிக் கொண்டு இருக்கும்.

    மூளைக்கு ரத்த ஓட்டம் போகாது. கழுத்துக்கு கீழே அனைத்து உறுப்புகளும் வேலை செய்யும். அந்த நபரை கிள்ளி பார்த்தால் அவரால் உணர முடியாது. குண்டூசியை வைத்து குத்தினாலும் தெரியாது. ஆனால் இதயம் மட்டும் ஓடிக் கொண்டே இருக்கும். இது தான் மூளைச்சாவு அடைந்தவரின் நிலையாக இருக்கும்.

    மூளைக்கு சரியாக ரத்த ஓட்டம் செல்லவில்லை என்றால் மூளை கெட்டு விடும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் ஒரு நிமிடம் தடைபட்டால் மயக்கம் வந்து விடும். இரண்டு நிமிடம், 3 நிமிடம் தடைபட்டால் மூளை செயல்படாமல் போகும். 4 நிமிடத்துக்கு மேல் ரத்த ஓட்டம் போகவில்லை என்றால் மூளை செயல்படாமல் போய் விடும். அது எப்படி என்றால் கெட்டியாக இருக்கும் மூளை ஜெல் போல் மாறி விடும். மூளை கெட்டுப் போய் விட்டால் அதனை திரும்ப மீட்க முடியாது.

    இதேபோல ஏதோ ஒரு காரணத்தால் இதயம் நின்று விடுகிறது. அவ்வாறு இதயம் நின்று விடுவதற்கு பெயர் கார்டியாக் அரெஸ்ட். மசாஜ் கொடுத்து இதயத்தை பழைய படி துடிக்க வைத்துவிட்டால் மூளை தப்பித்து விடும். அதற்கு நேரம் 3-ல் இருந்து 4 நிமிடம் தான். 5 நிமிடம் ஆகிவிட்டால் இதயம் செயல்படத் தொடங்கி விடும். ஆனால் மூளை வேலை செய்யாது. மூளைச்சாவு ஏற்படும் இளைஞரின் இதயம் நன்றாக இருக்கும். அதனை வேறு யாருக்காவது தானம் செய்யலாம். ஆனால் மூளையை மாற்றும் சிகிச்சை இதுவரை வரவில்லை.

    வழக்கமாக இறந்து போகிறவர்களுக்கு இதயம் நின்று விடும். வீட்டில் ஒருவருக்கு மாரடைப்பு வருகிறது. உடனே டாக்டரை கூப்பிடுகிறோம். அவர் நாடித்துடிப்பு பார்க்கிறார். ஸ்டெதஸ்கோப் வைத்து மூச்சு வருகிறதா, வயிறு மேலே, கீழே போகிறதா என்று பார்க்கிறார். வயிறு மேல், கீழ் ஏறி இறங்கவில்லை என்றால் மூச்சு இல்லை என்று அர்த்தம். தட்டி, தட்டி எழுப்புகிறார் எழுந்திருக்கவில்லை. மூளை வேலை செய்யவில்லை. சுய நினைவு இல்லை. முழுமையாக இறந்து விட்டார் என்று அர்த்தம். முழுமையாக இறந்து போனவரின் இதயத்தை மாற்ற முடியாது. உயிர்போன நபர், மூளைச்சாவு அடைந்த நபர் இது தான் வித்தியாசம்.

    விபத்தில் சிக்கிய நபர் என்ன தட்டினாலும் எழுந்திருக்க மறுக்கிறார். ஆனால் இதயத்துடிப்பு மட்டும் இருக்கிறது. மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞருக்கு 30 நிமிடத்துக்கு கூட இதயம் துடிக்கும். அதற்குள் ஆஸ்பத்திரிக்கு வந்து வென்டிலேட்டர் பொருத்தி செயற்கை சுவாசம் கொடுத்தால் இதயம் தொடர்ந்து துடிக்க ஆரம்பித்து விடும். ஒரு நாள், 3 நாளைக்கு கூட இதய துடிப்பு இருக்கும். ஆனால் மூளையை இழுத்து பிடிக்க முடியாது. அவ்வாறு மூளைச்சாவு அடைந்த ஒரு இளைஞனின் இதயத்தை எடுத்து மற்றொருவருக்கு தானமாக கொடுக்கலாம். அவ்வாறு தானம் செய்யப்படும் உடல் உறுப்புகள் யார், யாருக்கு என்பதை அரசு தான் முடிவு செய்யும். எனவே முடிந்தவரை உடல் உறுப்புகளை மண்ணுக்கு கொடுக்காமல், மனிதர்கள் உயிர் வாழ கொடுப்போம். மற்றவர்கள் உடலில் சேரும்போது அவர்களுக்கு மறு உயிர் கொடுக்கிறார்கள்.

    இறந்த பிறகும் உறுப்பு தானம் செய்யும் நபர்கள் வாழ்கிறார்கள். விபத்தினால் இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 20 ஆயிரம் பேர் இதயத்தை தானமாக கொடுக்க தகுதியான நிலையிலேயே இருந்து மரணிப்பார்கள். எனவே உடல் தானம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

    இதேபோல ரத்த தானம் செய்வது மிகவும் எளிமையானது. நீங்கள் கொடுக்கும் 200 மில்லி ரத்தத்தை பிரித்து 4 பேருக்கு கொடுப்பார்கள். இப்படி 4 பேரை காப்பாற்றக்கூடிய சக்தி உங்களிடம் உள்ளது.

    ஆண்டுக்கு ஒருமுறை ரத்த தானம் கொடுங்கள். ரத்த தானம் கொடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

    ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல... நாமும்தான். உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறையும். உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும்.

    45 கிலோவுக்கு மேல், 18 முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். ஏதேனும் தொற்றுநோய் உள்ளவர்கள், காய்ச்சலில் இருப்பவர்கள் என நோய்வாய்ப்பட்டவர்கள் செய்யக் கூடாது.18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், 45-க்கும் கீழ் எடை உள்ளவர்கள், ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் செய்யக் கூடாது. ரத்தம் கொடுத்த பின்னர், பழச்சாறு, ஆரோக்கியமான பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். ரத்தம் கொடுத்த அடுத்த 24 மணி நேரத்துக்கு கடினமான செயல்கள் எதுவும் செய்யக்கூடாது. வியர்வையை உண்டாக்கும் செயல்கள், விளையாட்டு, பணி போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

    தொடர்புக்கு:

    info@kghospital.com, 98422 66630

    • தை முதல் நாள் இந்தத் திருவிழா நிறைவடைந்த பின்னர், தை இரண்டாம் நாள் திருவூடல் திருவிழா நடைபெறும்.
    • அர்த்தநாரீஸ்வரர் என்று சிவனாருக்குப் பெருமை சேர்த்தாலும், அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்திற்கு அம்பிகையே காரணம்.

    ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் திருவண்ணாமலைத் திருத்தலத்தில் அம்பாள் எழுந்தருளித் திருக்கோலம் காட்டுகிறாள். இவளுக்கு உண்ணாமுலை அம்மன் என்றே திருநாமம்.

    அம்பாள் இத்தலத்தில் எழுந்தருளியதே வெகு சிறப்பானதாகும். திருக்கைலாயத்தில் ஐயனும் அம்பிகையும் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, விளையாட்டாக ஐயனின் திருக்கண்களைத் தன்னுடைய கைகளால் அம்பிகை பொத்திவிட்டாள். விளையாட்டு என்றாலும் எந்தச் செயலுக்கும் எதிர்வினை உண்டல்லவா! அதன்படி, உலகம் இருண்டது. உயிர்களெல்லாம் நடுங்கின. பிரளயம் சூழ்ந்தது. தன்னுடைய செயலால், அகாலத்தில் பிரளயம் வந்ததை உணர்ந்த அம்மை, தன் செயலுக்குப் பரிகாரம் தேட விழைந்தாள். பூவுலகம் அடைந்து காஞ்சிபுரத்தில் மணலால் சிவலிங்கம் அமைத்து தவம் செய்து இறைவனை வழிபட்டாள். இறைவனும் காட்சி கொடுத்து அம்பிகையை ஏற்றார்.

    இந்நிலையில், சில காலம் முன்னர், பிருங்கி முனிவர் செய்ததொன்று அம்பிகையின் நினைவில் ஊசலாடியது. சிவனை மட்டுமே பிருங்கி வணங்குவார். அம்பிகை அருகில் இருந்தாலும் ஒதுக்கிவிட்டுச் சிவனை மட்டுமே சுற்றிவருவார். ஒருமுறை, பிருங்கி திருக்கைலாயம் வந்தபோது, வேண்டுமென்றே சிவனாரின் அருகில் அன்னை நின்றுகொண்டாள். ஐயனோடு ஒட்டி நின்றுவிட்டால், 'வலம் வரும்போது தன்னையும் சேர்த்துத்தானே வலம் வரவேண்டும்; பிருங்கி என்ன செய்கிறார் பார்க்கலாம்' என்று அம்பிகை எண்ண, பிருங்கியோ இன்னும் வேறு விதமாக எண்ணினார். மானுட உருவில் இருந்தால்தானே, அருகருகே நிற்கும் ஐயனுக்கும் அம்பிகைக்கும் இடையில் நுழையமுடியாது? என்று வண்டு வடிவம் எடுத்தார். இடையில் புகுந்தார். சிவனாரை மட்டுமே வலம் வந்தார்.

    இப்போது அம்பிகைக்கு இந்நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. என்னதான் ஐயனுக்கு அருகில் நின்றாலும், தனியாக இருந்ததால்தானே பிருங்கியால் இடைபுக முடிந்தது? ஐயனிடமிருந்து பிரிக்கமுடியாத நிலையை அடைந்துவிட்டால்......? சிவனாரிடமே இதைக் கேட்க...... திருவண்ணாமலை சென்று தவம் செய்யச் சொன்னார் அவர். ஆமாம், திருவண்ணாமலையில் தவம் செய்தால், தாம் எழுந்தருளி இடப்பாகத்தில் அம்மையை அரவணைப்பதாகவும் கூறினார்.

    இதன்படியே அம்பிகையும் செய்ய, தம்முடைய வாம பாகத்தில் அம்பிகையை ஏற்றுக்கொண்டு, மாதொரு பாதியனாக, அர்த்தநாரீஸ்வரர் என்னும் புதிய திருநாமம் கொண்டார்.

    அண்ணாமலையாரின் திருவாட்டியாக, உண்ணாமுலை என்னும் திருநாமத்தோடு அம்பிகையும் இங்கே நிலைகொண்டாள்.

    வாமபாகத்துக்குரியவள் என்னும் பெருமையை அம்பிகையின் கோவில் அமைப்பிலும் காணலாம். திருவண்ணாமலைத் கோவிலில், ஐயன் சந்நிதிக்கு இடது பக்கத்தில், மூன்றாம் பிராகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இருக்கிறது உண்ணாமுலையம்மன் சந்நிதி.

    அம்பிகைக்கு அபீதகுசாம்பாள், திருக்காமகோட்டமுடைய தம்பிராட்டி, உலகுடைப்பெருமான் நம்பிராட்டி, காமகோட்டமுடைய உண்ணாமுலையாள் என்னும் திருநாமங்களும் உண்டு.

    அம்பாள், நின்ற கோல நாயகி. திருக்கரங்களில் தாமரை மலர் ஏந்தி நிற்கிறாள். சின்னஞ்சிறு பெண்போல திருப்பாதங்களைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறாள். சாந்தம் நிறைந்த முகம், எல்லையற்ற கருணையைக் கொட்டும் விழிகள்:

    சித்தாந்தத்தெருளே வருக சிவஞானத் தேனே வருக திருவாளர்

    தேடி வைத்தப் பேரின்பத் திரளே வருக சன்மார்க்க

    அருளே வருக திருவருணை அருந்தாமுலையாய் வருக

    அலகில் விளையாட்டு அயரும் எங்கள் அம்மே வருக வருகவே என்று அம்மையைப் போற்றுகிறது உண்ணாமுலையம்மன் பிள்ளைத் தமிழ்.

    பிள்ளைகளான விநாயகரும் முருகரும், சாதாரண மானுடப் பிள்ளைகளைப் போல் பாலருந்தா முலைகளைக் கொண்டவள் என்பதாலேயே உண்ணாமுலை என்று அம்பாளுக்குத் திருநாமம். இந்தத் திருநாமத்திற்கு சித்தாந்த ரீதியாகவும் வேதாந்த ரீதியாகவும் வேறு சில விளக்கங்களும் உள்ளன.

    அர்த்தநாரீஸ்வரர் என்று சிவனாருக்குப் பெருமை சேர்த்தாலும், அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்திற்கு அம்பிகையே காரணம். சிவந்த செஞ்சடைக் கற்றை – கருங்கூந்தல் அலை; கொன்றை மாலை – மல்லிகைப் பூமாலை; திரிசூலம் – நீலோற்பல மலர்; பவள நிறம் – பச்சை நிறம்; தண்டை – சிலம்பு; அகன்ற மார்பு – கச்சணிந்த மார்பு; இவ்வாறாக, ஆணும் பெண்ணுமாக, ஐயனும் அம்மையும் காட்சி கொடுத்தார்கள்.

    ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் எதிரிகளல்ல, போட்டியாளர்களல்ல, ஆயின் சமமானவர்கள், இணையானவர்கள், இணைந்து செயல்படவேண்டியவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தினார்கள். இவ்வாறு ஐயனுக்குப் புது பெருமையை அம்பிகை சேர்த்த அந்தத் திருநாள், கார்த்திகை மாதத்துப் பவுர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருநாள். இந்த நாளே திருவண்ணாமலையில் தீபத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

    அண்ணாமலை என்னும் பெயருக்கு 'அணுக முடியாத' என்று பொருள். உண்ணாமுலை என்னும் பெயருக்கு 'உண்ணாத' என்று பொருள். ஆனால், ஐயனும் அம்மையும் அன்பினால் அணுகக்கூடியவர்களாக, ஞானம் ஊட்டுகிறவர்களாக இங்கே எழுந்தருளியிருக்கிறார்கள். மார்கழி மாதக் கடைசியில் கோவிலில் பத்து நாள் திருவிழா நடைபெறும். தை முதல் நாள் இந்தத் திருவிழா நிறைவடைந்த பின்னர், தை இரண்டாம் நாள் திருவூடல் திருவிழா நடைபெறும்.

    அம்பிகையை உதாசீனம் செய்துவிட்டு ஐயனை மட்டும் வணங்கினாரில்லையா பிருங்கி முனிவர்? அவர் அவ்வாறு செய்தபோதும் அவருக்குச் சிவனார் முக்தி வழங்கினார். அர்த்தநாரீஸ்வரர் ஆனபின்னரும் உண்மை உணராத பிருங்கிக்கு முக்தியா என்று அன்னை சினந்தாள். பிருங்கி எப்படியோ போகட்டும், ஆனால், சிவனார் அவருக்கு முக்தி கொடுக்கலாமா? தன் இருப்பிடம் புகுந்து கதவடைத்துக்கொண்டாளாம் அம்பிகை. அம்பிகை சினம் கொண்டுவிட்டாள் என்பதைத் தெரிந்துகொண்ட சிவனார், சுந்தரமுர்த்தி சுவாமிகளைத் தூது அனுப்பினாராம். அம்பிகை அதற்கும் மசியவில்லை.

    சிவனார் பாவம், தடுமாறித்தான் போனார். பக்தரையும் விடமுடியவில்லை; அம்பிகையையும் ஒதுக்கமுடியவில்லை. ஆகவே, மீண்டும் அம்பிகைக்குத் தூது அனுப்பினார். அம்பிகையின் கோபம், செல்லக் கோபம்தானே! யாரிடமும் சினம் கொள்ளாத ஜகன்மாதா ஐயனிடம் மட்டும் சினம் கொள்வாளா என்ன? சினம் தணிந்து வெளிப்பட்டாள். ஐயனுக்கு அருகில் வந்து அமர்ந்தும் கொண்டாள்.

    இதைத்தான், திருவூடல் விழாவில் மீண்டும் நடித்துக் காட்டுகிறார்கள். முதல் நாள் இரவு அம்பிகை ஊடல் கொண்டுவிடுவாள். சினத்தை எப்படித் தணிப்பது என்று எண்ணித் தணிக்கும் சிவனார், அன்றிரவு குமாரக்கோவிலில் சென்று தங்கிவிடுவார். அடுத்த நாள் காலையில் கிரிவலம் செல்வார். கிரிவலத்தின்போது, பிருங்கி முனிவருக்குக் காட்சி கொடுத்து அருள்வார். பின்னர் அம்பிகைக் கோவிலை அடைந்து ஊடலுக்கு விளக்கம் தந்து அம்பிகையை சமாதானப்படுத்துவார்.

    சின்னச் சின்ன கோபதாபங்கள் இருந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் உதவி செய்தும் வாழுகிற வாழ்க்கைத் தாத்பரியத்தை எடுத்துக்கூறும் விதமாக ஐயனும் அம்பிகையும் நடித்துக் காட்டுகிற இந்நிகழ்ச்சி நடைபெறுகிற வீதிக்கே, திருவூடல் திருவீதி என்றுதான் பெயர்.

    குறையாத பொருளாம், மாற்றறியாப் பொன்னாம் உண்ணாமுலை அம்மன் அள்ள அள்ளக் குறையாது அருளக் காத்திருக்கிறாள்; பாவப்பிணிக்கு மருந்தாம் இவளை வணங்குவோம்; வழிபடுவோம்.

    தொடர்புக்கு:- sesh2525@gmail.com

    • பல்வேறு துன்பங்களைத் தாங்கிக் கொண்ட தாயின் அருமையை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறோம்.
    • தன் மகனோ, மகளோ வெறுப்புக்குரியவர்களாகவே இருந்தாலும் எந்தத் தாயும் அவர்கள் பசிபொறுக்கமாட்டாள் என்பதை மட்டும் உணருங்கள்.

    இந்த உலகில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் உயிர் அமுதமாகிய தாய்ப்பால். நம்மிடம் கலப்படம் இல்லாமல் அன்பு செலுத்தும் ஒரே சொந்தமும், நாம் நேரில் காணும் தெய்வமும் நம் தாய்தான். பாலூட்டி, தாலாட்டி, தன்னை இழைத்து உருக்கி நம்மை வளர்த்த தாயின் அன்பிற்கும், தியாகத்திற்கும் ஈடு இணையோ, விலைமதிப்போ கிடையாது.

    உலகிற்கெல்லாம் ஒளிதந்து உயிர்களைக் காக்கின்ற கதிரவனையே "தாய்" என்று ரிக்வேதமும், இதர இலக்கியங்களும் கூறுகின்றன. கவியரசு கண்ணதாசனும் எழுகதிராய் தோன்றி விரிகதிராக ஒளியால், வாழ்வு தரும் கதிரவனை "ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி" என்று பாடுகின்றார் என்றால் அனைத்திற்கும் மேலானவள் தாய் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

    நாட்களைக் கொண்டாடுகின்ற நாம் மனிதர்களைக் கொண்டாடத் தவறிவிடுகிறோம். யாரை வேண்டுமானாலும் நாம் மறந்துவிடலாம். ஆனால், நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கி இவ்வுலகில் வாழவைத்துள்ள நம் தாய்-தந்தையை மறந்து தன்னலமாய் வாழ்கின்றோம் என்றால் நமக்கு அந்தப் பாவத்தில் இருந்து உய்வே இல்லை என்கின்றார் திருவள்ளுவர்.

    "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

    செய்ந்நன்றி கொன்ற மகற்கு''

    என்ற குறட்பாவில் நேரடியாக செய்நன்றி மறந்த பிள்ளைகளைத்தான் சொல்கின்றார். இங்கே பிள்ளைகள் என்றால் அது ஆண், பெண் இருவரையுமே குறிக்கும்.

    பத்துகிலோ அரிசியை இரண்டு பைகளில் பிரித்து அவற்றை இரண்டு கைகளில் சுமந்து கொண்டு நடந்துவர வேண்டுமென்றால் இரண்டு தெரு நடப்பதற்குள் பத்து இடத்தில் அப்பைகளை கீழே வைத்து வைத்து எடுத்து வர வேண்டியிருக்கும்.

    ஆனால் வயிற்றில் பத்துமாதம் சுமந்து, படாதபாடுபட்டு, உயிர்போய் மீண்டுவரும் வலியை அனுபவித்து, மயக்கம் தெளிந்த நொடிமுதல், தன்இறுதி மூச்சுவரைக்கும் தான்பெற்ற பிள்ளைகளின் நலன் ஒன்றையே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டு வாழும் அன்னைக்கு ஈடாக ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியுமா இந்த உலகில்!

    உலகில் மிகக் கடினமான வேலை எது தெரியுமா? ஒரு குழந்தையை வளர்த்து, நல்ல பண்புகள், குணநலன்களை கற்றுத்தந்து, சோர்வடையும்போது தட்டிக்கொடுத்து, அப்பிள்ளை விரும்புகின்றதை தேடித்தந்து, கல்வியும், சுயசார்பும் கொடுத்து, நல்ல மனிதனாகவோ, நல்ல பெண்ணாகவோ உருவாக்குவதுதான்!

    இக்கடினமான பணியை மிக இயல்பாக ஏற்றுக்கொண்டு தன் பசி, தேவைகள் அனைத்தையும் துறந்து தன் பிள்ளைகளுக்காக பல்வேறு துன்பங்களைத் தாங்கிக் கொண்டு செய்கின்ற தாயின் அருமையை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறோம் என்று நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்!

    "மாதா உடல் சலித்தாள்" என்று பிள்ளையின் வளர்ப்பில் தாய் எத்தனை துன்பமடைகிறாள் என்பதை பட்டினத்தார் பாடுவார்.

    வரலாறு முழுக்க வெற்றி பெற்றவர்களில் பலபேர் அவர்களின் அன்னையின் தியாகத்தால் உருவானவர்கள். கணவனால் கைவிடப்பட்ட பின்னரும் தன் பிள்ளையின் நல்வாழ்விற்காக அத்தனை துயரங்களையும் தாங்கிக்கொண்டு வீரம் செறிந்த மகனாக அவனை வளர்த்து ஆளாக்கி, ஒரு புதிய சாம்ராஜ்ஜியத்தையே தன் மகன் உருவாக்க காரணமாக இருந்தவர் மராட்டிய மாமன்னர் வீரசிவாஜியின் தாயான ஜீஜாபாய் ஆவார்.

    பெற்றெடுத்த மகன் கூட அல்ல, இறந்துபோன தன் கணவர் தத்து எடுத்த மகன் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்ததோடு, அரசனாக வேண்டிய அச்சிறுவனுக்காக ஆங்கிலேயர்களின் கொடூரமான தாக்குதல்களையும் முறியடித்து தன் மண்ணையும், மகனையும் காத்தவர் கர்நாடகாவின் கிட்டூர் ராணி சென்னம்மா.

    இப்படி வரலாற்றில் சாதனை புரிந்த தாய்மார்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அரசியல் என்றில்லை சாதாரண குடும்பத்துப் பெண்களும் தன் பிள்ளைகளுக்காக எந்த அளவிற்கு தியாகம் புரிந்தவர்கள் என்பதை அந்த பிள்ளைகள் பேரும் புகழும் பெற்ற பிறகும் கூட எப்போதும் தன் அன்னையை போற்றி வாழ்ந்தவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு முத்தமிழறிஞர் கலைஞர், மக்கள்திலகம் எம்ஜி.ஆர், நடிகர்திலகம் சிவாஜிகணேசன் என்று பட்டியல் உள்ளது.

    "அம்மா என்றழைக்காத உயிரில்லையே

    அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே"

    என்ற பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட திரைப்பாடல் காவியக்கவிஞர் வாலியின் அற்புதப்படைப்பு. கண்ணை மூடி அப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நம்முடைய தாயின் தியாகம் நினைவுக்கு வருவதை நம்மால் தடுக்க இயலுமா?

    நீங்கள் உங்களை பெற்று வளர்த்த அன்னையை மிகப் பெரிதாக கொண்டாட வேண்டும் என்றெல்லாம் அவள் எதிர்ப்பார்ப்பதில்லை. மாறாக, வளர்ந்து ஆளான பிள்ளைகள் அது ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் பெற்றவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை அவர்கள் உயிருடன் இருக்கும் காலம்வரை நிறைவேற்றி வருவதும்,

    வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்டு துன்பப்படும் வேளையில், "கலங்காதீர்கள் நான் இருக்கிறேன்; எதுவாக இருந்தாலும் நான் செய்கிறேன், கடைசிவரை நான் பார்த்துக்கொள்வேன்" என்று அவர்களின் கரங்கைளப் பற்றி ஆறுதல் வார்த்தைகளைத் தந்து அவர்களை மனக்காயம் ஏதுமில்லாமல் வைத்துக்கொள்வதையும்தான் எல்லாப் பெற்றோரும் எதிர்பார்க்கிறார்கள்.

    தாய்க்கும் தந்தைக்கும் செய்ய வேண்டிய வாழ்நாள் கடமைகளை நாம்தான் முன்னிருந்து, பொறுப்புகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு செய்யவேண்டுமே தவிர, நம்முடன் வாழவந்தவர்கள் அதாவது நம்முடைய வாழ்க்கைத் துணை செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. ஏனென்றால் நம் தாய்-தந்தை நமக்குத்தான் எல்லாத் தியாகங்களையும் செய்து நம்மை உருவாக்கி இருக்கிறார்கள்.

    எங்கோ பிறந்து வளர்ந்து நம்மைத் திருமணம் செய்துகொண்டு நம்முடன் வாழவந்தவர்கள் மீது நம்முடைய கடமைகளை திணிப்பது மடத்தனம். அதனால்தான் பல பிரச்சினைகள் உருவாகி முதியோர் இல்லங்கள் பெருகி வருவதும், வயதானவர்கள் பலர் தான்பெற்ற மக்களாலேயே கைவிடப்பட்டு கோயில் வாசல்களிலும், சாலைகளிலும், பேருந்து நிலையங்களிலும் மானம், சுயமரியாதையை விட்டு கைநீட்டி பிச்சைவாங்கி பிழைக்கிறார்கள். தன் வாழ்வை முடித்துக் கொள்ள தனக்கு உரிமையுண்டு என்ற சட்டமிருந்தால் பல முதியோர் இல்லங்களும், பிச்சைக்காரர்களும் இங்கே இருக்கமாட்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

    "பெற்றோரைக் கவனிப்பதற்கு எனக்கு நேரமில்லை; என்னுடைய வேலைப்பளுவால் என்னுடைய கடமையை செய்யமுடியவில்லை; என் குடும்பத்திற்கே என்னுடைய வருவாய் போதவில்லை, என் பிள்ளைகளை படிக்கவைக்க வேண்டும், என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், இதில் தாய்-தந்தையை பராமரிக்க, மருத்துவம் உள்ளிட்ட செலவுகளைச் செய்ய பணமோ, நேரமோ என்னால் ஒதுக்க முடியவில்லை" என்றெல்லாம் பல்வேறு காரணங்கள், சாக்குபோக்குகள் சொல்லி தாய்-தந்தையை கைவிட்டுவிடுவோர் தன் வாழ்நாளிலேயே நரகத்தை சந்திக்கவேண்டிவரும் என்பதையும், நாம் நம் சூழ்நிலையை காரணம் காட்டி பெற்றவரை நிராகரித்து விடுவதுபோல் தன் சுகத்தையும், தன் நலத்தையும் பெரிதாக நினைத்து குழந்தைப் பருவத்தில் நம்மை அவர்கள் கைவிட்டிருந்தால் நாம் என்ன ஆகியிருப்போம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    இருக்கும்போது கவனிக்காமல் விட்டுவிட்டு, இறந்தபின்னர் கலங்கி என்னசெய்வது? தற்காலத்தில் சிலர் கலங்குவதுகூட இல்லை. அப்பாடா! தொல்லைவிட்டது என்றல்லவா நினைக்கிறார்கள்!

    பிள்ளைப்பேற்றின் போது ஆண்கள் உடன்இருப்பதை நம்சமூகம் அனுமதிப்பதில்லை. காலப்போக்கில்ஆண் மருத்துவர்கள் பிரசவம் பார்ப்பதை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

    இப்போதெல்லாம் மேலைநாடுகளில் குழந்தை பிறக்கும்போது பிரசவம் நடைபெறுவதை பார்க்க வேண்டும் என்று கணவன் விரும்பி கூட இருப்பதை அனுமதிக்கிறார்கள்.

