என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிச்சைக்காரர்கள்"
- பாகிஸ்தானை சேர்ந்த பலர் சவுதி அரேபியாவிற்குள் பிச்சை எடுக்க வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- பிச்சை எடுக்க நுழைபவர்களை அரபு அமீரகம் பிடித்து மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வருகிறது.
துபாய்:
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, வேலைவாய்ப்பின்மை என பல பிரச்சனைகளை அந்நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இதற்கிடையே, புனித யாத்திரை செல்வதாக அனுமதி வாங்கி அரபு நாட்டுக்குச் சென்று அங்கு பாகிஸ்தானியர்கள் பலர் பிச்சை எடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இவ்வாறு புனித யாத்திரை பெயரைச் சொல்லி பிச்சை எடுக்க நுழையும் பாகிஸ்தானியர்களை அரபு அமீரகம் பிடித்து மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வருகிறது.
மேலும், அரபு அமீரகத்தில் பிடிபட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அரபு அமீரகத்திற்கான பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், புனிதயாத்திரை விசாவின்கீழ் பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி சவுதி ஹஜ் அமைச்சகம் பாகிஸ்தானின் மத விவகார அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மத யாத்திரை என்ற போர்வையில் சவுதி அரேபியாவுக்கு பிச்சைக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வழிகளைக் கண்டறியுமாறும் பாகிஸ்தான் அரசிடம் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
- மத்திய அரசு நடவடிக்கை எடுத்து அதற்கான பட்டியலை தயார் செய்து வருகிறது.
- பெண்கள் மற்றும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக முதல் கட்டமாக 30 முக்கிய நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் ஆன்மிக நகரங்கள், வரலாற்று சிறப்பு மிக்க நகரங்கள் மற்றும் சுற்றுலா சிறப்பு வாய்ந்த பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இந்த பகுதிகளில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளன.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அதிகரித்து வரும் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை காரணமாக பல்வேறு வகைகளில் பிரச்சினைகள் ஏற்படுவதாலும், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் முக்கிய முடிவுகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு முதல் கட்டமாக 30 நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லாத பகுதியாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து அதற்கான பட்டியலை தயார் செய்து வருகிறது.
இந்த நகரங்களில் இன்னும் 2 ஆண்டுகளில் பிச்சைக்காரர்களுக்கு தனியாக மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. ஆன்மிக நகரங்களில் சம்பந்தப்பட்ட மத அறக்கட்டளைகள் மற்றும் ஆலய நிர்வாகம் மூலமும் மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது வருகிறது.
இதற்காக நாட்டின் வட பகுதியில் அயோத்தியில் இருந்து கிழக்கே கவுகாத்தி வரையிலும், மேற்கு பகுதியில் திரிம்பகேஸ்வர் முதல் தெற்கே திருவனந்தபுரம் வரையிலும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடும் முதியவர்கள், முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக முதல் கட்டமாக 30 முக்கிய நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் முக்கிய நோக்கமே பிச்சைக்காரர்கள் இல்லாத பகுதிகளாக மாற்றுவதாகும். இதற்காக மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு இது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு (ஸ்மைல்) என்ற துணை திட்டத்தின் கீழ் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிச்சை இல்லாத இந்தியா என்ற இலக்கை நிறைவேற்ற இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என்றும் மத்திய அரசு கணித்துள்ளது.
இதற்காக மத்திய அமைச்சகம் ஒரு தேசிய போர்டல் மற்றும் மொபைல் செயலியை அடுத்த மாதம் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த செயலி மூலம் பிச்சை எடுப்பதாக அடையாளம் காணப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகள் மூலம் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மறு வாழ்வு வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வாய்ப்பாக அமையும் என்றும் கருதப்படுகிறது.
முதல் கட்டமாக இந்த பட்டியலில் ஆன்மிக நகரங்களான அயோத்தி காங்கிரா, ஓம்காரேஸ்வர், உஜ்ஜயினி, சோம்நாத், பாவகர், திரிம்பகேஸ்வர், போத்கயா, குவா ஹாடியன், மதுரை ஆகிய நகரங்களும், சுற்றுலா பகுதிகளான விஜயவாடா, கேவாடியா, ஸ்ரீநகர், நம்சாய், குஷி நகர் போன்ற பகுதிகளும், வரலாற்று சிறப்புமிக்க நகரங்களான சாஞ்சி, கஜுராகோ, ஜெய்சல்மேர், திருவனந்தபுரம், அமிர்த சரஸ், புதுச்சேரி, உதய்ப்பூர், வாரங்கல், கட்டாக், இந்தூர், கோழிக்கோடு, மைசூரு, பஞ்ச் குலா, சிம்லா, தேஜ்பூர் ஆகிய பகுதிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள சாஞ்சியில் பிச்சைக்காரர்கள் யாரும் இல்லை என்று அந்த பகுதிகளில் உள்ள மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகள் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். எனவே இந்த பட்டியலில் சாஞ்சிக்கு பதிலாக மாற்று நகரத்தை தேர்வு செய்யவும் மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் பிச்சைக்காரர்கள் இல்லாத பகுதிகளை உருவாக்க வாய்ப்புகள் ஏற்படும் என்று மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
- சென்னை மாநகர சாலைகளில் பிச்சை எடுப்பவர்களில் ஆந்திர மாநில கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்களே அதிக அளவில் காணப்படுகிறார்கள்.
