என் மலர்
நீங்கள் தேடியது "சி.டி.ஸ்கேன்"
- அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் எடுக்க முடியாமல் கர்ப்பிணிகள், நோயாளிகள் அலைகழிக்கப்படுகின்றனர்.
- ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையானது விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை மருத்துவமனை யாக விளங்குகிறது. இந்த அரசு மருத்துவமனையில் தினமும் 500-க்கும் மேற்பட்ட உள்புற வெளிப்புற நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக அருப்புக்கோட்டை சுற்று வட்டார கிராமங்களான ஆத்திப்பட்டி, திருச்சுழி, கல்லூரணி, மண்டபசாலை, ரெட்டியாபட்டி, பரளச்சி, பந்தல்குடி உள்பட பல கிராமங்களில் இருந்து மக்கள் சிகிச்சைக்கு இங்குதான் வருகின்றனர்.
கர்ப்பிணி பெண்களுக்கு இங்கு பிரசவத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சி.டி.ஸ்கேன் எடுக்கும் பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கர்ப்பிணி பெண்கள், எலும்பு முறிவு, தலைகாயம் உள்ளிட்டவற்றுக்கு ஸ்கேன் எடுக்க முடியவில்லை. அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் நோயாளிகளின் நிலை பரிதாபமாக உள்ளது.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அலைகழிக்கப்படுகின்றனர். எனவே அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் பிரிவில் ஊழியர்கள் பற்றாக்குறையை நீக்கி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.
- சி.டி.ஸ்கேன் கருவியை கண்டுபிடித்தவர் கவுன்ஸ் பீல்டு.
- கவுன்ஸ் பீல்டு 2004-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந் தேதி மறைந்தார்.
கண்ணுக்குத் தெரியாத உள் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க மருத்துவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது, சி.டி ஸ்கேன். எக்ஸ்ரேயால் காணமுடியாத நுண்ணிய விஷயங்களைக்கூட இது சொல்லி விடும்.
இந்த சி.டி. ஸ்கேன் (Computed Tomography Scan) முறையையும், அதற்கான கருவியையும் கண்டுபிடித்தவர் கவுன்ஸ் பீல்டு.

இவர் இங்கிலாந்தில் 1919-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந்தேதி பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, எலெக்ட்ரிகல் என்ஜினீயரிங் படித்து பட்டம் பெற்றார்.
அவரது கவனம் எக்ஸ்ரே பக்கம் திரும்பியது. நோயாளி ஒரு இடத்தில் படுத்துக்கொண்டோ, நின்று கொண்டோ இருக்கும்போது தேவைப்பட்ட இடத்தில் எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது.
அதன் மூலம் கிடைக்கும் படங்கள் எல்லாம் நேராகக் காணும் தோற்றத்தில் எடுக்கப்பட்ட படங்கள். அந்த படங்களை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் பார்க்கும் விதமாக எடுத்தால், சாதாரண எக்ஸ்ரே படங்களில் கிடைப்பதைவிட அதிகமாக தகவல்கள் கிடைக்கும் என்று அவர் நம்பினார். உடனே தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார்.
காமா கதிர்களைக் கொண்டு படம் எடுக்க முயற்சித்து, ஸ்கேன் இயந்திரத்தைக் கண்டறிந்தார். ஆனால் அந்த எந்திரம் மெதுவாக இயங்கியது. ஒரு பொருளை ஸ்கேன் செய்ய ஒன்பது நாட்கள் ஆனது.
அதற்குக் காரணம், அந்த முறையில் உபயோகப்படுத்தப்பட்ட மிகக் குறைந்த உணர்திறன் கொண்ட காமா கதிர்கள். அந்த படத்தின் தகவல்களை கம்ப்யூட்டர் மூலம் பெற 21 மணி நேரம் பிடித்தது. ஒரு நோயாளியை 9 நாட்கள் ஸ்கேன் செய்தால் அவர் தாக்குப் பிடிப்பாரா?
இதற்கும் தீர்வு தேடினார் அவர். காமா கதிர்களுக்கு பதிலாக, சக்தி வாய்ந்த எக்ஸ்ரே கதிர்களை பயன்படுத்தினார்.

அதன் மூலம் ஸ்கேன் செய்யும் நேரம் ஒன்பது நாட்களில் இருந்து ஒன்பது மணி நேரமாகக் குறைந்தது. முதலில் பன்றியின் சிறுநீரகப் பகுதிகள் இம்முறையில் படம் எடுக்கப்பட்டன.
படிப்படியாக இது மேம்படுத்தப்பட்டு, முதன்முதலாக இந்த ஸ்கேனர் உதவியுடன் 1972-ம் ஆண்டு ஒரு பெண்ணின் மூளை படம் எடுக்கப்பட்டது. அந்த பெண்மணியின் மூளையில் வட்ட வடிவத்தில் கருப்பு நிறத்தில் ஒரு புண் தென்பட்டது.
இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகிற்கு வரப்பிரசாதமானது. 1979-ம் ஆண்டு இவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கி மருத்துவ உலகம் நன்றி தெரிவித்தது.
எலும்பு, மூளை போன்ற உள் உறுப்புகளில் காணப்படும் மாறுபட்ட நிலைகளை அறிய இந்த ஸ்கேன் உதவுகிறது. ரத்தக் குழாய்களின் அடைப்பையும் இதன் உதவியால் கண்டுபிடிக்கலாம்.
மேலும் காசநோய், நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் எந்த இடத்தில் எந்த அளவில் இருக்கிறது என்பதை துல்லியமாக அறிய இந்த ஸ்கேன் பெரிய அளவில் உதவுகிறது. கவுன்ஸ் பீல்டு 2004-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந் தேதி மறைந்தார். உலகத்திற்கு ஈடு செய்ய இயலாத இழப்பு!