என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிம்"

    • பரிசோதனையில் அவரது சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் ராம்கி (வயது 35). மீன் வியாபாரி. இவரது மனைவி பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராம்கி கடந்த 1 ஆண்டாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் ராம்கி கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடற்பயிற்சிக்காக திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள தனியார் ஜிம்மில் சேர்ந்தார். அங்கு கடந்த 6 மாதங்களாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டார். மேலும் உடலை கட்டுக்கோப்பாக மாற்ற ராம்கிக்கு ஊக்கமருந்தை உடற்பயிற்சியாளர் பரிந்துரை செய்து சாப்பிட சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் ராம்கி ஊக்கமருந்து பயன்படுத்தி வந்து உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ராம்கிக்கு பயங்கர வயிறு வலி ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் அவருக்கு கடந்த 3 நாட்களாக சிறுநீர் வெளியேறவில்லை.

    இதனால்அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ராம்கியை மீட்டு மண்ணடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ராம்கி பரிதாபமாக இறந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இதுபற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜிம் பயிற்சியாளரின் அறிவுரையின் பேரில் ஊட்டச்சத்து மருந்துகள் எடுத்துக் கொண்டதால் தான் ராம்கி உயிர் இழந்து இருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் காசிமேடு போலீசில் புகார் செய்து உள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடற்பயிற்சியின் போது ஊக்கமருந்து பயன்படுத்திய வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டில் இருந்தே எளிய முறையில் வெறும் டம்பள்களை வைத்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
    • உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

    நாம் ஒவ்வொருவரும் உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக ஜிம் சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் சரியான உடல் அமைப்பை பெற முடியும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம்.

    ஆனால் சிலருக்கு ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்வதற்கு நேரம் இருப்பதில்லை. மற்றும் பொருளாதார சூழ்நிலை எல்லோருக்கும் ஜிம்மிற்கு செல்லும்படியாக அமைவதில்லை. எனவே வீட்டில் இருந்தே எளிய முறையில் வெறும் டம்பள்களை வைத்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    இதனை தொடர்ந்து செய்துவரும் பட்சத்தில் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும். இந்த உடற்பயிற்சியில் இரண்டு கைகளிலும் ஒவ்வொரு டம்பள்களை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு சிறிது குனிந்துக்கொள்ள வேண்டும். உங்கள் கால்கள் இரண்டையும் சிறிது குறுக்கி கொள்ள வேண்டும்.

    இப்போது கைகளை பூமியை நோக்கி தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். இப்போது உங்கள் டம்பிள் இரண்டையும் உங்கள் கால்கள் பக்கமாக மேல்நோக்கி தூக்க வேண்டும். பிறகு கீழே இறக்க வேண்டும். இதை திரும்ப திரும்ப செய்ய வேண்டும். இப்படி நீங்கள் கைகளை மேலே தூக்கும்போது அவை உங்கள் விலா எலும்பு வரை மட்டுமே வர வேண்டும். இப்படியாக 20 தடவை செய்ய வேண்டும்.

    இந்த பயிற்சியை செய்ய உங்களுக்கு அருகில் ஒரு மேசையை வைத்து கொள்ள வேண்டும். ஒரு காலை அந்த மேசை மீது மடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு உங்களது உடலை நிலத்தை நோக்கி சற்று சாய்த்துக்கொள்ள வேண்டும். இப்போது ஒரு கையை மேஜை மேல் ஊன்றிக்கொண்டு உங்கள் ஒற்றை கையை பூமியை நோக்கி கீழே வைத்துக்கொண்டு டம்புளை பிடித்துக்கொண்டு பூமியில் இருந்து மேல் நோக்கி உங்கள் விலா எழும்புகள் வரை இழுக்க வேண்டும். பிறகு மீண்டும் டம்புளை பூமியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். இப்படியாக தினமும் 20 முறை செய்ய வேண்டும்.

