search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளையன்"

    • மார்க்கெட்டில் பாதி அளவு கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் திறக்கப்படவில்லை.

    நெல்லை:

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் (வயது 76), உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் சென்னையில் மரணம் அடைந்தார்.

    அவரது உடல் இன்று அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பிச்சி விளையில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    இதனையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. நெல்லை மாநகர பகுதியில் பாளை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தினர் கடைகளை அடைத்திருந்தனர்.

    இதில் தலைவர் சால மோன், பொதுச்செயலாளர் பெரிய பெருமாள், பொருளாளர் இசக்கி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமான கடைக்காரர்கள் வெள்ளையன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். அதேநேரத்தில் மார்க்கெட்டில் பாதி அளவு கடைகள் திறக்கப்பட்டிருந்தன.


    டவுனில் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் வாகையடி முனையில் வெள்ளையன் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் டவுன் வாகையடி முனையில் தொடங்கி டவுன், சேரன் மகாதேவி ரோடு, டவுன் வியாபாரிகள் நலச்சங்க அலுவலகம் வரை வியாபாரிகள் மவுன ஊர்வலம் சென்றனர். முன்னதாக அவர்கள், வெள்ளையன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    தூத்துக்குடி மாநகர பகுதியில் 90 சதவீதம் கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்தன. மாநகரில் தாளமுத்துநகர், புதுக்கோட்டை, முத்தையாபுரம், முள்ளக்காடு, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதி சாலைகள் வெறிச்சோடியது. மாவட்டத்தில் ஆறுமுகநேரி, பழைய காயல், ஏரல், சாயர்புரம், நாசரேத், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நூற்றுக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் இன்று திறக்கப்படவில்லை.

    • வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் நேற்று மரணம் அடைந்தார்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடை அடைப்பு நடைபெறும்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நேற்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் நாளை(12-ந்தேதி) அவரது சொந்த ஊரான திருச்செந்தூர் தாலுகா, பிச்சுவிளை கிராமத்தில் நடைபெற உள்ளது.

    இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடை அடைப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா அறிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், மறைந்த வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தூத்துக்குடி தெற்கு-வடக்கு மாவட்டத்தில் நாளை ஒருநாள் கடையடைப்பு நடத்தி அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

    • வெள்ளையன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்

    நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

    வெள்ளையன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஓ. பன்னீர்செல்வம், சரத்குமார், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    கன்னியாகுமாரி எம்.பி. விஜய் வசந்த் அவரது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதவியில், "வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

    வணிகர்களின் நலனுக்காக உழைத்து, வணிகர் நலன் கருதி பல்வேறு போராட்டங்கள் நடத்திய திரு. வெள்ளையன் அவர்கள் மறைவு வணிகர் சமூகத்திற்கு தீரா இழப்பாகும்.

    அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை சார்ந்தோர் அனைவரது துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • வணிகர்களை போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை சமுதாய கூடத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்தனர்.
    • வணிகர்களின் போராட்டத்தையொட்டி தலைமை செயலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    சென்னை:

    தமிழக அரசு அன்னிய முதலீட்டை ஈர்க்கும் வகையில் லுலு வணிக குழுமத்தை தமிழகத்தில் மார்க்கெட் அமைக்க அனுமதித்துள்ளது.

    இதன்படி கோவையில் லுலு மார்க்கெட் கடந்த மாதம் திறக்கப்பட்டது. சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் லுலு மார்க்கெட் விரைவில் திறக்கப்பட உள்ளது.

    சிறு வணிகர்களுக்கு சவாலாக உருவாகி உள்ள லுலு மார்க்கெட்டை விரட்டியடிப்போம் என்று தமிழகத்தில் உள்ள வணிகர் சங்கங்கள் கூறி வருகின்றன.

    இந்நிலையில் லுலு மார்க்கெட்டை தமிழ்நாட்டை விட்டு விரட்டும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தலைமையில் தலைமைச் செயலகத்தை இன்று முற்றுகையிட போவதாக போராட்ட கள அமைப்பாளர் ஆர்.சந்திரன் ஜெயபால் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    இந்த போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் ஆகியவற்றின் தலைவர்கள், நிர்வாகிகள் முன்னின்று நடத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலையில் தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகையிட வணிகர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியலும் நடந்தது.

    இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், பொதுச் செயலாளர் பெருங்குடி சவுந்தரராஜன், போராட்ட கள அமைப்பாளர் ஆர்.சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநில தலைவர் மயிலை எம்.மாரித்தங்கம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், பொதுச் செயலாளர் கே.சி.ராஜா மற்றும் மின்னல் எச்.ஸ்டீபன், முத்து ரமேஷ், ஆலந்தூர் பி.கணேசன், சங்கரலிங்கநாதன், செல்வகுமார், எஸ்.ஆர்.பி.ராஜா, மாரீஸ்வரன், சைதை ஜெயராஜ், வேளச்சேரி செல்வராஜ், மகாராஜா உள்பட 1000-க்கும் மேற்பட்ட வணிகர்களை போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை சமுதாய கூடத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்தனர்.

