search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிமுத்தாறு"

    • தேனை உண்பதற்காக மரத்தில் ஏறிய கரடி.
    • சுமார் 17 மணிநேரத்திற்கு பிறகு சென்றது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி சிறுத்தை, கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் புகுந்து அட்ட காசத்தில் ஈடுபடுவது வழக்கம்.

    பின்னர் அதனை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு விடுவார்கள்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் மணிமுத்தாறு மெயின் ரோட்டில் கரடி ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. உடனே அதனை கண்ட மக்கள் அலறியபடி ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர் அந்த கரடி அங்கிருந்த பட்டாலியன் கமாண்டர் வீட்டில் புகுந்து அங்கிருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டு இறங்காமல் நின்றது.

    இதுகுறித்து அறிந்து, அம்பை வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடியை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் கரடி இறங்காமல் இரவு வரையிலும் மரத்தின் மீது நின்று கொண்டே இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.10 மணிக்கு அந்த கரடி மரத்தில் இருந்து நைசாக இறங்கி காட்டுப்பகுதிக்குள் ஓடியது. அந்த மரத்தில் தேன் கூடு கட்டி இருந்தது. அதனை உண்பதற்காக மரத்தில் ஏறிய கரடி, நள்ளிரவில் தேன் முழுவதையும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் மரத்திலேயே தூங்கியதாகவும், அதன்பின்னர் இறங்கி சென்றுவிட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    சுமார் 17 மணி நேரம் அந்த கரடி மரத்தின் மீதே நின்று கொண்டிருந்த நிலையில், அதன் பின்னர் இறங்கி சென்றுள்ளது. கடந்த மாதம் 16-ந்தேதி இதே இடத்திற்கு கரடி ஒன்று வந்து மரத்தில் ஏறி நின்றுவிட்டு நள்ளிரவில் இறங்கி வனத்துக்குள் சென்றது குறிப்பிடத்தக்கது.

    • மலைப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.
    • குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    நெல்லை:

    நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது மழை பெய்யவில்லை. எனினும் 2 நாட்களாக பெய்த மழையால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகியவற்றின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 102.95 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து116.53 அடியாகவும் உள்ளது.

    மலைப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மாஞ்சோலை வனப்பகுதியில் சாரல் மழை பெய்த வண்ணனம் உள்ளது. இதனால் அங்குள்ள ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு எஸ்டேட்டுகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுகிறது. காலையில் இருந்து வெயில் அடித்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லாததால் குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. எனினும் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று விடுமுறை தினத்தையொட்டி காலை முதலே மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    அணைகளை பொறுத்த வரை குண்டாறு அணை நீர்மட்டம் கடந்த ஒரு வாரமாக நிரம்பி வழிகிறது. கடனா அணை 60.30 அடியாகவும், ராமநதி அணை 76 அடியாகவும் உள்ளது. அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 93.25 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. விவசாயிகள் கார் பருவ சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
    • பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திருக்குறுங்குடி முதல் கடையம் வரை 895 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.

    பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால் குரங்கு, செந்நாய்கள், கடமான் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள், மூலிகை தாவரங்கள் உள்ளது.

    இங்கு ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்த ஆண்டு அம்பை கோட்டத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், முண்டந்துறை, கடையம் உள்ளிட்ட வனச் சரகங்களில் இன்று முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதனையொட்டி புலிகள் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து பயிற்சி காலையில் முடிந்தவுடன் உடனடியாக மதியமே கணக்கெடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட தொடங்கினர். தொடர்ந்து முண்டந்துறை அருகே நாளை (புதன்கிழமை) கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

    இதனையொட்டி பாபநாசம், மணிமுத்தாறு சோதனை சாவடிகள் தற்காலிகமாக மூடப்படுகிறது. இதனால் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    • கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கட்டுக்கடங்காத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
    • இதன் காரணமாக ஊருக்குள் வெள்ளம் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது.

    திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்தது. வரலாறு காணாத மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சி அளித்தன. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இதனால் கலெக்டர் அலுவலகம், ஜங்ஷன், ரெயில் நிலையம் சாலை போன்று ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளை மழை வெள்ளத்துடன் தாமிரபரணி ஆற்று நீரும் சேர்ந்து மூழ்கடித்தன. இதனால் மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

    மீட்புப்படையினர் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனர். திருநெல்வேலி புறநகர் பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல் சென்றது.

