என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்பிடி உபகரணங்கள்"

    • மீனவர்களுக்கு, 50 சதவீதம் மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படும்
    • வருகிற 15-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும்.

    ருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்பு திறனை மேம்படுத்தவும், அவர்களின் வருவாயினை பெருக்கிடவும், உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க மீனவர்கள் மற்றும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக உள்ள மீனவர்களுக்கு, 50 சதவீதம் மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படும் என நடப்பு ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, 20 கிலோ நைலான் வலையினை ரூ.20 ஆயிரம் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும் தொகையில் 50 சதவீதம், அதாவது ரூ.10 ஆயிரம் பின்னிலை மானியமாக மீனவர்களுக்கு வழங்கப்படும். இதே போன்று ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி பரிசல்களுக்கு 50 சதவீதம், அதாவது ரூ.10 ஆயிரம் பின்னிலை மானியமாக வழங்கப்படும்.

    உள்நாட்டு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திற்கு மீன்பிடி வலைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்க 3 எண்ணம் இலக்கு நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    மேற்படி திட்டத்தில், பயன் பெற விருப்பம் உள்ளவர்கள் திருவாரூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    விண்ணப்பங்கள் உள்நாட்டு மீனவர்களிடம் இருந்து அதிகம் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ள மீனவர்கள் வருகிற 15-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 3 மீனவர்கள் நேற்று மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
    • மீனவர்களின் குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே தமிழக எல்லையில் வெவ்வேறு இடங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்பிடி உபகரணங்களை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்த விபரம் வருமாறு:-

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரையில் இருந்து அக்கரைப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகிய 3 மீனவர்கள் நேற்று மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 படகுகளில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென மீனவர்களின் படகை வழிமறித்தனர். பின்னர், மீனவர்களின் படகுக்கு சென்று அவர்களை கத்தி மற்றும் கட்டையால் தாக்கி உள்ளனர்.

    அதுமட்டுமின்றி, படகில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.


    இலங்கை கடற்கொள்ளையர்கள் அரங்கேற்றிய இந்த தாக்குதலில் மீனவர் ராஜேந்திரனுக்கு தலையில் வெட்டுக்காயமும், ராஜ்குமாருக்கு தலையில் வெட்டுக்காயம் மற்றும் கையில் கட்டையால் அடித்ததில் காயமும் ஏற்பட்டது. மற்றொரு மீனவரான நாகலிங்கத்திற்கு உள்காயம் ஏற்பட்டது.

    மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பறிகொடுத்து, உடலில் பலத்த காயங்களுடன் இன்று காலை மீனவர்கள் கரைக்கு திரும்பினர். அவர்களை கண்ட சக மீனவர்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்தனர்.

    இதேபோல், வேதாரண்யம் அடுத்துள்ள பெருமாள்பேட்டை கிராமத்தை சேர்ந்த குமார், லட்சுமணன், ஜெகன் ஆகிய 3 மீனவர்கள் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அப்போது அங்கு வந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 மீனவர்களையும் தாக்கி, அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வலை, மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    பொருட்களையும் இழந்து, உடலில் காயங்களுடன் இன்று காலை பெருமாள்பேட்டை மீனவர்கள் 3 பேரும் கரை திரும்பினர். பின்னர் நடந்தது குறித்து சக மீனவர்களிடம் கூறி வேதனை தெரிவித்தனர்.

    காற்றழுத்த தாழ்வு பகுதி, கனமழை எச்சரிக்கை காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்த நாகை மீனவர்கள் நேற்று முன்தினம் மீண்டும் கடலுக்கு சென்றனர். அவ்வாறு சென்ற மீனவர்களை அடுத்தடுத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களிடம் இருந்த பொருட்களையும் பறித்த சம்பவம் கோடியக்கரை மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் அப்பகுதி மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

    ×