search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம்பிக்கை இல்லா தீர்மானம்"

    • ராமலெட்சுமி திடீரென, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
    • மொத்தம் உள்ள 24 கவுன்சிலர்களில் 13 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது.

    கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது நகராட்சியின் 2-வது வார்டில் ராமலெட்சுமி என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    தேர்தலில் அ.தி.மு.க.-10, தி.மு.க.-7, பா.ஜனதா-4, சுயேட்சை-2, காங்கிரஸ்-1 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் சுயேட்சையாக வெற்றி பெற்ற ராமலட்சுமி அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் ஆதரவுடன் செங்கோட்டை நகராட்சி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்நிலையில் ராமலெட்சுமி திடீரென, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அதன் பின்னர் அவருக்கும், சில கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது.

    கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நகராட்சி கூட்டங்களின்போது அவருக்கு எதிராக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் நகராட்சி தலைவி ராமலெட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி கவுன்சிலர்கள் கடந்த மாதம் 19-ந் தேதி கடிதம் வழங்கினர்.

    அந்த வகையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 10 கவுன்சிலர்களும், பா.ஜனதாவை சேர்ந்த 4 பேரும், தி.மு.க.வை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட கடிதம் நகராட்சி பொறுப்பு கமிஷனரான கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் சுகந்தியிடம் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து விசாரணை நடத்திய பின்னர், நகராட்சி தலைவிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம், வாக்கெடுப்பு இன்று (18-ந் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு கமிஷனர் (பொறுப்பு) சுகந்தி தலைமையில் விவாதம், வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் தொடங்கியது.

    இதில் மொத்தம் உள்ள 24 கவுன்சிலர்களில் 13 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர். இதனால் போதிய பெரும்பான்மை கவுன்சிலர்கள் வராத காரணத்தினால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக கமிஷனர் சுகந்தி அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து ராமலெட்சுமியின் நகராட்சி தலைவர் பதவி தப்பியது.

    • பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் (No-Confidence Motion) கொண்டு வரலாம்.
    • வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் இந்த தீர்மானம் வெற்றியாக கருதப்படும்.

    ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு ஏற்பதாக மக்களவை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்கட்சியோ அல்லது எதிர்கட்சி கூட்டணியோ நம்பிக்கை இல்லா தீர்மானம் (No-Confidence Motion) கொண்டு வரலாம்.

    ஆளும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கெதிராகவோ அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கெதிராகவோ செயல்படுவதாக கருதும்போது இதனை கொண்டு வந்து ஆளும் அரசாங்கத்தின் வழிமுறைகளை எதிர்கட்சிகள் தீர்மானிக்க முடியும்.

    எனவே, தேவைப்படும்போது ஒரு ஆயுதமாக இதனை பயன்படுத்தும் நோக்கில் மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த வழிமுறை அமைகிறது.

    மக்களவையின் உறுப்பினர்களில் யார் வேண்டுமென்றாலும் இதனை கொண்டு வரலாம். தீர்மானம் கொண்டு வருவது குறித்த தகவல்களை எழுத்துபூர்வமாக காலை 10 மணிக்குள் சபாநாயகருக்கு அளிக்க வேண்டும். ஆனால் அதற்கு குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும்.

    சபாநாயகர் இதனை விவாதத்திற்கு எடுத்து கொள்ளலாமா? வேண்டாமா? என தீர்மானிப்பார். அனுமதிக்கும் பட்சத்தில் அதற்கான தேதியும் நேரமும் தெரிவிப்பார். மக்களவையின் 198 விதிகளின் கீழ், சபாநாயகர் அழைப்பு விடுத்த பின்னரே இதனை அறிமுகப்படுத்தி விவாதிக்க முடியும்.

    இந்த தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர் முதலில் பேச, ஆளும் கட்சி தரப்பு இதற்கு ஒரு விளக்கமளித்து தங்கள் நிலைப்பாட்டை விளக்கும். எதிர்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் இதன் மீது கேள்வி எழுப்பி கருத்துக்களை கூறுவார்கள்.

    நீண்ட, முழுமையான விவாதத்திற்கு பிறகு மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் இந்த தீர்மானம் வெற்றியாக கருதப்படும். அவ்வாறு நடந்தால் ஆளும் அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.

    மாறாக தீர்மானத்திற்கு போதிய பெரும்பான்மை கிடைக்காமல் போனால், ஆளும் அரசு வெற்றி பெற்றதாகவும், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்படும்.

    இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து மக்களவையில் 27 முறை இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

    தற்போது காங்கிரஸ் கட்சி, பல கட்சிகளின் உதவியுடன் புதிதாக அமைத்துள்ள கூட்டணியின் ஒரு பகுதியாக, தெலுங்கானாவின் பாரதிய ராஷ்டிர சமிதி (BRS) உடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்களவையில் 2 தனித்தனி நம்பிக்கையில்லா தீர்மானங்களை தாக்கல் செய்தது.

    நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதல் 2018-ம் ஆண்டு நரேந்திர மோடி வரை பல தலைவர்கள் இந்த தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளனர்.

    நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக கூட்டணி அரசு கடந்த 2018-ம் ஆண்டு சந்தித்த நம்பிக்கையில்லா தீர்மானம் 199 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் எம்.பி. முன்மொழிய எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் ஆதரவு
    • அனைத்துக்கட்சி தலைவர்களிடம் ஆலோசித்த பிறகு தேதி அறிவிக்கப்படும் என்றார் சபாநாயகர்

    பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டுவர முடிவு செய்தன. அதன்படி காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்.பி. நம நாகேஸ்வர ராவ் ஆகியோர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான நோட்டீஸை இன்று காலை வழங்கினர்.

    இன்று காலை மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் 12 மணிக்கு அவை கூடியதும்,  நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அனைத்துக் கட்சி தலைவர்களிடம் ஆலோசித்து விவாதத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார்.

    முன்னதாக,

    பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை திட்டமிட்டபடி நடத்த முடியாத அளவுக்கு மணிப்பூர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறை தொடர்பாகவும், 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் குறித்தும், பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வலியுறுத்தி வருகிறது. மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க தயார் என்று அறிவித்துள்ள மத்திய அரசு, உள்துறை மந்திரி அமித் ஷா மூலம் பதில் அளிக்கும் என்று கூறுகிறது.

    ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஏற்கவில்லை. பிரதமர்தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் கடந்த 20, 21, 24, 25-ந்தேதிகளில் 4 நாட்கள் பாராளுமன்றம் முடங்கும் நிலை ஏற்பட்டது.

    பாராளுமன்றத்தில் சுமூக நிலை ஏற்படுத்துவதற்காக சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    இதையடுத்து பாராளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்துழைப்பு அளிக்கக் கோரி எதிர்க்கட்சி தலைவர் கார்கே உள்பட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கடிதம் அனுப்பினார். மணிப்பூரில் வன்முறை ஏன் ஏற்பட்டுள்ளது என்பதற்கான விளக்கத்தையும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அமித் ஷாவின் கோரிக்கையையும் எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துவிட்டன.

    இதற்கிடையே பிரதமர் மோடியை மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்க செய்யும் வகையில் எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி நேற்று முன்தினம் மாலை காங்கிரஸ் தலைவர் கார்கே ஆலோசனை நடத்தினார். அப்போது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் சட்ட விதிகளின்படி பிரதமர் விளக்கம் அளித்தே தீர வேண்டும் என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதுகுறித்து நேற்று காலை மற்ற கட்சித் தலைவர்களுடன் கார்கே விவாதித்தார். இதன் தொடர்ச்சியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்தெந்த வகையில் நெருக்கடி கொடுக்க முடியும் என்பது பற்றியும் எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று மதியம் வரை நீண்ட நேரம் ஆய்வு செய்தனர்.

    பல்வேறு வழிமுறைகளை ஆலோசித்த பிறகு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதற்கான முடிவை எதிர்க்கட்சி தலைவர்கள் ஒருமனதாக மேற்கொண்டனர். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆவணங்கள் தயாரிக்கும் பணியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மேற்கொண்டனர்.

    பாராளுமன்றத்தில் எந்த ஒரு எம்.பி.யும் 198-வது பிரிவின் கீழ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடியும். ஆனால் அந்த தீர்மானத்துக்கு குறைந்த பட்சம் 50 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்து போட்டிருக்க வேண்டும். மேலும் மக்களவை தொடங்குவதற்கு முன்பு காலை 10 மணிக்குள் அந்த தீர்மானத்தை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும். அதை சபாநாயகர் ஆய்வு செய்வார். அதில் கையெழுத்து போட்டுள்ள 50 எம்.பி.க்கள் பற்றி கணக்கிடுவார். அதன் பிறகுதான் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு தேதியை அறிவிப்பார்.

    இந்த நடைமுறைகளை எடுத்து வைப்பதற்காக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் ஆவணத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு சோனியா தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.

    இதையடுத்து பாராளுமன்ற காங்கிரஸ் துணை தலைவரும், அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகாய் மக்களவை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் மக்களவை செயலாளரிடம் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கடிதங்களை ஒப்படைத்தார்.

    • பிரதமர் மோடியை பேச வைக்க இது ஒன்றே வழி என்பதால் எதிர்க்கட்சிகள் இந்த முடிவு
    • மக்களவையில் இரண்டு கட்சிகளின் எம்.பி.க்கள் கடிதம் கொடுத்துள்ளனர்

    பா. ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இதற்கான அனைத்து வேலைகளும் நேற்றே முடிவந்து விட்டன. இன்று அவை தொடங்கியதும் அதற்கான நகர்வுகளை காங்கிரஸ் தலைவர் எடுத்துச் செல்வார் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்.பி. நம நாகேஸ்வர ராவ் ஆகியோர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான நோட்டீஸை வழங்கியுள்ளனர்.

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் மணிப்பூர் சம்பவம் எதிரொலித்தது.
    • மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதன்படி, மாநிலங்களவை எம்.பி.க்களான கேசவ ராவ், சுரேஷ் ரெட்டி, ஜோகினிபள்ளி சந்தோஷ் குமார், படுகுலா லிங்கையா யாதவ், ரஞ்சித் ரஞ்சன், மனோஜ் ஜா, சையது நசீர் உசைன், திருச்சி சிவா, இம்ரான் பிரதாப்காதி ஆகியோர் 267-வது விதியின் கீழ் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    மணிப்பூர் விவகாரம் பற்றி இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும். அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.

    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளது என மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அவர், நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் கட்சி அலுவலகத்தில் தயாராக உள்ளது. காலை 10 மணிக்கு முன்னதாக மக்களவைச் செயலர் அலுவலகத்துக்கு வந்து சேரும் என தெரிவித்தார்.

    ×