என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர் கலவரம்"

    • இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் உள்ள முகாம்களை நீதிபதிகள் பார்வையிடுவார்கள்.
    • 60,000 பேர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்,

    நீதிபதிகள் வருகை 

    மணிப்பூரில் இனக் கலவரத்தால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடியை மதிப்பிடுவதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், ஐந்து மூத்த நீதிபதிகளுடன் இன்று (சனிக்கிழமை) மணிப்பூர் வந்தடைந்தார். 

    தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) நீதிபதிகளின் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.  இதைத்தொடர்ந்து கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சட்ட உதவி மையங்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் திறப்பு விழா நடைபெற உள்ளது.

    இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் உள்ள முகாம்களை நீதிபதிகள் பார்வையிடுவார்கள். அங்கு இடம்பெயர்ந்த மக்களுடன் உரையாடி, அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் விநியோகிப்பதை மேற்பார்வையிடுவார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி வழங்கல் உள்ளிட்ட செயல்பாடுகளையும் நீதிபதிகள் தொடங்கி வைகின்றனர்.

    மணிப்பூர் கலவரம்

    மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்தேய் சமூகத்தினர் பழங்குடியின அந்தஸ்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

    இதை எதிர்த்து மலைப்பிரதேச மாவட்டங்களில் அதிகம் வசிக்கும் குக்கி இன மக்கள் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இரு சமூகத்தினருக்கும் இடையிலான பிரச்சனை 2023 இல் வன்முறையாக மாறியது. மே மாதம் பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    அதைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், கொலை வெறியாட்டங்களும் அரங்கேறின. 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கலவரம் தாற்காலிகமாக அடங்கியபோதிலும் ஆயுதமேந்திய குழுக்களால் இன்று வரை மணிப்பூரில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. வீடுகளை இழந்த பல குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றன.

     ஜனாதிபதி ஆட்சி

    கடந்த வருட இறுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டபோது மீண்டும் கலவரம் வெடித்தது. கலவரத்தை தூண்டியதாக மணிப்பூர் பாஜக முதல்வர் பைரன் சிங் தொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின.

    இதனால் அவர் கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது . இதற்கிடையே வெளிநாடுகளுக்கு தொடர்ந்து பயணிக்கும் பிரதமர் மோடி மணிப்பூருக்கு இதுநாள் வரை சென்று பாதிப்புகளை பார்வையிடாதது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. 

    மோடி எப்போ வருவார்?

    இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மணிப்பூர் பயணத்தை வரவேற்றுள்ள காங்கிரஸ் மோடியை மீண்டும் விமர்சித்துள்ளது.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மணிப்பூருக்குச் சென்ற ஆறு நீதிபதிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். கடந்த 22 மாதங்களில், நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், சுமார் 60,000 பேர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர், இன்றும் கூட, மணிப்பூரில் உள்ள சமூகங்களிடையே அச்சமும் சந்தேகமும் நிறைந்த சூழல் நிலவுகிறது.

    பிப்ரவரி 13 அன்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது, ஆனால் ஆகஸ்ட் 1, 2023 அன்று உச்ச நீதிமன்றமே மணிப்பூரில் உள்ள அரசியலமைப்பு முற்றிலுமாக தகர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறிய பிறகும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த 18 மாதங்கள் ஏன் ஆனது? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்றது நல்லது, ஆனால் பெரிய கேள்வி என்னவென்றால், பிரதமர் எப்போது அங்கு செல்வார்? என்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.  