    வலியால் தாயின் உயிர்போய் மீண்டு வந்துதான் ஒரு குழந்தை இந்த மண்ணிற்கு வந்துள்ளது என்பதை உணர்கின்ற கணவன், அடுத்த பிரசவத்திற்கு தன் முதல் குழந்தையும் கூட இருந்து பார்க்கவேண்டும் என்று, தன் தாய் தன்னை எப்படிப் பெற்றெடுத்தாள் என்பதை அப்பிள்ளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும் புலப்படுத்தி அழைத்து வருகின்றான். இது மேலைநாடுகளில் சாதாரண நிகழ்வாகி அதையும் சமூகவெளிகளில் காட்சிப்படுத்தி வருகிறார்கள்.

    நம் நாட்டில் எல்லா தினங்களைப் போல் "அன்னையர் தினம்" என்கின்ற அற்புதமான நாளும் அம்மாவுடன் எடுத்துக் கொள்ளும் நிழற்படம், காணொளிப் பதிவு, ஏதாவது ஒரு கதை போன்றவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் அல்லது மற்றவர்கள் பதிவிட்டதைப் பார்த்து தன் பங்குக்கு தானும் எதையாவது காப்பி எடுத்து பதிவிடுவதோடும் சரி என்றாகிவிட்டது.

    குறைந்தபட்சம் அன்னையர் தினத்திலாவது தன் அம்மாவிற்கு பிடித்தமானது எது என்பதை அறிந்து அதனை நிறைவேற்றித்தருவது, அம்மாவை வெளியில் எங்காவது அழைத்துச் சென்றுவருவது, அன்னையின் மனதில் ஏதேனும் வேதனைகள், ஏக்கங்கள், கவலைகள் இருந்தால் அவற்றை மிக மென்மையாகவும், பொறுமையாகவும் கேட்டறிந்து நம்மால் எதை தீர்க்கமுடியும் என்பதை உணர்ந்து தீர்ப்பதற்கு முயற்சி செய்வதும், அன்னையர் தினம் மட்டுமல்லாமல், அன்னையின் வாழ்நாள் இறுதிவரை அவரை மகிழ்ச்சியாக, நிம்மதியாக வைத்துக்கொள்வது என்பதையும் பின்பற்ற வேண்டும்.

    அவரவர் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து எங்கோ ஒருசிலருக்கு தன் பெற்றோரின் மீது சில கசப்பான நினைவுகள், மனவேதனைப்படும் அனுபவங்கள் வாய்த்திருக்கக் கூடும். அவற்றின் காரணமாக தாய்-தந்தையை நினைத்தாலே வெறுப்பு ஏற்படவும் கூடும். எல்லாவற்றிலும் சில விதிவிலக்குகள் இருக்கும்தான். அப்படிப்பட்டவர்களும் தன் வாழ்நாளில் ஏதேனும் நன்மை செய்து மனநிம்மதி தேட வேண்டுமென்றால் தன் பெற்றோர் மீதான வெறுப்பை தள்ளிவைத்துவிட்டு அவர்களின் இறுதிமூச்சுவரை அவர்களை கவனிக்கவேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன். தன் மகனோ, மகளோ வெறுப்புக்குரியவர்களாகவே இருந்தாலும் எந்தத் தாயும் அவர்கள் பசிபொறுக்கமாட்டாள் என்பதை மட்டும் உணருங்கள்.

    வசதியான குடும்பமாக இருந்தாலும், ஏழ்மையான குடும்பமாக இருந்தாலும் இந்த மண்ணிலே ஒவ்வொரு தாயிடமும் அவள் பிள்ளைகளை வளர்த்தெடுத்ததில் ஒரு ஆழ்ந்த, அழுத்தமான பல துன்பங்கள் நிறைந்த உண்மைக் கதை உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் தாயால் நீங்கள் வளர்க்கப்படடிருக்கிறீர்கள் என்றால் உங்களிடம் சொல்லப்படாத துன்பக் கதையும் உங்கள் தாயிடத்தில் இருக்கும் என்பதை நினைவில் கொண்டு தாயைப் போற்றுங்கள். தாய்மையைப் போற்றுங்கள். திருக்கோயில் தெய்வங்கள் எல்லாம் நம் அம்மாதான் என்பதை மனதில் இருத்தி செயல்பட்டால் எல்லா நாளும் அன்னையர் தினமே!

    தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in

    • 164 கிளைகள் இந்தியா முழுவதும் ஆடிட்டர் படிப்பை சிறப்பாக நடத்துவதற்கு வசதியாக இயங்குகின்றன.
    • சார்டர்ட் அக்கவுண்டன்சி கோர்ஸ் என்பது பிளஸ் டூ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான ஆடிட்டர் படிப்பு ஆகும்.

    "தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்ட்டென்ட்ஸ் ஆப் இந்தியா

    என்னும் நிறுவனம் வழங்கும் படிப்பு தான் "ஆடிட்டர்" என சமூகத்தில் அந்தஸ்து பெற்ற பதவியை வழங்கும் ஆடிட்டர் படிப்பு ஆகும்.

    இந்த நிறுவனம் மத்திய அரசின் "மினிஸ்ட்ரி ஆப் கார்ப்பரேட் அப்பையர்ஸ்" என்னும் துறையின் கீழ் இயங்குகிறது. 1949 -ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட "தி சார்ட்டர்ட் அக்கவுண்ட்டென்ட்ஸ் ஆக்ட்" என்னும் சட்டத்தின் மூலம் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் இயங்குகிறது.

    இந்த நிறுவனத்தின் மண்டல அலுவலகங்கள் மும்பை, சென்னை, கொல்கத்தா, கான்பூர் மற்றும் புதுடெல்லி ஆகிய முக்கிய நகரங்களில் உள்ளன. இவை தவிர 164 கிளைகள் இந்தியா முழுவதும் ஆடிட்டர் படிப்பை சிறப்பாக நடத்துவதற்கு வசதியாக இயங்குகின்றன.

    அபுதாபி, மெல்போர்ன், சிட்னி, பக்ரைன், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா, தோகா, துபாய், இந்தோனேசியா, ஜெட்டா, கென்யா, குவைத், நியூசிலாந்து, நைஜீரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, உகாண்டா, லண்டன், நியூயார்க், யு .எஸ். ஏ, சாம்பியா உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் அலுவலகங்கள் ஆடிட்டர் படிப்பை நடத்துவதற்கு உதவியாய் இயங்குகின்றன.

    இந்த நிறுவனம் மூன்று வகையான முக்கிய படிப்புகளை நடத்துகிறது.

    அவை:

    1. சார்ட்ர்ட் அக்கவுண்டன்சி கோர்ஸ்.

    2. போஸ்ட் குவாலிபிகேஷன் கோர்சஸ் பார் மெம்பர்ஸ்

    3. சர்டிபிகேட் கோர்சஸ் பார் மெம்பர்ஸ் என்பன ஆகும்.

    இவற்றுள் சார்டர்ட் அக்கவுண்டன்சி கோர்ஸ் என்பது பிளஸ் டூ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான ஆடிட்டர் படிப்பு ஆகும்.

    ஆடிட்டர் படிப்பை படிப்பவர்களுக்கு தேவையான அனுபவ அறிவும் ஆழ்ந்த நூல் அறிவும் பெறுவதற்கு வசதியாக இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சி .ஏ (ஆடிட்டர் ) படிப்பில் சேர்வது எப்படி?

    சி.ஏ படிப்பில் நேரடியாக சேர்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

    அவை,

    1. பவுண்டேஷன் கோர்ஸ் ரூட்

    2. டைரக்ட் என்ட்ரி ரூட்.

    1. பவுண்டேஷன் கோர்ஸ் ரூட் ( FOUNDATION COURSE ROUTE)

    பவுண்டேஷன் கோர்ஸ் எனப்படும் அடிப்படை படிப்பில் சேர பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.

    இருந்தபோதும், இவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கின்ற பொழுதே தங்களது பெயரை இந்நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதிக்கு முன்பும், ஜூலை மாதம் ஒன்றாம் தேதிக்கு முன்பும் தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.

    இப்படி பத்தாம் வகுப்பு தகுதியை வைத்து முன்கூட்டியே பெயரை பதிவு செய்தவர்கள்,பிளஸ் டூ தேர்வு முடிந்தவுடன் பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வு எழுதலாம். அதாவது, மே /ஜூன் மாதம் அல்லது நவம்பர் /டிசம்பர் மாதங்களில் இந்த தேர்வு எழுதலாம்.

    பிளஸ் டூ மற்றும் பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், அடுத்த கட்ட தேர்வான இன்டர்மீடியட் கோர்ஸ் என்னும் தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

    இருந்தபோதும், இன்டர்மீடியட் கோர்ஸ் என்னும் அடுத்த கட்ட தேர்வு எழுதுவதற்கு குறைந்தபட்சம் எட்டு மாதங்கள் அவர்கள் தங்கள் படிப்பை தொடர வேண்டும்.

    பவுண்டேஷன் மற்றும் இன்டர்மீடியட் கோர்ஸ்களில் வெற்றி பெற்றவர்கள் கண்டிப்பாக நான்கு வாரங்கள் "கிரியேடிவ் கோர்ஸ் ஆன் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் சாப்ட் ஸ்கில்ஸ்" என்னும் படிப்பை முடித்து, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    ஆடிட்டர் படிப்பில் தேவையான அனுபவ அறிவு பெறுவதற்கு கண்டிப்பாக மூன்று வருடங்கள் "பிராக்டிகல் டிரெனிங்" என்னும் பயிற்சியை பெற வேண்டும். இந்த பயிற்சியை ஆடிட்டர்கள் இடம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    ஆடிட்டரிடம் அனுபவ பயிற்சி பெறுவதற்கு முன்பே, இந்த நான்கு வார "இன்டர்கிரேட்டட் கோர்ஸ் ஆன் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் சாப்ட் ஸ்கில்ஸ்" என்னும் பயிற்சியை தனியாக பெற்று சான்றிதழ் பெறுவது நல்லது.

    ஆடிட்டரிடம் அனுபவ பயிற்சியை பெறுவதற்கு, இன்டர்மீடியட் கோர்ஸ் படிக்கும்போதே சேர்ந்து கொள்ளலாம் அல்லது இன்டர்மீடியட் கோர்ஸ் மற்றும் பைனல் கோர்ஸ் இரண்டிலும் வெற்றி பெற்ற பின்பும் சேர்ந்து கொள்ளலாம்.

    பொதுவாக, ஆடிட்டர் படிப்பில் இறுதித் தேர்வு எனப்படும் பைனல் எக்சாம் எழுதுவதற்கு முன்பே ஆடிட்டரிடம் அனுபவப் பயிற்சி பெற்றுக் கொள்வது சிறந்ததாகும்.

    போதுமான அனுபவ பயிற்சி பெற்ற பின்பு இரு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற பின்பு ஆடிட்டராக பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    2. டைரக்ட் என்ட்ரி ரூட்.

    "டைரக்ட் என்ட்ரி ரூட்"என்னும் முறையில் சி. ஏ படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் கண்டிப்பாக வணிகவியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    வணிகவியல் பாடம் அல்லாத மற்ற பாடங்களில் படிப்பை பட்டப் முடித்தவர்கள், கண்டிப்பாக பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும். இதேபோல், வணிகவியல் பாடம் அல்லாத பட்டப் மேற்படிப்பை முடித்தவர்களும் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமாகும்.

    "இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா" நடத்துகின்ற "இன்டர்மீடியட் லெவல் "தேர்வில் வெற்றி பெற்றவர்களும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

    தேர்வு திட்டம்.

    பவுண்டேஷன் கோர்ஸ்.

    பவுண்டேஷன் கோர்ஸ் எனப்படும் தேர்வில்,

    1. பிரின்ஸ்பில்ஸ் அண்ட் பிராக்டிஸ் ஆப் அக்கவுண்டிங்

    2. பிசினஸ் லாஸ் & கரஸ்பாண்டன்ஸ் பிசினஸ் அண்ட் ரிப்போர்ட்டிங் .

    3. பிசினஸ் மேத்தமேடிக்ஸ் & லாஜிக்கல் ரீசனிங் மற்றும் ஸ்டாடிஸ்டிக்ஸ்,

    4. பிசினஸ் எக்கனாமிக்ஸ் & பிசினஸ் அண்ட் கமர்சியல் நாலெட்ஜ் ஆகிய பாடங்களில் தேர்வு நடத்தப்படும்.

    இன்டர்மீடியட் கோர்ஸ்.

    இன்டர்மீடியட் கோர்ஸ் என்னும் தேர்வில் குரூப் 1 குரூப் 2 ஆகிய பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன

    குரூப்-1 தேர்வில்,

    1. அக்கவுண்டிங்

    2. கார்ப்பரேட் அண்ட் அதர் லாஸ்

    3. காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங்

    4. டேக்ஸ்சேசன்

    பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

    குரூப் 2 தேர்வில்,

    1. அட்வான்ஸ் அக்கவுண்டிங்

    2. ஆடிட்டிங் அண்ட் அசுரன்ஸ்

    3. என்டர்பிரைஸ் இன்பர்மேஷன் சிஸ்டம் அண்ட் ஸ்ட்ராட்டஜிக் மேனேஜ்மென்ட்,

    4. பைனான்சியல் மேனேஜ்மென்ட் அண்ட் எகனாமிக்ஸ் பார் பைனான்ஸ் ஆகிய பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

    பைனல் கோர்ஸ்

    பைனல் கோர்ஸ் எனப்படும் இறுதி தேர்வில் குரூப் -1 மற்றும் குரூப் -2 ஆகிய பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

    குரூப் -1 தேர்வில்,

    1. பைனான்சியல் ரிப்போர்ட்டிங்

    2. ஸ்ட்ராட்டஜிக் பைனான்சியல் மேனேஜ்மென்ட்

    3. அட்வான்ஸ் ஆடிட்டிங் அண்ட் புரொபஷனல் எத்திக்ஸ்,

    4. கார்ப்பரேட் அண்ட் எகனாமிக் லாஸ்

    ஆகிய பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

    குரூப் 2 பிரிவில்

    1. ஸ்ட்ராட்டஜி காஸ்ட் மேனேஜ்மென்ட் அண்ட் பெர்பார்மன்ஸ் எவாலுவேசன்,

    2. விருப்ப பாடம் (கீழே குறிப்பிட்டுள்ள பாடங்களில் ஏதேனும் ஒரு விருப்ப பாடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்)

    a) ரிஸ்க் மேனேஜ்மென்ட்

    b) பைனான்சியல் சர்வீசஸ் அண்ட் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ்,

    c) இன்டர்நேஷனல் டேக்ஸ்சேசன்,

    d) எக்கனாமிக் லாஸ்

    e) குளோபல் பைனான்சியல் ரிப்போர்ட்டிங் ஸ்டாண்டர்ட்ஸ்

    f) மல்டி டிசிப்ளினரி கேஸ் ஸ்டடி

    3. டைரக்ட் டாக்ஸ் லாஸ் அண்ட் இன்டர்நேஷனல் டேக்ஸ்சேசன்

    4. இன்டைரக்ட் லாஸ்

    ஆகிய பாடங்களில் தேர்வுகள் இடம் பெறும்.

    ஏராளமான வேலை வாய்ப்புகள்

    "சார்ட்டட் அக்கவுண்டன்ட்" படிப்பை முடித்தவர்கள் மிகச்சிறந்த திறமைகளை கொண்டவர்களாக இருப்பதால், இவர்களுக்கு பைனான்சியல் ரிப்போர்ட்டிங், நேஷனல் அண்ட் இன்டர்நேஷனல் டேக்ஸ், பைனான்ஸ் அண்ட் கார்ப்பரேட் லா போன்ற துறைகளில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன.

    இவர்கள் ஆடிட்டராகவும் சொந்தமாக தொழில் செய்யலாம். மேலும், அரசுத்துறை கூட்டுறவு சங்கங்கள் தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் அதிக வேலை வாய்ப்புகள் இவர்களுக்கு உள்ளன.

    இந்தியாவில் ஜி.எஸ்.டி எனப்படும் "கூட்ஸ் அண்ட் சர்வீசஸ் டேக்ஸ்" அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், சேவை அமைப்புகள் போன்றவற்றில் வரிகளின் தாக்கத்தை அறிந்து கொள்வதற்கு ஆடிட்டர்களின் உதவி கண்டிப்பாக தேவை.

    பல நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை சட்டபூர்வமாக செலுத்துவதற்கு, ஆடிட்டர்களின் உதவியை நாடுகிறார்கள். இவை தவிர, ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும், தொழில் முனைவோருக்கு ஆலோசனைகள் வழங்கவும், துறை தணிக்கைகளுக்கு துணை நிற்கவும் ஆடிட்டர்களின் சேவை பெருமளவில் உதவியாய் அமைகிறது.

    மேலும் விவரங்களுக்கு,

    1. தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஐ.சி.ஏ.ஐ. பவன், 29, செக்டார் 62 நொய்டா-201 309.

    இணையதள முகவரி : www.icai.org.

    2. தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்க வுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஐ.சி.ஏ.ஐ. பவன், 122 மகாத்மா காந்தி ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-600 034.

    தொடர்புக்கு: nellaikavinesan25@gmail.com

    • எனக்கு விடுதலை அளித்த வள்ளலே! உமக்கு ஒரு வரம் தந்தேன்! என்ன வேண்டும் கேளுங்கள்!
    • ரிமோட் செயலி உன்னோட மொபைல் போனிலயே வீட்ல இருக்கும் எல்லா சாதனங்களையும் தொடர்பு கொள்ளச்செய்துவிடும்.

    "தீபாவளி வருது! அந்த பழைய வெள்ளி விளக்கத்தொடச்சு வெய்ங்களேன்! நான் தான் காலையிலேர்ந்து பட்சணம் செய்திட்டு இருக்கேன்ல?"

    "அட என்னம்மா! மாலை மலரை முழுசாப்படிக்க விட மாட்டேங்கற! இரு வரேன்!"

    புகை எங்கும் புகை!

    "அய்யோ! யார் நீ? பூதமா?"

    "எனக்கு விடுதலை அளித்த வள்ளலே! உமக்கு ஒரு வரம் தந்தேன்! என்ன வேண்டும் கேளுங்கள்!"

    "நெஜம்மாவே நீ பூதமா? சரி, எனக்கு ஆபீஸ் போய் வர ஒரு கார் தாயேன்!"

    "அடசே! என்னய்யா மனுஷன் நீ? அங்க உள்ள உன் ஒய்ப் வீட்டு வேல செஞ்சு கஷ்டப்படறா! வீட்டுக்குத்தேவையான பொருளா எதுனா கேளு!"

    "அப்படி என்ன பொருள் இருக்கு ஸ்பெஷலா?"

    நானே சொல்றேன் கேட்டுட்டு முடிவு பண்ணு!"

    பாண்டல்லிஜெண்ட் (Pantelligent) ன்னு ஒரு வாணலி இருக்கு. அத அடுப்புல வெச்சு புளூ டூத்ங்கற டெக்னாலஜி கொண்டு உன் மொபைல் போனிலேர்ந்து வித விதமா சமையல் பண்ண உதவும்!"

    "என்னது புளூ டூத் வாணலியா?'

    "ஆமா! ஒரு செயலி மூலம் வேணுங்கற ரெஸிப்பிய உன் மொபைலில டவுன்லோட் பண்ணிட்டா, அத வெச்சு அந்த ரெஸிப்பி சொல்லும் ஒவ்வொரு ஸ்டெப்பையும் தானா செயல்படுத்தி உனக்கு வேணுங்கற பதார்த்தத்தை அமர்க்களமா சமைச்சுக்கொடுத்துடும்! எப்போ சூடு அதிகரிக்கணும் எப்ப குறைக்கணுமெல்லாம் அந்த செயலியே பாத்துக்கும்!"

    "அடேயப்பா!"

    "அடுத்து இன்னொரு ஐட்டம் இருக்கு! வீட்டம்மா கடுமையா வேலை செஞ்சுட்டு நிம்மதியா டீவியில் சீரியல் சினிமான்னு பாக்கறாங்க இல்ல? அந்த அனுபவத்தை அவங்களுக்கு மேம்படுத்திக்கொடுத்தா எத்தன சந்தோஷப்படுவாங்க!"

    "ஆமா கரெக்டுதான்! சொல்லு சொல்லு!"

    " சாம்சங் கம்பெனியில வளைந்த திரையுடன் ஒரு 4K Ultra HD smart LED TV கொண்டு வந்திருக்காங்க! சும்மா இல்லை, 88 இஞ்ச் ஸ்கிரீன், அப்படியே சினிமா தியேட்டர் கணக்கா இருக்கும் பார்க்கும் அனுபவம்! படம் பார்க்கும்போது ரஜினி அப்படியே நம்ம வீட்லயே வந்து வசனம் பேசறாமாதிரி நெருக்கமான எக்ஸ்பீரியன்ஸ்!" கிடைக்கும்.

    "அப்ப அது ஒண்ணு நோட் பண்ணிக்க!" வேறேன்ன?"

    "புராண்டோ (Pronto) என்னும் செயலிக்கம்பெனி Peel Smart Remote என்னும் கம்பெனியோடு ஜோடி போட்டுத்தயாரித்துள்ள ரிமோட் ஒண்ணு வந்திருக்கு."

    "ரிமோட்ட வெச்சுக்கிட்டு…?"

    "முழுசா கேளு! இந்த ரிமோட் செயலி உன்னோட மொபைல் போனிலயே வீட்ல இருக்கும் எல்லா சாதனங்களையும் தொடர்பு கொள்ளச்செய்துவிடும். அவ்வளவுதான்! உன்னோட மொபைல் ஒண்ணை வெச்சுண்டு எதையும் இயக்கலாம். அமெரிக்காவுல செய்வது போல நீயும் இதை வாங்கினதோட ஒரு ரோபோவையும் வாங்கி வெச்சுடு. மொபைல் போன் மூலமா என்ன டி.வி. புரோகிராம் இருக்குன்னு தெரிஞ்சு, அப்படியே அந்த டைமுக்கு டி.வி. ஆன் பண்றாமாதிரி செட் பண்ணிட்டு, கூடவே உனக்கு ஞாபகப்படுத்த அலாரமும் வெச்சுட்டா போதும், அந்த டைமுக்கு அலாரம் அடிக்க, நீ வந்து சோபாவுல உட்கார்ந்தா, டி.வி. தானா ஆன் ஆகி அந்த புரொகிராம் ஓட ஆரம்பிக்கும். மொபைல் அழுத்தி ரோபோவைக்கூப்பிட்டு பிரிட்ஜ்ஜிலேர்ந்து ஒரு சிப்ஸ் பாக்கெட்டும் கோலா பாட்டிலும் கொண்டு வரச்சொல்லிட்டா, நீ பாட்டுக்கு ஹாய்யா உட்கார்ந்துண்டு டி.வி. பார்க்கலாம்!"

    "அடடா கேட்கவே சொகம்மா இருக்கே! அப்புறம்?"

    "போன மாசம் ஏதோ டாகுமெண்ட்டைக்காணும்னு ஒய்ப்கிட்ட சத்தம் போட்டுண்டு இருந்தியே?"

    ஆமா! உனக்கெப்படி தெரியும்?'

    "நான் இந்த விளக்குலதானே இருந்தேன், ஏன் தெரியாம! இன்னமே அந்த கஷ்டமெல்லாம் இல்லாம இருக்க ஒரு சேப் லாக்கர் வந்திருக்கு. பூட்டு எங்க சாவி எங்கன்னு அல்லாட வேண்டாம். (Wi Fi) ஒய் பை இணையம் மூலம் தொடர்பு கொண்டு உன் குரலை வெச்சே லாக்கரைத்திறக்கலாம், மூடலாம்! First Alertன்னு ஒரு கம்பெனி இந்த மாதிரி ஒய் பை அலமாரி செய்யறாங்க!"

    "டெக்னாலஜி என்னவெல்லாம் பண்ணுது!"

    "இதையும் கேளு! நம்ம பிலிப்ஸ் கம்பெனி இருக்கு பாரு அவங்க கூட நுண்ணறிவு கொண்ட லைட்டெல்லாம் தயாரிக்க ஆரம்பிச்சாச்சு!"

    "என்னது நுண்ணறிவு கொண்ட விளக்கா?"

    "ஆமா! இந்த லைட்டை ரிமோட் வெச்சு பிரைட்டாகவோ இல்லை டிம்மாகவோ ஆக்கலாம். நீ ஆபீஸ்லேர்ந்து ஒரு ஜாலி மூடுல வரும்போது உன்னோட மொபைல் போன்லயே மூடை செட் பண்ணிட்டா, ஸ்விட்ச் போட்டவுடனே லைட் உன் மூடுக்கேத்தா மாதிரி எரியும்!"

    "இந்த ஒரு டெக்னாலஜி எனக்கு சரிப்பட்டு வராதே பூதமே!"

    "அது ஏன்?"

    "இப்படிதான் போன வாரம் வந்து ஆரஞ்சு பல்பைப்பொருத்தி ரொமாண்டிக்கான மூடுக்காக போட்டு வெச்சேன்!"

    "என்னது ஆரஞ்சு பல்பு ரொமாண்டிக்காவா? அடக்கஷ்டமே!

    "அதேதான்! என்ன அழுது வடிஞ்சுண்டுன்னு ஒரு விளக்குன்னு அவ உடனே ஆப் பண்ணிட்டா!"

    " உன்னையும் சேர்த்தா?'

    " ஏய் பூதமே! என்ன கேலியாபண்றே? இப்ப நீ சொன்ன ஐட்டம் எல்லாத்தையும் இங்க வீட்ல பொருத்து! ம் க்விக்!"

    "முடியாது எஜமானனே! நீ வெளக்கை தேய்ச்ச தேய்ப்புக்கு ஒரு வரம்தான் அனுமதி!"

    "சரி அந்த ஒரு வரத்தை தா!"

    "கொடுத்தாச்சே!

    "எப்பய்யா கொடுத்தே? அழுகுணி ஆட்டமா இருக்கே! பூதங்கள்ள கூட இந்த தப்பாட்டம் உண்டா?"

    "இல்லை எஜமான்னே! இந்த டெக்னாலஜி விஷயங்கள்ளாம் உனக்கு தெரிவித்து உன் பொது அறிவை மேம்படுத்தியதுதான் நான் அளித்த வரம்!. உங்க சான்ஸ் ஓவர்! வர்ட்டா!"

    "ஒரு வெளக்க துடைச்சு வெக்கச்சொன்னா என்ன வெட்டியா உட்கார்ந்துண்டு இருக்கீங்க?"

    "இல்ல பூதம்…?"

    "என்னது என்னைப்பார்த்தா பூதம் மாதிரி இருக்கா? இருக்காதா பின்னே? உங்க வீட்டு வேலையெல்லாம் மாஞ்சு மாஞ்சு இடுப்பொடிய செய்யறேனே! அதுக்கு எனக்கு பூதம்னு பேர் வெச்சுறதா?''

    லொட்!

    கடைசிச்செய்தியின் படி அரை மணிக்குப்பிறகு அந்த வீட்டு வாசலில் ஒரு ஆம்புலன்ஸ் வந்ததாக அறிகிறோம்!

    • குரு பூர்ணிமா என்பது வேத வியாசரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகும்.
    • வேதத்தைத் தொகுத்து நான்காகப் பிரித்து நமக்கெல்லாம் எளிமையாக வழங்கி, சனாதனதர்மத்தை வேரூன்றச் செய்த வேத வியாசர் நமக்கெல்லாம் ஆதி குருவாக விளங்குகிறார்.

    ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. பவுர்ணமியில் எந்த மாதம் கிரிவலம் வருகிறோமோ அதற்கு ஏற்ப பலன் கிடைப்பதாக சொல்வார்கள். குறிப்பாக பவுர்ணமி தினத்தில் பித்ருக்கள் வழிபாடு, சித்தர்கள் வழிபாடு செய்வதற்கு மிகவும் ஏற்றது என்பார்கள். ஒவ்வொரு மாதத்திற்கும் ஏற்ப பவுர்ணமி வழிபாடுகளில் மாறுபாடு உள்ளது.

    அந்த வகையில் தற்போதைய ஆனி மாத பவுர்ணமி குரு பவுர்ணமி என்றும், வியாசர் பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பவுர்ணமியில் குருவை வழிபட வேண்டும் என்பது முக்கியமான நோக்கமாகும்.

    ஆதிகாலத்தில் ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் தங்களது முதன்மையான குருவான வியாசரை வணங்கி பூஜை செய்வார்கள். எனவேதான் ஆனி மாத பவுர்ணமியை வியாசர் பூர்ணிமா என்றும் அழைக்கிறார்கள்.

