என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் ஆர்டர்"

    • டிரிம்மருக்கு பதிலாக ஜல்லி கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் காஜா. இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அவர் ஆன்லைன் நிறுவனத்தில் ரூ.1,000-க்கு டிரிம்மர் ஆர்டர் செய்தார். இதைதொடர்ந்து நேற்று பார்சல் வீட்டிற்கு வந்தது.

    அதை அவர் வாங்கிய போது, அட்டை பெட்டி மிகவும் கனமாக இருந்ததால் சந்தேகம் அடைந்து பார்சலை டெலிவரி செய்தவர் முன்னிலையில் பிரித்து பார்த்தார். அப்போது உள்ளே டிரிம்மருக்கு பதிலாக ஜல்லி கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து காஜா, டெலிவரி செய்த இளைஞரிடம் கேட்டபோது, பதில் கூறாமல் சென்றதாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • ஐஸ்வர்யா கஜூரியா என்ற இளம்பெண் ஆன்லைனில் ஷாப்பிங் இணையதளம் ஒன்றில் ‘பிரேஸ்லெட்’ ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
    • ஏராளமான பயனர்கள் தங்களுக்கும் இதுபோன்று நேர்ந்த அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

    உணவு பொருட்கள் முதல் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்கள் வரை எல்லாவற்றையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் சில நேரங்களில் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்கள் வந்துவிடுகிறது. அதுபோன்று ஒரு சம்பவம் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    ஐஸ்வர்யா கஜூரியா என்ற இளம்பெண் ஆன்லைனில் ஷாப்பிங் இணையதளம் ஒன்றில் 'பிரேஸ்லெட்' ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அதற்கு பதிலாக அவருக்கு வெற்று ஜாடி வந்துள்ளது. இதுதொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்ததும், அதனை 3.32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் ஏராளமான பயனர்கள் தங்களுக்கும் இதுபோன்று நேர்ந்த அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

    • மும்பையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் இந்த ஆண்டு ரூ.42.3 லட்சத்துக்கு உணவுகளை ஆர்டர் செய்து முதலிடத்தில் உள்ளார்.
    • சைவ உணவுகளில் நவராத்திரியின் போது 9 நாட்களிலும் மசாலா தோசையே முதலிடத்தை தட்டிச்சென்றது.

    சென்னை:

    இந்தியா முழுவதும் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் உணவுகளில் முதலிடத்தை பிடிக்கும் உணவு எது என்பதை பிரபல தனியார் உணவு டெலிவரி நிறுவனம் வருடந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி தொடர்ந்து 8-வது ஆண்டாக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் உணவுகளில் தொடர்ந்து பிரியாணி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறது.

    இதுகுறித்து தனியார் உணவு டெலிவரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்த ஆண்டு வீடு தேடி வரும் உணவுகளில் பிரியாணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 8-வது ஆண்டாக பிரியாணியே தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இந்த ஆண்டில் ஒரு வினாடிக்கு 2.5 பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டு உள்ளன. ஒவ்வொரு 5.5 சிக்கன் பிரியாணிக்கும் ஒரு வெஜ் பிரியாணி வீதம் ஆர்டர் பெறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி மட்டும் 4.30 லட்சம் பிரியாணிகள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்பட்டன.

    மேலும் 6 பிரியாணிகளில் ஒரு பிரியாணி ஐதராபாத்தில் இருந்து ஆர்டர் பெறப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஐதராபாத் மக்களின் பிரியாணி மீதான மோகம் குறையவில்லை என்பது தெரிகிறது.

    உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற கடந்த நவம்பர் 19-ந்தேதி நிமிடத்துக்கு 188 பீட்சாக்கள் ஆர்டர் பெறப்பட்டு உள்ளன. அதிகபட்ச பீட்சா ஆர்டர்கள் சென்னை, புதுடெல்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து பெறப்பட்டு உள்ளன.