    • சிறுமியின் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்தன.
    • இந்த முட்டாள்தனமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும்

    மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூரில் உள்ள லான்வா டிடி பிளாக் நிவாரண முகாமுக்குள் 9 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று மாலை 6:30 மணியளவில் காணாமல் போனாள். நேற்று நள்ளிரவு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

    சிறுமி காணாமல் போனதும், அவளது பெற்றோரும், முகாமில் வசிப்பவர்களும் தீவிர தேடுதலைத் தொடங்கினர். தொடர்ந்து நிவாரண முகாமின் வளாகத்திற்குள் காயங்களுடன் கிடந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் சிறுமி பாலியல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போக்ஸோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    2023 முதல் மணிப்பூரில் இரண்டு சமூகளுக்கிடையே நடந்து வரும் கலவரத்தில் 250 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கடந்த வருட இறுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கலவரம் தீவிரமடைந்தது.  கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    சிறுமியின் மரணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் பைரன் சிங், இந்த முட்டாள்தனமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும், மேலும் குற்றவாளிகள் தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    • ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் ஏற்பட்டது.
    • கடைகள் மற்றும் சொத்துக்களை சூறையாடிய கலவரக்காரர்களை அடக்க போலீசார் போராடினர்.

    மணிப்பூரில் சூரசந்த்பூர் மாவட்டத்தில், ஹமர் பழங்குடியினத் தலைவர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட்டார்.

    இதனால் ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் ஏற்பட்டது. எனவே சூரசந்த்பூரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு தீர்வு காணும் விதமாக இரு சமூக தலைவர்களும் கடந்த திங்கள்கிழமை அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டினர். ஆனால் நேற்று இரவே மீண்டும் இரு சமூகத்தினரிடையேயும் மோதல் வெடித்தது.

    அப்பகுதியில் ஜோமி பழங்குடியினர் தங்கள் சமூகத்தின் கொடியை ஏற்ற ஹமர் பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தபோது இருதரப்புக்கும் வன்முறையில் இறங்கியது. கல்வீச்சு சம்பவங்கள் மற்றும் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இதில் லால்ரோபுயி பாகுமாட்டே என்ற 53 வயது நபர் உயிரிழந்தார்.

    மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கலவரத்தை அடக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். கடைகள் மற்றும் சொத்துக்களை சூறையாடிய கலவரக்காரர்களை அடக்க போலீசார் போராடினர். சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே குக்கி மற்றும் மெய்தேய் பழங்குடியினரையே கடந்த வருடம் முதல் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து பார்வையிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் இன்று மணிப்பூர் வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை 250 க்கும்  அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • நீதிபதிகளின் இந்த வருகை பாதிக்கப்பட்ட மக்ககளுக்கான சட்ட மற்றும் மனிதாபிமான உதவியின் தற்போதைய தேவையை வலியுறுத்தும்.
    • பயணத்தின்போது நீதிபதிகள் 6 பேரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ள நிவாரண முகாம்களுக்கு செல்வார்கள்.

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையேயான இந்த கலவரத்தில் இதுவரை 250-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

    மேலும் வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு பல மாதங்களாக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இதனிடையே மணிப்பூர் முதல்-மந்திரியாக இருந்து வந்த பைரேன் சிங் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் பி.ஆர்.கவாய் உள்பட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 6 பேர் வருகிற 22-ந்தேதி மணிப்பூர் செல்ல இருப்பதாக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மணிப்பூர் ஐகோர்ட்டின் 20-ம் ஆண்டு விழாவையொட்டி சுப்ரீம் கோர்ட் நீதிபதியும், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவருமான பி.ஆர்.கவாய், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோருடன் வருகிற 22-ந்தேதி மணிப்பூருக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது நீதிபதிகள் 6 பேரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ள நிவாரண முகாம்களுக்கு செல்வார்கள்.

    நீதிபதிகளின் இந்த வருகை பாதிக்கப்பட்ட மக்ககளுக்கான சட்ட மற்றும் மனிதாபிமான உதவியின் தற்போதைய தேவையை வலியுறுத்தும். இந்த பயணத்தின்போது இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்ட உதவி மையங்களையும், மாநிலம் முழுவதும் உள்ள சட்ட சேவை முகாம்கள் மற்றும் மருத்துவ முகாம்களையும் நீதிபதி கவாய் தொடங்கி வைப்பார்.