    தமிழர்கள் கலாச்சாரத்தில் குரு அல்லது ஆசிரியர் கடவுளுக்கு நிகராக கருதப்படுகிறார். அந்த அடிப்படையிலும், ஆனி மாத பவுர்ணமி தினத்தை குரு பவுர்ணமி தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு குரு பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45 மணிக்கு சதுர்த்தசி திதி முடிந்ததும் தொடங்குகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5.49 மணி வரை பவுர்ணமி இருக்கிறது.

    எனவே இந்த ஆண்டுக்கான குரு பவுர்ணமி வழிபாடுகள் நாளை இரவே தொடங்கி விடுகிறது.

    குரு பூர்ணிமா என்பது வேத வியாசரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகும். வியாசர் பண்டைய இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் குருக்களில் ஒருவராக அறியப்படுகிறார். வேத வியாசர் நான்கு வேதங்களை இயற்றினார், மகா பாரத இதிகாசத்தை இயற்றினார், பல புராணங்கள் மற்றும் இந்து புனிதக் கதைகளின் பரந்த கலைக்களஞ்சியங்களுக்கு அடித்தளம் அமைத்தார் என்பதையும் நவீன ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.

    குரு பூர்ணிமா என்பது, சிவபெருமான், ஆதி குரு அல்லது அசல் குரு வடிவில், வேதங்களின் ஞானிகளான ஏழு முனிவர்களுக்கு கற்பித்த தேதியைக் குறிக்கிறது. யோகா சூத்திரங்களில், பிரணவ அல்லது ஓம் வடிவில் உள்ள கடவுள் யோகாவின் ஆதி குரு என்று அழைக்கப்படுகிறார். புத்தர் சாரநாத்தில் தனது முதல் பிரசங்கத்தை இந்த நாளில் வழங்கியதாக நம்பப்படுகிறது. இது இந்த புனித நாளின் சக்தியைக் காட்டுகிறது

    குரு பூர்ணிமாவுடன் தொடர்புடைய விஷ்ணு வழிபாட்டின் முக்கியத்துவம் உள்ளது. இந்த நாளில், விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் என்று அழைக்கப்படும் விஷ்ணு சத்ரநாமத்தை உச்சரிக்க வேண்டும். இந்த நல்ல நாளில், உங்களுடன் இணக்கமாக இருங்கள் மற்றும் உங்கள் ஆற்றலைச் செலுத்துங்கள்.

    அமைதியும் செழிப்பும் உங்களுக்கு தொலைதூரக் கனவாகத் தோன்றினால், தனிப்பயனாக்கப்பட்ட நேரடி விஷ்ணு பூஜையை முழு-ஆதார தீர்வாக பதிவு செய்யவும்.

    இந்த நாளில், அதிகாலையில் எழுந்து, குளித்தல், பூஜை போன்ற உங்கள் அன்றாட வழக்கமான கடமைகளை மேற்கொள்ளுங்கள்; மேலும், நீங்கள் சரியான ஆடை அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    அதன் பிறகு, வியாசர் திருவுருவப் படத்திற்கு மலர்கள் மற்றும் நறுமண மாலையை வைத்து, பின்னர் உங்கள் சொந்த குருவிடம் ஆசீர்வாதம் பெறுங்கள்.

    உங்கள் குருவை ஒரு நாற்காலியில் அல்லது வேறு எங்காவது உட்கார வைத்து, பின்னர் அவருக்கு ஒரு மாலையை வழங்குங்கள்.

    அதன்பிறகு, உங்கள் குருவுக்கு வஸ்திரம், பழங்கள், மலர்கள், மாலைகள், தட்சிணை போன்றவற்றைப் பணமாக அளித்து, அவர்களின் ஆசிகளைப் பெறுங்கள்.

    உங்கள் ஜாதகத்தில் வலுவான வியாழன் இருந்தால் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று வேத ஜோதிடம் வெளிப்படுத்துகிறது. இது உங்கள் ஜாதகத்தில் உள்ள நல்ல பலன்களான குரு அல்லது கடவுள் வியாழனை வலுப்படுத்த உதவும். உங்கள் ஜாதகத்தில் வியாழன் வலுவிழந்த ராசியான 9-ல் (அதாவது மகரம் ) இருந்தால், நீங்கள் தவறாமல் குரு யந்திரத்தை வழிபட வேண்டும்.

    உங்கள் ஜாதகத்தில் வியாழன்-ராகு, வியாழன்-கேது அல்லது வியாழன்-சனியின் சேர்க்கை இருந்தாலும் குரு யந்திரத்தை வழிபடுவது உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் ஜாதகத்தில் வியாழன் பலவீனமான வீட்டில் அதாவது 6, 8 அல்லது பன்னிரண்டாம் வீட்டில் இருந்தால், நீங்கள் ஆற்றல் மிக்க குரு யந்திரத்தை வணங்க வேண்டும் .

    தனியாக ஒரு மனிதன் சிந்தித்து, பரம்பொருளை உணர்ந்து, ஞானம் அடைவது கடினம். அதற்கு குருவின் துணை இன்றியமையாதது.

    குரு என்பவர் யார்?. "கு' என்றால் "இருள்'. "ரு' என்றால் "போக்குபவர்'. அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி ஞானமாகிய ஒளியைத் தருபவரே குரு ஆவார். தன் சீடர்களுக்கு ஆன்மிக முன்னேற்றம் ஏற்பட, யார் அவர்களுக்கு சாதனையைக் கற்றுத் தந்து, ஆன்மிக அனுபவங்களை அருள்கின்றாரோ அவரே குரு எனப்படுகிறார்.

    தன்னை நம்பி வருகின்றவர்கள் நல்ல வழியில் செல்ல வேண்டும் என்று எந்தவொரு குருவும் நினைப்பார். அவர்களிடமிருந்து எவ்விதப் பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் நல்வழிப்படுத்தி இறையின்பத்தை அனுபவிக்கச் செய்கின்ற பெருந்தன்மையை குருவைத் தவிர வேறு யாரிடமும் காணமுடியாது.

    குருவே தெய்வம். குருவே பிரம்மா. குருவே விஷ்ணு. குருவே மகேஸ்வரன். குருவே தேவர்கள். குருவே சாட்சாத் பரப் பிரம்மம். இத்தகைய பெருமை வாய்ந்த குருவைப் போற்றும் திருநாளான "குரு பூர்ணிமா' இவ்வருடம் நாளை (ஞாயிறு) இரவு தொடங்குகிறது.

    வேதத்தைத் தொகுத்து நான்காகப் பிரித்து நமக்கெல்லாம் எளிமையாக வழங்கி, சனாதனதர்மத்தை வேரூன்றச் செய்த வேத வியாசர் நமக்கெல்லாம் ஆதி குருவாக விளங்குகிறார்.

    அவர் வடக்கில் "நைமி சாரண்யம்' என்ற இடத்தில் அமர்ந்து வேதங்களைத் தொகுத்து புராணங்களை இயற்றியதாகக் கூறப்படுகிறது. அவரைப் போற்றும் வகையில் இந்த பவுர்ணமி "வியாச பவுர்ணமி' என்றும் அழைக்கப்படுகிறது.

    தென்னகத்தில், சென்னை மாகாணத்தில் மகரிஷி வியாசரும், அவரது சீடர்களும் வாழ்ந்த ஒரு பகுதி "வியாசர் பாடி' என்றழைக்கப்படு கிறது.

    இவ்வூரில் அமைந்துள்ள ஸ்ரீமரகதாம்பாள் சமேத ரவீஸ்வரர் திருக்கோயிலில் சிவன் சந்நிதிக்குப் பின்புறம் வியாசருக்குத் தனி சந்நிதி அமைந்துள்ளது. இங்கு, வியாசர் புலித்தோல் மீது பத்மாசனத்தில் அமர்ந்து அருள் புரிகிறார். கல்வி, கேள்விகளில் தங்கள் குழந்தைகள் சிறந்து விளங்க இவரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

    வியாச பவுர்ணமியன்று நாமும் வியாசரைத் துதித்து அவர் அருள் பெறுவதோடு நமக்கு குருவாய் அமைந்த அனைவரையும், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை மனதில் தியா னித்து வேண்டிக் கொண்டால் அவர்கள் அருளால் நம் வாழ்வு சிறக்கும்.

    • மலத்துவாரத்திற்கு மேல் 5 அங்குலத்திற்குள் மூன்று முடிப்புகள் உள்ளன.
    • 3-வது மடிப்பில்தான் மூல நோய் உண்டாகிறது.

    வயிற்றின் அடியில் கவிழ்த்து வைத்தாற்போல் மேலே ஏறிய பின் கீழே இறங்கும் வடிவ பெருங்குடலின் முடிவு மலத்து வாரமாகும். மலத்துவாரத்திற்கு மேல் ஏறத்தாழ 5 அங்குலத்திற்குள் மூன்று முடிப்புகள் உள்ளன.

    முதல் மடிப்பு மலத்தை வெளித்தள்ள சுருங்கி கீழ்வதாகும். இரண்டாவது மடிப்பு மலத்தை வெளித்தள்ளுவதாகும். மூன்றாவது மடிப்பு மலங்கழித்தவுடன் மூடிக்கொள்வது. இந்த 3-வது மடிப்பில்தான் மூல நோய் உண்டாகிறது. மூலம் 21 வகைப்படும் என்று யூகி முனிவரால் அருளப்பட்ட வைத்திய சிந்தாமணி எண்ணாறு என்னும் நூல் கூறுகிறது. அவை வருமாறு:-

    நீர்மூலம்:

    வயிறு வலித்து சுருண்டு மேலும் கீழும் பொருமிக் கொள்ளும். வாயில் நீர் ஊறும். மலம் வறண்டு போகும். அடிக்கடி மலம் வருவது போன்ற உணர்ச்சி ஏற்படும்.

    செண்டுமூலம்:

    ஆசன வாயில் வலிக்கும். காரம் உட்கொண்ட வுடன் மலம் வெளிவரும். ரத்தமும் நீரும் கலந்து வெளிவரும். ஆசன வாயில் அரிப்பு ஏற்படும். சுருங்கும்.

    தொந்தி மூலம்:

    மலங்கட்டிக் கொண்டு இருக்கும். வயிறு பொருமல் ஏற்படும். நடக்க முடியாது. வியர்க்கும். தாகம் ஏற்படும். ஆசனவாய் அட்டைபோல் சுறுங்கும்.

    வினைமூலம்:

    பசி ஏற் படாது. உண்ட உணவு செரிக்காது. அடிவயிறு குத்தும். கை, கால் உளைச்சல் ஏற்படும். வயிறு இரைத்து சூடு ஏற்படும். மலங்கட்டும். நரம்புகளை இழுக்கும். ஆசன வாயில் கருப்பு அதிகரிக்கும். தினமும் எரிச்சல் உண்டாகும்.

    மேக மூலம்:

    உடம்பில் திமிர் ஏற்படும். சிறுநீர் எரியும். தலையும், காலும் வலிக்கும். திடீரென்று கழிச்சல் ஏற்படும். ரத்தம் பீறிடும்.

    பவித்திர மூலம்:

    கை, கால் கனக்கும். மலவாயில் கனல் ஏற்படும். ஆசன வாயில் கட்டி ஏற்படும். ஆசன வாயில் மாம்பூ போல முளைகள் ஏற்படும். பின் கோவை பழம் போல சிவப்பு நிறமாகும்.

    கிரந்தி மூலம்:

    ஆண்குறியில் புண் ஏற்படும். கை, கால்களில் கருப்பு ஏற்படும். ஆசன வாயில் புண்ணாகி கொடி கொடியாய் முளை உண்டாகி சீழும், ரத்தமும் வெளிப்படும். மலம் கட்டிக்கொண்டு கீற்று போல வெடித்து இறங்கும்.

    குத மூலம்:

    மூக்கில் குறுத்து போல வெளிப்பட்டு உள்ளே இழுத்துக்கொள்ளும். ரத்தமும், சீழும் வெளிப்படும். அடிக்கடி நாவறட்சி ஏற்படும். கை, காலில் மதப்பு ஏற்படும். கோபம் ஏற்படும். புற மூலம்: எண்ணெய் போலும், நீர் போலும் மலவாயில் கசிந்து சீழ் கொட்டும். அரிப்பு ஏற்படும். உடம்பு முழுவதும் சிறு சிறு சிரங்குகள் ஏற்பட்டு சொறி ஏற்படும். பிணம் போல முக வாட்டம் ஏற்படும்.

    சுருக்கு மூலம்:

    வாயில் தடிப்பு ஏற்பட்டு ஆசன வாய் சுருங்கிக்கொள்ளும். பெருங்குடலில் வலி ஏற்படும். வயிறு பொருமும். நீரும், ரத்தமும் வெளியாகும். உடல் வெளுக்கும். உடம்பில் அசதி ஏற்பட்டு தளரும்.

    சவ்வு மூலம்:

    தொப்புளை சுற்றி தாமரை பூ போல தடிப்பு ஏற்படும். ஆசன வாயில் சவ்வு போல ஏற்படும். சீழும், நீரும் அடிக்கடி கசியும்.

    மூளை மூலம்:

    ஆசன வாயில் கடுக்கும். எரியும், மிக சுருங்கும். அரிப்பு காணும். அடிவயிறு கல் போலாகும். மலம் கழிக்கும்போது ரத்தம் பீறிடும்.

    வரண மூலம்:

    மலங்கட்டிக் கொண்டு துண்டாக வரும். அடிக்கடி கோபம் ஏற்படும். நாளடைவில் உடல் பலம் குறையும்.

    ரத்த மூலம்:

    தொப்புளில் வலி ஏற்படும். மலங்கழிக்கும் முன் ரத்தம் பீறிட்டு வெளிவரும். உடலில் வறட்சி ஏற்படும். நாளடைவில் மூட்டுகளில் வலி ஏற்படும். காய்ச்சல் ஏற்படும். மயக்கம் உண்டாகும். கண்களில் நிறமுண்டாகும்.

    சீழ் மூலம்:

    மலவாய் கடுத்து எரிவு ஏற்படும். மலவாய் தளர்ந்து போகும். சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளிப்படும்.

    ஆழி மூலம்:

    வள்ளி கிழங்கு போல முளை காணும். சீழும் ரத்தமும் ஏற்படும். காரம் உண்ண முடியாது. உடல் பலம் குறையும்.