    மும்பையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் இந்த ஆண்டு ரூ.42.3 லட்சத்துக்கு உணவுகளை ஆர்டர் செய்து முதலிடத்தில் உள்ளார்.

    துர்கா பூஜையின் போது இதுவரை முதலிடத்தில் இருந்த ரசகுல்லாவை குலோப் ஜாமூன் முந்தியது. அன்று மட்டும் 77 லட்சத்துக்கும் அதிகமான குலோப் ஜாமூன்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன.

    சைவ உணவுகளில் நவராத்திரியின் போது 9 நாட்களிலும் மசாலா தோசையே முதலிடத்தை தட்டிச்சென்றது.

    பெங்களூரில் அதிக அளவில் கேக்குகள் ஆர்டர் பெறப்பட்டுள்ளன. சாக்லெட் கேக் மட்டும் 85 லட்சம் ஆர்டர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. டெலிவரி நிறுவன ஊழியர்கள் உணவு டெலிவரிக்காக இந்த ஆண்டில் மட்டும் ஒட்டு மொத்தமாக 16.64 கோடி கி.மீ. தூரம் பயணித்துள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தாய் இனிப்பு செய்வதற்காக பயன்படுத்தும் அச்சு ஒன்றை ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு 3 நிமிடங்களில் அந்த பொருள் வழங்கப்பட்டுள்ளது.
    • ஸ்ரீவஸ்தவாவின் பதிவு வைரலான நிலையில், பயனர்கள் பலரும் 3 நிமிடங்களில் ஆர்டரை பெறுவது சாத்தியமில்லை என பதிவிட்டனர்.

    லக்னோவை சேர்ந்த ஸ்ரீவஸ்தவா என்ற பயனர் எக்ஸ் தளத்தில் பிளிங்கிட் நிறுவனத்தின் சேவையை பாராட்டி ஒரு பதிவு செய்திருந்தார். ஆன்-லைன் மூலம் பொருட்களை வினியோகிக்கும் பிளிங்கிட்டில் ஸ்ரீவஸ்தவா தனது தாய் இனிப்பு செய்வதற்காக பயன்படுத்தும் அச்சு ஒன்றை ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு 3 நிமிடங்களில் அந்த பொருள் வழங்கப்பட்டுள்ளது.

    இதற்காக அந்த நிறுவனத்தின் சேவையை பாராட்டி இருந்தார். அதில் எனது அம்மா, குஜியா (வட இந்தியாவில் பிரபலமான இனிப்பு) செய்ய பயன்படுத்தும் அச்சு உடைந்திருந்தது. அதை மாற்றுவதற்காக பிளிங்கிட்டில் ஆர்டர் செய்திருந்தேன். 3 நிமிடங்களில் அதனை வினியோகம் செய்ததற்கு பாராட்டுக்கள் என குறிப்பிட்டிருந்தார்.

    அவரது பதிவுக்கு பிளிங்கிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அல்பிந்தர் திண்ட்சா பதில் அளித்து, 'உங்கள் பார்வையை மாற்ற முடிந்ததில் மகிழ்ச்சி. உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய ஹோலி' என்று பதிவிட்டார். ஸ்ரீவஸ்தவாவின் பதிவு வைரலான நிலையில், பயனர்கள் பலரும் 3 நிமிடங்களில் ஆர்டரை பெறுவது சாத்தியமில்லை என பதிவிட்டனர்.

    • ஜெய் ஆர்டரை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுள்ளார்.
    • இது மிகவும் சிறப்பான பிரஷர் குக்கராக இருக்க வேண்டும் என்று ஜெய் தெரிவித்துள்ளார்.

    ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை ஒரே நாளில் டெலிவரி செய்வது வழக்கமாகி வரும் உலகில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட ஆர்டரை சமீபத்தில் பெற்றதாக ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஜெய் என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமேசானில் இருந்து பிரஷர் குக்கரை ஆர்டர் செய்துள்ளார். பின்னர் அவர் ஆர்டரை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுள்ளார்.

    ஆர்டரை ரத்து செய்த போதிலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்டர் செய்த பொருள் அவரது வீட்டுக்கு வந்துள்ளது.

    இதையடுத்து அவர், "2 ஆண்டுகளுக்குப் பிறகு எனது ஆர்டரை வழங்கியதற்கு நன்றி அமேசான்" என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    அவரது பதிவில், பிரஷர் குக்கர் அக்டோபர் 1, 2022 அன்று ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 28, 2024 அன்று ஆர்டரை பெற்றுள்ளார்.

    இது மிகவும் சிறப்பான பிரஷர் குக்கராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    • டெலிவரி பாய் செப். 23-ந்தேதி கஜனனுக்கு ஐபோனை டெலிவரி செய்யச் சென்றார்.
    • அவரது உடலை ஒரு சாக்கு பையில் வைத்து இந்திரா கால்வாயில் வீசி உள்ளனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த டெலிவரி மேன் (35) ஒருவர் ஐபோனை டெலிவரி செய்யச் சென்றபோது இருவரால் கொல்லப்பட்டார். ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனுக்காக அவரை கொலை செய்த அவர்கள், இந்திரா கால்வாயில் அவரது உடலை வீசி உள்ளனர்.

    இது சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் ஷஷாங்க் சிங் கூறுகையில்,

    சின்ஹாட்டைச் சேர்ந்த கஜனன், பிளிப்கார்ட்டில் இருந்து சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். மேலும் கேஷ் ஆன் டெலிவரி (COD) கட்டண விருப்பத்தை அவர் தேர்வு செய்துள்ளார்.

    பாரத் சாஹு என்ற அந்த டெலிவரி பாய் செப். 23-ந்தேதி கஜனனுக்கு ஐபோனை டெலிவரி செய்யச் சென்றார்.

    அப்போது சாஹுவை கஜனனும் அவரது நண்பரும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். அவரது உடலை ஒரு சாக்கு பையில் வைத்து இந்திரா கால்வாயில் வீசி உள்ளனர்.

    சாஹு இரண்டு நாட்களாக வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் செப். 25 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சாஹுவின் செல்போன் அழைப்பு விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவனது இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில், போலீசார் கஜனனின் எண்ணை கண்டுபிடித்து, அவரது நண்பர் ஆகாஷை தொடர்பு கொண்டனர்.

    போலீஸ் விசாரணையில், ஆகாஷ் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், உடலை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையின் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • தனது தோழியுடன் சேர்ந்து அறை முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை.
    • பணத்தை திரும்ப கொடுக்க நேரில் வருகிறேன் எனவும் தெரிவித்தார்.

    துபாய்:

    துபாயில் குடியேறுவதற்காக போலந்து நாட்டைச் சேர்ந்த கஜேதன் ஹப்னர் என்ற வாலிபர், பெண் தோழியுடன் வந்தார். புதிதாக வீடு தேடிக் கொண்டிருப்பதால், தற்காலிகமாக துபாய் மரினா பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கினர். அவர்கள் அப்பகுதியில் உள்ள இடங்களை சுற்றி பார்க்கும் வகையில் இ-ஸ்கூட்டர் ஒன்றை வாங்க அந்த வாலிபர் திட்டமிட்டு, இணையதளத்தில் தேடினார்.

    அப்போது தனியார் நிறுவனம் ஒன்று 1,750 திர்ஹாமில் இ-ஸ்கூட்டரை விற்பனை செய்வதாக அறிவித்து இருந்தது. இதனை கஜேதன் ஹப்னர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார். அதில், பொருளை டெலிவரி செய்யும் போது பணத்தை தருவதாக குறிப்பிட்டார்.