    தொடரும் வன்முறைகளுக்கு மத்தியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி மற்றும் ஆதரவை வழங்குவதில் மணிப்பூர் மாநில சட்ட சேவைகள் ஆணையத்துடன் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பொது மக்கள் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் வரத்துவங்கினர்.
    • நகரின் முக்கிய பகுதிகளில் ராணுவம், மத்திய காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிரிழந்த 54 பேரில், 16 பேரின் உடல்கள் சுராசந்த்பூர் மருத்துவமனையின் பிணவறையிலும், 15 பேரின் உடல்கள் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஜகவர்லால் நேரு மருத்துவக் கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.

    கடந்த சில நாட்களாக பற்றி எரிந்த மணிப்பூர் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது. மணிப்பூரின் இம்பால் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகள், சந்தைகள் திறக்கப்பட்டு, சாலையில் வாகனங்கள் ஓடத்துவங்கியுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் ராணுவம், மத்திய காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொது மக்கள் இன்று காலை முதலே காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் வரத்துவங்கினர்.

    "கடந்த 12 மணி நேரங்களில் இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கலவரக்காரர்கள் கட்டிடங்களுக்கு வேண்டுமென்றே தீயிட்டு கொளுத்தினர். எனினும், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது," என்று பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

    வன்முறையில் ஏராளமானோர் உயிரிழந்தனர், மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர் என்று பல்வேறு தகவல்கள் மூலம் செய்திகள் வெளியாகி வந்த நிலையிலும், போலீசார் இவற்றை உறுதிப்படுத்த மறுப்பதாக கூறப்படுகிறது. கலவரத்தில் சிக்கிய பலர் ரிம்ஸ் மற்றும் ஜவகர்லால் நேரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சுமார் 10 ஆயிரம் ராணுவத்தினர் மணிப்பூர் முழுக்க பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரம் காரணமாக கடந்த புதன்கிழமையில் இருந்து இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.

    • மணிப்பூரில் 5,751 தேர்வர்கள் பங்கேற்கின்றனர்.
    • கலவரம் எதிரொலியாக நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இம்பால்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். பழங்குடி சமூகம் அல்லாதோரான இவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் உருவானது. இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது.

    கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் உள்ளனர். இதுவரை 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, புகலிடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை மற்றும் பதற்ற சூழலால் அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழந்துள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறை பல மாவட்டங்களுக்கு பரவியதும் இணையதள சேவையை முடக்கப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    அதிரடி விரைவு படையினரும், ராணுவம் மற்றும் துணை ராணுவம் படையினரும் கூடுதல் பாதுகாப்பிற்காக மணிப்பூரின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், மத்திய கல்வி இணை மந்திரி டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், மணிப்பூரில் தற்போதுள்ள சூழலில் மாணவர்களால் நீட் தேர்வில் கலந்து கொள்ள முடியாது. ஏனெனில், பிராட்பேண்ட் மற்றும் இணையதள இணைப்பு பிரச்சனை ஏற்படும். அதனால், தேசிய தேர்வு முகமையிடம் (என்.டி.ஏ.) தேர்வு தேதியை மாற்றி அறிவிக்கவோ அல்லது தள்ளி வைக்கவோ செய்யும்படி கேட்டுக்கொண்டேன். இதன்படி தேர்வு தள்ளி வைப்பு பற்றிய அறிக்கையை என்.டி.ஏ. வெளியிட்டு உள்ளது. 5,751 தேர்வர்கள் மணிப்பூரின் 2 மையங்களில் தேர்வு எழுத இருந்தனர். தேர்வுக்கான புதிய தேதி முடிவு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • மணிப்பூரில் நடந்த கலவரத்தில் இதுவரை 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு, 53 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள மெய்டீஸ் இனத்தவர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிராக பழங்குடி மாணவர்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

    கடந்த 3-ம் தேதியன்று மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தினர். அப்போது அவர்களுக்கும், மெய்டீஸ் இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. வீடுகள், வாகனங்கள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

    ராணுவமும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டனர். மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டது. மணிப்பூரில் இதுவரை நடந்த கலவரங்களில் 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    • அனைத்து உதவிகளும் தமிழ்நாடு அரசால், அம்மாநில அரசு மற்றும் மணிப்பூர் தமிழ்ச்சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களை, தமிழகத்திற்கு அழைத்துவர அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூலமாக விமான பயணச்சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 5-ந்தேதியன்று பொது மற்றும் மறுவாழ்வுத் துறை அலுவலர்களை இதுகுறித்து தக்க நடவடிக்கை மேற் கொள்ள அறிவுறுத்தியதற்கிணங்க மணிப்பூர் மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர்களுடன் உடனடியாக தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

    மணிப்பூர் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து விவாதித்து அவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் தமிழ்நாடு அரசால், அம்மாநில அரசு மற்றும் மணிப்பூர் தமிழ்ச்சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.

    மருத்துவம் பயிலும் மாணவர்கள், அவர்தம் கல்லூரி விடுதிகளில் பாதுகாப்பான நிலையில் உள்ளதாகவும் கல்லூரி தேர்வுகளுக்கு தயாராகி வருவதாலும் தற்சமயம் தமிழ்நாட்டிற்கு திரும்பிவர விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு திரும்பிவர விருப்பம் தெரிவித்துள்ள விருதுநகர் மாவட்டம்-1, தூத்துக்குடி மாவட்டம்-1, திருவள்ளூர் மாவட்டம்-2, மற்றும் கடலூர் மாவட்டம்-1, என மொத்தம் 5 தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களை, தமிழகத்திற்கு அழைத்துவர அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூலமாக விமான பயணச்சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த மாணவர்கள் இன்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள். அவர்கள் அங்கிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று சேர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துறையால் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோன்று மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மோரே தமிழ் மக்களுடனும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அவர்களது பாதுகாப்பிற்கும் தமிழ்நாடு அரசால் மணிப்பூர் அரசு மற்றும் தமிழ்ச் சங்க பிரதிநிதிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே இம்மாதம் தொடக்கத்தில் மோதல் ஏற்பட்டது.
    • மீண்டும் அங்கு வன்முறை வெடித்து உள்ளதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே இம்மாதம் தொடக்கத்தில் மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறியது. வாகனங்கள் ,வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் பலர் இறந்தனர். கலவரத்தை அடக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது.

    இந்த நிலையில் மீண்டும் அங்கு வன்முறை வெடித்து உள்ளதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். ராணுவ தளபதி மனோஜ்பாண்டே இன்று மணிப்பூர் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வன்முறை சம்பவங்கள் மேலும் பரவாமல் தடுக்க மேலும் 5 நாட்களுக்கு மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையே வன்முறை வெடித்திருக்கிறது.
    • மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அம்மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு சம்மந்தமான நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மலை பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையே வன்முறை வெடித்திருக்கிறது. பத்தாயிரம் ராணுவ வீரர்களைக் குவித்தும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து, பொது அமைதி கெட்டு கடந்த 22 நாட்களாக சின்னஞ் சிறிய மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது..

    ரஷ்யா-உக்ரைன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாட்டாண்மை செய்யும் பிரதமர் மோடி, மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சி எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது கவலை அளிக்கிறது. அசாம் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் சென்று அமைதியை உருவாக்க முயற்சிக்காதது ஏன்?

    உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டிருந்த மணிப்பூர், சில ஆண்டுகளுக்கு முன்பு அமைதி வழிக்குத் திரும்பி, வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தற்போது மீண்டும் அமைதி சீர்குலைக்கப்பட்டு, இணையதளம் முடக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அம்மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆயுதம் வைத்திருந்தால் போலீசில் சரணடைய வேண்டும்.
    • நாளை முதல் தேடுதல் வேட்டை தொடங்கப்படும்.

