என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயம்"

    • முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.
    • விநாயகர், யானை ரூபத்தில் வந்து வள்ளியை விரட்டும் நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு பங்குனி பெருவிழா நடைபெற்று வரும் நிலையில், அதன் முக்கிய நிகழ்வான வள்ளி கல்யாணம் நடந்தது.

    முன்னதாக இன்று அதிகாலை திருவலஞ்சுழி அரசலாற்றங்கரையில் முதுமை வேடத்தில் இருக்கும் முருகனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி விநாயகர், யானை ரூபத்தில் வந்து வள்ளியை விரட்டும் நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது. அப்போது வள்ளி வயதான வேடத்தில் இருக்கும் முருகனை திருமணம் செய்து கொள்வதாக அமையும் திருமண காட்சி நடைபெற்றது.

    தத்ரூபமாக நடந்த இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் வியந்து தரிசனம் செய்தனர்.

    • இது சிவனும் முருகனும் ஒருவரே என்பதற்கு ஆதரமாக திகழ்கிறது.
    • பின்னர் மகன் முருகனை குருவாக ஏற்று அவரிடம் பிரணவ பொருளை உபதேசமாக பெற்றார்.

    தந்தை மகன் உறவை மேம்படுத்தும் சுவாமிமலை சுவாமி நாதசுவாமி

    ஆறுபடை முருகன் கோவில்களில் 4 வது படை வீடாக திகழ்வது சுவாமிமலை.

    இக்கோவில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலையில் அமைந்துள்ளது.

    திருப்பரங்குன்றில் முருகன் ஒளிவடிவினன்.

    திருச்செந்தூரில் அருள் வடிவினன்.

    குன்றுகளில் எல்லாம் அவன் எளிமைக் கோலம் பூண்ட இறைவன்.

    பழமுதிர் ச்சோலையில் பரந்து தோன்றும் வியாழ பகவானின் உருவினன்,

    சுவாமி மலையில் வழிபடும் அன்பருக்கெல்லாம் வேண்டியது அருளும் வரகுணன்.

    சுவாமி நாதசுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்கத்தின் ஆவுடையாராகவும், அதன் மேல் எழுந்தருளி உள்ள சுவாமிநாதமூர்த்தி பாணலிங்கமாகவும் காட்சி தருவதை காணலாம்.

    இது சிவனும் முருகனும் ஒருவரே என்பதற்கு ஆதரமாக திகழ்கிறது.

    சிவபெருமான் கோவில்களில் திருவிழா காலங்களில் பஞ்சமூர்த்திகளாக எழுந்தருளுவார்.

    அதேபோல் சுவாமி மலையில் உற்சவ காலங்களில் கணபதி வள்ளி தெய்வானையோடு சண்முகர், வள்ளி தெய்வானையோடு சுப்பிரமணியர், பாலசுப்பிரமணியர், சண்டிகேஸ்வரருடன் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

    படைக்கும் தொழில் செய்யும் பிரம்மன் பிரணவப் பொருளை அறியாமல் இருப்பதை கண்ட முருகப் பெருமான் அவரது தலையில் குட்டி சிறைப்படுத்தினார்.

    இதனை அறிந்த சிவபெருமான் முருகனிடம் கோபம் கொள்வது போல் நடித்து கண்டித்தார்.

    பின்னர் மகன் முருகனை குருவாக ஏற்று அவரிடம் பிரணவ பொருளை உபதேசமாக பெற்றார்.

    பின்னர் பிரம்மனுக்கும் முருகன் பிரவண பொருளை உபதேசித்ததாக சுவாமி மலை தலபுராணம் கூறுகிறது.

    சுவாமிமலையில் தந்தையும் மகனும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் ஒருவரை ஒருவர் உணர்ந்து இணக்கமாக நடந்து கொண்டதால் சுவாமிமலை சுவாமி நாதசுவாமியை தரிசனம் செய்தால் மனவேறுபாடு கொண்ட தந்தை மகன் உறவில் ஒற்றுமை ஏற்படும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

    அதனை பின்பற்றி வழிபாடு செய்து சென்றவர்கள் வாழ்வில் நல்ல பலனை கண்டு இந்த உண்மையை ஒப்பு கொண்டு உள்ளனர்.

    எனவே தந்தை மகன் உறவில் விரிசல் கண்டவர்கள் சுவாமிமலை முருகனை சேர்ந்து வந்து தரிசித்தும் தனியாக வந்து தரிசித்தும் நல்ல மாற்றத்தை காணலாம்.

    • வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா 5-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா 4-ம் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு அணுகை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி மறுநாள் 5-ம் தேதி வியாழக்கிழமை திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றம் விநாயகர், வள்ளி, தேவசேனா, சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருலுதல் நிகழ்ச்சியும், இரவு யாகசாலை பூஜை சுவாமி திருவீதி உலா திக் பந்தனம் நிகழ்ச்சியும் நடை பெற்றது.

    தொடர்ந்து 8 நாட்கள் படிச்சட்டத்தில், ஆட்டுக்கிடா வாகனம், பஞ்சமூர்த்திகள் சப்பரம், யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன் தொடர்ச்சியாக இன்று 13-ம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகையை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் திருத்தேர் திருவிழா நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

    திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு இன்று தேரோட்ட நிகழ்ச்சிக்காக தயார் நிலையில் இருந்தது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த பகுதியில் பெய்த மழையின் காரணமாக சுவாமிமலை தேர் முழுவதும் நனைந்து விட்டது. இதைத் தொடர்ந்து சுவாமிமலை சுவாமிநாத சாமி திருக்கார்த்திகை தேரோட்டம் நடத்துவதா இல்லையா என்று அதிகாரிகள் மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் 9.15 மணிக்கு தேரோட்டம் நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.

    • நேற்று ரத ரோஹ ரோகணம் என்னும் சப்பர தேரோட்டம் நடைபெற்றது.
    • பக்தர்கள் பால்காவடி சுமந்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.

    இக்கோவிலில் பிரபவ முதல் அட்சய முடிய 60 தமிழ் வருட தேவதைகளும் இங்கு திருப்படிகளாக அமையப்பெற்று குறிப்பிடத்தக்கதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது. நேற்று ரத ரோஹ ரோகணம் என்னும் சப்பர தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் சிகர நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது.

    முருகப்பெருமானை தரிசிக்க அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். நேரம் செல்லச் செல்ல கட்டுக்கடங்காமல் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து அர்ச்சனை செய்து, மனமுருகி முருகப்பெருமானை வழிபட்டனர்.

    இன்னும் ஏராளமான பக்தர்கள் காவடி, பால்காவடி சுமந்தும், பால்குடம் எடுத்தும் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அபிஷேகம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டு பிரசாதம் பெற்று சென்றனர்.

    முன்னதாக காலை வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதி உலா புறப்பட்டார். பின்னர் காவிரி ஆற்றில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று புனிதநீர் ஊற்றி தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு பணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. விழாவை யொட்டி கும்பகோணம், தஞ்சாவூர், ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களும் கோவிலுக்கு இயக்கப்பட்டன. 

    ×