    இந்த இ-ஸ்கூட்டரை டெலிவரி செய்வதற்காக அவர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகம்மது மோசின் நசிர் என்ற டெலிவரி ஊழியர் நேரில் சென்றார். அதனை பெற்றுக் கொண்ட கஜேதன் ஹப்னர் பணத்தை நசிரிடம் கொடுத்தார். அப்போது அவர் 1,750 திர்ஹாமுக்கு பதிலாக 17,050 திர்ஹாம் வழங்கினார். இதனை டெலிவரி ஊழியரும் எண்ணி பார்க்காமல் வாங்கி சென்றார். பின்னர் முகம்மது மோசின் நசிர் தினமும் பொருட்களை டெலிவரி செய்த பணத்தை எண்ணி பார்ப்பது வழக்கம். அன்று இரவில் அவர் பணத்தை எண்ணும் போது 15 ஆயிரம் திர்ஹாம் அதிகமாக இருப்பது தெரிந்தது.

    இந்நிலையில் முகம்மது மோசின் நசிரின் தாயார் பாகிஸ்தானில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகனிடம் பேசினார். அப்போது இந்த விவரத்தை அவரிடம் தெரிவித்தார். அவரும் பணத்தை உடனடியாக கொடுத்தவரிடம் திருப்பி கொடுத்து விடு என தெரிவித்தார். இதற்கிடையே பொருளை வாங்கிய கஜேதன் ஹப்னர் தன்னிடம் இருந்த பணம் குறைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தனது தோழியுடன் சேர்ந்து அறை முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை.

    அப்போது கஜேதன் ஹப்னர் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், டெலிவரி ஊழியர் முகம்மது மோசின் நசிர் பேசினார். அப்போது, உங்களிடம் ஆன்லைன் பொருளுக்கு கூடுதலாக பணம் பெறப்பட்டது என விவரமாக கூறினார். அந்த பணத்தை திரும்ப கொடுக்க நேரில் வருகிறேன் எனவும் தெரிவித்தார். பின்னர் மறுநாள் 15 ஆயிரம் திர்ஹாம் பணத்தை எடுத்து கொண்டு டெலிவரி ஊழியர், வெளிநாட்டு வாலிபர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு சென்று நேரில் ஒப்படைத்தார்.

    டெலிவரி இளைஞரின் நேர்மையை பாராட்டி அவருக்கு 300 திர்ஹாம் பரிசாக கஜேதன் ஹப்னர் வழங்கினார். டெலிவரி ஊழியர் அனுமதியுடன் போலந்து இளைஞரின் தோழி அவரது நேர்மையை கவுரவிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் இந்த நிகழ்ச்சியை பதிவாக வெளியிட்டார்.

    தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து சிக்கன் ரைஸ் மற்றும் பர்க்கர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
    • இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

    சென்னை:

    கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (வயது 40). இவருடைய மகள் எலினா லாரெட் (15). கூடைப்பந்து வீராங்கனையான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இதற்கிடையே பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரெயிலில் மத்திய பிரதேசம் சென்றார். பின்னர் போட்டியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்தார். ரெயில் பயணத்தின்போது சாப்பிடுவதற்காக ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து சிக்கன் ரைஸ் வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

    மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து ரெயிலில் வைத்து சிக்கன் ரைஸ் மற்றும் பர்க்கர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக எலினா லாரெட் சென்னை அண்ணாநகரில் உள்ள தனது உறவினர் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளார். அவர், ரெயில் சென்னை வந்ததும் எலினாவை அண்ணாநகர் 4-வது அவென்யூவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சைக்கு பின்னர் எலினா, பெரவள்ளூரில் உள்ள தனது மற்றொரு உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவருடைய உறவினர்கள் அவரை மீட்டு பெரவள்ளூரில் உள்ள பெரியார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் எலினாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் எலினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவி சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? அல்லது அவருடைய இறப்புக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    விளையாட சென்ற மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் அவருடைய குடும்பத்தினர் மத்தியிலும் சக மாணவ-மாணவிகள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×