    இந்த உடற்பயிற்சியை செய்ய இரண்டு கைகளிலும் டம்பிள்ஸ் வைத்திருக்க வேண்டும். இதற்கும் முந்தைய உடற்பயிற்சி போலவே உடலை கீழ் நோக்கி வளைத்துக்கொள்ள வேண்டும். கைகளை டம்பிள்ஸோடு தரையை நோக்கி தொங்கவிட வேண்டும். அதன் பிறகு முதலில் வலது டம்பிள்ஸை விலா எழும்பு வரை மேல் நோக்கி தூக்க வேண்டும். பிறகு அதை கீழே செலுத்த வேண்டும். அடுத்ததாக இடது கை டம்பிள்சையும் அதேபோல செய்யவேண்டும். இப்படியாக தினமும் ஒவ்வொரு கையை கொண்டும் 20 பிரதிகள் செய்ய வேண்டும்.

    இதுவரை கைகளுக்கான உடற்பயிற்சியை பார்த்தோம். இப்போது பார்க்கப்போகும் உடற்பயிற்சி கால்களுக்கான உடற்பயிற்சி ஆகும். இதற்கு முதலில் ஒரு டம்பிளை எடுத்து இடுப்புக்கு நேராக முன்னோக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது நேராக நின்றுகொண்டு டம்பிள்ஸை பூமியை நோக்கி செலுத்த வேண்டும்.

    அதே சமயம் உங்கள் ஒரு காலானது தூக்கப்பட வேண்டும். அது பூமியிலிருந்து மேல் நோக்கி வர வேண்டும். இது கிட்டத்தட்ட ஒரு சீசா அமைப்பு போல இருக்கும். டம்பிள் கீழ் நோக்கி போகும்போது உங்களது கால் மேல் நோக்கி வர வேண்டும். இவ்வாறு திரும்ப திரும்ப தினமும் 20 தடவை செய்ய வேண்டும்.

    இந்த உடற்பயிற்சிக்கு உங்களுக்கு ஒரே ஒரு டம்புள் போதுமானது. இது ஒரே ஒரு கைக்கான உடற்பயிற்சி. முதலில் உங்கள் கைகளில் டம்பிளை பிடித்து அதை முன்னோக்கி நகர்த்த வேண்டும். மற்ற உடற்பயிற்சி போல் அல்லாமல் உங்களது உடல் முன்னோக்கி இருக்க வேண்டும். பிறகு மீண்டும் கையை மடித்து சாதரண நிலைக்கு வர வேண்டும். சரியாக உங்கள் கைகள் 90 டிகிரியில் டம்புள்ஸோடு இடம் பெயர வேண்டும்.

    ஒவ்வொரு கைக்கும் இதை தினமும் 20 முறை செய்ய வேண்டும். இதை செய்வதற்கு இரண்டு டம்புள்ஸ்கள் தேவைப்படும். ஒவ்வொரு கையிலும் ஒரு டம்புள்ஸை பிடித்துக்கொண்டு மற்ற உடற்பயிற்சியை போலவே சற்று குனிந்துகொள்ள வேண்டும். பிறகு டம்புள்ஸை கீழ் நோக்கி பிடித்துக்கொண்டு அங்கிருந்து உடலின் பின்புறத்திற்கு மேலாக டம்புள்ஸை கொண்டு செல்ல வேண்டும். பிறகு மீண்டும் கையை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும். இப்படியே 20 தடவை செய்ய வேண்டும்.

    இப்படியாக டம்புள்ஸை வைத்தே வீட்டில் எளிமையாக செய்யப்படும் இந்த உடற்பயிற்சி உடலுக்கு நலன் அளிப்பதோடு உங்கள் மாதாந்திர ஜிம்மிற்கு கட்ட வேண்டிய பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.

    • கொழுப்பை கரைக்க பல வகையில் முட்டுக்கட்டை போடும்.
    • உடற்பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி விட வேண்டாம்.

    நீங்கள் நாள் தவறாமல் ஜிம்முக்கு போய் உடல் பயிற்சி செய்துவந்தால், உடலுக்கு நல்லதுதான். ஆனால் நீங்கள் பருமனாக இருக்கும் பட்சத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது நல்லதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

    ஜிம் போகும்போது நீங்கள் கவனத்தில் வைக்கவேண்டிய சில விஷயங்கள்:

    ஜிம் சென்று தான் உடலை குறைப்பேன் என்று நீங்கள் சபதம் எடுத்துவிட்டால், அது ஒரு நீண்ட பயணம் என்பதை என்றைக்கும் மறக்காதீர்கள். நீங்கள் இந்த முயற்சியில் வெற்றியை விட தோல்வியையே அதிகமாக சந்திப்பீர்கள் என்பதே யதார்த்தம். இதனை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    உங்கள் உடல் "கொழுப்பு சேமிக்கும் கிடங்காக" பல காலம் இருந்தபடியால், உடனே குழுப்பை கரைக்க அது பல வகையில் முட்டுக்கட்டை போடும். அதனால் மனம் தளராமல் தினமும் முயற்சியை தொடரவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    நீங்கள் உடல் பயிற்சி செய்யத்தொடங்கிய சில வாரங்களுக்கு உடல் எடை குறைப்பு நடைபெறும். ஆனால் போகப்போக உடல் எடை குறைப்பு குறைவாகவே காணப்படும். இதனால் ஒரு வித அலுப்பு மேலோங்கத் தொடங்கும். நல்ல மனவலிமையால் மட்டுமே இந்த பாதிப்புகளில் இருந்து விடுவித்துக்கொண்டு உங்களை தட்டிக்கொடுக்க இயலும்.

    அதனால் எக்காரணம் கொண்டும், வெற்றி எளிதாக வந்து சேரும் என்று எண்ணவேண்டாம். உடற்பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி விட வேண்டாம்.

    வெறும் ஜிம் மட்டுமே சென்று பயிற்சிகள் பல செய்வேன், ஆனால் கண்டதை திண்பேன் என்று நினைத்தால், அங்கே மாபெரும் தவறினை செய்கிறீர்கள். ஆரோக்கியமான உணவு உட்கொள்கிறோமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

    சரியான உணவு மிக முக்கியம் என்பது உண்மை. உடல் பயிற்சியும், சரியான டயட்டும் இரு கைகளை போன்றது. பருமனானவர்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை சந்தித்து என்னென்ன உடல் பயிற்சிகளை செய்யலாம், செய்யக்கூடாது என்று ஒரு பட்டியலை வாங்கிவிடுவது சிறந்தது. உங்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் இருக்கும் பட்சத்தில் மேலும் சிக்கல் உண்டு. நீங்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை நாடியே தீர வேண்டும். ஏனென்றால் சில உடற்பயிற்சி முறைகள் விபரீதமாக முடிய வாய்ப்புகள் அதிகம்.

    • அர்னால்ட் தினசரி உடற்பயிற்சி செய்வதில் சமரசம் செய்து கொள்ளாதவர்
    • ஓய்வு எடுக்க தொடங்கினால் துரு பிடித்து விடுவோம் என்றார் அர்னால்ட்

    இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் முன்னாள் கதாநாயகன், 76 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger).

    ஆஸ்திரியா (Austria) நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழும் அர்னால்ட், கலிபோர்னியா மாநில கவர்னராகவும் பணியாற்றியவர். இவரது பல திரைப்படங்கள் உலகெங்கும் வசூலை வாரி குவித்தன. இன்றும் அவரை பல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    தனது 15 வயது முதல் தொழில்முறை பாடிபில்டராக விளங்க விருப்பம் கொண்ட அர்னால்ட், பல கடுமையான உடற்பயிற்சிகளை செய்து காட்டி இளைஞர்களை ஈர்த்தவர். இன்றளவும் பல நட்சத்திர பாடிபில்டர்களுக்கு கனவு நாயகனாக திகழும் அர்னால்ட், உடற்பயிற்சி குறித்த பல ஆர்வலர்களின் சந்தேகங்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் எடை பயிற்சியில் மிக முக்கியமான 3 பயிற்சிகளாக கருதப்படும் ஸ்க்வாட் (squat), டெட் லிஃப்ட் (dead lift) மற்றும் பெஞ்ச் பிரஸ் (bench press) ஆகியவற்றில் தனது எடை சாதனைகளை குறித்து தெரிவித்தார்.






    "பெஞ்ச் பிரஸ் பயிற்சியில் எனது அதிகபட்ச எடை 238 கிலோகிராம். எனது சிறப்பான டெட் வெய்ட் 322 கிலோகிராம்களை எட்டியது. எனது அதிகபட்ச ஸ்க்வாட் எடை 276 கிலோகிராம்கள். என்னுடைய காலகட்டத்தில் இவை ஒரு சாதனையாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இவை வழக்கமாக உலகம் முழுவதும் பலரால் பயிற்சி செய்யக்கூடிய எடையாக மாறி விட்டது. அது ஒரு காலம். ஆனாலும், தினசரி ஜிம்முக்கு செல்வதை நான் நிறுத்தியதில்லை; அதில் எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை. ஓய்வு எடுக்க தொடங்கினால், துரு பிடித்து விடுவோம்" என ஏழு முறை மிஸ்டர் ஒலிம்பியா (Mr. Olympia) போட்டிகளை வென்றவரான அர்னால்ட் கூறினார்.

    தவறாத கட்டுப்பாட்டின் காரணமாக அர்னால்ட் மேற்கொண்ட ஒழுங்குமுறையான உடற்பயிற்சிகளால் கட்டுக்கோப்பான உடலமைப்பை கொண்டுள்ளதால் இன்றளவும் பாடிபில்டர்களின் முன்மாதிரியாக விளங்கி வருகிறார்.

    • இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
    • உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள்.

    இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் பல ஆயிரங்களை செலவு செய்கின்றனர். குறிப்பாக உடல் எடையைக் குறைப்பதற்காக டயட், ரன்னிங், நடைப்பயிற்சி, ஜிம், விளையாட்டு, யோகா என ஏராளமான வழிமுறைகளை மாதக்கணக்கில் கடைப்பிடிக்கிறார்கள். இதற்காக தினமும் சில மணி நேரங்களை ஒதுக்குகிறார்கள்.

    அத்துடன் எடை குறைப்பிற்காகவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காகவும் மேற்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகிறார்கள். ஆனாலும் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு சரியான ரிசல்ட் கிடைப்பதில்லை.

    இந்தநிலையில், ``உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள். உங்களால் மன நிறைவாக சாப்பிட முடியும். அதேநேரத்தில் உங்களின் எடையும் குறையும்...'' என்று அடித்துச் சொல்கிறது இங்கிலாந்தில் செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வு. இந்த ஆய்வை மேற்கொண்ட `அய்ன் ட்ரீ' மருத்துவமனை, 500 பேரிடம் உணவு குறித்த சர்வேயை எடுத்திருக்கிறது. இந்த ஆய்வை ராபர்ட் என்ற மருத்துவர் தலைமையேற்று, நடத்தி முடித்திருக்கிறார்.

    ``உணவை எப்படி வேறு விதமாக பார்ப்பது?'' என்ற கேள்விக்கு ராபர்ட் பதில் அளிக்கிறார்.

    ``உணவுக்கும், மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நவீன வாழ்க்கையின் பரபரப்பில் அவசர அவசரமாக ஒரு கடமையை நிறைவேற்றுவதை போல சாப்பிடுகிறோம். சாப்பிடும் நேரத்தில் கூட மனதை எங்கேயோ அலையவிட்டு பதற்றத்துடன் இருக்கிறோம். அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே உணவை உள்ளே தள்ளுகிறோம். நமக்கு பசிக்கவில்லை அல்லது உணவு பிடிக்கவில்லை என்றாலும் கூட நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாகவே ஆகிவிட்டது.

    முக்கியமாக சுவையானதை தேடித்தேடி சாப்பிடுகிறோம். அது உடலுக்கு ஆரோக்கியமானதா என்று கூட பார்ப்பதில்லை. முதலில் இந்த பழக்கத்தை மாற்றுங்கள். தியானத்தில் ஈடுபடுவதை போல முழு மனதையும் செலுத்தி உணவை உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவை தேடிப்பிடித்து சாப்பிடுங்கள். முக்கியமாக, பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள், உங்களின் எடை குறைவது மட்டுமல்லாமல் உணவைப் பார்க்கும் விதமே மாறி இருக்கும்'' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடலில் உள்ள ஆக்ஸிஜன் திறன் குறைய ஆரம்பித்து, இது உடலின் செயல்திறனை பாதிக்கிறது.
    • ஜிம்மிற்குச் செல்வதை நிறுத்தும்போது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

    உடல் ஆரோக்கியமாக இருக்க, ஒருவர் தவறாமல் உடற்பயிற்சி அல்லது யோகா பயிற்சி செய்ய வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில், இளைஞர்கள் உடலைக் கட்டமைக்க மற்றும் சரியான உருவத்திற்காக ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய விரும்புகிறார்கள்.

    ஆனால் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டால் பல தீமைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பல நேரங்களில் இளைஞர்கள் திடீரென ஜிம்மிற்கு செல்வதை நிறுத்திவிடுவார்கள். திடீரென ஜிம்மிற்கு செல்வதை நிறுத்துவது அல்லது உடற்பயிற்சியை நிறுத்துவது உடலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்து நிபுணர்கள் கருத்து இதோ....

    உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால்...

    • திடீரென ஜிம்மிற்கு செல்வதை நிறுத்துவதால் தசைகள் சுருங்கும். இதன் காரணமாக, உடலில் வலிமை மற்றும் ஆற்றல் பற்றாக்குறை உணரப்படுகிறது. எனவே, ஒருவர் திடீரென உடற்பயிற்சி செய்வதையோ, ஜிம்மிற்கு செல்வதையோ நிறுத்தக்கூடாது.

    • உடலில் உள்ள ஆக்ஸிஜன் திறன் குறைய ஆரம்பித்து, இது உடலின் செயல்திறனை பாதிக்கிறது.

    • தசை வலிமை குறையத் தொடங்குகிறது. இதன் காரணமாக, உடலின் சமநிலை மோசமடையத் தொடங்குகிறது மற்றும் மெலிந்த உடல் நிறை அல்லது தசை வெகுஜனத்தில் சரிவு காணப்படலாம்.

    • உடற்பயிற்சி அல்லது வொர்க்அவுட்டை திடீரென நிறுத்துவதால் வளர்சிதை மாற்றமும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, உடல் கொழுப்பு, இரத்த சர்க்கரை, குளுக்கோஸ் அளவு மற்றும் இரத்த அழுத்தம் பாதிக்கப்படலாம்.

    • திடீரென்று ஜிம்மிற்குச் செல்வதை நிறுத்தினாலோ அல்லது உடற்பயிற்சி செய்தாலோ உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பலவீனமடையும் அபாயம் உள்ளது. இதனால், மனநலமும் பாதிக்கப்படுகிறது.


    உடற்பயிற்சியை நிறுத்துவதற்கு முன்பு இதை செய்யுங்கள்...

    நீங்கள் நீண்ட நேரம் ஜிம்மிற்குச் சென்றாலோ அல்லது வழக்கமான உடற்பயிற்சி செய்தாலோ, திடீரென்று அதை நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள நீண்ட நேரம் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் நீங்கள் ஜிம்மிற்கு செல்வதையோ அல்லது உடற்பயிற்சி செய்வதையோ நிறுத்த வேண்டும் என்றால், முதலில் திடீரென அவ்வாறு செய்வதை தவிர்க்கவும்.

    உடற்பயிற்சி அல்லது வொர்க்அவுட்டை படிப்படியாகக் குறைத்து, உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்வதை அல்லது ஜிம்மிற்குச் செல்வதை நிறுத்தும்போது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். இது தவிர, தினமும் சிறிது நேரம் தியானம் செய்யுங்கள்.

    உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருவர் வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடல் உழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஜிம்மைத் தவிர்ப்பது அல்லது உடற்பயிற்சியை நிறுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர்க்க தினமும் நடக்கவும், ஜாக் செய்யவும். இது பக்க விளைவுகளை குறைக்க உதவும். உடற்பயிற்சியை நிறுத்திய பிறகு அல்லது ஜிம்மிற்குச் சென்ற பிறகு உங்களுக்கு கடுமையான பிரச்னைகள் இருந்தால், நிச்சயமாக மருத்துவரை அணுகவும்.

    • தாக்குதலில் ஷிண்டேவுக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ஜிம்மில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாக பரவியது.

    மும்பையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த யோகேஷ் ஷிண்டே என்ற 20 வயது வாலிபரை பயிற்சியாளர் நகேல் திடீரென மரக்கட்டையால் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அதில், யோகேஷ் ஷிண்டே ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார். அவருக்கு ஒரு பயிற்சியாளர் உதவி செய்கிறார். அவரிடம் இருந்து விலகி நிற்கும் மற்றொரு பயிற்சியாளரான நகேல் திடீரென ஒரு கட்டையை எடுத்து ஷிண்டேவை தாக்குகிறார். இதனால் ஷிண்டே வலியால் துடித்து தலையை பிடித்துக்கொண்டு அமர்வது போன்று காட்சிகள் உள்ளன.