- கொரோனா காலத்துக்கு பிறகு பிச்சை எடுக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை:
சென்னை மாநகரில் போக்குவரத்து சிக்னல்களில் கை குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதும் பள்ளிக்கூடம் செல்லும் வயதில் சிறுவர் சிறுமிகள் பிச்சை எடுப்பதும் சமீப காலமாக அதிகரித்துள்ளது. பிச்சை எடுப்பதை தடுப்பதற்காக கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்ட போதிலும் பிச்சை எடுப்பது என்பது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது.
பிச்சைக்காரர்களை ஒழித்து பிச்சைக்காரர்களே இல்லாத மாநகராக சென்னை மாநகரை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த நடவடிக்கைகளில் இருந்து வரும் சுணக்கம் மற்றும் தாமதம் காரணமாக தற்போது பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
சிங்காரச் சென்னையை பிச்சைக்காரர்களே இல்லாத மாநகரமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை மாநகரில் பிச்சைக்காரர்கள் தங்குவதற்காக விடுதிகள் ஏற்படுத்தப்பட்டு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் 15 தங்கும் விடுதிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 200 வார்டிலுமே பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்காக தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 9 பெண்கள் விடுதிகளும் 12 ஆண்கள் விடுதிகளும் உள்ளன. மொத்தமுள்ள 51 விடுதிகளில் மீதமுள்ளவை குழந்தைகளின் நலனுக்காக பேணப்பட்டு வருகிறது.
இந்த விடுதிகள் தேசிய ஊரக வாழ்வாதார மிஷன் மூலமாகவும் சென்னை மாநகராட்சி மூலமாகவும் நடத்தப்பட்டு வருகிறது. 60 சதவீதம் நிதி பங்களிப்பை தேசிய ஊரக வாழ்வாதார மிஷனும் 40 சதவீத நிதி பங்களிப்பை மாநகராட்சியும் வழங்கி வருகின்றன.
ஒரு விடுதிக்கு 13 லட்சம் என்ற வகையில் 51 விடுதிகளுக்கும் 6.68 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது. என்.ஜி.ஓ.க்கள் தன்னார்வலர்களும் இந்த விடுதியை நடத்துவதில் தங்களது பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள்.
இந்த விடுதியில் மாநகராட்சி பணியாளர்கள் இருவர் பணியமர்த்தப்படுகிறார். ஆனால் இங்கு பணியமர்த்துபவர்களை நீண்ட நாட்களாகவே அங்கு பணியில் இருக்கச் செய்வதும் வேறு இடத்துக்கு பணி ஒதுக்காமல் இருப்பதும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு பணிபுரிபவர்கள் சோர்வுற்று காணப்படுவதாகவும் இந்த பணிக்கு மாநகராட்சி பணியாளர்களை மாற்றி மாற்றி பணியமர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையும் உள்ளது. மீண்டும் மறுவாழ்வு மையம் போன்ற செயல்படும் இந்த விடுதிகளை சரியாக பராமரித்து பிச்சைக்காரர்களை அங்கு முறைப்படி கொண்டு போய் சேர்ப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.
அதே நேரத்தில் சாலைகளில் மீட்கப்படும் பிச்சைக்காரர்கள் இந்த விடுதியில் கொண்டு விட்டாலும் அங்கு அதிகாரிகள் ஆலோசனை கேட்டு அவர்கள் மனம் திருந்துவதில்லை. மீண்டும் பிச்சை எடுக்கவே சென்று விடுகிறார்கள். எனவே சாலைகளில் பிச்சை எடுப்பவர்களை முழுமையாக மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
சென்னை மாநகரில் பிச்சைக்காரர்களின் தொல்லை பல மடங்கு அதிகரித்திருப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகளின் முறையற்ற விடுதி பராமரிப்பும் ஒரு காரணம் என்கிற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. சாலைகளில் பிச்சை எடுப்பவர்களை மாநகராட்சி அதிகாரிகள் எப்போதுமே கண்டு கொள்வதில்லை என்றும் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
எனவே இனி வரும் காலங்களில் பிச்சைக்காரர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
சென்னை மாநகர சாலைகளில் பிச்சை எடுப்பவர்களில் ஆந்திர மாநில கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்களே அதிக அளவில் காணப்படுகிறார்கள். கொரோனா காலத்துக்கு பிறகு பிச்சை எடுக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. பிச்சைக்காரர்கள் இல்லாத மாநகராக சிங்கார சென்னையை மாற்றுவது மாநகராட்சி அதிகாரிகளின் கையிலேயே உள்ளது. அதனை அவர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்? என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்