    மணிப்பூரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போலிச் செய்திகளுக்கு மணிப்பூர் மக்கள் செவி சாய்க்க வேண்டாம். செயல்பாடுகளை நிறுத்துதல் (SoO) ஒப்பந்தத்தின்படி வன்முறையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆயுதம் ஏந்தியவர்கள் போலீஸ் முன் சரணடைய வேண்டும். இதற்கான நடவடிக்கை நாளையில் இருந்து தொடங்கும். யாரிடமாவது ஆயுதம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    முன்னதாக,

    மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு நாகா, குகி சமூகத்தினர் அடங்கிய சிறுபான்மை பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதில் 74 பேர் பலியானார்கள். பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த மாதம் 27-ந்தேதி முதல் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.

    மே 28-ந்தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வன்முறை காரணமாக பதற்றம் நிலவி வரும் மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முடிவு செய்தார். அதன்படி அவர் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து இம்பாலுக்கு கடந்த 29-ந்தேதி சென்றடைந்தார்.

    மணிப்பூர் சென்ற மாநில முதல்-மந்திரி பிரேன்சிங், ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு சூழலை கேட்டறிந்த அமித் ஷா, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். மேலும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அமித் ஷா, மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    • மணிப்பூர் கலவரம் தொடர்பாக 6 வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும்.
    • மணிப்பூர் வன்முறைக்கு பின்னால் உள்ள கிரிமினல் மற்றும் பொதுவான சதிகள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கும்.

    இம்பால்:

    மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு நாகா மற்றும் குகி சமூகத்தினர் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி பழங்குடிகளுக்கு இடையே அவ்வப்போது ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியது. இந்த வன்முறை சம்பவங்களில் 80-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    கலவரத்தை கட்டுப்படுத்த அந்த மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 4 நாள் பயணமாக அந்த மாநிலத்துக்கு சென்றார். அங்கு மைதேயி, குகி சமூக தலைவர்களை நேற்று முன்தினம் சந்தித்தார். பிரச்சனைக்கு தீர்வு காண உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக மோரே பகுதிக்கு அமித்ஷா நேற்று சென்றார். இந்த பகுதி இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ளது.

    அதை தொடர்ந்து காங்போக்பி பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்று குகி சமூகத்தினரை சந்தித்தார். அந்த பகுதியில் உள்ள சிவில் சமூக அமைப்புகளையும் சந்தித்தார். இம்பாலில் மைதேயி சமூகத்தினர் தங்கியுள்ள நிவாரண முகாமுக்கும் அவர் சென்றார்.

    இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அறிவித்து உள்ளார். இது தொடர்பாக இம்பாலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக நிவாரண முகாம்களில் உள்ள குகி மற்றும் மைதேயி குழுக்களை சந்தித்து விவாதித்தேன்.

    கலவரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐேகார்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான நீதி விசாரணை விரைவில் அமைக்கப்படும்.

    மணிப்பூர் கலவரம் தொடர்பாக 6 வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும். மணிப்பூர் வன்முறைக்கு பின்னால் உள்ள கிரிமினல் மற்றும் பொதுவான சதிகள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கும்.

    இங்கு நிலவும் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாகும். மணிப்பூர் கவர்னர் தலைமையில் முக்கியப் பிரமுகர்கள் கொண்ட அமைதி குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் அனைத்து அரசியல் கட்சிகள் மைதேயி, குகி சமூகத்தை சேர்ந்தவர்களும் இடம்பெற்று உள்ளனர்.

    கலவரத்தில் காயம் அடைந்தோர், சொத்துக்களை இழந்தோருக்கு நிவாரணம் நாளை அறிவிக்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மேலும் 5 மருத்துவ குழுக்கள் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    ஆயுதங்களை யாரேனும் வீட்டில் பதுக்கி வைத்திருந்தால் உடனே ஒப்படைக்க வேண்டும். மணிப்பூர்-மியான்மர் எல்லை பாதுகாப்பாக இருக்கிறது.

    இவ்வாறு அமித் ஷா கூறினார்.

    ×