    இந்த நிலையில் நேற்றிரவு முதல் மழை குறைந்துள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் செல்லும் வெள்ளத்தின் அளவும் கணிசமாக குறைந்துள்ளது.

    நேற்று காலை ஆற்றை மூழ்கடித்து சென்ற வெள்ளம் இன்று சுமார் 15 அடி குறைந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் நெல்லை சந்திப்பு, கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் சாலை போன்ற பகுதிகளில் வெள்ளம் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியுள்ளது.

    இன்று கனமழை பெய்யாவிடில், மாலைக்குள் நீர் வடிந்துவிடும் என கூறப்படுகிறது. இதற்கிடையே பல இடங்கள் தீவு போல் மாறியுள்ளது. அந்த இடங்களில் இருந்து மீட்புப்படையினர் படகு மூலம் மக்களை வெளியேற்றினர். இரவு பகலாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

    • தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
    • தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தாமிரபரணி ஆற்றில் சுமார் 40 ஆயிரம் கனஅடி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சியளிக்கின்றன. சாலைகள், தெருக்களில் ஆற்றில் வெள்ளம் ஓடுவதுபோல் ஓடுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் காயல்பட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்துள்ளது.

    காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 84.5 செ.மீ. மழை பெய்துள்ளது. திருச்செந்தூரில் 66.9 செ.மீ. மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 60.70 செ.மீ. மழை பெய்துள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 59.7 செ.மீ. மழையும், பாளையங்கோட்டையில் 42.0 செ.மீ. மழையும, அம்பாசமுத்திரத்தில் 41.6 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

    • அம்பாசமுத்திரத்தில் அதிகபட்சமாக 41.66 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
    • மணிமுத்தாறில் 31.70 செ.மீட் மழை பெய்துள்ளது.

    திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலியின் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இன்று காலை 4.30 நிலவரப்படி 41.66 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. மணிமுத்தாறில் 31.70 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

    தற்போதும் மழை பெய்து வருவதால் அம்பையில் உள்ள மணிமுத்தாறு அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 86.66 அடி உயரமாக இருந்த நிலையில், ஒன்று ஒரே நாளில 108.8 அடியாக உயர்ந்துள்ளது.

    அணைக்கு தற்போது 17 அயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் 143.6 அடி உயரம் கொண்டி கரையாறு அணையில் 133 அடி உயரமாக நீர்மட்டம் உள்ளது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் இந்த மூன்று அணைகளும் விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதாவது அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் இந்த மூன்று அணைகளிலும் இருந்து சுமார் 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருகிறது. ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    தற்போது 80 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் ஓடுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்று கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை உள்ளது.
    • நடுத்தர மக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பது பெரும் கனவாகிவிட்டது. ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை உள்ளது. இங்கு செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருவார்கள்.

    வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவி மற்றும் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளுக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை பகுதிகளுக்கு சொந்த வாகனத்தில் செல்பவர்களோ, வாடகை வாகனத்தில் அதிகப்படியான பணம் செலவழிக்க முடிந்தவர்கள் மட்டுமே செல்லும் நிலை மட்டுமே தற்போது நிலவி வருவதாக நடுத்தர மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

    தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் காரணத்தால் மாஞ்சோலை எஸ்டேட் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால் சுற்றுலா செல்லும் பயணிகள் வனத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சூழல் சுற்றுலா வாகனத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செல்ல ஒரு நபருக்கு ரூ. 350 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    இத்தொகை அரசு பஸ் கட்டணத்தை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பெரும் சவாலான தொகையாக இது இருப்பதாக அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    அருவிக்கு செல்ல மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்களில் செல்ல அனுமதி இல்லை. சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் அல்லது வாடகைக்கு கார் எடுத்து செல்பவர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நடுத்தர மக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பது பெரும் கனவாகிவிட்டது. ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது. பணம் படைத்தோருக்கு மட்டுமே அருவிக்கு செல்ல முடியும் என்ற நிலை வந்துள்ளது. இதனால் பணக்கார அருவியாக மணிமுத்தாறு அருவி மாறிவிட்டது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ×