என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழவேற்காடு"

    • கடல் அலையில் அடித்து வரப்படும் மணல் கருமையாக மாறி உள்ளது.
    • தொழிற்சாலை கழிவுநீரே காரணம் என்று கூறப்படுகிறது.

    பொன்னேரி:

    பழவேற்காடு பகுதியை சுற்றி 35 மீனவ கிராமங்கள் உள்ளன. திருமலை நகர் தொடங்கி காட்டுப்பள்ளி வரை நீண்ட கடற்கரை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பழவேற்காடு கடற்கரை பகுதி கருப்பு நிறமாக மாறி வருகிறது. பழைய சாட்டன்குப்பம், கோரைகுப்பம், வைரவன் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராம கடற்கரை பகுதிகளில் கடல் அலையில் அடித்து வரப்படும் மணல் கருமையாக மாறி உள்ளது.

    இதனால் அந்த பகுதியில் கடற்கரை முழுவதும் கருப்பாக காட்சி அளிக்கிறது. கடல் அலைகளும் சகதியாக மாறிவிட்டன. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்த பாதிப்புக்கு தொழிற்சாலை கழிவுநீரே காரணம் என்று கூறப்படுகிறது.

    கடலில் கலக்கப்படும் கடல்நீரால் மாசு ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம், அத்திப்பட்டு புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் கழிவுகள் கடலில் கலக்கின்றன.

    தற்போது கடலில் அலை சீற்றம் அதிகமாக இருக்கிறது. இதனால் அந்த கழிவுகள் கடற்கரை பகுதியில் ஒதுங்குகிறதா? என்று தெரியவில்லை. இதுவரை, இதுபோன்று பழவேற்காடு கடற்கரை கருப்பு நிறமாக மாறியது இல்லை என்றார்.

    • மழைகாலங்களிலும் கடல் நீர் சாலை வரை வந்து விடும்.
    • ஜே.சி.பி.எந்திரம் மூலம் 2 முறை மணல் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இப்பகுதியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட மீனவகிராமங்கள் உள்ளன. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பழவேற்காடு பகுதியை சேர்ந்த எண்ணூர் காட்டுப்பள்ளி அதானி துறைமுகம், எல்.என்.டி. துறைமுகம், மற்றும் சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்பவர்கள் பழவேற்காடு- காட்டுப்பள்ளி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    தாங்கல்பெரும்புலம் ஊராட்சிக்குட்பட்ட கருங்காலி பகுதியில் உள்ள இந்த சாலை கடற்கரைக்கு மிக அருகில் உள்ளது.

    இதனால் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் போதும், மழைகாலங்களிலும் கடல் நீர் சாலை வரை வந்து விடும். இதனால் சாலை மணலால் மூடப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை முழுவதும் கடல் நீர் புகுந்து மணலால் மூடியதால் வாகன போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது.

    இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதானி துறைமுகம் சார்பில் ஜே.சி.பி.எந்திரம் மூலம் 2 முறை மணல் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பழவேற்காடு பகுதியில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது. இதனால் கருங்காலி பகுதியில் பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை சுமார் 1/2 கி.மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் வடிந்து மணலாக நிரம்பி உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் மணல் உள்ள பகுதியில் இருசக்கர வாகனங்களை தள்ளிக்கொண்டு செல்கிறார்கள். பெரிய வாகனங்கள் வஞ்சிவாக்கம், காட்டூர், வாயலூர் வழியாக மாற்றுபாதையில் சுற்றி செல்கின்றன.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது கடல் அலை சீற்றத்தின் போது ஒவ்வொரு முறையும் சாலை மணலால் மூடப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். போக்குவரத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

    • இயற்கை வளத்தினை பாதுகாக்கவும் காற்று மாசுபாட்டினை தடுக்கவும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • மரக்கன்றுகளை நட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.

    பொன்னேரி:

    பழவேற்காடு தாங்கல் பெரும்புலம் ஊராட்சியில் இயற்கை வளத்தினை பாதுகாக்கவும் காற்று மாசுபாட்டினை தடுக்கவும் மரக்கன்றுகள் நடப்பட்டன. பழவேற்காடு கொடிமரம் நெடுஞ்சாலையில் இருந்து தாங்கல் பெரும்புலம் ஊராட்சி முழுவதும் சாலையோரங்களில் தொடர்ச்சியாக ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் மரக்கன்றுகளை நட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் தாங்கல் பெரும்புலம் ஊராட்சி தலைவர் ஞானவேல், பசுமை நாராயணன், ஏகாச்சரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று இரவு 8.58 மணிக்கு தொடங்க இருக்கிறது.
    • இரு செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்பட உள்ளது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நாளை இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப் பணி 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று இரவு 8.58 மணிக்கு தொடங்க இருக்கிறது.

    இந்த ராக்கெட் 'ஸ்பேடெக்ஸ்-ஏ', 'ஸ்பேடெக்ஸ்-பி' என இரண்டு சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் இந்த இரு செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்பட உள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

    • பழவேற்காடு கடலில் படகு சவாரி மற்றும் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
    • கடற்கரையில் ஆபத்தான பகுதி கண்டறியப்பட்டு அதில் சிவப்பு நிற அபாய கொடி நடப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    காணும் பொங்கல் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்கள், கடற்கரைக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று சமைத்து கொண்டு சென்ற உணவை சாப்பிட்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது வழக்கம். அதன்படி நாளை வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா, பெசன்ட் நகர், மாமல்லபுரம் கடற்கரையில் திரளானோர் குவிவார்கள். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் பழவேற்காடு கடற்கரையிலும் ஏராளமானோர் நாளை காலை முதல் மாலை வரை குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடற்கரைக்கு வருபவர்கள் அங்குள்ள டச்சு கல்லறை, நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த சிவன் கோவில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பழமை வாய்ந்த மசூதி, பழவேற்காடு ஏரி, பழவேற்காடு பறவைகள் சரணாலயம், உள்ளிட்டவைகளை பார்த்து ரசிப்பார்கள்.

    இதையொட்டி பழவேற்காடு பகுதியில் உதவி ஆணையாளர் வீரக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் காளிராஜ், குணசேகரன், சாம் வில்சன், வேலுமணி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பொன்னேரி அடுத்த ஆண்டார்மடம், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி ஆகிய 2 இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து உள்ளனர். வாகனங்களை நிறுத்த தனியிடம் ஒதுக்கி உள்ளனர்.

    பழவேற்காடு கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்து உள்ளனர். அங்கிருந்து கடற்கரை பகுதிக்கு நடந்து செல்ல வேண்டும்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, பழவேற்காடு கடலில் படகு சவாரி மற்றும் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளோடு வருபவர்கள் பத்திரமாக குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நகை, பணம் மற்றும் பொருட்களை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். சாலைகளில் பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    வனத்துறையினர் கூறும்போது, வனத்துறையினர் 5 பேர் கடற்கரையில் ரோந்து செல்வார்கள். வழிமாறி ஊருக்குள் சென்று கடற்கரைக்கு வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். பழவேற்காடு தன்னார்வலர்கள் மூலமாக 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, படகில் ரோந்து செல்லப்படும். கடற்கரையில் ஆபத்தான பகுதி கண்டறியப்பட்டு அதில் சிவப்பு நிற அபாய கொடி நடப்பட்டுள்ளது என்றனர்.

    ×