என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "ஐயாறப்பர் கோவில்"
- பஞ்சமூர்த்திகள் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது.
- திடீரென கனமழை பெய்தது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று அப்பர் கயிலை காட்சி நடைபெறுவது வழக்கம்.
அதாவது அப்பருக்கு சிவபெருமான் கயிலை காட்சி அளித்ததை நினைவு கூறும் வகையில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான கயிலை காட்சி நேற்று இரவு ஆடி அமாவாசையையொட்டி நடந்தது. இதை முன்னிட்டு நேற்று மதியம் கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது.
தொடர்ந்து, இரவில் ஐயாறப்பர் கோவிலில் உள்ள அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் ஆடி அமாவாசை அப்பர் கயிலை காட்சி விழா நடைபெற்றது.
இதற்காக ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி அம்மனுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அப்பருக்கு காட்சி கொடுத்தார். அப்போது திடீரென கனமழை பெய்தது.
இருந்தாலும் கொட்டு மழையையும் பக்தர்கள் பொருட்படுத்தாமல் பக்தி கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்து தேவார பாடல்களை பாடி உற்சாகமடைந்தனர். கொட்டும் மழையிலும் குடைப்பிடித்தபடி தீபாராதனை காண்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆலோசனைபடி கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
- ஐயாறப்பர் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 3-ந் தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வருகிற 7-ந் தேதி வரை 13 நாட்கள் விழா நடக்கிறது.
முன்னதாக நடந்த கொடியேற்றம் விழாவில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் 29-ந் தேதி (சனிக்கிழமை) மாலை தன்னைத்தான பூஜித்தல் நடைபெறுகிறது.
அன்று 6 ஊர்களிலிருந்து சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.
வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.
தேர்4 வீதிகள் வழியாக வந்து நிலையடி அடைந்த உடன் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரதாசம் வழங்கப்படுகிறது.
மே 6-ந் தேதி(சனிக்கிழமை) முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டி யூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது.
இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெறுகிறது.
7-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் மாலை பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.