    தாமர மூலம்:

    ஆசன வாயை சுற்றி புண் ஏற்படும். வயிறு கொள்ளும் பசி இருக்காது. மூச்சுத் திணறல் ஏற்படும்.

    விதமூலம்:

    கோவைப்பழம் போல் முளை தள்ளி இருக்கும். நாளடைவில் கறுப்பாக மாறும். மிருதுவதுவாகும். கடுப்பு அரிப்பு குத்தல் வலி ஏற்படும். மலவாயின் உள்ளும் வெளியும் வலி ஏற்படும்.

    பித்தமூலம்:

    அடிக்கடி தலைவலி ஏற்படும். பருத்திக் கொட்டை போலும் நெல் போலும் முளை உண்டாகும். மாவு உருண்டைப் போல் ரத்தமும், சீழும் கலந்து மலம் வெளியாகும். அடிக்கடி தாகம் ஏற்படும். வியர்க்கும்.வயிறு வலிக்கும்.

    சிலேட்டுமா மூலம்:

    எண்ணை நிறமுளை ஏற்படும். எப்பொழுதும் எரிவு இருக்கும். கருப்பு ஏற்பட்டு நீர் சீழ் இவைகளோடு மலம் வெளிவரும். சிறுநீர் சீழ் இவைகளோடு மலம் வெளிவரும். சிறு நீர் சுடும். விந்து நஷ்டம் ஏற்படும் . உடல் வெளுக்கும் வாய் சுவையற்றுப் போகும்.

     இதற்கு எளிய சித்த வைத்திய முறைகள் உள்ளன. பிரண்டையை உலர்த்தி சூரணித்து அதற்கு நிகராக சர்க்கரை கலந்து சிறிது பசு நெய்யில் குழைத்து 40 நாட்கள் உண்ண தீரும்.

    சதுரக்கள்ளியை நறுக்கி பானையில் போட்டு 4 படி தண்ணீர் விட்டு வேடு கட்டி, அதன்மேல் 1/2 கப் கருங்குறுவை மாவை வைத்து பிட்டவித்து 3 நாட்கள் மூன்று வேளை கொடுக்க மூலம் தீரும்.

    கொட்டைப்பாசி 50 கிராம், கடுக்காய் 50 கிராம் இவைகளை நிழலில் உலர்த்தி வடிகட்டிக் கொள்ளவும். 5 கிராம் மிளகு தூளை மேஜைக் கரண்டி அளவு தேனில் குழைத்து காலை மாலை இரண்டு வேளையாக 5 நாட்கள் உண்டு வர சகல மூல நோய்கள் குணமாகும்.

    நாயுருவி இலை 50 கிராம், கறிவேப்பிலை 50 கிராம், கருணைக் கிழங்கு 150 கிராம், பசுவெண்ணெய் 250 கிராம் இவற்றை லேகியம் போலக் கிண்டி ஒரு வேளைக்கு 10 கிராம் அளவு வீதம் 5 நாட்கள் உண்டு வர நோய் குணமாகும். 1 நாளைக்கு 1 வேளை சாப்பிடவும்.

    காட்டு கருணை, காராக் கருணை, பிரண்டை, கொடி வேலி, அறுகு, புளியமடல், மகுளி ஆகியவற்றை நிழலில் உலர்த்தி இடித்து வடிகட்டி வைத்துக் கொண்டு காலை மாலை இரு வேளைகளிலும் 5 கிராம் தூளை 1 மேஜைக் கரண்டி தேனில் குழைத்து அருந்தலாம்.

    கைக்குத்தல் கருங்குருவை அரிசியை 200 கிராம் அளவு எடுத்து மண் சட்டியில் போட்டு 100 மில்லி லிட்டர் முப்பிரண்டை சாற்றையும் 100 மிலி கடல் நீரையும் விட்டு 3 மணி நேரம் ஊற வைத்து அரிசியை மட்டும் எடுத்து அரைத்து அடை போல தட்டி இரும்பு தோசைக் கல்லில் போட்டு 50 கிராம் பசு நெய் விட்டு வேக வைத்து காலை உணவாக 6 நாட்கள் தொடர்ந்து உண்டு வர வெளி மூலம் குணமாகும்.

    50 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை பசும் பாலில் வேக வைத்து 50 கிராம் தேனில் உட்கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் சாப்பிட்ட பின் 1 மணி நேரம் கழித்து மருந்தை ஒரு வாரம் சாப்பிடவும், உரித்த வெள்ளைப்பூண்டை நெய்யில் வதக்கி பின் தேனிட்டு அரைத்து காலை மாலை இருவேளை சாப்பாட்டுக்கு முன் சாப்பிடவும்.

    புளிக்கருணைக் கிழங்கு தோல் நீக்கி 100 கிராம் எடுத்து சில துண்டு துளாக்கிக் கொள்ளவும். ஒரு மண் சட்டியில் கிழங்கைப் போட்டு 5  கிராம் மிளகு தூளைப் போடவும். பின் 200 மி.லி. நெய் விட்டு வறுத்து எடுத்து மரக்கறியுடன் சேர்த்து சாப்பிட குத்துமூலம் குணமாகும்.

    விளாமிச்சை வேரை சிறிது வாழைப் பூவின் சாறு விட்டு அரைத்து வாழைப் பூவின் சற்றில் கலந்து உணவுக்கு முன் அருந்து ரத்தக்கடுப்பு நீங்கும்.

    சித்த மருத்துவர்

    கே.எஸ்.சுப்பையாபாண்டியன்

    9994932121

    • நாம் நம்மை மதிக்கத் தொடங்கினால் வாழ்க்கையின் மதிப்பீடு பெருகிக்கொண்டே போகும்.
    • இயற்கையின் படைப்பில் எல்லாருமே அழகானவர்கள்

    இயற்கையின் படைப்பில் எல்லாருமே அழகானவர்கள்; மனிதர்கள் அழகானவர்கள்; அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற வாழ்க்கையும் அழகானதுதான். யார் யார் தனது மதிப்பை உணர்ந்து தன்னை ஆராதிக்கக் கற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் இந்த உலகில் மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்குத் தகுதி பெற்றவர்கள் ஆகின்றனர்.

    சிலர் வாழ்க்கையில், நொடிக்கு நொடி தாம் சல்லிக்காசுக்குப் பிரயோஜனமில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சலித்துக்கொண்டே இருப்பார்கள். உண்மையில் அவர்களெல்லாம் பெரும் புதையல் மேட்டுக்கு மேல் தாம் அமர்ந்திருப்பது தெரியாமல் பிச்சையெடுத்துக் கொண்டிருப்பவர்கள். நொந்தவர்கள் வெந்துதான் போகவேண்டுமேயொழிய எந்த காலத்திலும் சிறந்தவர்கள் ஆகமுடியாது.

    சம்பாதித்துக்கொண்டே இருப்பதுதான் மதிப்புமிக்க வாழ்க்கை என்று சிலர் கூறுகிறார்கள்; அவர்கள் `சம்பாதிப்பது' என்று அர்த்தப்படுத்திக் கொள்வதெல்லாம் `பணம் சம்பாதிப்பது' பற்றியதே ஆகும். பொருளை ஈட்டுவதும், வீடு,நிலம், கார் முதலிய வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வதும் ஒருவகைச் சம்பாத்தியம்தான் என்றாலும் அதையும் தாண்டிப் பலவகைச் சம்பாத்தியங்கள் உலகில் உள்ளன.

    அறிவைச் சம்பாதிப்பது, திறமையைச் சம்பாதிப்பது, நற்குணங்களைச் சம்பாதிப்பது,புகழைச் சம்பாதிப்பது, நல்ல நண்பர்களையும் நல்ல உறவுகளையும், நல்ல மனிதர்களையும் சம்பாதிப்பது, நல்ல பெயரைச் சம்பாதிப்பது, நல்ல அனுபவங்களைச் சம்பாதிப்பது என்று மதிப்புமிக்க சம்பாத்தியங்கள் நாட்டில் எவ்வளவோ இருக்கின்றன.

    இவற்றையெல்லாம் சம்பாதிப்பதற்குப் பணம் தேவைப்படுவதே இல்லை; ஏன்? பணத்தைச் சம்பாதிப்பதற்குக் கூட அடிப்படையில் பணம் தேவைப்படுவதே இல்லை; அடிப்படையில் உழைப்பும் தளராத முயற்சியும் இருந்தால் போதும்.

    இந்த உலகில் உயிர்வாழும் காலம் வரைக்கும் தேவையான பணத்தோடு வாழ்வது மதிப்பான வாழ்க்கை என்பர் சிலர். தன் காலத்திற்குப் பிறகும், வருகிற சந்ததிகளுக்கும் சொத்துச் சேர்த்து வைப்பதே சிறந்த மதிப்பான வாழ்க்கை எனச் சிலர் முதுமையிலும் ஓய்விலாது பணம் தேடிக்கொண்டே இருப்பார்கள். உண்மையில் இதுவெல்லாம் பொருளாதாரம் சார்ந்த கோட்பாடே ஆகும்.

    உண்மையில் வாழ்க்கையின் மதிப்பு எவ்வளவு? அதன் விலைமதிப்பு என்ன?. இந்தக் கேள்வி களுக்குப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் கூறினாலும், தத்துவ, வாழ்வியல் அடிப்படை களில் கூறினாலும் பதில் ஒன்றுதான். ஆம்! வாழ்க்கை விலை மதிப்பற்றது.

    வாழ்க்கையின் மதிப்பை மற்றவர்களிடம் கேட்பதைவிட நமக்கு வாழ்க்கையைத் தந்த கடவுளிடமே கேட்டுவிடுவோமே என்று முடிவு செய்து கடவுளிடம் கேள்வியோடு போய் நின்றான் ஒரு மனிதன். அவனது கையில் ஒருகல்லைத் தந்த கடவுள், "இதை எடுத்துக்கொண்டு கடைவீதிக்குச் செல்!. அங்கே வணிகம் செய்யும் பலவித வணிகர்களிடம் இதற்கு என்ன விலை தருவீர்கள்? என்று கேட்டு வா! விற்றுவிடாதே! விலையை மட்டும் கேட்டு வா!" என்று கூறி அனுப்பி வைத்தார்.

    கடைவீதிக்கு வந்த மனிதன் முதலில் ஒரு தள்ளுவண்டியில் ஆரஞ்சுப் பழங்கள் விற்றுக் கொண்டிருந்த வியாபாரியிடம் கடவுள் தந்த கல்லைக் காண்பித்து இதற்கு என்ன விலை தருவாய்? என்று கேட்டான். கல்லை வாங்கிப் பார்த்த பழ வியாபாரி, ஒரு டஜன் ஆரஞ்சுப்ப ழங்கள் தரலாம்! என்று பதிலளித்துவிட்டு, அடுத்த வாடிக்கையாளரைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார்.

    அடுத்து ஒரு காய்கறிக் கடைக்குச் சென்ற மனிதன், அங்கிருந்த வியாபாரியிடம் கல்லைக் காண்பித்து, இதற்கு என்ன விலை தருவாய்? என்று கேட்டான். கல்லைக் கொஞ்சம் ஆர்வத்தோடு பார்த்த காய்கறி வியாபாரி, இந்தக் கல்லுக்கு விலையாக ஒருமூட்டை உருளைக் கிழங்கைத் தரவா? என்று கேட்டார். மறுத்த மனிதன் அடுத்து ஒரு நகைக் கடைக்குள் நுழைந்தான்.

    அலங்காரமாகவும் வெகுநேர்த்தியாகவும் இருந்த நகைக்கடைக்குள் நுழைந்ததும் அங்கிருந்தவர்கள் மனிதனை அன்போடு வரவேற்றனர்.

    முதலாளியை விசாரித்துக் கொண்டு, அவரிடம், தான் கொண்டு வந்திருந்த கல்லைக் காண்பித்து இதற்கு என்ன விலையை நீங்கள் நிர்ணயித்துத் தருவீர்கள்? என்று கேட்டான்.

    கல்லை வெறுமனே பார்க்காமல் உரிய கருவிகள்கொண்டு ஆராய்ந்து பார்த்த நகை வியாபாரி, 10 லட்சம் ரூபாய் தரலாம் என்று கூறினார். இருந்தாலும் இது விற்பனைக்கல்ல என்று மனிதன் கல்லைத் தர மறுக்கவே, மேலும் ஐந்து லட்சம் போட்டு 15 லட்சமாகத் தருகிறேன் என்று விலையை உயர்த்திக் கூறினார் நகை வியாபாரி. கல்லை விற்காமல் விலைமட்டும் கேட்டு வா! என்று கடவுள் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு கடையைவிட்டுக் கல்லோடு வெளியேறினான் மனிதன்.

    அந்தக் கடைவீதியில் விலையுயர்ந்த கற்கள் நவரத்தினங்கள் விற்கும் கடைக்குள் அடுத்து நுழைந்தான் மனிதன். கையில் பளபளவென்று ஒளிவீசும் ஒரு கல்லோடு ஒரு மனிதன் நுழைவதைக் கண்ட கடையின் ரத்தின வியாபாரி அவனை ஆவலோடு வரவேற்றார்.

    கல்லின் மதிப்பை அறிந்து செல்ல வந்திருப்பதை மனிதன் வியாபாரியிடம் தெரிவித்தான். கல்லை வாங்கிப் பார்த்தவுடன், ஐயா விலைமதிப்பற்ற மாணிக்கக் கல் ஐயா தங்கள் கையில் ஜொலிப்பது; இதனைத் தொட்டுப் பார்ப்பதே பெரும் பாக்கியம்! என்று தனது கையில் கல்லை வாங்கினார் ரத்தின வியாபாரி.

    நவீன இயந்திரங்கள் கருவிகள் கொண்டு பலநிமிடங்கள் ஆராய்ந்து பார்த்தார். பார்த்து முடித்தவுடன் மிகுந்த மரியாதையுடன், மனிதனின் கைகளை நீட்டச் சொல்லி அந்த மாணிக்கக் கல்லைக் கைகளில் வைத்தார். ஐயா இந்த மாணிக்கக் கல்லுக்கு விலைகூற என்னால் மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள ரத்தினக் கற்கள் வியாபாரிகள் எத்தனைபேர் சேர்ந்தாலும் முடியாது!. இந்த உலகையே விலைபேசினாலும் இந்தக் கல்லின் மதிப்பிற்கு இணையாகாது! என்று வியாபாரி சொல்லிமுடித்தார்.