    அப்போது ஜிம்மில் இருந்தவர்கள் நகேலை தடுக்க முயல்கின்றனர். உடற்பயிற்சி செய்த போது ஷிண்டே காமெடி செய்ததாகவும், இதனால் பயிற்சியாளர் ஆத்திரம் அடைந்து அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த தாக்குதலில் ஷிண்டேவுக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஜிம்மில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான இந்த வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து ஷிண்டேவின் புகாரின் பேரில் நகேலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்வானதாக இருக்க வேண்டும்.
    • ஜிம் செல்லும் போது ஃபிட்னஸ் டெஸ்ட் எடுக்க வேண்டும்.

    ஜிம்முக்கு செல்ல வேண்டும், உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்ற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனாலும் ஜிம்மில் சில விதிமுறைகளை கடைபிடிக்காமல் உடல் வலி ஏற்பட்டு ஓரிரு நாட்களுக்கு பின்னர் ஜிம்முக்கு செல்வதையே நிறுத்திவிடுகிறார்கள்.


    ஜிம்முக்கு செல்பவர்கள் இந்த 7 விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    * ஜிம்முக்கு செல்லும் போது டி-ஷர்ட், டிராக் பேண்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து செல்வது அவசியம். உடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்வானதாக இருக்க வேண்டும்.

    * முதல்முறையாக ஜிம் செல்லும் போது ஃபிட்னஸ் டெஸ்ட் எடுக்க வேண்டும். உடலின் நெகிழ்வுத்தன்மை, உடல் வலிமை, கார்டியோ உடற்பயிற்சிகளை செய்யும் திறன், உடலின் சமநிலைத்தன்மை, பி.எம்.ஐ. மதிப்பு ஆகியவற்றை பரிசோதித்து அதன்பிறகே உடற்பயிற்சியை தொடங்க வேண்டும்.


    * உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்பு 5 நிமிடங்கள் வார்ம்-அப் பயிற்சிகள் அவசியம். பின்னர் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை செய்ய வேண்டும். அப்போது தான் உடற்பயிற்சி செய்வதற்கு உடலில் உள்ள தசைகள் ஒத்துழைக்கும். தசைப்பிடிப்பு உள்ளிட்ட கோளாறுகள் தடுக்கப்படும்.

    * உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அதிகமாக கார்டியோ பயிற்சிகளை செய்வதால் உடல் எடை குறையும். ஆனால் உடல் ஃபிட்டாக இருக்காது. எனவே ஒரு மணிநேர உடற்பயிற்சியில் 40 நிமிடம் கார்டியோ பயிற்சிகளையும், 20 நிமிடம் வலுவூட்டும் பயிற்சிகளை செய்யலாம்.


    * உடற்பயிற்சியின் போது தண்ணீர் குடிக்க கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். அது தவறு. நாக்கு உலரும் போதெல்லாம் தண்ணீர் பருகலாம். உடற்பயிற்சி முடிந்தவுடன் 15 நிமிடங்கள் கழித்து தேவையான தண்ணீர் குடிக்கலாம்.

    * வாரத்துக்கு ஒரு நால் உடற்பயிற்சிக்கு ஓய்வு கொடுக்கலாம். தசைகளுக்கு ஓய்வு கொடுத்தால் மட்டுமே அடுத்தவாரம் முறையாக உடற்பயிற்சி செய்ய இயலும்.


    * உடற்பயிற்சிகள் அனைத்தையும் முடித்தவுடன் தசைகளின் இறுக்கத்தை தளத்தும் வண்ணம் சில ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை செய்ய வேண்டும். 3 முதல் 5 நிமிடங்கள் வரை செய்யும் இந்த பயிற்சியை உடற்பயிற்சியாளர் கண்காணிப்பில் செய்ய வேண்டியது அவசியம்.

    • ஜிம்மில் மயங்கி விழுந்த சல்மானை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • சல்மான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள அம்பலவயல் பகுதியில் செயல்பட்டு வரும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 24 வயதான சல்மான் என்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உடற்பயிற்சியின் போது திடீரென இளைஞர் மயங்கிவிழுவதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடிவரும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    மயங்கி விழுந்த சல்மானை உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சல்மான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சல்மானின் இறப்புக்கான காரணங்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே தெரியவரும் என்று சொல்லப்படுகிறது. 

    ×