    வணிகர்களின் போராட்டத்தையொட்டி தலைமை செயலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • நம் நாட்டில் அந்நிய வணிகம் மேலோங்கி உள்ளது.
    • நமது வணிகத்துக்கு ஆபத்து நெருங்கி கொண்டு உள்ளது.

    அச்சரப்பாக்கம் :

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வணிகர் தினத்தையொட்டி நேற்று செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் சில்லறை வணிகர் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது.

    மாநாட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். இதில் துணை தலைவர் கருங்கல் ஜார்ஜ் உள்பட சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களிடம் த.வெள்ளையன் கூறியதாவது:-

    நம் நாட்டில் அந்நிய வணிகம் மேலோங்கி உள்ளது. இதன்மூலம் நமது வணிகத்தை உயிரோடு குழிதோண்டி புதைத்து வருகிறார்கள். இதை உடனடியாக நிறுத்த வேண்டும். நம் நாட்டு தயாரிப்புகளை பார்த்து வாங்கி அதை வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும்.

    அந்நிய தயாரிப்புகள் அதிகமாக விற்பனைக்கு வந்துவிட்டது. இதனால் நமது வணிகத்துக்கு ஆபத்து நெருங்கி கொண்டு உள்ளது. நம் நாட்டு தயாரிப்புகள் காப்பாற்றப்பட வேண்டும். அந்நிய தயாரிப்புகளை விரட்டி அடிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும். இதற்கு வணிகர் சங்க பேரவை தொடர்ந்து போராடும்.

    எந்த காலத்திலும் இல்லாத வகையில் தற்போது அரிசிக்கும் ஜி.எஸ்.டி. வரி போடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி ஒழியும் வரை நாம் போராட வேண்டும்.

    எதற்காகவும் சிறைக்கு செல்லவும் தயாராக வேண்டும். இதன் முதல் கட்டமாக மதுரையில் விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக வர்த்தக ஒப்பந்தத்தின் கேடான ஆன்லைன் வணிக ஆபத்திலிருந்து சில்லரை வணிகத்தைக் காக்க உறுதியேற்போம்.
    • மத்திய அரசின் அந்நிய சார்புக் கொள்கையால் நம் நாட்டில் அந்நிய ஆதிக்கம் வேரூன்றி வலுப்பெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 40-வது வணிகர் தினவிழா, மாநில மாநாடு மற்றும் பொதுக்குழு, மேல்மருவத்தூரை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் (சென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலையில் "சில்லரை வணிகர் உரிமை மீட்பு மாநாடு" பிரமாண்டமாக நடக்கிறது.

    மாநாட்டிற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமை வகிக்கிறார். இது குறித்து தமிழ்நாடு வணிக சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலக வர்த்தக ஒப்பந்தத்தின் கேடான ஆன்லைன் வணிக ஆபத்திலிருந்து சில்லரை வணிகத்தைக் காக்க உறுதியேற்போம். வணிகத் தொழிலைக் காத்திட மாநாட்டில் குடும்பத்தோடு அணிவகுப்போம். உறுதியான முடிவெடுப்போம். உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கு முடிவு கட்டுவோம். மத்திய அரசின் அந்நிய சார்புக் கொள்கையால் நம் நாட்டில் அந்நிய ஆதிக்கம் வேரூன்றி வலுப்பெற்று வருகிறது.

    இதன் விளைவாக அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கும் சில்லரை வணிகம், சிறுகுறுந் தயாரிப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள்-காக்கவும், வணிகர் நலன், மக்கள் நலன், நாட்டு நலன் காக்கவும் இந்த மாநாட்டில் வணிகர்கள் தங்கள் குடும்பத்தாருடன் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

    இவ்வாறு த. வெள்ளையன் கூறி உள்ளார்.

    மாநாட்டில் பொது செயலாளர் எஸ்.சௌந்தர் ராஜன் (ஏ.ராஜா) பொருளாளர் எஸ்.பீர்முகம்மது,செயல் தலைவர்கள் கே.தேவராஜ், வியாசை எம்.மணி, பா.விநாயகமூர்த்தி, டேவிட்சன் செயல் தலைவர் ஆ.பாஸ்க ரன், ராமநாதன், டி.பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.வி. ரத்தினம், மாவட்ட தலைவர்கள் ப.தேவராஜ், கொளத்தூர் சந்தானம், கோயம்பேடு துரைமாணிக்கம், மணலி சண்முகம், வி.ராஜேந்திரன், நா.வேலு, செஞ்சி எம்.கண்ணன், எம்.ராமகிருஷ்ணன், செல்வராஜ், நிர்வாகிகள் புரசை குமார், ஓட்டேரி ஜோதிராம், செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட், மெஸ்பர் வெள்ளையன், பெரம்பூர் த. பத்மநாபன், பெரம்பூர் எஸ். ரங்கசாமி நாடார் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டு நிகழ்ச்சிகள் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. தேசிய கொடியை ஏகாம்பரம் ஏற்றுகிறார்.

    ×