    கல்லோடு மீண்டும் கடவுளிடம் வந்த மனிதன், கடைவீதியில் நடந்த சம்பவங்களை விரித்துரைத்தான். சிரித்துகொண்டே கடவுள் சொன்னார்," மானுடா உன் வாழ்க்கையும் இந்த மாணிக்கக் கல்லைப்போல விலைமதிப்பற்றதுதான். ஆரஞ்சுப்பழ வியாபாரி, காய்கறி வியாபாரி, நகைக்கடை வியாபாரி ஆகியோர் அவரவர் அறிவிற்கு எட்டிய வரையில் கல்லுக்குள்ள மதிப்பைக் கூறினர். ஆனால் கல்லின் உண்மையான மதிப்பை அறியத் தெரிந்த ரத்தின வியாபாரியே அதன் உண்மை மதிப்பை, விலைமதிப்பற்ற சிறப்பை உனக்கு விளங்க வைத்தார்".

    "மனித வாழ்க்கை ஒவ்வொன்றும் இந்த மாணிக்கக் கல் போன்று விலை மதிப்பற்றதுதான். புரியாதவர்கள் மதிப்பிழந்து போகிறார்கள்.

    மதிப்பை உணர்ந்து கொண்டவர்கள் சாதித்துச் சாதித்து மதிப்பைப் பெருக்கிகொண்டே போகிறார்கள்" என்று சொல்லி முடித்தார் கடவுள்.

    படைத்தவன் பெருமைக்குரியவனாக இருக்கும்போது படைப்புமட்டும் எப்படிப் பெருமை குறைந்ததாக இருக்கும்?.

    நாம்தாம் தேவையில்லாமல் பலவேளைகளில் நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறோம். நம்மைப்பற்றி அடுத்தவர் கொண்டுள்ள கருத்துதான் மதிப்பீடு என்றாலும், சாதாரண அறிவுகொண்டவர்கள் நம்மைக் குறைத்துக் கூறுவதை வைத்து நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொண்டால் எப்படி?.

    இந்த உலகில் எல்லாரும் ஒரேவிதமான கண்ணோட்டம் கொண்டவர்கள் இல்லை; அவரவர் பார்வைக்கு ஏற்ற வகையில் மனித வாழ்க்கையின் மதிப்பீடுகள் மாறுபடலாம். அவர்கள் ஆளுக்கொருவகையில் மதிப்பிடுவதை வைத்து நம்முடைய மதிப்பும் அவ்வளவுதான் என்று மனம் தாழ்ந்து விடக்கூடாது.

    விலைமதிப்பற்ற வாழ்க்கை நமக்கு வாய்த்திருக்கிறது. அந்த வாழ்க்கையை வாழும் வகையில் வாழ்ந்து மதிப்பை உயர்த்திக்கொண்டே போக வேண்டும்.

    ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் மதிப்பையும் உயர்த்திக்காட்டுவதில் முன்னிற்பது அவனது குடும்ப வாழ்வே ஆகும். குடும்ப உறுப்பினர்களான கணவன், மனைவி, பிள்ளைகள், பெரியவர்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பும் மதிப்பும் மரியாதையும் கொண்டு வாழும் நெறியறிந்து வாழவேண்டும். அதுவே மதிப்பைத் தரும் குடும்ப வாழ்வு.

     `அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவரா? சிறப்பாகத்தான் இருப்பர்!' என்று பெருமைப் படும் அளவுக்குக் குடும்ப வாழ்வை மதிப்புடன் நடத்த வேண்டும். கணவர் ஒருபக்கம், மனைவி ஒருபக்கம், குழந்தைகள் ஒருபக்கம், மூத்தோர்கள் ஒருபக்கம் என ஆளுக்கொரு பக்கமாகக் கருத்தொற்றுமை சிதையுமளவுக்குக் குடும்பம் போனால் வாழ்க்கை மதிப்பற்றுப் போய்விடும்.

    குடும்பத்திற்கு அடுத்து வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் கவனம் செலுத்த வேண்டியது அவரது உழைப்பில் அல்லது தொழிலில் மதிப்போடு செயல்படுவது ஆகும். ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் மதிப்பிழந்து போவதற்கு முக்கியமான காரணம் தாம் செய்யும் தொழிலை அவர்கள் மதிப்பதே கிடையாது. என்னுடைய தகுதிக்கும் திறமைக்கும் நான் பார்க்கவேண்டிய தொழிலே இதுவல்ல! என்று மாதம் பத்து லட்சம் சம்பாதிப்பவர் கூட வேண்டா வெறுப்புடன் கூறுவதைப் பார்க்கலாம்.

    இப்படி வேண்டா வெறுப்புடன் தொழில் செய்பவர்கள் அந்த தொழிலால் எந்தக் காலத்திலும் மதிப்புடன் வாழப்போவதேயில்லை. பலர் கூறுவதைப்போல தெருக்கூட்டும் தொழில் செய்பவர்கூட அதைத் தொழில்பக்தியோடு செய்தால், அந்த தொழில் மூலமாகவும்கூட உலகம்போற்றும் மதிப்பையும் மரியாதையையும் பெறலாம்.

    உழைப்பதற்கு கைகால்கள் கொண்ட உடம்பையும், சிந்திக்க, கற்க, அன்பு செலுத்த, அடுத்தவர்க்கு உதவ எண்ணற்ற உடல் உறுப்புகளையும் உணர்வுகளையும் விலை மதிப்பற்ற வகையில் நாம் ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம். நம்முடைய மதிப்பை நாம் முதலில் உணர்ந்துகொள்வதே நம்முடைய வாழ்க்கையின் மதிப்பை அறிந்துகொள்ளத் தொடங்கும் அரிச்சுவடி.

    மதிப்புமிக்க உடம்பை வைத்துக்கொண்டு மதிப்பிற்குரிய செயல்களை மட்டுமே செய்வது; வாழ்க்கையில் துன்பமோ இன்பமோ எது நேர்ந்தாலும் அவற்றின்மூலம் கற்றுக்கொண்டே இருப்பது; நேர்மையில் இருந்து விலகாமல், நேர்த்தியான செயல்களை மட்டுமே செய்து மதிப்புடனும் மரியாதையுடனும் இயங்கிக் கொண்டே இருப்பது; அன்பையும் சேவையையும் அறவழியில் செய்வதொன்றே மதிப்பான வாழ்க்கை என்பதை மதிப்புடன் வாழ்ந்த மாமனிதர்கள் வழியாக அறிந்து கொள்வது... இவையே வாழ்க்கையின் மதிப்பு.

    வானுறையும் தெய்வத்தின் வழி படைப்பு நிகழ்வது உண்மையென்றால், படைப்பாய் பிறந்துள்ள மனிதர் அனைவரும் தனது மதிப்பை உணர்ந்த செயல்களினால் வாழ்வாங்கு வாழ்ந்தால் அந்த தெய்வீக வாழ்க்கையை மண்ணுலகிலேயே அடைந்து விடுவர். இது வள்ளுவர் வாக்கு.

    மதிப்பிற்குரியவர்களே! நாம் மதிப்புமிக்கவர்கள் என்பதை நமது மதிப்புமிக்க செயல்களால் வாழ்ந்து காட்டுவோம்; நாம் நம்மை மதிக்கத் தொடங்கினால் நமது வாழ்க்கையின் மதிப்பீடு பெருகிக் கொண்டே போகும்; நாம் நம்மைத் தாழ்த்திக்கொண்டே போனால் நமது வாழ்க்கையின் மதிப்பும் தாழ்ந்துகொண்டே போகும்.

    மதிப்போம்! மதிப்பீடுகள் பெருக்குவோம்!

    தொடர்புக்கு 9443190098

    முனைவர்

    சுந்தர ஆவுடையப்பன்

    • அஸ்வமேதம் தான் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நான் முதல் முதலில் நடித்த படம்.
    • கிளைமாக்ஸ் காட்சி ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் நடந்தது.

    அஸ்வமேதம் இதுதான் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நான் முதல் முதலில் நடித்த படம். மிகப்பெரிய நடிகர். எனவே எதிர்பார்ப்புடன் இருந்தேன்.

    படத்தில் பாலகிருஷ்ணா மருத்துவர் வேடம் எனக்கு. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் நடந்தது. அதுவரை பாலைவனம் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அது எப்படி இருக்கும் என்று நேரில் பார்த்தது கிடையாது.

    எனவே முதல் முறையாக பாலைவனத்தை பார்க்கப் போகிறோம் என்று ஆசையும் இருந்தது. அதேநேரம் இன்னொரு மலையாள படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அந்த படத்தின் காட்சிகள் கேரளாவில் மிகவும் உள்புற பகுதி களில் நடந்து கொண்டிருந்தது.

    படப்பிடிப்பு முடிந்து மறுநாள் நான் ஜெய்ப்பூர் செல்ல வேண்டும். ஜெய்ப்பூர் செல்வதும் எளிதல்ல. கொச்சியில் இருந்து விமானத்தை பிடித்து ஜெய்சல்மீர் செல்ல வேண்டும். அங்கிருந்து காரில் ஜெய்ப்பூர் பயணிக்க வேண்டும்.

    இந்த காலத்தை போல் அப்போதெல்லாம் தகவல் தொடர்பு சாதனங்கள் கிடையாது. ஒருவருக்கொருவர் தகவல்கள் பரிமாறி கொள்வது கஷ்டம்.

    இந்த நாளில் இந்த இடத்துக்கு வருவேன் என்றால் அந்த இடத்துக்கு சென்று விட வேண்டும். மற்ற வர்களும் அதேபோல் அந்த இடத்துக்கு வந்து விட வேண்டும் என்பதுதான் ஏற்பாடு.

    அதேபோல்தான் படக்கு ழுவினர் அனைவரும் ஜெய்ப்பூர் சென்று சேர்ந்து விட்டார்கள். எல்லோரும் எனது வரு கைக்காக காத்திருந்தார்கள்.

    நேரம் செல்ல செல்ல அவர்களுக்கும் சந்தேகம். மீனா வருவாளா... மாட்டாளா... என்று ஒருவருக்கொருவர் பேசி இருக்கிறார்கள்.

    இன்று வருவதாகத்தானே சொல்லி இருந்தார். ஏன் வரவில்லை என்று குழப்பத்தி லேயே இருந்திருக்கிறார்கள்.

    ஒரு நாள் போகாமல் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும்.

    இதெல்லாம் என்க்கும் தெரியும். எனவே அடித்து பிடித்து கேரளாவில் இருந்து ஜோத்பூர் சென்று அங்கிருந்து ஜெய்சல்மீர் போய் சேர்ந்து விட்டோம்.

    ஆனால் நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்... இந்த இடத்துக்கு வந்து விட்டோம்... என்று இந்த காலத்தை போல் 'ரன்னிங் கமென்ட்ரி' எல்லாம் கொடுக்க முடியாது.

    ஒரு வழியாக ஜெய்சல்மீரில் இருந்து காரில் புறப்பட்டு இரவு 8 மணியளவில் ஜெய்ப்பூர் போய் சேர்ந்தோம்.

     ஓட்டலில் எங்களை எதிர்பார்த்து காத்திருந்த படக்குழுவினருக்கு என்னை பார்த்த பிறகுதான் நிம்மதி.

    வந்திட்டீங்களா மேடம். வாங்க... வாங்க... என்று உற்சாகமாக வரவேற்று அழைத்து சென்றார்கள். அதன் பிறகுதான் எல்லோரும் இரவு சாப்பாடே சாப்பிட்டோம்.

    மறுநாள் அதிகாலையிலேயே படப்பிடிப்புக்கு தயாரானோம். காரில் படப்பிடிப்பு நடக்கப்போகும் இடத்தை சென்றடைந்தோம்.

    நாங்கள் சென்ற நேரம் பகல் 12.30 மணி போன இடம் பாலைவனம் ஆயிற்றே? மரங்களை எங்கே காண்பது? நிழலை எங்கு தேடுவது?

    கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பொன்னிற போர்வை விரித்தது போல் மணல் மட்டுமே பரந்து விரிந்து கிடந்தது. ஆங்காங்கே ஒட்டகங்களில் ஒரு சிலர் பயணித்து கொண்டிருந்தார்கள்.

    காரைவிட்டு இறங்கியதும் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அனலை அள்ளி கொட்டுவது போல் காற்று வீசியது. பாலைவனம் எப்படி இருக்கும் என்று தெரியாததால் புடவை, உயரமான ஹீல்ஸ் வைத்த செருப்பும் வாங்கி சென்றிருந்தேன்.

    காட்சியை பற்றி விளக்கும் போது முதல் முறையாக ஸ்லோமோஷனில் ஹை ஸ்பீடில் படமாக்க இருந்தார்கள். அந்த மாதிரி காட்சியில் நடிப்பது வழக்கமாக நடிப்பதை விட டபுள் ஸ்பீடில் நடிக்க வேண்டும்.

     எனவே சேலை கட்டிக் கொண்டு உயரமான ஹீல்ஸ் போட்டு நடிப்பது ஆபத்து. வழுக்கி விழ நேரிடலாம் என்று சாதாரண சப்பல் அணிந்து கொண்டேன்.

    பாலைவன மணலில் இறங்கி நடந்தோம். சற்று தூரத்தில் ஒரு சிறிய கொட்டகை மட்டும் போட்டு இருந்தார். அந்த கொட்டகைக்குள் தான் சாப்பிடுவது, ஓய்வு எடுப்பது எல்லாம்.

    நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். உண்மையான வெயில் அனுபவத்தை பாலைவனத்தில் பெற முடியும். இப்படியும் ஒரு பிரதேசம் இருக்கத்தானே செய்கிறது என்று எனக்குள் நானே நினைத்துக் கொண்டேன்.

    நம்ம ஊரில் கோடை காலம் தொடங்கியதும் 100 டிகிரி வெயில் அடித்தாலே வெளியே நடமாட முடிவதில்லை. எப்போது முடியும் இந்த வாட்டி வதைக்கும் வெயில் என்று தவிப்போம்.

    ஆனால் பாலைவனம் எல்லா காலமும் இப்படித்தான் இருக்கு மாம் சிறிது தூரம் வெயிலில் நடந்தாலே எங்காவது சற்று நேரம் ஒதுங்கி நிற்க நிழல் இருக்காதா என்று தேடி ஓடுவோம்.

    எப்படியும் சற்று தூரத்தில் நிழல் கிடைக்கும். ஆனால் பாலைவனத்தில் எங்கும் ஓடி தேடினாலும் நிழலை பார்ப்பது அரிது தாகம் வந்தால் தண்ணீர் கிடைக்காது. இப்படியும் ஒரு பிரதேசம்... இங்கும் உயிர்கள் வாழ்கிறது கண்முன்னால் ஒட்டகம் செல்கிறது. இவை தண்ணீருக்கு என்ன செய்யும்? எப்படித்தான் இந்த வெயிலை தாங்குகின்றதோ என்றெல்லாம் என் மனதுக்குள் ஓடியது.

    உறைய வைக்கும் பனி பிரதேசத்தில் பனிக்கரடிகள் வாழவில்லையா அதேபோலத்தான் இந்த வெயிலையும் தாக்குப் பிடிக்கும் வகையில் இந்தப் பிரதேசத்தில் உயிர்கள் வாழ்கின்றன இறைவன் படைப்பில் எத்தனை அதிசயங்கள்...? நினைத்தாலே ரொம்ப ஆச்சரியமாக இருக்கி றதல்லவா?

    வாழ்க்கையில் நாம் சாதிக்கும் எத்தனையோ சம்பவங்கள் நமக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கும். ஷூட்டிங் நடந்த இடம் ரொம்ப தூரத்தில் இருந்தது. அதுவரை பாலைவன மணலில் நடந்தே செல்ல வேண்டும்.

    அந்த மணலில் நடந்து செல்ல ஏது வான செருப்பு அணியாததால் நடக்கும் போது கால் மணலில் புதைந்ததால் நெருப்பில் கால் வைத்தது போல் இருந்தது. சூடு தாங்க முடியவில்லை. கால்களில் கொப்புளமே வந்துவிட்டது.

    தொடர்ந்து இந்த மாதிரி சாதாரண சப்பல் போட்டு நடிக்க முடியாது என்பதை உணர்ந்து இரவோடு இரவாக சென்று ஷூ வாங்கி போட்டேன்.

    ஷூ போட்டு நடக்கும் போதும் கால் மணலில் புதையும் போது மணல் சிறிதளவு உள்ளே சென்று விடும். இருந்தாலும் பரவாயில்லை.

    அந்த படத்தில் இடம் பெற்றுள்ள `ஓ பிரேமா...' என்ற பாடல் பாலைவனத்தில் பட மாக்கப்பட்டது. எப்படியோ அந்த படக்காட்சி முடிந்து விட்டது.

    அந்த படத்தில் இடம் பெற்ற 'கும்தலகிடி கும்மா குமதம்...' என்ற மற்றொரு டூயட் பாடல் சூப்பர் ஹிட்டானது. அந்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது ரொம்ப சுவாரஸ்யமானது.

    எதிர்பாராத காரணங்களால் டைரக்டருக்கு வர முடியாமல் போனது. மறுநாள் ஷூட்டிங்குக்கு எனக்கு என்ன காஸ்ட்யூம் சொல்லி இருக்கிறார் என்று கேட்டேன். எதுவும் சொல்லவில்லை என்றார்கள். அப்போ நான் எப்படி நடிப்பது?

    வேறு வழியில்லை. காட்சிக்கு ஏற்ற காஸ்ட்யூமை நானே முடிவு செய்தேன். இந்த கலர் சேலை, இந்த கலர் ஜாக்கெட், அது இந்த மாடலில் இருக்க வேண்டும். பாவாடை இந்த கலரில் வேண்டும் என்று போன் மூலம் ஐதராபாத்தில் இருந்த டிசைனரிடம் கூறுவேன்.

     இந்த காலத்தில் என்றால் வாட்ஸ் ஆப்பில் தெளிவாக டைப் செய்தும், மாடல்களை அனுப்பியும் சொல்ல முடியும். அது டிசைனருக்கும் புரியும்.

    நான் போனில் சொன்னது அவருக்கு எந்த மாதிரி புரிந்தது என்று தெரியாது. அவர் இரவோடு இரவாக தயார் செய்து விமானத்தில் அனுப்புவார். காலை 6 மணிக்கு முதல் விமானம் வரும்.

    ஒருவர் விமான நிலையத்துக்கு சென்று அதை வாங்கி வருவார். இப்படியே நான்கைந்து நாட்கள் விமானத்திலேயே வரவழைத்து சமாளித்தேன். 8 காஸ்ட்யூம்களில் ஆடினேன். 'கும்தலகிடி கும குமதா...' பாடலும் சூப்பராக அமைந்தது. ரசிகர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அந்த பாடல் மனசுக்கு பிடித்த பாடல். இப்போதும் விரும்பி கேட்பதுண்டு.

    இன்னொரு சுவாரஸ்யமான தகவலுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்...)

    • பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தான் அவரது ஆத்மாவின் பயணங்கள் இருக்கும்.
    • கர்ம தோஷம் அடுத்தடுத்த பிறவியிலும் கடல் அலைபோல வந்து கொண்டே இருக்கும்.

    ஒருவர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தான் அவரது ஆத்மாவின் அடுத்தடுத்த பயணங்கள் இருக்கும். ஒருவர் அதிக புண்ணியங்கள் செய்தால் அடுத்த பிறவிகளில் அவரது பிறப்பு மிகவும் சிறப்புகள் கொண்டதாக இருக்கும். அதேசமயத்தில் ஒருவர் அதிக பாவங்கள் செய்தால் அது அவரது அடுத்த பிறவிகளிலும் தொடரும்.

    ஒருவர் செய்யும் மிகவும் கொடூரமான பாவ செயல்களுக்கு நிவாரணம் தேடிக் கொள்ளாவிட்டால் அது கர்ம தோஷமாக மாறி விடும்.

    அந்த கர்ம தோஷம் அடுத்தடுத்த பிறவிகளிலும் கடல் அலைபோல வந்து கொண்டே இருக்கும். நிறைய பேர், வாழ்க்கையில் கஷ்டப்படும் போது அவர்களுக்கு தங்களது கர்ம தோஷத்தின் பாதிப்புகள் பின்தொடர்கின்றன என்பது தெரியாமலேயே இருக்கும்.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒருவர் முன் ஜென்மத்தில் தேவையில்லாத பாவங்கள், சாபங்களை சம்பாதித்து இருந்தால் அவை அடுத்த பிறவிகளில் நிச்சயம பாடாய்ப்படுத்தி விடும். குறிப்பாக 12 வகை சாபங்கள் அடுத்தடுத்த பிறவிகளில் தோஷங்களாக மாறி தொடரும் என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சப்த சாபம், பித்ரு சாபம், பசு சாபம், பூமி சாபம், நதி சாபம், விருட்சம் சாபம், குலதெய்வ சாபம், ரிஷி சாபம், தேவ சாபம் ஆகிய 12 சாபங்களும் அடுத்த பிறவிகளில் தோஷமாக மாறும் என்று நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

    பொதுவாக பாவங்கள் செய்யக்கூடாது. மற்றவர்களிடம் சாபங்கள் வாங்கக் கூடாது என்பார்கள். சாபங்கள் வாங்கியிருந்தால் அது கர்ம தோஷமாக மாறுவதை தடுக்கவே இயலாது. அதனால்தான் நன்கு பக்குவம் அடைந்தவர்கள் ஏதாவது துன்பம் நேரிடும்போது, `அனைத்துக்கும் காரணம் நம் கர்மா' என்று சொல்வதை கேட்டு இருப்பீர்கள்.

     முக்கிய விஷயங்களில் ஒருவருக்கு தொடர்ந்து தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் அதை கர்ம தோஷம் என்று மிக உறுதியாக சொல்லிவிட முடியும்.

    சில கர்ம தோஷங்களை ஒருவரது பிறந்த நேரத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ஜாதகத்தை வைத்துதான் கண்டறிய முடியும். அந்த வகையில் ஒருவர் முன்ஜென்மத்தில் என்ன பாவம் செய்தார் என்பதை அவரது ஜாதகம் துல்லியமாக காட்டிக்கொடுத்து விடும்.

    அந்த கர்ம தோஷங்களை உங்கள் ஜாதகத்தை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ள முடியும். ஒருவர் முன் ஜென்மத்தில் ஏதாவது பாவங்கள் செய்து கர்மாவை சேர்த்து வைத்திருந்தால் அது இந்த ஜென்மத்தில் 5-ம் இடத்தில் வந்து நமக்கு நடத்தி காட்டி கொடுத்து விடும். எனவேதான் 5-ம் இடத்தை பாவ பூர்வ புண்ணிய இடம் என்று சொல்கிறார்கள்.

    5-ம் இடத்தை வைத்து ஒருவரது ஜாதகத்தின் முன் ஜென்ம நிலையை கண்டுபிடித்து விடமுடியும். சூரியன், சந்திரனுடன் ராகு-கேது இருந்தால் அதை முன்ஜென்ம பித்ரு தோஷம் என்று சொல்வார்கள். அதுபோல 9-ம் இடத்தை வைத்தும் கர்ம தோஷங்களை ஜோதிடர்கள் கணிப்பது உண்டு.

    ஒருவருக்கு மிக மிக கடுமையான தோஷங்கள் இருந்தால் அவரது 5-ம் வீடு, 5-ம் அதிபதி, 9-ம் வீடு, 9-ம் அதிபதி ஆகியவற்றை சரியானபடி ஆய்வு செய்தால் அவரது கர்ம தோஷங்களை கண்டுபிடித்து விட முடியும்.

    கர்ம தோஷங்களை அடுத்தடுத்த பிறவிகளுக்கு கொண்டு செல்வது சனி கிரகம்தான். மற்ற கிரகங்களுக்கும் இதில் பங்களிப்பு உண்டு.

    என்ன கர்ம தோஷம் ஏற்பட்டு இருக்கிறது? அதன் பாதிப்பு எப்படி இருக்கிறது? என்ன பரிகாரம் செய்தால் அந்த கர்ம தோஷங்களில் இருந்து விடு படலாம் என்பதை தெரிந்து கொண்டால்தான் முன் ஜென்ம தோஷங்களுக்கு பரிகாரம் தேடிக் கொள்ள முடியும்.

     முன் ஜென்ம பாவங்கள் கர்ம தோஷமாக மாறி ஆட்டிப் படைப்பதாக நினைத்தால் நிச்சயமாக வழிபாடுகளை அதிகரிக்க வேண்டும்.

    ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று நமது இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு ஒருமனதுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    பின்னர் வீட்டுக்கு வந்து குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வம் படத்தின் முன்பு அரசமர இலைகளை மூன்று மூன்றாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் சிறிது உப்பு வைத்து உதிரி பூக்களையும் சுற்றி போட்டு அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

    அந்த 9 இலைகள் மீதும் 9 அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றி மனதார குல தெய்வத்தை அழைத்து வழிபட வேண்டும். இந்த தீப வழிபாட்டை ஒரு தடவை செய்தால் மட்டும் போதாது. 9 அமாவாசை நாட்களில் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த வழிபாடு மூலம் நம்மை பிடித்து இருக்கும் முன் ஜென்ம கர்ம தோஷ வினைகளில் இருந்து விடுபட முடியும்.

    ஆலயங்களுக்கு வழிபாடு செய்ய செல்லும்போது கர்ம தோஷங்களுக்காக நீங்கள் என்ன பரிகார பூஜைகள் செய்தாலும் சண்டிகேஸ்வரரை மறக்காமல் வணங்க வேண்டும். சண்டிகேஸ்வரரை வணங்காமல் கர்ம தோஷ பரிகார பூஜைகள் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்காது.

    ஏனெனில் முன் ஜென்ம பாவங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட கர்ம தோஷத்தை விரட்டியடிக்கும் ஆற்றல் கொண்டவராக சண்டிகேஸ்வரர் கருதப்படுகிறார்.

    கர்ம தோஷத்துக்காக சண்டிகேஸ்வரரை வழிபடும் போது அவருக்கு வஸ்திரம் சாத்தி வழிபடுவது மிகவும் நல்லது. அன்றைய தினம் அவரை வேண்டிக் கொண்டு அன்னதானம் செய்யலாம். இந்த பூஜை முன் ஜென்ம கர்ம தோஷங்களை உடனடியாக நீங்க செய்யும் ஆற்றல் கொண்டது.

     தமிழகத்தில் முன் ஜென்ம கர்ம தோஷங்களை போக்கும் ஆற்றல் கொண்டதாக 6 ஆலயங்கள் கருதப்படுகின்றன. அந்த 6 ஆலயங்கள் பற்றிய விவரம் வருமாறு:-

    1. திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோவில்-கடன், சத்ரு, நோய் போன்றவற்றைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது இந்த ஆலயம்.

    2. கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் உள்ள ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்மன் ஆலயம். இது மாந்தி பகவான் பரிகாரத்தலம் ஆகும்.

    3. திருப்பாம்புரம் சேஷ புரீஸ்வரர் கோவில்- ராகு-கேது பரிகாரத் தலம்.

    4. வைத்தீஸ்வரன் கோவில்- இது செவ்வாய் பரிகார தலமாகும்.

    5. திருத்தேவன்குடியில் உள்ள கற்கடகேஸ்வரர் கோவில். இது அனைத்து முன் ஜென்ம பாவங்களை யும் போக்கும் ஆலய மாகும்.

    6. திருவிடைமருதூர் மகாலிங்கம் கோவில். இது பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் ஆலயமாகும்.

    இவை அனைத்துக்கும் மேலாக குல தெய்வ ஆலயத்துக்கு சென்று நைவேத்தியங்கள் படைத்து பூஜைகள் செய்தால் கர்ம வினைகள் பாதிப்பை ஏற்படுத்துவதை கட்டுப்படுத்த முடியும். எனவே குல தெய்வ வழிபாட்டை மறக்காதீர்கள்.

    சிலருக்கு தங்களது ஜாதக அடிப்படையில் சில குறிப்பிட்ட ஆலயங்களில் சில குறிப்பிட்ட பரிகாரங்களை செய்தால் பலன் கிடைக்கும் நிலை இருக்கும். அதை தெரிந்து கொண்டு செய்தால் பூர்வஜென்ம பாவங்கள் கர்மாவாகி மாறியிருப்பதை கட்டுப்படுத்தலாம் அல்லது பாதிப்பை குறைத்துக் கொள்ளலாம்.

    ×