என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் விசா"

    • ஹார்வர்டில் முதுகலைப் பட்டம் பெற்ற ரஞ்சனி ஸ்ரீனிவாசன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடல் ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.
    • கடந்த ஆண்டு வளாகத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் மஹ்மூத் கலீல் முன்னணியில் இருந்தார்.

    அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்தியாவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    அதாவது தன்னை சுயமாக அவர் நாடு கடத்திக்கொண்டார். இதற்கு அர்த்தம், அந்நாட்டு அதிகாரிகள் அவரை பிடித்து ராணுவ விமானத்தில் கை கால்களை சங்கிலியால் பூட்டி நாடு கடத்துவதற்கு முன்பாக அவரே அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    அவரின் பெயர் ரஞ்சனி ஸ்ரீனிவாசன். செய்த குற்றம், பால்ஸ்தீனதுக்கு ஆதரவாக போராடியது. விளைவு, கடந்த மார்ச் 5 ஆம் தேதி அவரது மாணவர் விசா ரத்து. இதன் காரணமாகவே அவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    அகமதாபாத்தில் உள்ள CEPT பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், ஃபுல்பிரைட், நேரு மற்றும் இன்லாக்ஸ் உதவித்தொகைகளுடன் ஹார்வர்டில் முதுகலைப் பட்டமும் பெற்ற ரஞ்சனி ஸ்ரீனிவாசன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடலில் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.

    இதற்கிடையே கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

    200க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாகி பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த 13 மாதங்களில் இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் 56,000 பேர் கொல்லப்பட்டனர்.

    இஸ்ரேலிய குண்டுகளால் மொத்த நகரமும் நிர்மூலம் ஆக்கப்பட்டது. இதை இனப்படுகொலை என குற்றம்சாட்டி உலகெங்கிலும் உள்ள மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் நியூ யார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் கடந்த ஆண்டு போராட்டங்கள் நடைபெற்றன. அதில் பங்கேற்றவர்களில் ரஞ்சினி ஸ்ரீனிவாசனும் ஒருவர்.

    பல்கலைக்கழக கட்டடம் ஒன்றை போராட்டக்குழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அளவுக்கு பிரச்சனை தீவிரமானது. பின் பேச்சுவார்த்தை மூலம் இயல்பு நிலை திரும்பியது. இதற்கிடையில் கடந்த ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்பின் அரசு, பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வேட்டையாட தொடங்கியது.

    கொலம்பியா பல்கலைக்கழக போராட்டத்தில் ஈடுபட்ட பல வேற்று நாட்டு மாணவர்கள் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டனர். கடந்த வாரம், பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த கொலம்பியா முன்னாள் மாணவர் மஹ்மூத் கலீல் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு வளாகத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் மஹ்மூத் கலீல் முன்னணியில் இருந்தார். இந்நிலையில் தற்போது ரஞ்சனி ஸ்ரீனிவாசன் இந்த நாடுகடத்தலுக்கு இரையாகி உள்ளார்.  

     அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், ரஞ்சனி சீனிவாசன் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மார்ச் 5, 2025 அன்று, வெளியுறவுத்துறை அவரது விசாவை ரத்து செய்தது.

    இந்நிலையில் மார்ச் 11 அன்று சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CPB) அமைப்பு செயலியைப் பயன்படுத்தி ரஞ்சனி ஸ்ரீனிவாசன் சுயமாக நாடு கடத்தப்பட்ட வீடியோவை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியதாவது, "அமெரிக்காவில் படிப்பது ஒரு "பாக்கியம்", ஆனால் நீங்கள் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும்போது, அந்த சலுகை பறிக்கப்பட வேண்டும். நீங்கள் இந்த நாட்டில் இருக்கக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

    ரஞ்சனி ஸ்ரீனிவாசன் தற்போது இந்தியா திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அரசு அவர் குறித்தும், இந்த விசா ரத்து குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. 

    • இந்தியாவை சேர்ந்த 700 மாணவர்களை வெளியேறுமாறு கனடா தெரிவித்தது.
    • புதிய கொள்கை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

    ஒட்டாவா:

    அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் பலர் விண்ணப்பிக்கிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் ஏஜென்சிகள் மூலம் கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்த இந்திய மாணவர்களிடம் போலி ஆவணங்களை அவர்களுக்கு தெரியாமல் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.

    இதையடுத்து இந்தியாவை சேர்ந்த 700 மாணவர்களை வெளியேறுமாறு கனடா தெரிவித்தது. இந்த மோசடியில் பாதிகப்பட்ட மாணவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்நிலையில் மாணவர் விசாவில் வருபவர்களிடம் ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளை தடுக்க கனடா அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்துடன் சரி பார்க்க வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் அமைச்சகத்திடம் இருந்து சரி பார்க்கப்பட்ட ஏற்றுக் கொள்ளும் கடிதத்தை பெற வேண்டும். இந்த புதிய கொள்கை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து அமைச்சர் மார்க் மில்லர் கூறும்போது, கனடாவுக்கு வரும் பிற நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதே தனது நோக்கம் என்றார்.

    இந்த நடவடிக்கை இதற்கு முன்பு மாணவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்ற சூழல் ஏற்படாமல் தடுக்கும் என்பதோடு உண்மையான ஏற்பு கடிதங்களின் அடிப்படையில் மட்டுமே படிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதையும் உறுதி செய்யும் என்று கனடா அரசு தெரிவித்தது.

    • புது விதிமுறைகள் இம்மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது
    • புதிய விதிகளால் 1,40,000 பேர் வருவது குறைய கூடும் என அரசு கணித்துள்ளது

    இங்கிலாந்தில் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டு அரசு பல புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

    அதில் முக்கிய அம்சமாக கல்வி கற்க அங்கு செல்லும் மாணவர்கள், இனி பெற்றோர் உட்பட தங்கள் குடும்ப உறுப்பினர்களை தங்களுடன் அழைத்து செல்லவோ, நுழைந்த பிறகு அவர்களை அங்கு வரவழைத்து தங்களுடன் தங்க வைத்து கொள்ளவோ அனுமதி கிடையாது. முதுநிலை ஆராய்ச்சி பட்டங்கள் மற்றும் அரசு நிதியுதவியுடன் பெறப்படும் பட்டங்கள் ஆகியவற்றை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் இந்தியர்கள் உட்பட அனைத்து மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக முனைந்துள்ளது.

    புதிய விதிமுறைகள் இம்மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் எனவும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

    "மக்களுக்கு இங்கிலாந்து அரசு அளித்த வாக்குறுதியின்படி எல்லைகளை பலப்படுத்துவது, அகதிகள் வருகையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டோம். கல்வி கற்க "விசா" பெற்று கொண்டு வரும் பலர், பிறகு இங்கேயே பணி தேடி, இங்கிலாந்திலேயே தங்கி விடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய வழிமுறை மூலம் சுமார் 1,40,000 பேர் இங்கிலாந்து வருவது குறைய கூடும்" என இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், "இன்றிலிருந்து இங்கிலாந்தில் கல்வி பயிலும் பெரும்பாலான அயல்நாட்டு மாணவ மாணவியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருவது முடியாது. 2024 தொடங்கியதுமே இங்கிலாந்து மக்களுக்கு நாங்கள் பணியாற்ற தொடங்கி விட்டோம்" என பதிவிட்டுள்ளார்.

    2019லிருந்து தங்கள் குடும்ப உறுப்பினர்களை இங்கிலாந்திற்கு அழைத்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை 930 சதவீதம் அதிகரித்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ×