என் மலர்
நீங்கள் தேடியது "வாழப்பாடி"
- வாழப்பாடி மற்றும் கருமந்துறை பகுதியில் 4 வீடுகளில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
- திருட்டு கும்பலை சேர்ந்த மற்ற நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேஷன்சாவடி ரெயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவர் வீட்டில், கடந்த மார்ச் 27-ந் தேதி பட்டப்பகலில், 9 பவுன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
இதேபோல், வாழப்பாடி செல்லியம்மன் நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சின்னசாமி என்பவர், குடும்பத்தோடு வெளியூருக்கு சென்றிருந்த நேரத்தில், இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல், 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.
மேலும் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் சிசில்தேவன் என்பவரது வீட்டிலும், அதே பகுதியைச் சேர்ந்த மாது என்பவர் வீட்டிலும் இந்த மர்ம கும்பல் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
இதனையடுத்து, வாழப்பாடி பகுதியில் தொடர் கைவரிசை காட்டி வந்த இந்த திருட்டு கும்பலை பிடிக்க, வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி ஹரி சங்கரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், இந்த மர்ம கும்பல் குறித்து துப்பறிந்தனர்.
அதன்படி, வேறொரு திருட்டு வழக்கில் சிக்கி, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, இந்த கும்பலைச் சேர்ந்த கருமந்துறை தாழ்வீதி தேவா (வயது 49). மற்றும் இவரது சிறை நண்பரான தூத்துக்குடி லாசர் (47) ஆகிய இருவரையும், 2 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து, வாழப்பாடிக்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், இந்த கும்பல் வாழப்பாடி மற்றும் கருமந்துறை பகுதியில் 4 வீடுகளில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இவர்களிடமிருந்த திருட்டு நகைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து மீண்டும் புதுக்கோட்டை சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.
மேலும் இந்த திருட்டு கும்பலை சேர்ந்த மற்ற நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவர் மற்றும் நகைகளை பதுக்கி வைத்திருக்கும் நபர்களை பிடித்து நகைகளை கைப்பற்றி, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- மயில்கள் விளைநிலங்களில் வட்டமடித்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
- உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர், படையாச்சியூர், புழுதிக்குட்டை, பெரியகுட்டிமடுவு, கொட்டவாடி, கல்லாயணகிரி, சிங்கிபுரம், சோமம்பட்டி, இடையப்பட்டி, கல்லேரிப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வனப்பகுதிகள் ஆறு, ஏரி, நீரோடை உள்ளிட்ட நீர்நிலைகள், மலை குன்றுகள், தரிசு நிலங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களில் விவசாயிகளின் விளைநிலங்களிலும், கடந்த சில ஆண்டுகளாக மயில்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால் விளை நிலங்களில் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் கூட மயில்கள் சர்வ சாதரணமாக கூட்டம் கூட்டமாய் திரிகின்றன.

விளைநிலங்களில் நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் பிற விவசாய விளை பொருட்கள் பயிரிடப்படுகிறது. இவற்றை மயில்கள் சேதப்படுத்துவதால் மகசூல் பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக, படையாச்சியூர், கொட்டவாடி கிராமங்களில் கூட்டம் கூட்டமாக 100-க்கும் மேற்பட்ட மயில்கள் விளைநிலங்களில் வட்டமடித்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வாழப்பாடி மற்றும் தும்பல் வனச்சரக வனத்து றையினர் மயில்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தி, கிராமப்புற விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வரும் மயில்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கும் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாழப்பாடி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கொட்டவாடி கிராமத்தை விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளை வயல்வெளியில் கூட்டமாக உள்ள மயில்கள் சிறிதும் பயமின்றி துரத்துகின்றன. இதனால் மயில்களைக் கண்டால் குழந்தைகள் அருகில் செல்வதற்கு தயங்குகின்றனர். இதற்கு தீர்வு காண சேலம் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- வினாடிக்கு 1568 கன அடி தண்ணீர் வசிஷ்டநதியில் திறக்கப்பட்டுள்ளது.
- கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதிதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால் சுற்றுப்புற கிராமங்களில் 5,011 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான சித்தேரி, பெரியகுட்டி மடுவு, சந்தமலை, அருநூற்றுமலை பகுதியில் பெய்த பருவ மழையால், அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த ஆக்டோபர் மாதம் 23-ந் தேதி அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்து, 197 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.

இந்த நிலையில், எதிர்பாராத விதமாக அக்டோபர் மாதம் 24-ந் தேதி மாலை முதல் இரவு வரை தொடர்ந்து 4 மணி நேரம் 15 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது.
26-ந்தேதி அதிகாலை அணையின் நீர்மட்டம் 65.29 அடியை எட்டி 3 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது. அணையில் 240 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து, அணையில் இருந்து வசிஷ்டநதியில் வினாடிக்கு 85 கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் புயல் காரணமாக நேற்று மாலை முதல், இன்று அதிகாலை விடிய விடிய இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1568 கன அடி தண்ணீர் வசிஷ்டநதியில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு பெருமளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கரையோர கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை வாயிலாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.